Search This Blog
29.12.08
பெரியார், அண்ணா அறிவியக்க வழி நடந்திட வேண்டும்!
பெரியார், அண்ணா அறிவியக்க வழியிலிருந்து
கடுகளவு கூட தடம் மாறாமல் நடந்திட வேண்டும்
தி.மு.க. பொதுக்குழுவில் கலைஞர் உரை
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா அவர்களுடைய அறிவியக்க வழியில் நடைபோட்டவர்கள் அதிலிருந்து ஓர் அங்குலம் கூட, ஒரு துளி கூட, ஒரு கடுகளவு கூட நாம் தடம் மாறாமல் நடந்தாக வேண்டும் என்று தமிழக முதலமைச்சர், தி.மு.க. தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.
27.12.2008 அன்று சென்னையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழு நிறைவில் தி.மு.க. தலைவர் கலைஞர் ஆற்றிய உரையின் முக்கியப் பகுதி வருமாறு:-
இது அரசியல் இயக்கமாக மாத்திரமல்லாமல், இந்த இயக்கம் சமுதாயப் பேரியக்கமாகவும், இருந்த இயக்கமும், இருக்க வேண்டிய இயக்கமும் - என்று இரண்டு சொற்றொடர்களை நான் இங்கே பயன்படுத்துகிறேன். சமுதாயப் பேரியக்கமாக இருந்த இயக்கம்; இருக்க வேண்டிய இயக்கம் என்று இரண்டு சொற்றொடர்கள். இப்படிச் சொல்வதால், இப்பொழுது சமுதாயப் பேரியக்கமாக இருக்கிற இயக்கமா? என்ற அந்தக் கேள்விக்கு முழுமையாக விடையளிக்க முடியாத நிலை நமக்கிருக்கிறது. ஏனென்றால், இன்னமும் சில பேர், நம்முடைய இயக்கத்திலே உள்ளவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கிளையிலோ அல்லது ஒன்றியத்திலோ அல்லது மாவட்டத் திலோ அல்லது சட்டப் பேரவையிலோ அல்லது நாடாளு மன்றத்திலோ இருப்பவர்கள் சுத்த சுயம்பிரகாச சுயமரியாதைக் காரர்களாக, மூட நம்பிக்கையை எதிர்த்து சமுதாயத்திலே புரட்சி செய்யக் கூடியவர்களாக இருக்கிறோமா? என்றால் இல்லை. நாம் அதை வேதனையோடு அல்லது வெட்கத்தோடு ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும். அதனால்தான், இன்றைக்குச் சில பேருக்கு நம்முடைய இயக்கத்தைப் பற்றி இளக்காரம் தோன்றியிருக்கிறது.
இன்றைக்குக் காலையிலே தினமலர் பத்திரிகையைப் பார்த்தேன். அதிலே, மிகவும் நல்ல நாளில் இன்று தி.மு.க. பொதுக் குழு கூடுகிறது என்று தலைப்பு. 27ஆம் தேதி பல்வேறு வகையில் மிகவும் நல்ல நாள் என ஜோதிடர்கள் கணித்துள்ளார்கள். நாள் முழுவதும் மூல நட்சத்திரம் உள்ளது; சிறப்பு வாய்ந்த அமா வாசை; அனுமான் ஜெயந்தி நாளான இன்று காலை 9.00 மணி முதல் 9.45 மணி வரையில் மகர லக்னம் உள்ளது. இந்த நேரத் திற்குள் எந்தக் காரியத்தைத் துவக்கினாலும் வெற்றி நிச்சயம் என்றிருக்கிறது. நானோ, பேராசிரியரோ, வீராசாமியோ, யாரும் உட்கார்ந்து, எந்த நாளிலே இந்தப் பொதுக் குழுவை வைத்துக் கொள்ளலாம்; இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தை, தேர்தலை நடத்தலாம் என்று பஞ்சாங்கம் பார்த்து இந்தத் தேதியைக் குறிப்பிடவில்லை. எது வசதியான தேதியோ, எந்தத் தேதியிலே இதை நடத்தினால் எல்லோருக்கும் வசதியாக இருக்குமோ அந்தத் தேதியை மட்டும்தான் பார்த்தோம். ஆனால், தினமலர் பத்திரிகைக்கு இது நல்ல நாள் என்று தோன்றியிருக்கிறது; ஜோதிடர்கள் கணித்துள்ள தேதி என்று தோன்றியிருக்கிறது. நாள் முழுவதும் மூல நட்சத்திரம் என்று தோன்றியிருக்கிறது. சிறப்பு வாய்ந்த அமாவாசை, அனுமார் ஜெயந்தி நாள் இன்று காலை 9.45 மணி வரை மகர லக்னம், இந்த நேரத்திலே எந்தக் காரியத்தைத் துவக்கினாலும் வெற்றி நிச்சயம். நான் வழக்கமாக இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு அய்ந்து நிமிடங் களுக்கு முன்னால் வந்துவிடுவது வழக்கம். இதைக் காலையிலே படித்துப் பார்த்துவிட்டு, வேண்டுமென்றே 10.15 மணிக்கு வந்தேன். (கைதட்டல்). 9.45 மணி வரையிலே நல்ல நாள். அதிலே நீங்கள் ஒரு காரியத்தைச் செய்தால்தான் நல்லது நடக்கும் என்று ஜோதிடர்கள் சொல்லியிருக்கிற காரணத்தால், அதற்கு மாறாக இன்று 10.15 மணிக்குப் போய்ப் பார்ப்போம் என்று வந்து சேர்ந்தோம். நான் சொல்வதற்குக் காரணம், நான் மாத்திரம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக அல்ல, நீங்களும் இதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உங்களுக்கெல்லாம் சொல்வதற்காகத்தான். இன்னமும் நாம் சமுதாயத்துறையிலே முன்னேற வேண்டிய அளவிற்கு முன்னேறவில்லை.
அறிஞர் அண்ணாவின் அறிவியக்க வழியிலிருந்து தடம் மாறாமல் நடந்தாக வேண்டும்
இந்த இயக்கம், திராவிட இயக்கம், தமிழ் இயக்கம், சுயமரியாதை இயக்கம் தோன்றிய அந்தக் காலத்திலேயே நாம் சில விஷயங்களை எவ்வளவு அழுத்தந்திருத்தமாக, பிடிவாதமாக அந்தக் கொள்கைகளைப் பின்பற்றினோம் என்பதையும், நாளாவட்டத்தில் அவைகளையெல்லாம் எப்படி மெல்ல காற்றிலே பறக்க விட்டுவிட்டோம் என்பதையும் நம்மைவிட நன்றாக தினமலர் போன்ற பத்திரிகைகள் அறிந்திருக்கிற காரணத்தால்தான், இப்போது கேலி செய்கின்ற அளவிற்கு நல்ல நாள் பார்த்து இந்தப் பொதுக்குழுத் தேர்தலை தி.மு.கழகம் வைத்திருக்கிறது என்று சொல்கிறார்கள். இதற்கு நாம் இடம் தராமல், பகுத்தறிவு இயக்கமாக நாம் பரிமளித்தவர்கள்; சுயமரியாதை இயக்கமாகச் சுடர் விட்டவர்கள். தந்தை பெரியார் வழியில், அறிஞர் அண்ணா அவர்களுடைய அறிவியக்க வழியில் நடைபோட்டவர்கள். அதிலிருந்து ஓர் அங்குலம்கூட, ஒரு துளிகூட, ஒரு கடுகளவு கூட நாம் தடம் மாறாமல், நடந்தாக வேண்டும் என்ற உறுதியை மேற்கொள்ள வேண்டுமென்று உங்கள் அனைவரையும் இந்த நேரத்திலே நான் கேட்டுக் கொள்கின்றேன்.
பேராசிரியர் அவர்கள் சில வேண்டுகோள்களை உங்களுக்கு வைத்தார்கள். இந்தக் கழகத்தை எப்படியெல்லாம் கட்டிக்காக்க வேண்டும். நம்முடைய செய்திகளை, நம்முடைய சாதனைகளை எப்படியெல்லாம் மக்களுக்குப் பரப்ப வேண்டும் என்றெல்லாம் உங்களுக்குச் சொன்னார்கள்.
ஒன்றைச் சொல்லிக் கொள்ளவிரும்புகின்றேன். இதைப் போன்ற நிகழ்ச்சிகளில் பொன்னாடைகளைப் போர்த்துகிறீர்களே, அதைக் கொஞ்சம் நிறுத்துங்கள். நான் பலமுறை சொல்லியும்கூட, அதை நிறுத்துவதாக இல்லை. பொன்னாடை போர்த்துவதிலே சிலருக்கு லாபம். நீங்கள் எனக்குப் போர்த்துகிற பொன்னாடையை, நான் இன்னொருவருக்கு ஒரு நாள் போர்த்தி விடலாம்; அதுதான் லாபம். என் வீட்டிலே 10 பொன்னாடைகள் இருந்தால், அதிலே ஒரு 8 பொன்னாடைகளை, 8 விழாக்களுக்குச் சென்று, 8 பேர்களுக்குப் போர்த்தப் பயன்படும். அதனால்தான், கைத்தறி நெசவாளருக்குப் பயன்படவேண்டும்; அவருக்கும் வாணிபம் நடைபெறவேண்டும்; அவருடைய கைத்தறித்துணிகள் விற்பனை ஆகவேண்டும் என்பதற்காகத்தான், அறிஞர் அண்ணா காலத்திலேயிருந்து கைத்தறி ஆடைகளை நாம் அணிவது மாத்திரமல்ல; இதுபோன்ற விழாக்களில் கைத்தறி ஆடைகளைத்தான், அதிலே கலந்து கொள்கின்ற தலைவர் களுக்கு நாம் அணிவிப்பது என்கின்ற ஒரு முறையைக் கையாண்டோம்.
இனி கைத்தறி ஆடைகளை - புத்தகங்களை அளிப்பீர்!
அதற்குப்பிறகு புத்தகங்கள் தரவேண்டும் என்றோம்; அப்படித் தருவதால் புத்தகங்கள் பரவி, அறிவு பரவுவதற்கு இடம் ஏற்படும் என்று. ஆனால், இன்றைய தினம் பளபளப்பான, பகட்டான பொன்னாடைகளை அணிவித்து, அது மறுநாளே பல்லிளிக்கின்ற அளவிற்கு வெளுத்துப்போய், அந்தப் பொன்னாடையை வைத்துக் கொண்டு, பெரியவர்கள் யாராவது வரமாட்டார்களா, வந்தால் அவர்களுக்குப் போர்த்தலாம் என்று அவர்களுக்குப் போர்த்தி, அதிலே எங்கேயாவது கிழிசல் இருந்தால், அதை ஜாக்கிரதையாக மறைத்து, அவர்களுக்குப் போர்த்தி விட்டு விடுகிறோம். தயவு செய்து இனி என்னுடைய விழாக்களில், நான் கலந்துகொள்கின்ற எந்த விழாவாக இருந்தாலும், அந்த விழாக்களில், அதிலே கலந்து கொள்கின்றவர்களுக்கு, நாம் யாருக்கு மரியாதை செய்ய வேண்டும் என்று கருதுகின்றோமோ, அவர்களுக்கெல்லாம் கூடுமான வரையில் கைத்தறி ஆடைகளை அணிவியுங்கள்; கைத்தறித் துண்டுகளை அணிவியுங்கள். நாமும் கைத்தறி ஆடைகளை அணிவது என்று கங்கணம் கட்டிக் கொள்ளுங்கள்.
புத்தகங்கள் வாங்கித் தருவது, அதைப் பரிசாக வழங்குவது என்றால், அறிவு பரவும். அதைச் செய்யுங்கள். அதைவிட்டுவிட்டு, ஆடம்பரமான துணிமணிகளை, பட்டாடைகளை வாங்கி பரிசாக வழங்குவது தேவையில்லை. அதை திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுக்குழுவிலே சொல்வதற்குக் காரணம், பொதுக்குழுவிலே சொன்னால்தான், அது நம்முடைய கிளைக் கழகங்கள் வரையிலே சென்று, நம்முடைய கிளைக்கழக உறுப்பினர்கள் வரையிலே கடைப்பிடிக்கமுடியும் என்பதற்காக அதை நான் பொதுக்குழுவிலே சொல்லவேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டது.
கண்கலங்க பிரதமருக்கு வேண்டுகோள்
மத்திய அரசு நாம் விரும்புகின்ற அவசரத்திற்கு, நாம் படுகின்ற வேதனையைத் துடைக்கின்ற அளவிற்கு, வேகமான முடிவெடுக் காமல், இன்னும், இன்னும், இன்னும் தாமதிக்கின்ற காரணத் தால், தாமதிக்கின்ற ஒவ்வொரு வினாடியும் ஒரு தமிழனுடைய பிணம் இலங்கை வீதியிலே விழுந்து கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் மறந்து விடக்கூடாது என்பதை மாத்திரம் நான் இந்தப் பொதுக் குழுவிலே, என்னை நீங்கள் தலைவராக ஆக்கி மகிழ் கின்ற இந்த நேரத்திலே கண் கலங்க, வேண்டுகோளாக டெல்லிப் பட்டணத்திற்கு விடுக்க விரும்புகின்றேன். நானும், நம்முடைய தமிழகத்தினுடைய அனைத்துக் கட்சித் தலைவர்களும் சென்று பிரதமர் மன்மோகன்சிங் அவர்களிடம் முறையிட்ட போது, அவர்கள் எங்களுக்குத் தந்த வாக்குறுதி விரைவில் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி, ஒரு வழி காண முயற்சிக்கிறோம் என்றார்கள். இன்னமும் காத்திருக்கிறோம்; நம்பியிருக்கிறோம்; செய்வார் என்று கருதியிருக்கின்றோம்; செய்யவேண்டுமென்று இந்தப் பொதுக் குழுவிலும் தீர்மானம் போட்டிருக்கின்றோம். இந்தப் பொதுக் குழுவிலே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலே எங்களைக் கண் கலங்க வைத்த தீர்மானம் அது. ஆகவே, அந்தத் தீர்மானத்திற்கு மதிப்பளியுங்கள்; அதை நிறைவேற்றி முடியுங்கள் என்று இந்தப் பொதுக் குழுவின் சார்பாக நம் முடைய மத்திய சர்க்காரை மீண்டும், மீண்டும், மீண்டும், மீண்டும் கேட்டுக் கொள்கின்றேன்.
இவ்வாறு கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.
---------------------நன்றி; "விடுதலை" 29-12-2008
Labels:
கலைஞர்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அரசியலில் புகுந்ததும் ஓட்டு வாங்க வேண்டியதற்காக"ஒன்றே குலமும்
ஒருவனே தெவனும்"என்று ஆரம்பித்துத்
தந்தை பெரியாரின் சமுதாயக் கொள்கைகள் தள்ளி வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது.
இப்போது தமிழர்கள் விழிப்படைந்து வருகின்றனர்.இப்போது அறிவு முற்றிலும் மயங்கி
அய்யப்ப பக்தர்களாகவும்,
மொட்டையடிக்கும் பக்தர்களாகவும்,
கிராம அடிதடிக்கும்,சாதிச்
சண்டைகளுக்கும் கோவில் திருவிழாக்கள் பயன் படுவதும்,
பார்ப்பன பத்திரிக்கை பலத்திற்குப் பயந்து நடப்பதும்
இருக்க வேண்டிய அவசியமில்லை.
குங்குமமும்,பட்டையும்,கொட்டையும்,
கையில் கயிறும் அவமானச் சின்னங்கள் இல்லையா?
மானமிகு முதல்வரின்,
மானமிகு பேராசியரின்
வேண்டுகோள் படி
சுய மரியாதை,பகுத்தறிவுக் கொள்கைகளைக் கடைப் பிடிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின்
கடமையாகிறது.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழன் அய்யா.
Post a Comment