Search This Blog

27.12.08

காவல்துறையின் நேர்மையான அதிகாரி கர்கரேயைக் கொன்றது யார்?





அந்துலே அய்யப்படுவதில் அர்த்தம் உண்டு



2008 செப்டம்பர் 29 ஒரு முக்கிய நாள் - அன்று தான் மகாராட்டிர மாநிலம் மாலேகாவ்ன் நகரில் குண்டு வெடிப்பு!

இந்தக் குண்டு வெடிப்புக்குக் காரணமாக இருந்தவர்கள் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்த போது நாடே அதிர்ச்சிக்கு ஆளாகியது.

சிறீகாந்த் புரோகித் என்பவர் ஒரு இராணுவ அதிகாரி, அமிந்தானந்தா என்பவர் ஒரு சாமியார், பிரக்யாசிங் தாகூர் என்பவர் பெண் சந்நியாசினி - இவர்கள் உள்ளிட்ட பத்துப் பேர் கூட்டுச் சதியில் இந்தக் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது என்பது வெளியில் வந்தபின் சங்பரிவார் வட்டாரத்தில் இடி விழுந்தது போல் ஆகி விட்டது.


அதுவரை பயங்கரவாதம், தீவிரவாதம் என்றாலே அதன் தலைப்புச் செய்தி முஸ்லிம் தீவிரவாதம் என்பதாகத் தானே இருக்கும்.

இந்தத் திட்டமிட்ட பிரச்சாரத்தின் முகமூடி இப்பொழுது கிழிந்து தொங்கும்படி ஆகிவிட்டதே என்ற போது அவர்களின் முகங்கள் வீங்கித் தொங்க ஆரம்பித்து விட்டன.

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே வீராவேசத் துடன் சங்பரிவாரில் உள்ள ஒரு சிலர் நியாயவாதிகள் போலவும் சட்டத்தைக் காப்பாற்றும் சபாஷ் மனிதர்கள் போலவும் திருவாய் மலர்ந்தனர்.

சங்பரிவாரில் உள்ள ஆர். எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் இந்தக் குரலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. அதன்பிறகு இது ஒரு திட்டமிட்ட சதி - பொய்ப் பிரச்சாரம்! என்று அவர்களின் உதடுகள் அசைய ஆரம்பித்தன. சட்ட ரீதியான உதவி களை செய்வோம் என்று சொல்லி முன் வந்தனர்.

குற்றம் நிரூபிக்கப்படும் என்கிற அளவுக்கு ஆதாரங்கள் வலிமை பெற்று விட்டன என்ற ஒரு நிலை வந்த போது வெலவெலத்துப் போய் இந்துக்கள் குற்றம் செய்திருந் தாலும் அவர்களின்மீது விசாரணையே கூடாது என்கிற அளவுக்குக் கூசாமல் குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.

ஒருபடி மேலே சென்று சிவில் யுத்தம் தொடுப்போம்! என்று பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத் சிங் பேசியிருக்கிறார்.

ஒகேனக்கல்லில் செய்தியா ளர்களிடம் (25.12.2008) பேசிய திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் இதுபற்றி ஒரு கருத்தை வெளியிட்டார் இப்படி சொல்வது எவ் வளவு பெரிய தேசியக் குற்றம். இதையே வேறு எவராவது சொல்லியிருந்தால் பூகம்பம் வெடித்திருக்காதா? ஊடகங்கள் ஊதிப்பெருக்கி உயிரை வாங்கியிருக்காதா? அவ்வாறு கூறியதற்குப் பிறகும் மத்திய அரசும்கூட மவுனமாகப் போனதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

மாலேகாவ்ன் குண்டு வெடிப்புச் சதிகாரர்களை வெளியில் கொண்டு வருவதில் முன்னணி மாமனிதராகயிருந்த மகாராட்டிர மாநில தீவிர வாதத் தடுப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கார்கரே அசோக் காம்தே, விஜய் சாலஸ்க்கர் ஆகிய மூன்று பேரும் ஒரே நேரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றால் அதிர்ச்சி ஒரு பக்கம், ஆவேசம் இன்னொரு பக்கம், அய்யப்பாடு மற்றொரு பக்கம் ஏற்படாதா? ஏற்படக் கூடாதா?

அப்படி ஒரு சந்தேகம் ஏற்பட்டுதான் மத்திய சிறு பான்மை நலத்துறை அமைச்சர் (மகாராட்டிர) மாநில முன்னாள் முதல் அமைச்சரும்கூட அப்துல்ரகுமான் அந்துலே (ஏ.ஆர். அந்துலே) நாடாளுமன் றத்திலே அர்த்தமுள்ள வினாக்கணை தொடுத்தார்.

காவல்துறையின் நேர்மையான அதிகாரி கர்கரேயைக் கொன்றது யார்? மாலேகாவ்ன் குண்டுவெடிப்புச் சதியில் சம்பந்தப்பட்ட மதத் தீவிர வாதிகளை அப்படியே கொத்தாகக் கண்டுபிடித்து வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த அந்த அதிகாரியை காமா மருத்துவமனைக்குச் செல்லுமாறு வழி நடத்தியவர்கள் யார்?

மும்பையில் நவம்பர் 26-இல் (2006) பயங்கரவாரத் தாக்குதலுக்கு ஆளான தாஜ் ஓட்டலுக்கோ, டிரைடன்ட் ஒபாராய் ஓட்டலுக்கோ, சத்ரபதி சிவாஜி ரயில் நிலை யத்துக்கோ நரிமன் இல்லத் துக்கோ செல்ல விடாமல், காமா மருத்துவமனை வளாகத்துக்கு அவர்களைச் செல்லு மாறு பணித்தவர்கள் அல்லது வழி காட்டியவர்கள் யார்? அந்த ஆணை எங்கிருந்து பிறப்பிக்கப்பட்டது? என்ற ஆழமான, அவசியமான, அய்யம் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்திலே அந்துலே வினா எழுப்பினார்; சந்து முனையில் அல்ல சாட் சாத் நாடாளுமன்றத்திலேயே அனல் கக்கினார்.

அவ்வளவுதான்! சங்பரிவார் கூட்டத்தின் அக்குளில் தேள் கொட்டியது போல குதியாட்டம் போட்டனர். தங்களுக்கே உரித்தான ஆத்திர விசையோடு நாடாளுமன்றத்தையே ரணகளமாக்கினர் - கடைசி ஆயுதமாக வெளிநடப்புச் செய்தனர்.

போதும் போதாதற்குக் காங்கிரஸ் கட்சியிலேயே உள்ள ஆர்.எஸ்.எஸ். அனுதாபிகளும் சேர்ந்து கொண்டனர். ஒரு லாலு பிரசாத் யாதவு்க்குத்தான் முதுகெலும்பு இருந்தது என்று நிரூபித்துக் கொள்ளும் வகையில் ஆதரவுக் குரலும் கொடுத்திருக்கிறார்.

பா.ஜ.க.வினர் உத்தம புத்திரர்கள் என்றால் அந்துலே சொல்வது முக்கியமானது. அதுபற்றி விசாரிக்கப்பட வேண்டும் என்றுதானே பேசியிருக்க வேண்டும்.

யாரையும் குறிப்பிட்டுக் குற்றப் பத்திரிகை படிக்க வில்லையே அந்துலே! அப்படியிருக்கும்போது பா.ஜ.க.வினர் நெஞ்சம் மட்டும் ஏன் குறுகுறுக்கிறது? பொதுவான பழமொழி குற்றமுள்ள நெஞ்சுதான் குறு குறுக்கும் என்பதாகும். அப் படியானால் அவர்கள் குற்றவாளிகள்தான் என்ற அய்யப்பாடு அறிவைப் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படத்தானே செய்யும்.

கார்கரே படுகொலை செய்யப்பட்டது குறித்து பலப்பல தகவல்கள் முரண்பாடான தகவல்கள் குவிந்து கொண்டே யிருக்கின்றன.

1) தீவிரவாத எதிர்ப்பு போலீஸ் படையின் தலைவர் ஹேமந்த் கார்கரே

2) என்கவுன்டர் ஸ்பெஷ லிஸ்ட் விஜய் சாலஸ்கர்.

3) உதவி ஆணையர் அசோக் காம்தே.

கொல்லப்பட்ட காவல் துறை அதிகாரிகள்மீது இந்துத்துவவாதிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி கருத்துக் களைக் கூறி வந்திருக் கிறார்கள்.

மூன்று பேரும் ஒரே இடத்திலே கொல்லப்பட்டனர் என்று தகவல்; இல்லை இல்லை வெவ்வேறு இடங் களில் கொல்லப்பட்டனர் என்பது மற்றொரு தகவல்: இந்த மூன்று அதிகாரிகளும் ஒரே காரில் சென்றபோது எப்படி வெவ்வேறு இடங்களில் கொல்லப்பட்டு இருக்க முடியும் என்ற நியாயமான சந்தேகம்.

விக்டோரியா டெர்மினஸில் கொல்லப்பட்டனர்; மரத்தின் பின்னால் ஒளிந்திருந்து தீவிரவாதிகள் சுட்டனர்.மக்கள் நடமாட்டமே இல் லாத ஒரு சந்தில் சுடப்பட்டார்கள் என்று மாறி மாறி தகவல்கள் வருகின்றன என் றால் நியாயமாக இதன்மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நினைப்பது தானே நியாயம்? அந்த நியாயத்தின் அடிப்படையிலே தானே அந்துலே வினாக்கணை தொடுத்தார். அவர் சிறுபான்மை முசுலிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் நியாயத்துக்காகக் குரல் கொடுக்க அவர் உரிமையற்றவர் ஆகி விடுவாரா? சரி அந்துலேக்கு மட்டும் தான் இந்த சந்தேகம் வந்துள்ளதா? கொஞ்சம் பகுத்தறிவைப் பயன்படுத்தும் எவருக்கு இந்தச் சந்தேகம் வரத்தானே செய்யும். நடத்திருக் கக்கூடிய சூழல் முரண் பாடான தகவல்கள், கொல் லப்பட்டவர்கள் அதற்குமுன் யாரால் எப்படி விமர்சிக் கப்பட்டுள்ளனர் என்பதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டாமா?

ஏதோ அந்துலே மட்டும் தான் கேள்வி எழுப்பியிருக்கிறார் என்றும் சொல்ல முடியுமா? காங்கிரஸ் கட்சி யின் பொதுச் செயலாளர் களுள் ஒருவரான திக்விஜய்சிங் அந்துலேயின் நிலையை ஆதரித்துள்ளாரே. சமாஜ் வாத கட்சியின் தலைவர் முலாயம்சிங், உ.பி. முதல் அமைச்சர் மாயாவதி, இந் தியக் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய செயலாளர் து.ராஜா எம்.பி., சி.பி.எம். கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சீதாராம் யெச்சூரி போன்றோர்களும் பா.ஜ.க.வை நோக்கி கேள்விக் குண்டுகளை வீசியெறிந்திருக்கிறார்களே!

சங்பரிவார்கள் கும்பலின் சூழ்ச்சிகளையும் கடந்த கால நடப்புகளையும் அறிந்தவர்கள், ஹேமந்த் கார்கரேயின் படுகொலையில் சந்தேகப்படுவது என்பது நூற்றுக்கு நூறு சரிதானே!

தேசப்பிதா என்று கருதப்பட்ட காந்தியார் படுகொலை வழக்குத் தொடர்பான ஆவணங்களே காணாமல் போய்விடவில்லையா?

வழக்குகளை ஒன்றுமில்லாமல் ஆக்குவதற்காக குறிப் பிட்ட சில பேர் கொலை செய்யப்படுவது, ஆவணங் களை அழிக்க அந்த ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அலுவலகங்கள் எரிப்பு என்பது போன்றவை எல்லாம் இதற்கு முன்நடந்ததில்லையா?

இந்தக் கண்ணோட்டத்தில் அந்துலே எழுப்பிய அய்யங்களுக்கு விடை காணப்பட வேண்டியது அவசியமே.

----------------- மின்சாரம் அவர்கள் 27-12-2008 "விடுதலை" ஞாயிறு மலரில் எழுதிய கட்டுரை

4 comments:

anbarasan said...

31.12.08 குமுதத்திலிருந்து
அரசு பதில்

பொன்விழி, அன்னூர்.

போலீஸ் அதிகாரி கார்கரே தீவிரவாதிகளால் மட்டும்தான் கொல்லப்பட்டாரா என்று அந்துலே சந்தேகம் எழுப்பியது சரியா?

அதற்கு வேறு ஏதாவது பின்னணி உண்டா என்பதை விசாரிக்க வேண்டும் என்று அவர் சொன்னதில் தவறு ஏதும் இல்லை. எனக்கும் அந்த சந்தேகம் இருக்கிறது.

31.12.08 குமுதத்திலிருந்து

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும்
கருத்துக்கும் மிக்க நன்றி ராஜ்

Unknown said...

//காவல்துறையின் நேர்மையான அதிகாரி கர்கரேயைக் கொன்றது யார்? மாலேகாவ்ன் குண்டுவெடிப்புச் சதியில் சம்பந்தப்பட்ட மதத் தீவிர வாதிகளை அப்படியே கொத்தாகக் கண்டுபிடித்து வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த அந்த அதிகாரியை காமா மருத்துவமனைக்குச் செல்லுமாறு வழி நடத்தியவர்கள் யார்?//

உண்மையைக் கண்டுபிடித்து மக்களுக்கு தெரிவிப்பதே ஒரு நல்ல அரசின் கடமை.

Unknown said...

The issue behind the killing of our honourable ATS officers is explained clearly by our home minister in the parliament and duly accepted by mr AR antulay. ok

This mumbai terroist attack is under investigation by not only by our investigative agencies, ut from worlds top investigative agencies like FBI, Russian Intelligence and all of them found pakistan hands in the attack. whole world is concerning the brutal attacks and blames pakistan to take action on the masterminds in the paki soil. Now all our efforts must be to force pakistan to take action against those terrorists and dont divert the main issue by only focusing on the killings of ATS officers.

If you still do this type of media propagation then everybody understand you people have links with ISI agents. ISI is doing all means to divert the attention from the main issue.