Search This Blog

29.12.08

உண்மையில் இந்து மதம் என்பதாக ஒன்று இல்லை !


இந்து மதம்

திராவிடர்கள் இந்துக்கள் அல்ல என்பது எமது கருத்தாகும்.இந்தக் கருத்தை ஆதாரமாக வைத்தே திருவாரூரில் கூடிய ஜஸ்டிஸ்கட்சி மாகாண மகாநாட்டில் “திராவிடர் ஆகிய நாம் இந்துக்கள் அல்ல” என்றும், மக்கள் எண்ணிக்கையைக் கணக்கு எடுக்கும் சென்சஸ் ரிபோர்ட்டில் நாம் ஒவ்வொருவரும் திராவிடர் என்று பெயர் கொடுக்க
வேண்டுமே ஒழிய இந்துக்கள் என்று பெயர் கொடுக்கக் கூடாது
என்றும்
தீர்மானம் செய்திருக்கிறோம்.


ஆனால் இத்தீர்மானத்தை அனேக ஜஸ்டிஸ் கட்சி அங்கத்தினர்கள் லட்சியம் செய்ததாகவே தெரியவில்லை. அரசியல் பதவிகளில் இருக்கிற லட்சியத்தில் பதினாறில் ஒரு பாகத்தைக் கூட நம்மவர்களில் அனேகர் சமுதாயத்தில் தங்களுக்கு இருக்க வேண்டிய
பதவிகளைப் பற்றியோ தங்களது இழிநிலையைப் பற்றியோ கவலைப்படுவதில்லை. இந்தக் காரணமே திராவிடர்களின் இழிநிலைக்கு முதன்மையானதாக இருந்து வருகிறது. எவ்வளவோ பெரும் படிப்பும், ஆராய்ச்சி அறிவும், மேல்நாட்டு நாகரிகமும்
தாராளமாய்க் கொண்ட மக்கள் கூடத் தாங்கள் அனுபவித்து வரும் சமுதாய இழிவு விஷயத்தில் போதிய கவலைப்படாமலே இருந்து வருகிறார்கள். இவர்கள் சிறிது கவலை எடுத்துக் கொண்டிருந்தாலும் மாபெரும் மாறுதல் ஏற்பட்டிருக்கும் என்பதோடு திராவிட நாட்டில்
சிறப்பாகத் தமிழ்நாட்டில் இருந்து “ இந்து மதம்” பறந்து ஓடி இருக்கும்.


இந்து மதம் என்று ஒன்று இல்லவே இல்லை என்பது, கடுகளவு அறிவு
உள்ளவர்களும் உணரக்கூடிய காரியமேயாகும். இந்து மதம் என்பது திராவிடர்களை இழிவுபடுத்தி, கீழ்மைப்படுத்தி அவர்கள் முன்னேறுவதற்கு இல்லாமல் ஒடுக்கி வைத்திருக்கிறதற்கே ஏற்படுத்தப்பட்டது என்பதல்லாமல் அதற்காகவே இந்துமதம் என்பதாக
ஒரு போலிவார்த்தை உச்சரிக்கப்படுகிறது என்பதல்லாமல், மற்றபடி வேறு கொள்கையுடனோ குறிப்புகளுடனோ இந்து மதம் இருக்கவில்லை.


உண்மையில் இந்து மதம் என்பதாக ஒன்று இல்லை என்பதற்கு ஆரியர்கள் சொல்லும் சொற்களே போதிய சான்றாகும்.

1940-ஆம் ஆம்டு டிசம்பர் மாதம் 8-ஆம் தேதியில் சென்னைத்
திருவல்லிக்கேணி மணி அய்யர் மண்டபத்தில் நடந்த “தமிழ்நாடு
ஆரியர் மகாநாடு” என்பதில் தலைமை வகித்த திவான் பகதூர்
வி.பாஷியம் அய்யங்கார் அவர்கள் தமது தலைமைப் பிரசங்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:-

“நாம் அனைவரும் ஆரிய மதத்தைச் சேர்ந்தவர்களாவோம்,இந்து மதம் என்பதாக ஒரு மதம் கிடையாது. இந்து என்கிற பெயர் நமக்கு அந்நியர் கொடுத்ததேயாகும். நாம் ஆரியர்கள்; ஆரியப் பழக்க வழக்கத்தை அனுசரிக்கிறவர்கள் ஆரியர்களேயாவார்கள்” .

“கண்டவர்களையெல்லாம் ஆரியமதத்தில் சேர்த்துக் கொண்ட தானது ஆரிய மதத்தின் பலவீனமேயாகும்” . என்பதாகப் பேசி”இருக்கிறார். இந்தப் பேச்சு 10-12-40 இல் இந்து, மெயில், சுதேச மித்திரன், தினமணி, விடுதலை ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்து இருப்பதோடு “விடுதலையில்” இதைப்பற்றி அதே தேதியில் தலையங்கமும் எழுதப்பட்டிருக்கிறது.


மற்றும் திவான் பகதூர் பாஷியம் அய்யங்கார் அவர்கள் அதே பேச்சில் “இந்து மதத்திற்கு ஆதாரம் வேதங்களேயாகும்” “வேதத்தை ஒப்புக்கொள்ளாதவர் இந்துவல்ல” என்றும் பேசி இருக்கிறார். எனவே இந்து மதம் என்பதோ அல்லது ஆரியமதம் என்பதோ ஆரியர்களுடைய ஆரியர்களின் நன்மைக்கேற்ற கொள்கைகளைக் கொண்ட மதம் என்பதும், அது வேதமதம் என்பதும் இப்போதாவது திராவிடர்களுக்கு விளங்குகிறதா என்று கேட்கிறேன்.

அதோடு கூடவே சைவர்களையும், சைவப் பண்டிதர்களையும், தங்களைத் திராவிடர் (தமிழர்) என்று சொல்லிக் கொள்ளுபவர்களையும், “திராவிடர்கள் வேறு ஆரியர்கள்வேறு” , “ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்” என்பவர்களையும், தென்னாடுடைய சிவனே போற்றி என்பவர்களையும், “அய்யா நீங்கள் இனியும் இந்து மதத்தையும், வேதத்தையும், வேத சாரங்களான புராண இதிகாசங்களையும், வேதக்கடவுள்களையும், வேத ஆகமங்களையும் ஒப்புக் கொள்ளுகிறீர்களா?” என்று கேட்கின்றேன்.


பொதுவாகத் தமிழ் மக்களையும், சிறப்பாகத் தங்களைப் பார்ப்பனரல்லாதார் என்றும், ஆரியரல்லாதார் என்றும், சொல்லிக் கொள்கிறவர்களையும் இனியும் தங்களை இந்துக்கள் என்றும் இந்து மதத்தைப் பின்பற்றுகிறவர்கள் என்றும் சொல்லிக் கொண்டு ஆரிய வேஷம் போட்டுக் கொண்டு நடிக்கலாமா என்றும் கேட்கின்றேன்.

ஒருவன் தனக்கு இந்து மதத்தைக் கைவிடத் தைரிய மில்லையானால், தன்னை சூத்திரன் அல்ல என்றும், ஆரியன் அல்ல என்றும் எப்படிச் சொல்லிக் கொள்ள முடியும்?

மதத்தினாலும், இனத்தினாலும், நாட்டினாலும் ஆரியரில் இருந்து பிரிந்து இருக்கிற தமிழர்கள் தங்கள் நாட்டில் 100க்கு 90 பேர்களாக அவ்வளவு கூடுதல் எண்ணிக்கை உள்ளவர்களாக இருந்து கொண்டு சகல துறைகளிலும் ஆரியர்கள்மேலாகவும், தமிழர்கள் தாழ்வாகவும், இழி மக்களாகவும் இருப்பது உலகத்தில் 8-வது அதிசயமல்லாவா என்று கேட்கிறேன். இதற்குத் தமிழ்ப் பெரியார்கள், பண்டிதர்கள், கலைவாணர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. முடிவாக நான் ஒன்று சொல்லுகிறேன். தமிழன் எவ்வளவு தூரம் இந்து மதத்தையும் இந்துமதக் கலை, ஆச்சாரம், கடவுள்,கோவில், பண்டிகை, சடங்கு, வேஷம், குறி, உடை, நடை முதலியவைகளை வெறுத்துத் தள்ளுகிறானோ அவ்வளவு தூரம் தான் அவன் மனிதத்தன்மையும் வரப்போகிறது என்றும் அவ்வளவு தூரம் தான் அவன் உண்மையான தமிழனாய் இருக்க முடியும் என்றும் வலிமையாய்க் கூறுகிறேன்.

------------------ தந்தைபெரியார் - 30.10.1943 தேதியிட்டு வெளியான “குடி அரசு” இதழில் வெளியான கட்டுரை

6 comments:

Osai Chella said...

இல்லாத இந்துமதத்தை நாம் ஏன் எதிர்க்கவேண்டும்? சாமியேய் சரணம் ஐயப்பா! தேவை புதிய பார்வைகள்! இந்துமதம் இல்லை என்று நாம் சொன்னாலும் உண்மையில் பல கோடி மக்கள் தமிழகத்திலேயே தங்களை அவ்வாறு அழைத்துக்கொள்கிறார்கள் தானே?! ஐயப்பன் ஹோமோ என்று சுவர் விளம்பரம் செய்தோம்? இன்றைய நிலமை என்ன? இந்துமதம் பார்ப்பன மதம் என்ற நிலை தாண்டி அனைவருக்கும் ஆன மதம் என்ற நிலைக்கு அவர்களால் வழுப்படுதப்பட்டு நிற்கிறது என்பது ஆதிவாசிகள் வாழும் இடங்களுக்கும் அவர்கள் பரவியுள்ள நிதர்சனம் நமக்கு காட்டுகிறது. நாமோ அரதப்பலசான ரிக்வேத வாதத்தை முன்னிறுத்தி பேசிக்கொண்டிருக்கிறோம்! நமக்குள்ளேயே! பெரியார் சரணங்கள் ஒன்றும் சாதிக்கப்போவது இல்லை. தேவை தற்காலத்திய வாதங்கள்!

அன்புடன்,
ஓசை செல்லா, கோவை

தமிழ் ஓவியா said...

//தேவை தற்காலத்திய வாதங்கள்//

முதலில் பெரியார் எடுத்துவைத்தவாதங்களுக்கு பதில் சொல்லட்டும். அதற்கே இன்னும் பதில் வரவில்லை. பெரியாரின் வாதங்கள் இதோ:

"முடிவாக நான் ஒன்று சொல்லுகிறேன். தமிழன் எவ்வளவு தூரம் இந்து மதத்தையும் இந்துமதக் கலை, ஆச்சாரம், கடவுள்,கோவில், பண்டிகை, சடங்கு, வேஷம், குறி, உடை, நடை முதலியவைகளை வெறுத்துத் தள்ளுகிறானோ அவ்வளவு தூரம் தான் அவன் மனிதத்தன்மையும் வரப்போகிறது என்றும் அவ்வளவு தூரம் தான் அவன் உண்மையான தமிழனாய் இருக்க முடியும் என்றும் வலிமையாய்க் கூறுகிறேன்."

இதைச் செய்தாலே போதுமே. இதைச் செய்யவைக்க நாம் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.

தற்காலத்திய வாதங்களும் எடுத்து வைக்கப்பட்டுத்தான் வருகிறது.

கணியூரில் ஒரு பேச்சாளர் பேசிக் கொண்டிருந்தார்.அவரின் கூட்டத்தை பேச்சை பலமுறை கேட்டிருக்கிறேன், பார்த்திருக்கிறேன். பிள்ளையாரைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். நான் சொன்னேன் பிள்ளையாரைப் பற்றி ஒரே மாதிரி பேசுகிறார் வேறு மாதிரிப் பேசலாமே என்று சொன்னேன்.

அதற்கு அந்த ஊர் மூத்த பெரியார் தொண்டர் சொன்னார் பிள்ளையாரை பற்றி அதே வாதத்தைத்தான் பேசமுடியும். அதே பிள்ளையார் அதைத்தானே பேசமுடியும். எனக்கும் அது சரி என்று அதற்குப் பின் தான் உரைத்தது.

அதற்குப் பின் கார்கில் பிள்ளையார் கிரிக்கெட் பிள்ளையார் வந்தது. நம்முடைய விமர்சனங்களும் அதற்கு தகுந்தார் போல் அமைந்தது. இந்து மதத்தைப் பற்றி பெரியாரின் கருத்தை இப்பதிவில் எடுத்து பதிவு செய்துள்ளேன். அதை அப்படியே தருவதுதான் சரியானது.

கண்டிப்பாக தற்காலிக வாதங்களையும் நாம் எழுப்பப்படவேண்டும்.

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ஓசை செல்லா.

Osai Chella said...

mikka nadri. Neengal Palani ya? Jawahar Sathiyamoorthy ellam theriyuma!

தமிழ் ஓவியா said...

நன்றாகத் தெரியும். ஓசை செல்லா. சுகுணாதிவாகர் உங்களைப் பற்றி சொல்லியுள்ளார். இயலுமானால் எனக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி அல்லது கைபேசி எண்ணை தெரியப்படுத்தவும்.
நன்றி

Osai Chella said...

webmediaconsultant@gmail.com enra ennirku avasiyam thodarpu kollavum.

தமிழ் ஓவியா said...

நன்றி ஓசை செல்லா.
விரைவில் தொடர்பு கொள்கிறேன்.