Search This Blog

18.12.08

சிந்தனையே அறிவு; அதுவே மனித வாழ்வை உயர்த்தும்


"வயதில் அறிவில் முதியார் நாட்டின்
வாய்மைப் போருக்கு என்றும் இளையார்
உயர் எண்ணங்கள் மலரும் சோலை
ஓதும் இராமசாமி வாழ்க"

என்று சரியாக படம் பிடித்தார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அப்படிப்பட்ட

தந்தைபெரியாரின் கருத்துக்கள் "உயர் எண்ணங்கள்" என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது. அந்நூலில் உள்ள கருத்துக்கள் இங்கு தரப்படுகிறது. அந்த உயர் எண்ணங்களை நீங்களும் படித்துப் பயன் பெற வேண்டுகிறேன்.

*******************************************





1. பகுத்தறிவு


பகுத்தறிவு என்பது மனிதனுக்கு ஜீவநாடி உயிர் நாடி ஆகும். ஜீவராசிகளில் மனிதனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. இதில் மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கின்றானோ, அவ்வளவுக்கவ்வளவு காட்டுமிராண்டி என்பது பொருள்.

மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு பகுத்தறிவில் தெளிவு பெறுகின்றானோ அவ்வளவுக்கவ்வளவு பக்குவமானவன் என்பது பொருள்.


பகுத்தறிவு பெறும்படியான சாதனம், நமக்கு நீண்ட நாளாகவே தடைப்படுத்தப்பட்டு வந்துள்ளது. நம்மை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய பார்ப்பனர்கள் நாம் பகுத்தறிவு வளர்ச்சி அடைய ஒட்டாமல் தடை செய்து கொண்டே வந்துள்ளார்கள்.

தடைக்கற்கள்

மக்களிடையே பகுத்தறிவைத் தடைப்படுத்த கடவும், மதம்,சாஸ்திரம்,முதலியவைகளைப் புகுத்தி நம்பும்படிச் செய்துவிட்டார்கள்.

பொதுவாகக் கடவுளைப்புகுத்தியவன், கடவுள் பக்திக்கு முதல் நிபந்தனையாகக் கடவுள் பற்றிச் சிந்திக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் தான் ஏற்படுத்தினான்.



கடவும் பஞ்சேந்திரியங்களுக்கு எட்டமுடியாத வஸ்து, அறிவுக்கு எட்டமுடியாத வஸ்து, பஞ்சேத்திரியம் என்றால் மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த அய்ந்துக்கும் கடவுள் எட்டமாட்டார்; இந்த அய்ந்தும் கொண்டு கடவுளைத் தேடவும் கூடாது என்பதாகும்.


இந்த இந்திரியங்களை எல்லாம் மீறிச் சிந்திக்க மனது என்று ஒன்று உள்ளது. இந்த மனதுக்கும் எட்டாதவர் கடவுள் என்று இத்தனை நிபந்தனைகளையும் போட்டுக் கடவுளைச் சொன்னான்.


கடவுள் என்றால் அப்படியே ஒத்துக்கொள்ள வேண்டும்; எங்கே ஏன் எப்படி என்று கேட்கக் கூடாது என்று கூறிவிட்டார்கள்.

கடவுள் போலவே மதத்தைம் பற்றியும் என்ன என்று சிந்திக்கக்கூடாது; மதம் எப்போது ஏற்பட்டது - யாரால் ஏற்பட்டது

என்ன ஆதாரம் என்று சிந்திக்கக்கூடாது; சிந்தித்தால் மதம் போய்விடும்.
எனவே, அப்படியே ஒத்துக்கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டார்கள்.

சாஸ்திரம்


கடவும், மதம் போலவே சாஸ்திரத்தைப் பற்றியும் ஆராயக்கூடாது; எவன் பகுத்தறிவு கொண்டு சாஸ்திரங்களை ஆராய்கின்றோனோ அவன் நரகத்திற்கும் போவான் என்றும் எழுதிவைத்துள்ளார்கள்.

எனவே, பகுத்தறிவு என்பது ஆதாரத்தைக் கொண்டு தெளிவடைவது மூடநம்பிக்கை என்பது ஆராயாமல் ஏற்றுக்கொள்வது ஆகும்.


நமது இழிநிலை, முட்டாள்தனம் மாறவேண்டுமானால், நாம் ஒன்றும் கஷ்டப்பட வேண்டியதில்லை. பகுத்தறிவினைக் கொண்டு தாராளமாகப் பல தடவை நன்கு சிந்தித்தால் ஒவ்வொன்றும் தானாகவே நழுவி விடும்.


நாத்திகம் என்றால்


நமது கொள்கை பகுத்தறிவு - பகுத்தறிவு என்றால் நாத்திகம் ஆகும்; அறிவு கொண்டு சிந்திப்பதுதான் நாத்திகமாகும்.


கடவுள் மனதுக்கும், வாக்குக்கும் எட்டாதவர் என்று கூறப்பட்டாலும் - அதுதான் உலகத்தை உண்டாக்கி நம்மை எல்லாம் நடத்துகின்றது; எல்லாவிதமான சர்வ சக்திகளும் உடையது என்று கூறப்படுகிறது.

அப்படிப்பட்ட கடவுள், நம்மைத் தவிர்த்து மற்ற உலகத்திற்கு, ஒன்றுதான். ஆனால், நமக்குத்தான் ஆயிரக்கணக்கில் கடவுள்கள். நம்மைத் தவிர்த்த மற்ற உலககிற்கு கடவுளுக்கு உருவம் இல்லை. நமது கடவுளுக்கோ பல்லாயிரக்கணக்கான உருவங்கள்.

மற்ற நாட்டுக் கடவுள்களுக்கு ஒன்றும் வேண்டியதில்லை. நமது நாட்டுக் கடவுளுக்கு மட்டும் மனிதனுக்கு வேண்டியவை எல்லாமுமே வேண்டும்.

மூடநம்பிக்கை

மற்ற நாட்டுக்காரர்கள் கடவுள் - யோக்கியம், நாணயம், ஒழுக்கம் உடையது என்று உண்டாக்கி இருக்கிறார்கள். நமது நாட்டுக் கடவுளுக்கு இந்த ஒழுக்கம், நாணயம் எதுவும் கிடையாது. மனிதரில் கீழ்த்தரமானவனுக்கு என்னென்ன குணங்கள் இருக்குமோ அவைகள் அத்தனையும் கடவுளுக்கு ஏற்றி விட்டிருக்கிறார்கள்.

இப்படி ஏராளமாகப் பேதங்களும், நடப்புக்கு ஒவ்வாத காரியங்களும், காரியத்தில் கேடான குணங்களும் கடவுளுக்குக் கற்பித்திருக்கின்றார்கள்.

இவைகளையெல்லாம் நம்புவது தான் மூடநம்பிக்கை. நல்லவண்ணம் சிந்தித்து ஆராய்ந்து ஏற்கின்றதை ஏற்றுக்கொண்டு மற்றதைத் தள்ளுவது தான் பகுத்தறிவு

கடவுள் ஏன் ஒழிய வேண்டும்?

நாம் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்த்தால், பகுத்தறிவிற்கு ஏற்ற கடவுள் இருக்கின்றதா என்பதைச் சிந்தித்தும் பார்த்தால் இல்லவே இல்லை.

உண்மையில் ஒரு கடவுள் இருக்குமானால் நமக்குத் தெரியாமல் இருக்கவேண்டிய அவசியம் என்ன? அந்தக் கடவுள் தாம் இருப்பதாக நமக்காவது ஏன் தெரியப்படுத்தக் கூடாது?


ஒழுங்கான கடவுள் ஏது?

நமக்கு ஒழுக்கமான கடவுளே இல்லையே; சைவ சமயத்தில் கந்தன் - முருகன் - சும்பிரமணியன் என்று ஒரு கடவுள். அவனுக்கும் போட்டியாக வைணவத்தில் ராமன் என்று ஒரு கடவுள்.

இப்படியாகப் பல கடவுள்கள் கூறப்படுகின்றன. இந்த கந்தனைப்பற்றிய கதையும் அசிங்கம் - ஆபாசமாக இருக்கும்; ராமனைப் பற்றிய கதையும் ரொம்பவும் ஒழுக்கக் கேடாக இருக்கும். காரணம் இந்தக் கதைகள் ரொம்பக் காட்டுமிராண்டிக் காலத்தில் எழுதப்பட்டமையால் பகுத்தறிவைப் பற்றிய கவலையே இல்லை.

மக்கள் அறிவுகொண்டு சிந்தித்தல் வேண்டும். அதுவே பகுத்தறிவை வளர்க்கும். பகுத்தறிவிற்குத் தடையாக இருப்பது கடவுள், மூடநம்பிக்கை, சிந்திக்க ஒட்டாத நிலை.

சிந்தனையே அறிவு; அதுவே மனித வாழ்வை உயர்த்தும்.


-------------------- தந்தைபெரியார் – நூல்:-“உயர் எண்ணங்கள்” பக்கம்:- 3-5

4 comments:

அக்னி பார்வை said...

எனக்கு தங்களின் மின் அஞ்சல் முகவரி வேண்டும்.இந்த மினஞ்சலுக்கு தெரியபடுத்துங்கள்.

agnipaarvai@gmail.com

தமிழ் ஓவியா said...

தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன்.
தொடர்பு கொள்ளவும்.
நன்றி

தமிழ் ஓவியா said...

தொடர்பு கொண்டதற்கு நன்றி. மகிழ்ச்சி.

Unknown said...

பெரியார் கருத்துக்களைப் படிக்கும் போது மூடநம்பிக்கை ஒழிந்து த்ன்னம்பிக்கை பிறக்கிறது.