Search This Blog

11.6.09

குழந்தை கொடுப்பது கடவுளா?டாக்டர் சிகிச்சையா?





பெண்களுக்கு மதிப்புக் கொடுத்து வாழுங்கள்

மேல்நாட்டிலே உள்ள வெள்ளைக்காரர்கள் பெண்களுக்கு மிகவும் மரியாதை கொடுத்து வாழ்கிறார்கள். அதனால்தான் அவர்கள் நாகரிகம் உள்ள மக்களாக மாறினார்கள். பெண்களை அடக்கி ஆள்வதும், அவமரியாதையாக அழைப்பதும், பேசுவதும் ஆண்கள் முதலில் தன் மனைவிகளிடம் விளையாட்டாக ஆரம்பிக்கிறார்கள். கடைசியில், பெற்ற தாயைக் கூட மரியாதைக் குறைவாகப் பேசுகிறார்கள். இந்தக் கெட்ட வழக்கத்தை ஒழித்துவிட்டுப் பெண்களுக்கு மரியாதை செலுத்தி வாழவேண்டும்.

மணமக்களுக்கு

மணமக்கள் இருவரும் சிநேகிதர்களாக நடந்து கொள்ள வேண்டும். `நான் ஆண் பிள்ளை’ என்று அதிகாரம் பேசக் கூடாது. இருவரும் சிநேகிதர்கள் என்று கருதி இருக்கவேண்டும். அதிகாரம் என்பதை வெறுக்க வேண்டும். அன்பாக எவ்வளவு வேலை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்; மிரட்டக் கூடாது. இம்மாதிரியான காரியங்கள்தான் உடலில் அன்பை அதிகமாக உண்டாக்குகிறது. வாழ்க்கையில் சதா அடிதடி நடந்தால் என்ன பயன்? வாழ்க்கை அன்புருவாக இருக்க வேண்டும். ஆண்கள் பெண்களை மெதுவாகத் திருத்த வேண்டும். மணமக்கள் தங்களுக்காகவே இல்லாமல் மற்றவருக்காகவே வாழ்கிறோம் என்று எண்ண வேண்டும். நாம் மாத்திரம் மோட்சம் போக வேண்டும்; நாம்தான் மனிதர்கள் என்று இல்லாமல் மற்றவர் நமக்காக இருக்கிறார்கள் என்று எண்ண வேண்டும். கக்கூஸ் எடுப்பவர்கள், வீதியில் குப்பை கூட்டுபவர்கள் தங்கள் சுயநலத்திற்காகவா வேலை செய்கிறார்கள்? அதுபோல் நாமும் நடக்க வேண்டும். அதுதான் பரந்த நலப்பான்மையாகும்.

பொதுநலம் பெறுக

இந்தத் துறையில் மேல்நாட்டைப் பார்த்தால் இன்பமாக இருக்கும். ஒரு மனிதரும் அங்குப் பிறருக்கு அசவுகரியமாக நடக்க மாட்டார்கள். இரவு பத்தரை மணி ஆகிவிட்டால் விருந்தாளி, உறவினர் வீட்டுக்குப் போய்த் தொல்லை கொடுக்க மாட்டார்கள். தாய் ஆனாலும், முதலில் சொல்லிவிட்டுத்தான் வருவார்கள். அந்தப் பழக்கம் நம் நாட்டில் குறைவு. மோட்டாரில் ஏறக் கும்பல் இருக்கும். அதில் ஒரு தடியன் பின்னாலிருந்து எல்லோரையும் இடித்துத் தள்ளிக் கொண்டுபோய் ஏறிவிடுவான். இம்மாதிரி துன்பம் கொடுக்கிறோமே என்பது பற்றிச் சிந்திக்க மாட்டான். ஆனால், அந்தக் காரியத்தை நம் நாட்டில் கெட்டிக்காரத்தனம் என்று பாராட்டுவார்கள். மற்றவர்கள் மனைவியரை நாம் இடித்துத் தள்ளுகிறோமே என்று கருதுவதுமில்லை. நம் மனைவியையும் இப்படித்தானே இடிப்பார்கள் என்று எண்ணிப் பார்ப்பதுமில்லை.

ஆணுக்குப் பெண் சரிநிகர் ஆகும்; அடிமையில்லை. சோறு சமைத்துப் போட்டுச் சாப்பிடும் சோற்று ஆள் அல்ல பெண்; சமமானவள்; நண்பனைப் போன்றவள்; வாழ்க்கைத் துணை அவள்; இருவர்க்கும் உரிமை ஒன்றே; தகப்பன் சொத்தில் ஆணுக்குப் போலவே பெண்ணுக்கும் சரி பங்கு உண்டு; அவர்கள் பதவியும் வகிக்கலாம். அவர்களின் பதவிக் குறைவுக்குக் காரணம் அவர்களைப் பக்குவப்படுத்தாததுதான். அவர்களுக்கு நல்ல அறிவையும், பழக்க வழக்கங்களையும் அளிக்க வேண்டும். அன்னாரிடமிருந்து மூடநம்பிக்கையை அகற்ற வேண்டும். உதாரணமாக, பகவான் குழந்தைகளைக் கொடுப்பதாக நினைக்கிறார்கள். பகவான் ஒன்றும் கொடுப்பதில்லை. டாக்டர் சிகிச்சையால் கொடுக்க முடியும்; நிறுத்தவும் முடியும். பகவானுக்கும் குழந்தைக்கும் சம்பந்தமே இல்லை. எனவே, திட்டப்படிப் பிள்ளைகளைப் பெற்று நல்வாழ்வு வாழ வேண்டும்; அதிகப் பிள்ளைகளால் அதிகத் தொல்லைதான். இதைப் புரிந்துகொள்வது முக்கியமானது.

இன்னும் பெண்களை வீட்டிலேயே அடைத்து வைக்கிறோம்.வெளியில் அனுப்பினால் அல்லவா அறிவு வளரும்! அப்படி அனுப்புவதென்றால், சந்தைக்கு அனுப்புகிறோம்; அல்லது கோயிலுக்கு அனுப்புகிறோம். அங்கேயா அறிவு வளரும்? ஆகவே, இந்தச் சங்கதிகளையெல்லாம் நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்னும் பழைமை விரும்பிகளாக இருக்கக் கூடாது. மேல்நாடுகள் நாகரிகத்தில் முன்னேறியுள்ளன. உலகமே மிக வேகமாகத் திருந்தி மாறி வருகிறது. பல புதிய சாதனைகள் உண்டாகி வருகின்றன. அமெரிக்கா கூப்பிடு தூரத்துக்கு வந்து விட்டது. இந்த நிலையில் நாம் இன்னும் சாதி, சடங்கு, இவைகளைக் கட்டி வைத்துக் கொண்டிருந்தால் எப்போது மேலே போவது? சிந்திக்க வேண்டும். காலந்தாழ்த்தக் கூடாது. ஆனால், நான் சொல்வதை அப்படியே நம்ப வேண்டும் என்ப தில்லை; தவறாகப் புரிந்து கொள்ளவும் வேண்டிய தில்லை. நேர்மையோடு சிந்தியுங்கள்; உங்கள் மனத்தையே கேட்டுப் பார்த்து ஆராயுங்கள்! அதன் பிறகு ஒரு முடிவுக்கு வரலாம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

பிள்ளைப் பேறு

மணமக்கள் கண்ணை மூடிக் கொண்டு பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளக்கூடாது. அவசரப்படாமல் அய்ந்து வருடத்திற்குப் பிறகு பிள்ளை பெற்றுக் கொண்டால் நல்லது. குழந்தையைப் பெற்றுக் கொண்டால், மனைவியைக் கொஞ்சுவதா? குழந்தையைக் கொஞ்சுவதா? பிறகு வாழ்க்கையின் லட்சியம் என்ன இருக்கிறது? அநாவசியமாகக் குழந்தை களைப் பெற்றுக் கொண்டால், உடம்புக்குக் கெடுதல்தான். திருமணமான எட்டு வருடத்தில் பத்துப் பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டால், அவர்களை எப்படிப் படிக்க வைக்க முடியும்? வைத்திய வசதி செய்ய முடியும்? வாழ்க்கை நடத்த முடியும்?

இதற்காகச் சட்டம் செய்ய முயற்சித்து வருகிறார்கள். கூடிய சீக்கிரம் போஸ்ட் ஆபிஸில் மாத்திரை விறகப் போகிறார்கள். கடவுளுக்கு மேலே உத்தரவு போடப் போகிறார்கள்."கடவுள் கொடுத்தார்" "எல்லாம் பகவான் செயல்" என்பதும், பூச்சி புழு ஒன்று கொடேன் என்று நம் பெண்கள் வேண்டிக் கொள்வதும் தவறு என்று அறிவு சொல்கிறது.

--------------------தந்தைபெரியார் - "வாழ்க்கைத் துணை நலம்"என்ற நூலிலிருந்து பக்கம் :- 49-53

1 comments:

இறைகற்பனைஇலான் said...

pl.checkhttp://www.kalachuvadu.com/issue-113/page44.asp