Search This Blog

21.6.09

தாழ்த்தப்பட்டோருக்கும், தொழிலாளிகளுக்கும் பாடுபடும் கழகம் - திராவிடர் கழகம்




22.5.1949 ஆம் நாளில் பொன்மலை திராவிட வாலிபர் கழக 8 வது ஆண்டு விழாவில் தந்தைபெரியார் ஆற்றிய பேருரை.

பேரன்புமிக்க தலைவரவர்களே, தாய்மார்களே, தோழர்களே! இன்று நடைபெறும் இவ்வாண்டுவிழாவிலே நான் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது குறித்துப் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். மற்றும் என்னைப் பெருமைப்படுத்தி வாழ்த்துரைகள் வழங்கிய தொழிற்சங்கங்களுக்கும் அதன் நிருவாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

பெருமைப்படுகிறேன்

தொழிலாளர் நிறைந்த இப்பகுதியிலே திராவிட வாலிபர்கழகம் 8 ஆண்டுகளாக வேலை செய்து வருவதையறிந்து நான் பெருமைப்படுகிறேன். காரணம் என்ன? தொழிலாளருக்கு உள்ளபடியே பாடுபடும் ஸ்தாபனம் திராவிடர் கழகம் ஒன்றுதான் என்பதுவேயாகும். மற்ற ஸ்தாபனங்கள் தொழிலாளர்க்கும் முதலாளிக்கும் இடையேயிருந்து தங்கள் தங்கள் நலனைச் சாதித்துக்கொள்பவைகள் என்பதே எனது அழுத்தந்திருத்தமான எண்ணமாகும். இவ்வபிப்பிராயம் இன்று நேற்றல்ல எனக்கு ஏற்பட்டது. கடந்த 30 ஆண்டுகளாகவே இந்தக் கருத்து எனக்கு இருந்து வருகிறது. இன்றைய நிலையில் அவ்வெண்ணம் மேலும் ஊர்ஜிதமாகிவிட்டதை நான் காண்கிறேன்.

இஷ்டமில்லை என்றாலும்.......

சில மாதங்களுக்குமுன் நடைபெறுவதாயிருந்த அகில இந்திய ரெயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தத்தின் போது பத்திரிகைக்காரர்கள் அதுபற்றி எனது அபிப்பிராயம் கேட்டனர். அது சமயம் நான் திருச்சியில் நமது கழக நிர்வாகத் தலைவர் தோழர் டி.பி. வேதாசலம் அவர்கள் இல்லத்தில் தங்கியிருந்தேன். அங்குதான் பத்திரிகை நிருபர்கள் என்னைச் சந்தித்தது. வேலை நிறுத்தம் செய்வது எனக்கு இஷ்டமில்லை. ஆனால் வேலை நிறுத்தம் தொடங்கி விட்டால் அதைத்தான் நான் ஆதரிப்பேன் என்றேன். இவ்வாறு கூறுவது எங்களுக்குப் புரியவில்லையே என்றனர் பத்திரிகை நிருபர்கள்.

உங்களுக்குப் புரியாது, தான், நான் புரியும்படி விளக்கம் கூறுகிறேன் என்று மேலும் அவர் களிடம் நான் சொன்னேன். நமது குழந்தைகள் இருக்கின்றன. நெருப்புக்கிட்டே போகாதே என்று எவ்வளவோ பயப்படுத்தித்தான் வைக்கிறோம். எனினும் அக் குழந்தை நெருப்பில் குதித்து விட்டு, அய்யய்யோ சுடுதே! சுடுதே!! என்று அலறும் போது, பெற்றெடுத்த தாயோ, தகப்பனாரோ அந்தக் குழந்தையை மேலும் ஏன் தீயில் குதித்தாய் என்று கடிந்து இரண்டு உதை கொடுப்பது அறிவுடைமையாகுமா? அவர்கள் செய்தது தவறாயிருப்பினும் அந்தச் சமயத்தில் நாம் அவர்களைக் கடிந்து தண்டிப்பது நியாயமில்லையல்லவா? அதேபோன்று கடைசி நேரம் வரை நான் ஒவ்வொரு வேலை நிறுத்தக் காலங்களிலும் கூறி வந் திருக்கிறேன். இதனால் நான் தொழிலாளிக்கும் துரோகி என்றுகூட கெட்ட பெயர் சூட்டப் பட்டேன். ஆனால் வேறு வழியின்றி வேலை நிறுத்தம் துவக்கப்பட்டுவிட்டால், மற்றவர்களைக் காட்டிலும் நானே அதில் அதிகக் கவலைப்பட்டு என்னாலியன்ற தொண்டு புரிந்துவந்திருக்கிறேன். அத்தன்மையிலேயே அ.இ.ரெயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தம் அறவே கூடாதென்பதும், எக்காரணத்தாலேனும் துவக்கப்பட்டு விட்டால் நானும் எனது இயக்கத்தாராகிய திராவிடர்கழகத்தினரும் ஆதரித்தே தீருவோம் என்பதும் என்று கூறினேன். இவையனைத்தையும் பத்திரிகை நிருபர்கள் எழுதிக்கொண்டார்கள். ஆனால் அதைச் சிறிதுகூட வெளியிடவேயில்லை.

பத்திரிகைகளின் மோசடி:


சில நாட்கழித்து மற்றொரு காரியமாக அதே நிருபர்கள் என்னிடம் வந்தனர். என்னையா முன்பு தாங்கள் எடுத்துக்கொண்ட செய்தி வெளியிடவே யில்லை. மீண்டும் வேறு காரியத்துக்காக என்னை அப்பிப்பிராயம் கேட்க வந்துவிட்டீர்களே என்று சற்று கோபமாகக் கேட்டேன். அவர்கள் கூறினார்கள். நாங்கள் என்ன செய்வது? நீங்கள் தொழிலாளரின் வேலை நிறுத்தத்திற்கு எதிரிடையாக அபிப்பிராயம் கூறுவீர்கள் என்று பத்திரிகை உலகத்தார் நினைத்தார்கள் போலும். ஆகவே தான் நாங்கள் அனுப்பிய செய்தியை கத்திரித்து விட்டார்கள். அது எங்கள் குற்றமல்ல, பத்திராதிபர்களின் குற்றமாகும் என்றனர்.

நம் தொண்டின் முக்கியம்:

இதை ஏன் கூறுகிறேன் என்றால் சுயமரியாதை இயக்கமோ அல்லது திராவிடர் கழகமோ ஆற்றும் பொதுத்தொண்டுக்கு ஏதாவது முக்கியமிருப்பின், அது பாடுபட்டுழைத்துப் பலனறியாது தவிக்கும் ஏமாந்து வாழும் தொழிலாளிகளுக்கும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கும் நல் வாழ்வை ஏற்படுத்துவதைத் தவிர வேறொன்றுமில்லை என்பதை எடுத்துக்காட்டவேயாகும். இதைத் தவிர எங்களுக்கு பட்டம், பதவி, தேர்தல், ஓட்டு முதலியவைகளில் கவலையும் கருத்தும் வைத்து அதற்காகத் தொழிலாளர் தயவைப்பெற அவர்களிடத்திலே விண் படடோப வார்த்தைகளைக் கூறி ஏமாற்றிக் கட்சியின் அரசியல் ஆதிக்கத்துக்காக அவர்களது சக்தியைப் பயன் படுத்திக்கொள்ளும் சூதோ, சூழ்ச்சியோ எங் களிடத்தில் கிடையாது.

தொழிலாளரின் குறைகள்:

பொதுவாகத் தொழிலாளர்களும் அவ்வித ஏமாற்று வலைகளில் சிக்கி மயங்கித் தங்களது வாழ்வை கெடுத்துக்கொள்பவர்களாக இருக்கிறார்களேயன்றி, சிறிதாவது அறிவு வளர்ச்சி பெற்றவர்களாக ஆவதற்கு முயற்சி செய்வது கிடையாது. தொழிலாளர் அவ்வித அறிவு பெற்றுவிட்டால், எந்த அரசியல் கட்சிக்காரர்தான் அவர்களை ஏமாற்ற முடியுமென்று கேட்கிறேன். உங்களது ஒன்றுபட்ட சக்தியை நீங்கள் உணர்ந்துவிட்டால் உங்களை எதிர்க்க யாரால் முடியும்? ஆனால் இன்று தொழிலாளர்களாகிய நீங்கள் அரசியலின் பேரால் பலவிதப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒற்றுமையின்றி வாழ்கின்றீர்கள்.காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டு, சோஷியலிஸ்ட், தீவிரவாதி என்று இவ்வாறாகப் பிரிக்கப்பட்டு உங்களுக்குள்ளாகவே ஒருவரோடு ஒருவர் பகைத்துக்கொள்வதும், அடிதடிகளில் இறங்குவதும், போட்டிச் சங்கங்கள் அமைப்பதும், காட்டிக்கொடுப்பதும் ஆன காரியங்கள்தான் இன்றையத் தொழிலாளர் இயக்கமாக இருந்து வருகிறது.

இன்றையத் தொழிலாளர் தலைவர்கள் எனப்படுவோரின் தொண்டும், இப்படியாகக் கட்சிப் பிரிவினைகளை உண்டாக்கித் தங்களது சுயநலத்துக்காகப் பயன்படுத்திக்கொள்வதாக இருக்கிறதேயன்றி, இதுவரை இவ்விதக் கட்சிப் போட்டிகளால் தொழிலாளருக்கு இம்மி யளவாவது பயனேற்பட்டதென்று எவராவது கூறமுடியுமா என்று கேட்கிறேன். இவ்வளவுக்கும் காரணம் தொழிலாளர்கள் அறிவு வளர்ச்சி பெறாததேயாகும்.

எனவே தான் திராவிடர் கழகத்தாராகிய நாங்கள், அரசியலில் வீணாகக் காலங்கழிப்பதை விட மக்களுக்கு வேண்டிய அறிவுத்துறையிலே பாடுபட்டுவருவதன் கருத்தாகும்.தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பாடுபட்டுழைத்தும்பலனறியாத பட்டாளி மக்களுக்கும் பொதுவாக நம்நாட்டு மக்களுக்கு அறிவு, மானம், ரோஷம், உண்டாக்கும் ஸ்தாபனந்தான் திராவிடர் கழகமென்பதும், அதன் வேலைத்திட்டங்களுமாகும்.

ஆரியச் சூழ்ச்சி

நம் நாட்டுக்கு கி.மு. 2000 ஆண்டு காலத்தில் திராவிடம் என்றே பெயர் இருந்தது. இரா மாயணங்களிலும் புராணங்களிலுங்கூட நம் நாட்டுக்கு திராவிடம் என்றே குறிப்பிடப்பட்டி ருக்கிறது. ஆரியர் இந்நாட்டுக்குக் குடியேறிய பின்னர்தான் திராவிடம் என்பதற்குப் பதிலாக தென்னாடு என்று பெயர் கொடுக்கப்பட்டது. பின்னர் தமிழ்நாடு என்றும் வழங்கிவரலாயிற்று. திராவிடம், திராவிடர் என்பதால் ஆரியர் ஆதிக்கத்துக்கு என்றும் எதிர்ப்பு இருக்குமாதலால், திராவிடம் என்ற உணர்ச்சியை அறவே அழித்தொழிக்கச் சூழ்ச்சி செய்து வரலாயினர்.
ஆனால் தற்சமயம் இந்நாட்டிலுள்ள பார்ப்பனர் கூறலாம்; நாங்கள் ஆரியரல்ல நாங்களும் இந்நாட்டினர்தானென்று. ஆனால் இதே சமயத்தில், நம் நாட்டுப்பற்றோ, மொழிப்பற்றோ, சிறிதும் கிடையாது. ஆரியக் கலாச்சாரத்தையே பின்பற்றி வருவதோடல்லாமல், நமது முன்னேற்றத்தையும் முயற்சியையும் ஒழிப்பதே அவர்களது முழு முயற்சியாகக் கொண்டிருக்கின்றனர். இவைகளைக் கைவிடாமல் நாங்கள் ஆரியரல்ல என்று கூறிவிட்டால் போதுமா?

உதாரணமாக ஆங்கிலோ இந்தியர்கள் எப்படியோ அதே போலத்தான் இந்நாட்டுப் பார்ப்பனர்களும்.

ஆங்கிலோ இந்தியர்கள், நம் நாட்டுத் தாய்மார்கள் ஈன்றெடுத்தவர்கள் தானே? ஆனால் அவர்களுக்கு சற்றாவது நம்நாட்டு உணர்ச்சி யிருக்கிறதா? நமது மக்களைப் பார்த்தால் டேய், தமில் மனுசா என்று கேவலமாகத் தானே கூறுகின்றனர். அவர்கள் யார்? எந்த நாட்டில் எப்படிப் பிறந்தவர்கள் என்ற வரலாற்றை அறியாமல், தான் ஏதோ நேராக அய்ரோப்பாவில் பிறந்து இங்கு குடியேறியது போல ஜாதி ஆணவத்துடன் அல்லவோ நடக்கிறார்கள்.
அதைப்போலவே இந்நாட்டுப் பார்ப்பனர்களும், மேல் நாட்டிலிருந்து குடியேறிய ஆரியர் களுக்கும், நம் நாட்டவர்களுக்கும் பிறந்தவர்களாயிருந்துங்கூட, ஆரிய ஜாதி முறைகளையும், அதற்கான ஆணவத்தையும் கொண்டு நாட்டு குரிய நம்மைக் கீழ் ஜாதிகளாக, அடிமைகளாக, மதித்து நடத்துவதும், அதற்கேற்ப நம் நாட்டு மன்னர்களை ஏமாற்றி ஜாதி, மதம், கடவுள், இதிகாசம் பேரால் தங்களுக்கு தனி சலுகைகளும் பெற்று, பாடுபட்டு உழைக்கும் ஏழை மக்களுக்கு வாழ்வில் வறுமையும் தொல்லையும் இருக்க, பாடுபட்டுழைக்காத ஒரு கூட்டத்துக்கு வாழ்கையிலே மிதமிஞ்சிய ஆதிக்கமும் இருந்து வருகிறது.


திராவிடர் உணர்ச்சி வலுத்தால்....

இன்று கூட எந்தப் பார்ப்பனனையாவது பார்த்து நீ என்னையா பிராமணனா என்று கேட்டால், இன்றைய நிலையில் அவ்வாறு கூறிக்கொள்ளச் சற்று அச்சம் கொண்டாலும், நான் பிராமணனல்ல என்று கூறுவானேயன்றி நானும் திராவிடன் தான் என்று கூற முன்வர மாட்டார்களே? ஏன்? திராவிடர் என்ற உணர்ச்சி வலுத்துவிட்டால் பார்ப்பனிய ஆதிக்கத்துக்கு, அன்றே அழிவு ஏற்பட்டுவிடும் என்பதாலேயாகும்.

எனவேதான் திராவிடர் கழகத்தாராகிய நாங்கள் பார்ப்பனர்களுக்கு தனிப்பட்ட தொல்லையோ தீங்கோ விளைவிப்பதென்பது எங்கள் கொள்கையல்ல; பார்ப்பனியத்தைஅறவே ஒழித்து மக்களிடையே ஒன்றுபட்ட சமுதாய உணர்ச்சியை உண்டாக்க வேண்டுமென்பதாகும் என்று கூறுகிறோம். இதை இந்நாட்டுப் பார்ப்பனர்கள் இனியாவது அறிந்து தங்களது தவறுதலைத் திருத்திக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து எங்களது முயற்சியை அழிக்க மேலும் சூழ்ச்சிகள் செய்வார்களேயானால், அது தங்களுக்குத் தாங்களே அழிவு தேடிக் கொள்வதாக முடியும்.


பார்ப்பனர்களுக்குத் தனித் தொழிலாளர் கழகம் என்று ஒன்று இருக்கிறதா? காரணம் என்ன? உழைக்கும் வேலை அவர் களுக்கு கிடையாது. எதற்கும் லாயக்கற்ற பார்ப்பனனாயிருப்பினும் கடவுள் பேரால் பாடுபடாமலேயே சுகவாழ்வு வாழ்வதேன்? பிறவியின் பேரால், ஜாதியின் பேரால் ஒரு கூட்டம் ஆதிக்கம் செலுத்தும் அக்கிரமம் இந் நாட்டைத் தவிர வேறு நாட்டிலாவது இருக்கிறதா? அதுவும் சுயராஜ்யம் பெற்ற பின்னரும் இந்த அக்கிரமம் இருக்கலாமா? அறிவின் பேரால், உழைப்பின் அருமையின் பேரால் ஒருவனுக்கு உயர்வும் நல்ல பலனும் இருக்க வேண்டுமா? ஜாதியின்பேரால் பதவியின் பேரால் சோம்பேறிகளெல்லாம் உயர்ந்தவர்கள் என்று புகழப்படுவதா என்று கேட்கிறேன்? தொழிலாளத் தோழர்களே இந்த உணர்ச்சியும், மானமும், ரோஷமும் உங்களுக்கு ஏற்படாமல் உங்களுக்கு என்னதான் கூலி உயர்ந்தாலும் பயன் என்ன?

சமுதாய அமைப்பு சமுதாயத்திலே புகுத்தப்பட்டு வேரூன்றியுள்ள பார்ப்பனிய மூடப்பழக்க வழக்கங்களுக்கு நீங்கள் பாடுபட்டுச் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை பாழாக்குகின்றீர்களே? இதிலிருந்து நீங்கள் விடுபட வேண்டாமா? இதைத்தான் திராவிடர் கழகம் கூறுகிறது. சமுதாய அமைப்பிலே புதியதோர் மாற்றம் வேண்டும். அந்த மாறுதலை அடிப்படையாகக் கொண்ட நல்லாட்சி வகுக்க வேண்டும்.

சமுதாய அமைப்பு பற்றி நம் மக்களுக்குச் சற்றாவது தெளிவு உண்டா? பாமர மக்களை நான் கூறவில்லை. பெரிய பெரிய பண்டிதர்கள், புலவர்கள், ராஜ தந்திரிகள் முதல் பண்டாரச் சன்னதிகள் வரை தான் தெரியுமா? சமுதாய அமைப்பு எப்படியிருக்க வேண்டுமென்று.
ஒருவன் பறையனாகவும், ஒருவன் சூத்திரனாகவும், ஒருவன் பார்ப்பனனாகவும் இருக்க வேண்டுவதும், இதன் காரணமாய் ஒரு கூட்டம் மட்டும் பாடுபடாமல் உல்லாச வாழ்வு வாழ்வதும் சரியான சமுதாய அமைப்பு என்று எவராவது கூற முடியுமா? கூறமுடியவில்லையென்றால், அந்த அமைப்பை மாற்றியமைக்க வேண்டுவதுதானே. இன்றைய முக்கியப் பொதுப் பணியாகும்.

அதிலே நாம் கவலை செலுத்தாமல், பதவி, பட்டம், ஓட்டுகளில் மட்டும் பாடுபடுவது மானரோஷமுள்ள காரியமாகுமா?

சமுதாயமும் அரசியலும் வெவ்வேறல்ல

சமுதாயம் வேறு, அரசியல் வேறு என்று கூறுவதும் தவறாகும். சமுதாய அமைப்பைச் சரிவர நடத்துவது தானே அரசாங்கத்தின் கடமையாகும். சமுதாய அமைப்புக்கு வழி வகை அமைப்பதே மதத்தின் தத்துவமாகும். முஸ்லிம்களும், கிறித்துவர்களும் தங்களது மதத்தை அவ்விதமே கையாண்டு வருகின்றனர். ஆனால் நமது மதமிருக்கிறதே அது நமது சமுதாய அமைப்பின் முன்னேற்றத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாயிருக்கிறது. நம் அரசாங்கம் என்பதோ மக்களுக்காக அல்லாமல், அரசாங்கத்தாருக்காக மக்கள் வாழவேண்டிய தலை கீழ்த்தத்துவத்தில் நாம் உழன்று வருகிறோம்.

எனவே நாமும் நமது நாடும் முன்னேற வேண்டுமோனால் சமுதாயக் துறையிலே பெரும் மாறுதலை உண்டாக்க வேண்டும். அதன் பின்னரே நல்ல ஆட்சியும் ஏற்படுத்த முடியும். அவ்வாறில்லாது இன்றையச் சமுதாய அமைப்பைக் கொண்டே, யார் ஆட்சி செய்தாலும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள தொல்லைகள் ஒரு சிறிதும் நீங்குவதற்கு வழிவகையிருக்க முடியாது. -

------------------------------"குடிஅரசு" 28.5.1949

1 comments:

Unknown said...

//பார்ப்பனர்களுக்குத் தனித் தொழிலாளர் கழகம் என்று ஒன்று இருக்கிறதா? காரணம் என்ன? உழைக்கும் வேலை அவர்களுக்கு கிடையாது. எதற்கும் லாயக்கற்ற பார்ப்பனனாயிருப்பினும் கடவுள் பேரால் பாடுபடாமலேயே சுகவாழ்வு வாழ்வதேன்? பிறவியின் பேரால், ஜாதியின் பேரால் ஒரு கூட்டம் ஆதிக்கம் செலுத்தும் அக்கிரமம் இந் நாட்டைத் தவிர வேறு நாட்டிலாவது இருக்கிறதா? //


பார்ப்பனர்கள் பதில் சொல்லுவார்களா? சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.