Search This Blog

19.12.08

அக்கினி பகவான் யோக்கியதை என்ன?




சுயமரியாதைத் திருமணம் - ஏன்?

வைகுந்த பதவியும் சிவலோகவாசத்தையும் தங்களுக்காகக் கேட்ட அந்த முனிவர்களையும், அவர்கள் பாடிய பாடல்களையும் இந்தத் திருமணத்தில் அழைப்பதும் பாடுவதும் பொருத்தமற்றதுதானே. இங்கே வந்தாலும் அவர்கள் தங்களுக்குத்தான் எதையாவது கேட்பார்களே தவிர, நமக்காக ஒன்றும் பேச மாட்டார்கள், கேட்க மாட்டார்களே! ஆகவேதான் இங்கே எந்தப் பக்தரையும் சரி, அய்யரையும் சரி நாங்கள் அழைக்கவில்லை; அழைப்பதும் இல்லை. அதைப்போலவே நமக்காக எழுதப்படாத பாடப்படாத எந்தப் பாடலையும் பாடுவதில்லை, பாடவும் விடுவதில்லை.

நம்மைப் பற்றியும் நமது வாழ்க்கையைப்பற்றிம் கவலைப்படும், அக்கறை காட்டும், நண்பர்களைத்தான் நாம் அழைக்கிறோம். அப்படிப்பட்டவர்களால்தானே நாம் முன்னேற வழிவகைகளைக் காட்ட முடியும், கூற முடியும். ஆகவே தேவாரம் பாடவில்லை. திருவாசகம் படிக்கவில்லை, அய்யரைக் கூப்பிட்டு மந்திரம் ஓதவில்லை என்பதற்காக எவரும் கவலைப்படத் தேவையில்லை என்பதை மறுமுறையும் வலியுறுத்திக் கூறுகிறேன்.

கடைசியாக, சில பெரியவர்கள் இங்கே அம்மி மிதித்து அருந்ததி காட்டவில்லை, அக்கினி வளர்க்கவில்லை, ஆண்டவனைப் போற்றவில்லை என்று குறைபடுவதற்கும் அர்த்தம் இல்லையென்றும் சொல்லிவிடுகிறேன்.

திருமணத்தில் அக்கினி வளர்ப்பது எதற்காக? திருமணத்திற்கு அக்கினிதேவன் சாட்சியாக இருக்கிறான் என்பதற்குத்தானே! அந்த அக்கினி பகவான் யோக்கியதை என்ன? அருந்ததி என்று ஒரு சினிமாக்கூட வந்ததே, அதைப் பார்த்தவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும், நான் கூறப்போவது,

ஒரு காலத்தில் சப்தரிசிகள் ஒரு யாகம் செய்தன ராம். அந்த யாகத்திற்குச் சென்று அவிர்பாகம் வாங்கிச் சென்ற அக்கினி பகவான் அந்த ஏழு இரிஷிபத்தினிகளின் மீதும் காமமுற்றானாம். இதனை வெட்கத்தை விட்டு தன் மனைவியிடமே கூறினார். இந்தக் காலத்தில் எப்படிப்பட்ட கேடு கெட்ட மனிதனும்கூட கட்டிய மனைவியிடம், தான் பிற பெண்ணின் மீது ஆசை வைத்திருப்பதாகக் கூறமாட்டான்.

ஆனால், ஆண்டவனான அக்னி தன் மனைவியிடம் தான் இரிஷிபத்தினியிடம் காமமுற்று இருப்பதைக் கூறிய உடன் தன் மனைவியையே அதற்கான ஏற்பாடுகளையும் செய்யும்படி கேட்டானாம். அவன் மனைவியும் சப்தஇரிஷிகளில் ஆறு பேர்களின் மனைவியரைப் போலவே உருவெடுத்து தன் கணவனின் காமத்தைத் தடுத்தாளாம். ஆனால், ஏழாவது முனிவரின் மனைவியான அருந்ததியைப்போல மட்டும் உருவம் எடுக்க முடியவில்லை என்றும் அதற்குக் காரணம் அருந்ததி ஆதிதிராவிடப் பெண்மணி என்றும் புராணம் கூறகிறது. பிறர் மனைவியை காமுறும் தீய குணம் படைத்த அக்னியையா நம்முடைய திருமணக் காலங்களில் சாட்சிக்கு அழைப்பது? கூடாது கூடவே கூடாது.



-----------------------------சுயமரியாதைத் திருமணத்தில் அண்ணா சொற்பொழிவு

1 comments:

Unknown said...

//ஏழாவது முனிவரின் மனைவியான அருந்ததியைப்போல மட்டும் உருவம் எடுக்க முடியவில்லை என்றும் அதற்குக் காரணம் அருந்ததி ஆதிதிராவிடப் பெண்மணி என்றும் புராணம் கூறகிறது.//

தாழ்த்தப்பட்டவர்கள் பார்ப்பனர்களை நெருங்கவிடாமல் இருந்துள்ளனர். அதனாலும் அவர்களை தாழ்த்தி வைத்திருக்கலாமோ?