Search This Blog

8.6.09

உலக நாடுகள் -தூரப்பார்வை- சீனா

சீனா

4000 ஆண்டுக்காலப் பதிவு பெற்ற வரலாறே சீன நாட்டிற்கு உண்டு. ஜியா அரசு வமிசம் பொது ஆண்டுக் கணக்குக்கு 2070 ஆண்டுகளுக்கு முன் 1600 ஆண்டுகள் வரையிலும் சுமார் 470 ஆண்டுகள் சீன நாட்டை ஆண்டதாக வரலாறு கூறுகிறது. ஜியா வமிசத்தை விரட்டி விட்டு ஷாங் வமிசத்தினர் 1600 முதல் 1046 வரை சுமார் 544 ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளனர். பின்னர் ஜவு வமிசத்தினர் 1046 முதல் 771 வரை 275 ஆண் டுக் காலம் ஆண்டிருக்கிறார்கள். இவர்களுக்குப் பிறகு கிழக்கு ஜவுவமிசம் 194 ஆண்டுகள் ஆண்டுள்ளது. அதன் பின் 475 ஆம் ஆண்டிலிருந்து 221 ஆம் ஆண்டு வரை பல்வேறு அரச வமிசங்கள் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டு மாறி மாறி ஆட்சி புரிந்துள்ளன.

அதன்பிறகு கின்வமிச ஆட்சி. அதன் முதல் சக்ரவர்த்தி கின்ஷி ஹூவாங் சீனாவில் முதன் முதல் ஒற்றுமையான மத்திய ஆட்சியை நிறுவியவர். இவர் காலத்தில் பல்வேறு இனக் குழுக்களும் ஒன்று பட்டு இருந்தன. இவர் தான் சீனப் பெருஞ் சுவரைக் கட்டியவர். சீனாவின் வட பகுதியில 5 ஆயிரம் கி.மீ. நீள முள்ள பெருஞ்சுவர்.206 ஆம் ஆண்டில் உழவர்களின் பெருங் கிளர்ச்சி மூண்டு இந்த வமிசம் வீழ்ந்தது. ஹான் வமிசம் வந்தது. இவர்களுக்குப் பின்னால் மூன்று வமிசங்களின் ஆட்சி. பொது ஆண்டுக் கணக்குக்குப் பின் 220 ஆம் ஆண்டு முதல் 265 வரையும் ஜின் வமிச ஆட்சி, 265 முதல் 420 வரையும் வட,தென் வமிசங்களின் ஆட்சி, 420 முதல் 589ஆம் ஆண்டு வரையிலும் சூயி வமிசத்தின் ஆட்சி 581 முதல் 618 ஆம் ஆண்டு வரையிலும் நடந்துள்ளன.

சூயி வமிசத்திற்குப் பிறகு டாங் வமிசம் ஆட்சிக்கு வந்தது. அரசாங்க நிருவாக முறைகள் வளர்ச்சி அடைந்தன; கலாச்சாரமும் கலைகளும் வளர்ந்தன. சீனர்களின் பொற்காலம் எனக் கூறத்தக்க வகையில் அமைந்திருந்தது. பிறகு 5 வமிசங்களின் ஆட்சி மாறிமாறி வந்தன. அதன் பிறகு சாங் வமிசம் 960 முதல் 1279 வரை ஆண்டது.

1206 இல் செங்கிஸ்கான் மங்கோலிய வமிச ஆட்சியை நிறுவினான். 1271 இல் அவனது பெயரன் குப்ளைகான் என்பவன் யுவான் வமிசத்தை நிறுவி 1271 முதல் 1368 வரை ஆட்சி நடத்தி னான். பல பகுதிகளை வென்று தன் பேரரசில் இணைத்துக் கொண்டு ஆட்சி செய்தான். சிஞ்கி ஜாவ், திபெத், யுன்னான் ஆகிய பகுதிகள் இதில் அடங்கும். சாங்யுவான் காலத்தில்தான் சீன நாட்டில் தாள், அச்சு, பாம்பஸ், வெடிமருத்து ஆகியவை கண்டுபிடிக் கப்பட்டு உலகுக்கு அளிக்கப் பட்டன.

மிங் வமிசம் 1368 முதல் 1644 வரை ஆட்சி செலுத்தியது. சீனாவின் கடைசி அரச வமிசம் குவிங் வமிசமாகும். 1644 முதல் 1911 வரை சீனாவை ஆண்டது. இந்த வமிசத்தின் சீரழிவு, ஆங்கிலேயர்களை சீனாவுக்குள் அதிக அளவில் அபின் இறக்குமதி செய்யத் தூண்டியது. குவிங் அரசு அபின் இறக்குமதியைத் தடை செய்தது. இதனால் இங்கிலாந்துக்கும் சீனாவுக்கும் போர் 1840 இல் நடைபெற்றது. இதன் விளைவாக நான்கிங் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன் விளைவாக சீனப்படை வெளிநாட்டுப் படையினர்க்குப் பணிந்து சரணடையும் நிலை உருவாகிவிட்டது.

1911இல் சன்யாட்சென் நடத்திய புரட்சி, 200 ஆண்டுக்காலம் ஆட்சி புரிந்து வந்த குவிங் வமி சத்தைப் பதவியிலிருந்து தூக்கி எறிந்தது. 2000 ஆண்டுக் காலமாகச் சீனாவில் இருந்த பிற் போக்குத் தனமான மன்னர்களின் ஆட்சிக்கு முடிவு கட்டியது. ஆண்களும் பெண்களும் நீண்ட சடை வளர்த்தல், பெண் குழந்தைகளின் கால்களைக் கட்டையால் இறுக்கிப் பாதங்களைச் சிதைத்து வேகமாக நடப்பதற்கு இடையூறு செய்தல் போன்ற பல்வேறு மூட நம்பிக்கைகளை ஒழித்தது. சீனக் குடியரசை உருவாக்கியது 1912 முதல் 49 வரை மக்களாட்சி நடந்திட வழி வகை ஏற்படுத்தியது.

முதல் உலகப் போர் முடிவுக்குப் பின் 1919 இல் சீனா மீது நிர்ப்பந்திக்கப்பட்ட நிபந் தனைகளும் கட்டுப் பாடுகளும் நான்காம் மே இயக்கத்திற்குக் காரணமானது. 1921 இல் சீன நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்த 12 பேர் ஷாங்காய் துறைமுக நகரில் முதல் கம்யூனிசக் கூட்டத்தை நடத்தினர்.இவர்களில் மாசேதுங் ஒருவர். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது.

கம்யூனிஸ்ட் கட்சியின் வழி நடத்தலோடு சீனர்கள், வடக்குப் போர் (1924-27) விவசாயி களின் புரட்சிப் போர் (1927-37) ஜப்பானுக்கு எதிரான போர் (1937-45) விடுதலைப் போர் (1945-49) எனப் பலப்பல போர்களைச் சந்தித்தனர். கோமின்டாங் படையினரையும் ஜப்பானியரையும் வென்றாலும் கூட, உள்நாட்டுப் போர் ஒன்றைச் சந்திக்க வேண்டி நேரிட்டது. மூன்று ஆண்டுகள் நடந்த இந்தப் போரின் முடிவாக கோமின்டாங் அரசு தூக்கி எறியப்பட்டது. சியாங்கே ஷேக் எனும் ஆட்சித் தலைவர் சீனாவை விட்டு பார் மோசா தீவுக்கு ஓடிடும் நிலை வந்தது.

1-10-1949 இல், சீன மக்கள் குடியரசு உதயமானது

1950 இல் சீனப் படைகள் திபேத்தின் மீது படையெடுத்தது. இரு நாடுகளுக்கும் மறு ஆண்டு ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி திபேத்தின் சுயாட்சி யையும் மதத்தையும் சீனா உறுதி செய்தது. திபேத்தின் தலைநக ரமான லாசாவில் சீனப்படைகளும் அதிகாரிகளும் தங்கியிருப்பதற்கும் வழி வகை செய்யப் பட்டது. தொடர்ந்து 1959 மார்ச்சில் திபேத் மக்களின் எழுச்சியும் கிளர்ச்சியும் ஏற்பட்ட போது தலாய்லாமா இந்தியாவுக்குத் தப்பிச் சென்று விட்டார். அவருடன் உதவியாளர்கள் பலரும் தப்பிச் சென்றனர்.

1962 இல் இந்தியாவுடன் எல்லைச் சண்டையில் சீனா ஈடுபட் டது. 1979 இல் சீனநாட்டை வெளி உலகிற்குத் திறந்து காட்டும் கொள்கையை உருவாக்கியது. அரசியல், பொருளாதாரப் பிரிவுகளில் நவீனத்தைப் புகுத்த முடிவு செய்தது. மாசேதுங் நடத்திய கலாச்சாரப் புரட்சிக்கு மூடுவிழா நடத்தியது. மேலை நாட்டு நவநாகரிகக் கோமாளித் தனங்களுக்குக் கதவு திறந்தது. மதச் சடங்குகளுக்கு மரியாதை தரும் நிலை ஏற்பட்டது.

1989 ஜூன் 3, 4 தேதிகளில் பெய்ஜிங் எனப்படும் பீகிங் நகரத்தின் தியானெமென் சதுக்கம் எனும் இடத்தில் ஜன நாயக உரிமைகளுக்காகக் குரல் எழுப்பிய மாணவர்களைக் கொடூ ரமான முறையில் கொன்றழித்தது. ராணுவக் கவச வண்டிகளும், துப்பாக்கி ஏந்திய போர்ப் படை வீரர்களும் போராடிய ஆயுதமற்ற மாணவர்களை ஈவிரக்கம் இல்லாமல் கொன்று போட்டது. நூற்றுக் கணக்கில் மாணவர்கள் மாண்டனர்.

சீனாவில் எல்லைப் பகுதியில் பிரிட்டிஷார் வசம் இருந்த ஹாங்காங், கோவ்லாங் ஆகிய தீவுகளை பிரிட்டன் 1997 இல் சீனாவிடம் ஒப்படைத்தது. தன் வசம் இருந்த மக்காவ் தீவினை போர்த்துகல் அரசாங்கம் 1999 இல் சீனாவிடம் கொடுத்தது.

கம்யூனிஸ்ட் நாடான சீனாவில் 22 மாநிலங்கள் உள்ளன. பார்மோசா தீவு 23 ஆம் மாநில மாகக் கருதப்படுகிறது. குடியரசுத் தலைவரும், துணைத் தலைவரும் ஆட்சித் தலைவர்கள். அரசுத் தலைவராக பிரதமர் இருக்கிறார். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபரும் துணை அதிபரும் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். அதிபர் பிரதமரை நியமிக்கிறார். இந்த நியமனத் திற்கு மக்கள் அவை ஒப்புதல் அளிக்க வேண்டும்.

மக்கள்அவை2985 உறுப்பினர்களைக் கொண்டது. 5 ஆண்டுகள் பணியாற்றும் வகையில் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

95 லட்சத்து 96 ஆயி ரத்து 960 சதுர கி.மீ. பரப்புள்ள இந்த நாட்டில், உலகிலேயே அதி கமான மக்கள் வசிக்கிறார்கள். 132 கோடிப் பேர்கள் 2006 கணக்கெடுப்பின்படி வாழ்கிறார்கள். மலைகளும், பள்ளத்தாக்குகளும், உயர்ந்த பீடபூமிகளும், பாலைவனங்களும் எனத் தமிழர்களின் அய்வகை நிலங்களும் நிரம்பிய நாடு.

அதிகாரப் பூர்வமாக நாத்திக நாடு. ஆனால், தாவோ, புத்தம், முசுலிம், கிறித்துவ மதங்களைச் சார்ந்தவர்கள் இருக்கிறார்கள். 91 விழுக்காடுப் பேர் கல்வியறிவு பெற்றவர்கள்.
இணையதள வசதிகளைப் பயன்படுத்தும் மக்கள் 10 கோடிக்கு மேல். கணினி முதலிய நவீன மின்னணுப் பொருள்களைப் பயன்படுத்துவோரும் கோடிக் கணக்கில். எந்திரங்கள், கருவிகள், துணி,காலணி, விளையாட்டுப் பொருள்கள், பொம்மைகள் போன்றவற்றை ஆயிரம் கோடி டாலருக்கு மேல் ஏற்று மதி செய்து உலகச் சந்தையைக் கைவசம் வைத்திருக்கிறது. அது போலவே இறக்குமதி வணிகத்தையும் செய்து வருகிறது. 4 விழுக்காடுப் பேர் வேலைக்கா கப் பதிவு செய்திருப்பவர்கள்.

-----------------------நன்றி:-"விடுதலை" 7-6-2009

1 comments:

Unknown said...

ஒவ்வ்வொரு நட்டைப் பற்றிய சிறப்பம்சங்களை அறிந்து கொள்ள வழிவகுக்கிறது இந்த தொடர் பதிவுகள்.