Search This Blog

2.6.09

கெட்ட சகுனம் என்பதும்; நல்ல சகுனம் என்பதும் இளைஞர்களைக் கெடுக்கும் மூடநம்பிக்கைகளே!



ஜோசியமும்,சகுனமும்

(டாக்டர் பராஞ்சிபே)

மத சித்தாந்தங்களிலுள்ள நம்பிக்கையே மாந்தரின் பகுத்தறிவைச் சிதைத்து, அவர்களை ஜோதிட தீர்க்கதரிசிகள் என்று சொல்லப்படுபவர்களின் மாயவலைகளில் எளிதில் அகப்படுமாறு செய்கின்றது.

மறைவாக உள்ள இடத்தைக் காண வேண்டுமென்பதில் மனிதனுக்கு ஆவல் அதிகம். அதனால் இனி வரப்போகும் எதிர்கால சம்பவங்களை முன்னமே உணர்ந்து, அவைகளால் தனக்கு தற்காலத்திலிருக்கும் கஷ்ட நிஷ்டூரங்கள் ஒழிவதற்கு ஏதாவது வழியுண்டா என்பது பற்றி அளவு கடந்த ஆசையோடும் விசாரிக்கத் தொடங்குகிறான்.

பூசாரிகளும், மதகுருக்களும் எதிர்காலத்தைப் பற்றி முன்னமே அறிந்து கொண்டிருப்பதாக எப்பொழுதும் கூறிக் கொண்டிருக்கின்றனர். தேவதைகளுக்குப் பலியிடப்படும் பிராணிகளின் தும்மல், துடித்தல் முதலிய நடவடிக்கைகளை கவனித்தல், பறவைகள் பறந்துபோகும் திசைகளைப் பார்த்தல், அந்த நாட்டினர்க்கு ஏற்பட்ட யுத்தம் முதலிய சம்பவங்களை வேதமாக (silylline books) பாராயணம் பண்ணுதல், கஸாண்டிரா (casandra)வின் கதை முதலிய இவைகள் கிரேக்கர், உரோமர் என்பவர்கள் எதிர்கால சம்பவங்களை அறிவதற்கு அடையாளங்களாக மேற்கொண்டார்களென்பது நன்கு விளங்குகின்றன.

இன்னும் மந்திரவாதிகளென்ன, மையிட்டு குறி பார்க்கிறவர்களென்ன, ஜோதிட ரேகை சாஸ்திரக்காரர்களென்ன, தீர்க்கதரிசிகளெனப்படுவோரென்ன - இவர்களெல்லாம் சட்ட விரோதமான பல செய்கைகளை மேற்கொண்டு ஒன்றுமறியாத பாமர மக்களைத் தங்களிஷ்டம்போல் ஆட்டி வருகின்றனர். இந்தியாவிலே மேற்கூறியோர் தங்களுடைய அட்டகாசங்களைப் பாமர மக்களிடத்தில் மாத்திரம் இன்றி, படித்தவர்கள் என்று சொல்லப்படுகிறவர் களிடத்திலும் சுலபமாக செலுத்தி வருகின்றனர். பூசாரிகள், மனிதர்களின் வாழ்நாளின் தன்மையைக் காட்டுவதற்கென்று ஜாதகங்களைக் கணித்து வருகின்றனர். அதோடு வாழ்நாளில் நிகழவிருக்கும் தீமைகளைப் போக்கும் பொருட்டு ``பிராயச்சித்தம்’’ என்னும் பெயரால் பலவகையான மந்திர தந்திரங்களையும் சடங்குகளையும் கைக்கொண்டு ஜன சமூகத்தை ஏமாற்றி வருகின்றனர்.

அற்ப சம்பவங்களிலிருந்தெல்லாம் நற்சகுனமென்றும் துர்சகுனமென்றும் ஏற்படுத்திக் கொண்டு தொடங்கிய காரியங்களுக்கெல்லாம் அவைகளைப் பார்க்கின்றனர். தெருவில் நடக்கும்போது ஒரு பூனை வலமாவதையும், இடமாதலையும் கண்டு அதனால் நல்லது கெட்டது உண்டாகும் என கருதப்படுகின்றது. ஒரு காரியத்தை உத்தேசித்துப் போகும்போது ஒரு கைம்பெண் எதிரேவரின் கெட்ட சகுனமாம். அதனால் உத்தேசித்துச் செல்லும் காரியம் கைகூடாதாம். ஆனால் ஒரு கட்டுக்கழுத்தி, அதுவும் நீர் நிறைந்த குடத்துடன் எதிர்ப்படுவாளானால், அது மிகவும் மேலான நற்சகுனமாம். அதனால் உத்தேசித்து செல்லும் காரியம் சடுதியில் முட்டின்றி நிறை வேறிடுமாம்! வாரத்தில் ஒரு சில நாட்கள்தாம் நல்ல நாட்களாம். ஏனையவை சூதம் கொண்ட கொடிய நாட்களாம்!

இம்மாதிரியான மூடத்தனமுள்ள சகுன நம்பிக்கைகள் எண்ணிக்கையில்லாமல் இருக்கின்றன. இவைகளையெல்லாம் இந்தியர்களுக்கு, அவர்கள் அறிந்திருந்தாலும் அறியாதிருந்தாலும்கூட வருத்தத்தையும், பயத்தையும் உண்டாக்குகின்றன. இம்மாதிரியான மூடக் கொள்கைகளாகிய வித்துக்களை இளைஞர்களின் மனதில் சிறுவயதிலே விதைத்து விடுவதால் அவைகள் அவர்களிடத்தில் நன்றாக வேரூன்றி செழித்துக் கிளைத்து வளர்ந்து வருகின்றன. அவர்கள் பெரியவர்களான பிறகு அவைகளை அகற்றுவதென்றால் முடியாத காரியமாகிவிடுகிறது.


---------------தந்தைபெரியார் அவர்களால் தொகுக்கப்பட்ட "சோதிட ஆராய்ச்சி" என்ற நூலிலிருந்து...பக்கம்-25-26

2 comments:

ஐந்திணை said...

நற்பதிவு!

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி