Search This Blog

13.6.09

திராவிடர் கழகம் அதிர்ச்சியூட்டும் இயக்கம் - எப்படி?




திராவிடர் கழகம் என்னும் போர் முரசம்!

1. கட்டளைச் சொற்கள்

திராவிடர் கழகம். ஆம், இது ஒரு அதிசயமான இயக்கம் எப்படி?

நன்றியை எதிர்பாராதே! நல்லது என்று அறிவுக்குப்பட்டதை அப்பட்டமாகச் சொல்லு! எதிர்ப்பு வரும் - ஆனந்தமாக ஏற்றுக்கொள்!

வசைமொழிகள் சீறிவரும் - வருக வருக என வாழ்த்துப் பாடு!

உன் உயிருக்குக் குறி வைக்கப்படும் - இலட்சியத்துக்குக் கொடுக்கப்படும் விலை என்று கூத்தாடு!

இப்படி எண்ணுகிற சொல்லுகிற - வாழ்ந்து காட்டுகிற ஒரு இயக்கம் அதிசயமான இயக்கம் தானே!

அதிர்ச்சியூட்டும் இயக்கம் எப்படி?

இதுவரை இவை எல்லாம் உண்மையானவை என்று நம்பிக் கொண்டிருந்தவைகளை எல்லாம் ஒரு நொடிப்பொழுதில் பொய்யென்று புருவத்தை உயர்த்திச் சொல்லும் இயக்கம்.
கடவுள் நம்மைப் படைத்தார் - வளர்த்தார் - காப்பாற்றுகிறார் என்று கருதிய மக்களிடத்திலே கடவுளாவது - கத்தரிக்காயாவது! யாரவன்? எங்கேயவன்? இழுத்துவா இங்கே! பந்தயம் கட்டிச் சொல்லுகிறோம் - சவால்விட்டுக் கூறுகிறோம் - கடவுள் இல்லை, இல்லவே இல்லை. கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் - பரப்பியவன் அயோக்கியன் - வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று சொல்லும் இயக்கம்.
இவையெல்லாம் நம்பிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியூட்டக்கூடியவைதானே!

வழிகாட்டும் இயக்கம் எப்படி?

பகுத்தறிவே வழிகாட்டி என்று பகரும் இயக்கம்!
சிந்திப்பாய் - செயல்படுவாய் - வெற்றியைக் குவிப்பாய் என்று நேர்பாட்டையைக் காட்டும் இயக்கம்.
இல்லாத கடவுளை நம்பி - புத்தியை நாசப் படுத்திக் கொள்ளாதே!
கடவுள் நம்மைக் காப்பார் என்று நம்பி காரியத்தைக் கோட்டை விட்டுவிடாதே!
கடவுள் கைநிறைய கொடுப்பார் என்று கருதி உன் கைப் பொருளை இழக்காதே!
கடவுள், கோயில், தீர்த்தம் என்று தேடிச் சென்று பொருளையும், பொழுதையும் பாழாக்காதே!
உன் வெற்றி உன் யில்! வெற்றிக்கும், தோல்விக் கும் பொறுப்பை ஏற்றுக்கொள்; அதில் பாடம் கற்றுக்கொள்!
விழி எழு, நட, உழை - வெற்றி உன் பக்கத்தில் இதோ வந்துவிட்டது!
என்று வழிகாட்டும் இயக்கம்.

தன்னம்பிக்கையூட்டும் இயக்கம் எப்படி?

தலையெழுத்துப்படிதான் எல்லாம் நடக்குமா? யார் சொன்னது? யார் தலையில் யார் எழுதியது?
புரோகிதச் சுரண்டலின் சூட்சமம் இது - நம்பாதே!
தலையெழுத்து என்பது தறுதலைகளின் பேச்சு
விதி விதி என்பது வீணர்களின் கூச்சல்.
ஊழ்வினை என்பது உழைப்பைச் சுரண்டும் உலுத்தர்களின் ஏற்பாடு.
தன்னம்பிக்கை ஒன்றுதான் தரணியில் உன்னை உயர்த்தும் என்று கூறுவது தன்னம்பிக்கை இயக்கம் தானே!

சமத்துவ இயக்கம் இது எப்படி?

ஆண் - பெண் இருவரும் அடிப்படையில் சமம். ஆண் எஜமானனும் அல்ல - பெண் அடிமையும் அல்ல!

ஆண்டவன் படைத்தான் ஏழையை - பணக்கா ரனை என்னும் ஆணிவேரை அடியோடு வீழ்த்துவது.

முதலாளி - தொழிலாளி பேதம் ஆகாது! தொழி லாளி என்பவன் பங்காளியாவான்.
பதவிக்குச் செல்ல பல்லிளிப்புத் தேவை!

பகுத்தறிவுச் சொல்வதை பளிச்சென்று சொல் வோம் - பகவான் காரியம் என்று சொன்னாலும் படு குழியில் தள்ளுவோம்.

பிறப்பில் பேதம் பேசும் மனுவாதத்தை மரணக் குழிக்கு அனுப்புவோம்.

இப்படி கூறும் இயக்கம் எது? திராவிடர் கழகத்தைத் தவிர வேறு எங்குண்டு?

இந்தப் புரட்சிகர இயக்கத்தில் ஈடுபடுத்திக் கொள்ள எஃகு போன்ற உறுதி தேவை.

படை அணிவரிசைபோல அணிவகுக்கும் பக்குவம் வேண்டும்.

தளபதியின் கட்டளைச் சொல் மட்டுமே காதில் விழவேண்டும்.

கண்ணின் பார்வைக்குக் குருவியின் கொண்டை மட்டுமே தெரிய வேண்டும்.

மின் மினிகள் கண் சிமிட்டும் - மந்திகள் குறுக்கே முறுக்கே தாவும் - கண் சிமிட்டக் கூடாது - பராக்குப் பார்க்கும் கோணல் கூடாது.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலமாக அடிமைப்பட்ட இனம். அது நெட்டி முறித்து நிமிர்ந்து எழுந்து எதிரியை வீழ்த்த குறியும் - குறிக்கோளும் தேவைப்படுகிறது.

ஆம், தந்தை பெரியார் இப்படியே வார்த்தெடுத்தார் - வளர்த்துக் கொடுத்தார்.

புரட்சிகரமான எந்த இயக்கத்துக்கும் இவை அணிகலன்கள் - கட்டளைச் சொற்கள்.
கட்டுப்பாடற்ற தொகைக்குப் பெயர் கும்பல் என்பது! கட்டுப்பட்டுள்ள மக்கள் திரளுக்குப் பெயரே இயக்கம் என்பது.

இந்த இயக்கத்தின் தாயும் - தந்தையுமான தந்தை பெரியார் வகுத்து வைத்த கொள்கைகள் - பெரும் சொத்துகள்.

அவற்றைச் செயல்படுத்த கொடுக்கப்பட்ட ஆயுதம்தான் கட்டுப்பாடு!

முதலாவதும் அதுதான்!
இரண்டாவதும் அதுதான்!!
மொத்தமும் அதுதான்!!!

இலட்சியவாதிகள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கமாட்டார்கள். ஆதலால்தான் கட்டுப்பாடு என்னும் கவசம் தேவைப்படுகிறது.

எதிரிக் கோட்டையில் எந்தக் கல்லை உருவுவது?

அதனை அடையாளம் காட்டத்தான் அந்தத் தலைவர்.

ஆள் ஆளுக்குத் திசைமாறி ஏவினால் விளக்கெண் ணெய்க்குக் கேடே தவிர பிள்ளை பிழைக்காது!

அந்தக் கட்டளைகளை நீடாமங்கலம் மாநாட்டி லும் (1945) சொன்னார் தூத்துக்குடி மாநாட்டிலும் (1948) சொன்னார் இயக்கக் கர்த்தா தந்தை பெரியார்.

அதனைத்தான் சென்னை பெரியார் திடலில் (10.6.2009) எடுத்துக்காட்டினார் - தந்தை பெரியார் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள்.

------------------வளரும்...... தி.க.பொதுச் செயலாலர் கவிஞர். கலி.பூங்குன்றன் அவர்கள் எழுதிய கட்டுரை "விடுதலை" 12-6-2009

2 comments:

Unknown said...

ஆம் அதிர்ச்சியூட்டும் இயக்கம்தான். மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடு திரும்ப முடியுது நாங்க மட்டும் வீடு திரும்ப முடியலை என்ற பாடலை கூட பெரியார் திடலில் பாட திராவிடர் கழகம் தடை விதித்ததை நாங்கள் மறப்போமா?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தமிழின விரோத கொள்கை கொண்டிருக்கும் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு வாக்களிக்கச் சொன்னதை விட அதிர்ச்சியூட்டும் செயல் எதையும் திராவிடர் கழகம் செய்யவில்லை என்பதை அனைவரும் அறிவர்.