Search This Blog
18.6.09
விவேகானந்தரிடம் அதிசயமானக் கொள்கை இருந்ததா? ஊன்றிப் படியுங்கள்
மக்கள் முன்னேற்றத்தைத் தடுப்பதே இந்து மதமும் சாதி முறையும்!
பேரன்புமிக்க அவைத் தலைவர் அவர்களே! அன்புமிக்க கல்லூரி முதல்வர் அவர்களே! ஆசிரியர் பெருமக்களே! மாணவ நண்பர்களே!
உங்கள் கல்லூரி மாணவர் யூனியனைத் துவக்கி வைக்க என்னை அழைத்து உள்ளீர்கள். இன்றைய தினம் உங்கள் கல்லூரியில் ஏதாவது பேச வேண்டும் என்று விரும்பி அழைத்தமை பற்றிப் பெரிதும் மகிழ்கின்றேன்.
நான் பேசும் முன் இந்தக் கல்லூரி உரிமையாளருக்கு என் சார்பாகவும், உங்கள் சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும் நன்றி செலுத்திப் பேச ஆரம்பிக்கின்றேன். இவர்கள் போன்று செல்வான்கள் சிலர் இருப்பதனால் தான் நம் மக்களுக்கு கல்வித் தன்மையும், அதனால் மனிதத் தன்மையும் ஏறபட வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
இவர்கள் போன்றவர்களின் முயற்சியின் காரணமாகத் தான் 2000- ஆண்டுகளாக இல்லாத கல்வி வாய்ப்பு நம் மக்களுக்குக் கிடைக்க ஏதுவாக உள்ளது. இதற்காக நாம் எல்லாரும் ஸ்தாபகருக்கு நன்றி செலுத்தியாக வேண்டும்.
நான் மற்றவர்களைப் போல செல்வாக்கான சங்கதியைப் பேசுவதோ, மக்கள் இரசிக்கத்தக்க சங்கதியைப் பேசுவதோ, அதன் மூலம் வாழ்க்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதோ ஆகிய நிலையில் இல்லாதவன்.
ஏதோ நாம் வாழ்கின்றோம். வசதியாக இருக்கிறோம். நம்மால் ஆனதை இந்த நாட்டுக்குச் செய்வது என்பதைக் குறிக்கோளாகக் கொண்டவன் நான். யாரையும் பின்பற்றாமல், யார் சொன்னதையும் துணைக்கு அழைக்காமல், என் மனதுக்குச் சரி என்று பட்டதை எடுத்துச் சொல்லிக் கொண்டு வருகிறேன்.
இந்த மாதிரியான பல வகையிலும் கட்டுப்பாடான ஸ்தாபனயங்களில் பேசுவது எனக்குக் கஷ்டம் தான். கட்டுப்பாட்டுக்கு அடங்கிப் பேசியவன் அல்லன் என்றாலும் என்னால் கூடுமான வரை கட்டுப்படுத்தியே பேசுகின்றேன்.
பேச்சு என்றால் சிலர் அழகுக்குப் பேசுவார்கள். சிலர் அலங்காரத்துக்காகப் பேசுவார்கள்; மக்கள் சிரிக்க வேண்டும், கை தட்ட வேண்டும் என்று பேசுவார்கள். சிலர் தான் கற்றவற்றை வெளியிடுவதே முக்கியம் என்று பேசுவார்கள். சிலர் தன் கருத்தை வெளியிடப் பேசுவார்கள். கடைசியில் சொன்ன இரகத்தினர் தான் நான்.
நான் சொல்லுவதை நீங்கள் அப்படியே நம்பாமல் உங்கள் அறிவு கொண்டு சிந்தித்து உங்கள் புத்திக்குச் சரி என்று பட்டதை ஏற்றுக் கொண்டு, மற்றதைத் தள்ளி விடுங்கள் என்று உங்களை வேண்டிக் கொள்கிறேன்.
தோழர்களே! இளைஞர்களுக்கு நாட்டு வளர்ச்சி அதாவது சமுதாய வளர்ச்சி இவற்றை வலியுறுத்தி சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். நாம் 20-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தாலும் 1000- வருஷத்துக்கு முன்பு இருந்தாற்போல பத்தாம் பசலிக்காரர்களாகவே தான் உள்ளோம்.
புதிய வளர்ச்சி என்பது இந்த நாட்டில் கடவுளுக்கு, மதத்துக்கு, சாஸ்திரங்களுக்கு, "பெயர் பெற்ற பெரியோர்"களுக்கு, அரசியலுக்கு விரோதம் என்று ஆக்கி வைத்து விட்டார்கள். இவற்றில் மாற்றம் காண எவரும் 2000- ஆண்டுகளாகத் தோன்றவே இல்லை.
இந்த நாட்டில் ஏராளமான மகாத்மாக்கள், ஆனந்தாக்கள், அம்சாத்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் தோன்றி இருக்கின்றார்கள். இவர்கள் எல்லாம் நம்மை மடமையில் ஆழ்த்தி பின்னுக்கு இழுத்துச் செல்லுபவர்களாகவே இருந்து இருக்கிறர்கள். இவர்கள் எல்லோரும் இதன் காரணமாக துரத்தி விடப்பட்டு இருக்கிறார்கள்.
ஆனால், முன்நோக்கிச் செல்ல முற்பட்டவர்களை எல்லாம் பாவிகளாக ஆக்கி ஒழித்துக் கட்டியே வந்து இருக்கிறார்கள். முன்னோர்கள் என்றால் யார்? அவர்கள் அந்தக்காலத்து மனிதர்கள். இந்தக் காலத்தில் என்ன? பத்தாம் பசலிப்பேச்சு இன்றைக்குப் பொருந்துமா? என்று எவரும் கேட்கத் துணியவே மாட்டேன் என்கிறார்கள்.
தோழர்களே! இப்போது விவேகானந்தர் விழா என்று கொண்டாடுகிறார்கள். அவரிடம் என்ன அய்யா அதிசயமானக் கொள்கை இருந்தது? என்ன விசேஷக் கருத்தைப் போதித்தார்? அதனால் நாட்டுக்கு மனித சமூதாயத்திற்கு ஏற்பட்ட நன்மை தான் என்ன? என்று சிந்திக்க வேண்டாமா? 1963- இல் கூடவா இப்படிப்பட்ட விழாக் கொண்டாட வேண்டும்? அவருக்கு ஒரு குரு இராமகிருஷ்ண பரமஹம்சர் - அவர் ஒரு சுத்த காட்டுமிராண்டி. இந்த விவேகானந்தர் என்ன செய்தார் என்றால், அமெரிக்காவில் போய் இந்து மதத்தைப் பரப்பினாராம். நாம் இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்கிறோம். இந்தக் காலத்திலா இதைக் கொண்டாடுவது?
இந்த இந்து மதத்தினால் தானே நாம் இழிமக்கள் - சூத்திரர்கள்? இதனால் தானே காமராஜர் காலம் வரைக்கும் நாம் 100-க்கு 87– தற்குறிகளாக இருக்கின்றோம்?
சிந்திக்க வேண்டாமா? யாருக்காவது இந்து மதம் என்றால் என்ன என்று தெரியுமா? இந்து மதம் என்றால் சங்கராச்சாரிக்கும் தெரியாது, பண்டார சன்னதிகளுக்கும் தெரியாதே.
சங்கராச்சாரியார் கூறுகிறார்:
"இந்து மதம் என்று ஒன்று இல்லை, இதற்கு ஆரிய மதம் வைதிக மதம் என்று தான் சொல்ல வேண்டும் என்கிறார்."
"பண்டார சன்னதியைக் கேட்டால் எனக்கு சைவம் தான் பெரியது. இந்து மதம் வேறு என்கிறார்கள்." பட்டிக்காட்டில் வாழும் பாமரன் கொண்டாடும் மாரியத்தாவிழாவிற்கும், இன்று கொண்டாடும் விவேகானந்தர் விழாவிற்கும் என்ன வித்தியாசம்?
நம் ஜனாதிபதி இராதாகிருஷ்ணன் இருக்கிறார். இவருக்கு எப்படியோ "தத்துவ ஞானி" என்று பெயர் வந்து விட்டது. இவர் எதற்கு எடுத்தாலும் ஆத்மா; முன்னோர் சொன்னது. ஆத்மார்த்தம், ஆன்மிகம், என்று அடிக்கடி எடுத்துக் கூறுகிறார்! இதுவா தத்துவவாதியின் வாயில் வரக் கூடிய சொற்கள்.
தோழர்களே! உலகிலேயே தலைசிறந்த தத்துவஞானியான "ரஸ்ஸல்" கூறுகின்றார். "உலகிலேயே தலைசிறந்த மடையன் யார் என்றால் கடவுளை உண்டாக்கியவன் தான். இவனை வேண்டுமானாலும் மன்னிக்கலாம். ஆனால் ஆத்மாவை மோட்சம் நரகத்ததை உண்டாக்கியவன் அயோக்கியன். அவனை ஒருக்காலும் மன்னிக்கவே கூடாது" என்று கூறியுள்ளார்.
விவேகானந்தர் என்ன கூறினார், சாதித்தார்? சாதியை நிலை நிறுத்தும் வகையில்தானே பாடுபட்டு வந்து இருக்கின்றார்? விவேகானந்தர் கூறுகின்றார் :
"சாதி முறையினை சமன்படுத்த வேண்டும் என்பதல்ல எனது நோக்கம். சாதி என்பது மிக நல்ல காரியம். நாம் பின்பற்ற வேண்டிய முறைக்கு உரிய திட்டமே சாதி என்பது சாதி என்றால் என்ன என்பதை 10- இலட்சத்தில் ஒருவர் கூட சரியாகப் புரிந்துக் கொண்டவர் இல்லை. சாதி இல்லாத நாடே உலகில் இல்லை" என்று இப்படியாகக் கூறியுள்ளார்.
இவர் தொண்டு என்ன? மங்கிக் கொண்டு வந்த இந்து மதத்தையும், அதன் வருணாசிரம கோட்பாட்டையும், மீண்டும் மீண்டும் புத்துயிர் கொடுத்து நிலை நிறுத்துவது தானே!
சாதி இல்லாத நாடே கிடையாது என்று கூறுகின்றார். நான் கேட்கிறேன், எந்த நாட்டில் பார்ப்பான் இருக்கிறான்? தொடக்கூடாத "பறையன்" இருக்கிறான்? எந்த நாட்டின் மனிதனை மனிதன் தொட்டாலோ- தொட்டதை அருந்தினாலோ – "தீட்டு" என்ற நியதி இருக்கின்றது?
எனவே விவேகானந்தர் செய்த தொண்டு நமது இழிவு நிலையை வளர்க்கவும், வளர்ச்சிக்கும் தடையாக இருந்து வரும் இந்து மதத்தை வலுப்படுத்தவும் பிரசாரம் செய்தது தானே?
நீங்கள் கேட்கலாம் விவேகானந்தர் அமெரிக்காவுக்கு எல்லாம் போய் இந்து தருமத்தை பிரச்சாரம் செய்து இருக்கின்றார். இவரைப் பின்பற்றக் கூடியவர்கள் எல்லாம் அமெரிக்காவிலும் இருக்கின்றார்கள். ஸ்தாபனங்கள் எல்லாமே இருக்கின்றனவே என்று.
இப்படிக் கூறுபவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ளுகின்றேன். முட்டாள்கள் என்பவர்கள் இந்த நாட்டுக்கு மட்டும் தானா உரியவர்கள்? எல்லா நாட்டிலும் தானே இருக்கச் செய்கின்றார்கள்.
இந்த நாட்டின் முன்னேற்றத்தை வளர்ச்சியைத் தடைப்படுத்தி வைப்பது தானே சாதி அமைப்பு? இவற்றை ஒழிக்க முன்வர வேண்டாமா? பணக்காரன் இதை தொட்டால் தம் பதவியில் இருப்பவன் இதை தொட்டால் தம் பதவியைக் கெடுத்துக் கொண்டு விடுவார்களோ என்று அஞ்சுகிறான்! தேர்தலுக்கு நிற்கின்றவன் எங்கே தமக்குக் கிடைக்கக் கூடிய ஓட்டுக்கள் குறைந்து விடுமோ என்று அஞ்சுகிறான். எனவே நீங்கள் நன்றாகப் படியுங்கள். பாஸ் பண்ணுங்கள். ஆனால் உங்கள் சாதி இழிவு நீங்க முயற்சிக்க வேண்டும்.
நம் நாட்டில் எத்தனை புலவர்கள் இருக்கின்றார்கள்? டாக்டர் பட்டம் பெற்றவர்கள் எத்தனை பேர்கள் உள்ளனர்? இவர்களில் யாராவது இந்தச்சாதி மதங்களின் புரட்டு, பித்தலாட்டங்களை எடுத்து வெளியிடுகிறார்களா? இவர்களுக்குத் தெரியாததும் அல்ல. தெரிந்தும் எடுத்துச் சொன்னால் தங்கள் வாழ்க்கைக்கு கேடு வந்துவிடுமோ என்று தானே பயப்படுகிறார்கள்?
கடவுள் பல்லாயிரவர்களைக் கொன்று குவித்து உள்ளதே! கற்பைக் கெடுத்து உள்ளதே! காலித்தனம் எல்லாம் செய்து உள்ளதே என்று யார் கண்டிக்கிறார்கள்? இப்படிப்பட்ட கடவுளை நம்புகிறார்களே ஒழிய கடவுள் என்றால் என்ன என்று எவனுக்குத் தெரியும்?
இங்கு கூடியிருக்கின்ற கூட்டத்தில் நாங்கள் 6,7- பேர்கள் வேண்டுமானால் கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக இருக்கின்றோம். மற்ற அத்தனை பேருக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கும். உங்களில் யாருக்காவது கடவுள் என்றால் என்ன தெரியுமா? சொன்னால் நான் தலை குனிந்து ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றேன்.
நாம் இன்றைக்கு எத்தனையோ விஞ்ஞான சாதனைகளை அதிசய – அற்புதங்களை எல்லாம் அனுபவிக்கின்றோம். இதில் எதையாவது நாம் கண்டுப்பிடித்தோமா? என்று சிந்திக்க வேண்டாமா? இதைக் கண்டுபிடித்தவன் எல்லாம் நம்மைப் போலவா காட்டுமிராண்டி விழாக்கள் கொண்டாடிக் கொண்டு இருக்கின்றார்கள்?
இவற்றை எல்லாம் பற்றி நான் கண்டிக்கின்றேன் என்றால் எனக்கு இதில் என்ன வருகின்றது? காந்திக்காவது "மகாத்மா" பட்டம் கிடைத்தது? நான் நினைத்தால் இன்றைக்கே "பகவான் இராமசாமியாக" ஆகிவிட முடியுமே. நானும் காந்தியைப் போலக் கடவுளை மதத்தை சாதியை ஒத்துக் கொண்டால் என்னை "பகவான்" ஆக்கிவிடுவார்களே!
ஏன் இந்த 84– ஆம் வயதிலும் இப்படிச் சுற்றிச் சுற்றி அலைகின்றேன்? எங்கள் நோக்கம் எல்லாம் மக்கள் பகுத்தறிவாதிகளாக, எதனையும் சிந்தித்து உணரும் திறன் உள்ளவர்களாக ஆக வேண்டும் என்பது தான்.
----------------- 18-01-1963 அன்று மதுரை – தியாகராயர் கல்லூரியில் மாணவர் யூனியன் துவக்க விழாவில் தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. "விடுதலை" 03-02-1963.
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
This article is a chapter from the book, "Swami Vivekananda On India and Her Problems"
CASTE PROBLEM IN INDIA
http://www.dlshq.org/messages/caste.htm
பெரியார் நம்மை சிந்திக்க தூண்டியது நன்மைக்கே. அதேபோல் விவேகானந்தரும் நம்மை சிந்திக்க தூண்டினார் என்று அவரது சில வெளியீடுகளை படிப்பதன் மூலம் நீங்கள் உணர முடியும். இன்றைய சூழலில் உள்ள பூசாரிகள், மடாதிபதிகள், சாமியார்கள் போல அவர் எதையும் உங்களை நம்ப சொல்லவில்லை. மாறாக வழிமுறைகளை எளிமையாக தொகுத்து கொடுத்து விட்டு சென்று விட்டார். விவேகானதர் ஒரு மிக சாதரமான மனிதர். ஆனால் அவர் ஒரு யோகி. அவர் உலகுக்கு அளித்தது "யோகம்" எனும் அற்புதத்தையே. அவர் கற்றுணர்ந்த யோகம் இந்து மதத்தினர்க்கு மட்டும் சொந்தம் அல்ல. உலகில் உள்ள அனைத்து மனிதர்க்கும் பொதுவான ஒன்றே.
நாமெல்லாம் ஒரு விஷயத்தை எண்ணி பார்க்க வேண்டும். ஒரு மதத்தில் உள்ள ஒரு மனிதன் இன்னொரு மதத்தில் உள்ள முறைகளை ஏற்று கொள்வது இல்லை. அமெரிக்காவில் உள்ளவர்கள் கண்டிப்பாக இந்து மதம் சார்ந்தவர்கள் அல்ல. பின் அவர்கள் எப்படி விவேகானந்தர் கூற்றை பின்பற்றினார்கள் என்பது ஆழமமாக சிந்திக்க வேண்டும். சும்மா ஏனோதானோ என்று இந்து மதம் பற்றி பேசினால் அவர்கள் பின் பற்றி இருக்க வாய்ப்பு இல்லை. யோசிப்பீர்.
தந்தை பெரியார் செய்தது வேறு தொண்டு. விவேகானந்தர் செய்தது வேறு தொண்டு. இரண்டையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது. எத்தனையோ விஷயங்களை / இயற்கை முடிச்சுகளை / உலக இயக்கத்தை விளக்கிய விவேகானந்தர் தொண்டை பெரியார் செய்த தொண்டோடு தொடர்பு படுத்தி பார்க்க தேவை இல்லை. பெரியார் கருத்துக்கள் பக்தி மார்க்கத்தில் உள்ள மடமை / வழிபாடு ஆகியவற்றிற்கு எதிரானது. விவேகானந்தர் சொன்னது தனிமனித ஆற்றல்/வளம் சார்ந்தது. அது மிக நுட்பமானது. மேலோட்டமாக அலசி பார்த்து முடிவு கட்ட முடியாது.
சில துணுக்கு செய்திகள்:
1. விவேகானந்தர் சொன்ன "ராஜ யோகம்" என்பது உங்கள் அன்றாட வாழ்வில் இருந்து பெற முடியும்.
2. அவர் சொன்ன மனம் பற்றிய குறிப்புகள் பிற்பாடு மனோதத்துவத்தில் ஒரு புதிய பரிணாமத்தையே உண்டாக்கியது.
3. இந்திய வல்லரசாக ஆசைப்பட வேண்டும், அதை அடைய முயற்சிக்க வேண்டும் என்று அவர் அப்போதே சொல்லி இருக்கிறார்.
4. இன்று இருக்கும் மனோதத்துவம், பௌதீகம் ஆகியவற்றின் எல்லைகளை அவர் அன்றே சொல்லி இருக்கிறார். .
5. அவரின் கருத்துக்கள் மனோதத்துவம், பௌதீகம், தத்துவம் ஆகிய துறைகளை சார்ந்தவர்களுக்கு ஒரு வரப் பிரசாதமாக அமைந்து பெருவாரியானவர்களால் பின் பற்றப்பட்டது.
அன்று விவேகானந்தர் செய்ததை இன்னும் நவீனமாக எளிமையாக மாற்றி தற்போது சத்குரு ஜக்கி வாசுதேவ் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் செய்து கொண்டு இருக்கிறார். விவேகானந்தர் பற்றி ஊன்றி செல்வதற்கு பதிலாக இன்றைய காலத்தில் உங்கள் அனுபவத்திலேயே ஆராய்வதற்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் கருத்துக்கள் உதவும்.
பெரியார் கருத்தை விமர்சனம் செய்ய எனக்கு தகுதி போதாது. எனக்குள் உண்டான எண்ணங்களை உங்களிடம் தெரிவிக்கிறேன். அவ்வளவுதான்.
Post a Comment