Search This Blog

27.12.08

இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயரைப் புகுத்தக் கூடாது;ஆயத்தமாவீர்! மறியலுக்கு ஆயத்தமாவீர்!!




களம் காணுவோம்- கருஞ்சட்டை வீரர்களே!

டிசம்பர் 29 ஆம் தேதி தமிழ்நாடெங்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் மறியல் போராட்டத்தை திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் சார்பில் இயங்கும் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்காக அளிக்கப்படும் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் ஒரு தடைக்கல் ஏற்படுத்தப்பட்டுள்ளது உச்சநீதிமன்றத்தால். ஆண்டுக்கு 4.5 லட்சம் ரூபாய்க்குமேல் வருமானம் பெறும் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர் மாணவிகளுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்பதுதான் இன்றைய நடைமுறை.

இந்த வருமானம் உள்ளவர்கள் கல்வியிலும், சமூக ரீதியிலும் பிற்பட்டு இருக் கிறார்களா? இல்லையா? என்பதுபற்றி நீதிமன்றத்திற்குக் கவலையில்லை. பணம் அவர்களிடம் இருப்பதால், நீதிமன்றக் கண்ணோட்டப்படி அந்தப் பிற்படுத்தப்பட்டோர் உயர்ஜாதியாகி விடுகிறார்கள் என்பது மெத்த படித்த நீதிபதிகளின் கணிப்பு.

பணம் பெற்றவர்கள் எல்லாம் உயர்ஜாதி என்று அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சட்ட மேதைகளும் கருதவில்லை; நாடாளுமன்றமும் நினைக்கவில்லை. இப்பொழுது உச்சநீதிமன்றம் மட்டுமே அவ்வாறு நினைக்கிறது - திணிக்கிறது.


இந்த அளவுகோல் தாழ்த்தப்பட்டோருக்கும் கிடையாது; (அவர்களுக்கும் பொருளாதார நிபந்தனை கூடாது என்பதுதான் நமது நிலைப்பாடு) உயர்ஜாதி பார்ப்பனர்களுக்கும் கிடையாது; இடையில் விழிபிதுங்கி நிற்பது பிற்படுத்தப்பட்ட மக்கள்தான்.

தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆட்சிக் காலத்தில் திணிக்கப்பட்ட வருமான வரம்பு என்ற முதலை- இன்று உச்சநீதிமன்றத்தின் வாயிலாக மீண்டும் வாய் பிளக்கிறது.

இட ஒதுக்கீட்டின் நோக்கத்தை சிதற அடிப்பதற்கான ஒரு பாதையை உச்சநீதிமன்றம் திறந்து காட்டிவிட்டது. அடுத்தகட்டமாக இட ஒதுக்கீடே கூடாது என்று எழுதிட சிகப்புமை பேனாவைத் தயாராகவே திறந்து வைத்துக்கொண்டு காத்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

எதையும் அதன் தொடக்கத்திலேயே - அதன் மூல பலத்திலேயே கைவைத்து நிர்மூலப்படுத்துவதுதான் தந்தை பெரியாரின் போர் முறை. தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்களும் அந்தக் கண்ணோட்டத்தில்தான் காய்களை நகர்த்திக் கொண்டுள்ளார்.


அந்த அடிப்படையில்தான் 29.12.2008 அன்று காலை தமிழ்நாடெங்கும் மாவட்டத் தலைநகரங்களில், மத்திய அரசு அலுவலகம்முன் மறியல் போராட்டத்தை தமிழர் தலைவர் அறிவித்துள்ளார்.

பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயரைப் புகுத்தக் கூடாது; உச்சநீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து - முட்டுக்கட்டையிலிருந்து மக்கள் தொகையில் பெரும்பகுதியினரான பிற்படுத்தப்பட்ட மக்களைக் காப்பாற்றிட அரசமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படவேண்டும் என்று வலியுறுத்திடவே இந்த மறியல் போராட்டம்.

மறியல் போராட்டம் என்றாலே அதற்குக் காவல்துறை அனுமதி கிடையாது என்பது தெரிந்த ஒன்றுதான்.

தடை என்றாலும் அதனை மீறி மறியல் போராட்டம் நடத்துவோம்! ஆயிரக் கணக்கில் கைதாகக் கருஞ்சட்டைத் தோழர்கள் தயாராகட்டும்!

சென்னையிலே தமிழர் தலைவர் தலைமை தாங்குகிறார்.

பல்வேறு மாவட்டங்களிலும் தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் தலைமை தாங்குவார்கள்.

அன்று - 1950-களில் இட ஒதுக்கீட்டுக்கு ஏற்பட்ட ஆபத்தை அய்யா தலையிட்டுத் தடுத்து நிறுத்தினார்.

இன்று ஏற்பட்டுள்ள பேராபத்திலிருந்தும் சமூகநீதியைக் காப்பாற்றிட தமிழர் தலைவர் தலைமையிலே அணிவகுப்போம் - ஆர்ப்பரிப்போம் - கருஞ்சட்டைச் சிங்கக் கூட்டமே மறியலுக்குத் தயாராவீர்! தயாராவீர்!

இது ஏதோ தமிழ்நாட்டிற்கு மட்டும் போராட்ட நடவடிக்கை அல்ல. இந்தியத் துணைக் கண்டத்திற்கே பயனளிக்கும் சமூகநீதிப் போராட்டமாகும்.


அன்று மண்டல் குழு பரிந்துரையை அமல்படுத்த வைக்க எந்தக் கழகம், எந்தத் தலைவர் மற்ற அமைப்புகளுடன், தலைவர்களுடன் இணைந்து முன்நின்று போராடி, வெற்றிப் பதாகையை உயர்த்திக் காட்டியதோ அதே திராவிடர் கழகம், அதே தமிழர் தலைவர் - இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து ஒடுக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றிட அணிவகுக்கிறது என்பதை மறவாதீர்!

ஆயத்தமாவீர்! மறியலுக்கு ஆயத்தமாவீர்!!


------------------- 27-12-2008 "விடுதலை" யில் - மின்சாரம் எழுதிய கட்டுரை

2 comments:

Unknown said...

//பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயரைப் புகுத்தக் கூடாது; உச்சநீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து - முட்டுக்கட்டையிலிருந்து மக்கள் தொகையில் பெரும்பகுதியினரான பிற்படுத்தப்பட்ட மக்களைக் காப்பாற்றிட அரசமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படவேண்டும்//

அரசு கொண்டு வருமா?

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ்