Search This Blog
24.12.08
பெரியார் வென்றார் - வெல்வார்!
சூளுரைப்போம்! சோர்விலாப் பயணம் தொடருவோம்!
நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் மறைந்து இன்று 35 ஆண்டுகள் ஓடிவிட்டன!
என்றாலும், அவர்தம் அளப்பரிய தொண்டறம் விதைத்த விதைகள் முளைகளாகி, செடிகளாகி, மரங்களாகி, பூத்துக் குலுங்கி, காய்த்துக் கனிந்து, பெருமைப்படத்தக்க சமூக வெற்றி களைத் தந்து கொண்டே இருக்கின்றன! அய்யாவுடன் அவர்தம் லட்சியங்களும், இயக்கமும் மறைந்துவிடும் என்று தப்புக் கணக்குப் போட்ட தப்பிலிகள் இன்று தடுமாறுகின்றனர்; அவ்வெற்றியின் வீச்சுக்கு முன்னர் தலைகுனிகின்றனர்!
ஒடுக்கப்பட்டோரின் உரிமை வாழ்வுக்காக
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு தலைவராம் தந்தை பெரியார் அவர்கள், காங்கிரசிலிருந்து வெளியேறியதே சமூக நீதிக்காக - ஒடுக்கப்பட்டோரின் உரிமை வாழ்வுக்காக!
அதை அய்யா அவர்கள் வாழ்ந்தபோது, வளர்ந்தோங்கிய வகுப்புரிமையாக இட ஒதுக்கீடாக மாநில அளவில் கண்டு மகிழ்ந்தார்கள்; ஆனால், அவரது மறைவுக்குப் பின்னர் அந்த லட்சியங் களின் ஒளிவீச்சு மத்திய அரசுத் துறைகளுக்குள்ளும் சென்று, ஒடுக்கப்பட்டோருக்கு கல்வியில், உத்தியோகங்களில் திறக்கப்படாத அதன் கதவுகள் மெல்ல மெல்லத் திறக்கப்பட்டன!
கலங்கரை விளக்காக வழிகாட்டுகிறது
அவர்தம் போராட்டத்தின் விளைவாக எப்படி அரசியல் சட்டம் முதலாவதாக திருத்தப்பட்டு சமூகநீதிக்கு பாதுகாப்பு ஏற்பட்டதோ அதுபோலவே, அவருக்குப் பின்னர் அவர்தம் தொண்டர் களின் தொடர் போராட்டத்தால் 76 ஆவது அரசியல் சட்ட திருத்தம் நிறைவேறி, 69 விழுக்காடு (இந்தியாவின் எந்த மாநிலத் திலும் இல்லாத அளவுக்கு) தமிழ்நாட்டில் கல்வி, உத்தியோகங்களில் இட ஒதுக்கீடு சட்டபூர்வமான பாதுகாப்பைப் பெற்றதோடு, எளிதில் புக முடியாத 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்பையும் அது பெற்று, இந்தியத் திருநாட்டிற்கே சமூகநீதிக்குரிய கலங்கரை வெளிச்சமாக ஒளி வீசி வழிகாட்டுகிறது!
மத்திய அரசின் வேலை வாய்ப்பு, மத்திய கல்வி நிறுவனங் களில் 27 சதவிகித பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு, தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்குரிய 23 விழுக்காடு முறையாக பாக்கியின்றி நிரப்பப்படுதல், உயர்நீதிமன்றங்களில் ஓரளவு சமூகநீதி அடிப்படையில் நீதிபதிகள் நியமனம் போன்ற வெற்றிகள் வளர்ந்து வருகின்றன!
பெரியார் வென்றார் - வெல்வார்!
கடவுள், மத, மூட நம்பிக்கைகளின் அடிக்கட்டுமானம் தகர்ந்து, வெளியே அதை மறைக்கவே விளம்பர வெளிச்சங் களைப் போடுகின்றன மின்னணு ஊடகங்கள் எனும் தொலைக் காட்சிகளும், தொல்லைமிகு ஆரிய ஏடுகளும்!
பெரியார்தம் பெண்ணுரிமை கருத்துகள் பெரும் அளவில் வெற்றி பெற்று இன்று 1929 இல் செங்கற்பட்டு மாகாண முதல் சுயமரியாதை மாநாட்டு சொத்துரிமை, படிப்புரிமை - சம உரிமைத் தீர்மானங்கள் இன்று மத்திய அரசாலே சட்டங்களாகி நிலைத்து, பெரியார் வென்றார்; வெல்வார் என்பதைப் பறை சாற்றிக் கொண்டுள்ளன!
பெற்றது சிறிதளவு;
பெறவேண்டியதோ பெரிய அளவு
என்பதை பெரியார் தொண்டர்கள் உணர்ந்தே தம் பயணத்தை, உண்மையோடும், உறுதியோடும், தெம்போடும், திராணியோடும் நடத்திச் செல்கின்றனர்!
அண்ணாவும் - கலைஞரும் சரித்திரம் படைத்தனர்!
அய்யாவின் நெஞ்சில் தைத்த முள்ளை அவர்தம் அருமைப் புதல்வராம் நமது மானமிகு கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அகற்றி, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக்கிட சட்டம் நிறைவேற்றி சாதனை சரித்திரம் படைத்தார்!
அவருக்கு முன்னர், நூற்றாண்டு விழா நாயகர் அறிஞர் அண்ணா சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட வடிவம் தந்து சரித்திரம் படைத்தார்.
தமிழ் ஆண்டுகள், 60 ஆண்டுகள் என்ற ஆபாச புராணக் குப்பைகளை போகியில் கொளுத்துவதுபோல், கொளுத்தி பொங்கல் நாள் - தை முதல்நாள் திராவிடர் திருநாளாம் பொங்கல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் என்ற வரலாற்று வைர வரிகளை எழுதினார்.
பெரியார் கொள்கைகள்
உலகம் முழுவதும் வெற்றி உலா வருகின்றன
பெரியார் வாழ்கிறார்! வாழ்கிறார்!! என்றும் வாழ்வார்!!! என்பதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டுகள் எவையும் தேவையா?
உலகம் முழுவதும் வெற்றி உலா வருகின்றன பெரியார் கொள்கைகளும், லட்சியங்களும்!
அத்தகைய பெம்மானின் பெருவழியில் சலிப்பின்றி, சபல மின்றி, சலனமின்றி நடைபோட்டு அய்யாவை அகிலம் முழுவதும் ஏற்கச் செய்ய இந்நாளில் அவர்தம் தொண்டர்களாகிய நாம் சோர்வடையா சூளுரை ஏற்போம்!
இப்படை தோற்கின்
எப்படை வெல்லும்?
வெற்றி நமதே!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு - தன்மானம்!
------------------தி.க. தலைவர் கி.வீரமணி அவர்களின் அறிக்கை - "விடுதலை" - 24.12.2008
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு - தன்மானம்!
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி பிரபு.
Post a Comment