Search This Blog

13.6.09

தமிழீழம் வரும் காலத்தில் எப்படி அமையும்?




ஒட்டு மொத்த தமிழர்களுக்காகவும் குரல் கொடுப்பேன்
தொல். திருமாவளவன் பேட்டி


தாழ்த்தப்பட்டவர்களுக்காக எவ்வளவு பேர் எவ்வளவோ அமைப்புகளை, கட்சிகளை கண்டிருக்கின்றார்கள்.ஆனால், கரையேறாமல் போனவர்களை கணக்கில் வைக்க இயலாது. இப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, அவர்களின் வாழ்வாதார அடிப்படை உரிமைகளை பெற்றுத் தர அமைப்பினை உருவாக்கி அதனை இயக்கமாகத் தொடங்கி இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எனும் தமிழகத்தில் குறிப்பிடத்தகுந்த அரசியல் கட்சியாக அதை மாற்றியிருக்கும் ஆற்றலாளராய் மிளிர்பவர் மானமிகு தொல்.திருமாவளவன் அவர்கள் ஆவார்.

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் தனது கட்சியின் சார்பில் திமுக கூட்டணியின் வேட்பாளராகக் களம் கண்டு முதல்முறையாக நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைக்கிறார். தமிழ்நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எழுந்த குரல் இன்று நாடாளுமன்றத்தில் ஒலிக்க இருக்கிறது. விடுதலையின் சார்பில் இனிதான வாழ்த்துகளைக்கூறி, விருந்தினர் பக்கத்திற்காக மானமிகு தொல். திருமாவளவன் அவர்களை சந்திக்க சென்னையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்திற்குச் சென்றோம்.

டெல்லிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த திருமா நமக்காக தனது பயண நேரத்தினை ஒதுக்கிக் கொண்டு மனம் திறந்து பேசினார். அவருடன் உரையாடியதில் இருந்து.....


விடுதலை: தாங்கள் பொது வாழ்க்கைக்கு வந்ததற்கான சூழல் எப்படி இருக்கிறது?

திருமா: சென்னையில் 1979 காலகட்டத்தில் கல்லூரியில் படிப்பதற்காக வந்திருந்த காலகட்டத்தில் திராவிடர் கழகம் திமுக ஆகிய திராவிட இயக்கங்களின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடிய வாய்ப்பைப் பெற்றேன். பெரியார் திடலில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் வழக்கமாக பங்கேற்பேன். குறிப்பாகப் பெரியார் நூலக வாசகர் வட்ட நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்வேன். திராவிடர் கழக, திமுகழக மாநாடுகள், சமூக நீதிக் கருத்தரங்குகள் ஆகியவற்றில் கலந்து கொள்வேன். இவ்வாறு திராவிடர் இயக்க அரசியல் எனக்கு அறிமுகமானது. தந்தை பெரியாரின் கருத்து கள் அறிமுகமானது. அதனடிப்படையில் பொது வாழ்வில் ஈடுபட வேண்டும் என்கிற ஆர்வம் எனக்கு மேலிட்டது.

1983இல் மிகப் பெரிய இனக்கலவரம் கொழும்பில் நடைபெற்றபோது லட்சக்கணக்கான தமிழர்கள் தாய்த் தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர். மாநிலக் கல்லூரி மாணவனான நான், மாணவர்கள் ஒருங்கிணைந்து நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றேன். புலம்பெயர்ந்த தமிழர்கள் நடத்திய போராட்டங்களிலும் கலந்து கொண்டேன். தமிழர்கள் மீதான சிங்கள இனவெறித் தாக்குதல் என்னை வெகுவாகப் பாதித்தது.

மேலும், மாணவர்களை ஒருங்கிணைத்துப் போராட களமிறங்கினேன். பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., குற்றவியல் படித்துக் கொண்டிருந்த போது விடுதலைப்புலி எனும் பெயரில் கையெழுத்து ஏட்டினையும் நடத்தியிருக்கிறேன். சகமாணவர்களை அதைப் படிக்கச் செய்தேன். 1984இல் பெரியார் திடலில் ஈழ ஆதரவு மாணவர் மாநாட்டினை நடத்தினேன். சைக்கிள் பேரணியும் நடத்தினேன். சட்டக் கல்லூரியில் படிக்கும்போது ஈழ ஆதரவுப் போராட்டத்தில் மேலும் ஈடுபட வாய்ப்புக் கிடைத்தது. அரசியல் தலைவர்களையும் அழைத்து வந்து நிகழ்ச்சிகள் நடத்தினேன். கவிஞர் காசிஆனந்தன், பேராசிரியர் அன்பழகன், வைகோ போன்றவர்கள் வந்திருக்கிறார்கள். சட்டக் கல்லூரியில் பயிலும்போது நானும், செல்வி அருள்மொழியும், சக்திவேலும் ஈழத் தமிழர் கூட்டமைப்பில் பங்கேற்று இருக்கிறோம். இப்படித் திராவிடர் கழக, திமுகழக நிகழ்ச்சிகள்தான் என்னை பொதுவாழ்க்கைக்கு உள்ளே வரக் காரணமாக அமைந்தன.

விடுதலை: விடுதலைச் சிறுத்தைகள் தொடங்கிய நேரத்தில் தேர்தலைப் புறக்கணித்த நீங்கள் தற்போது தேர்தல் பாதைக்கு வரவேண்டிய அவசியம் என எதைக்கருதுகிறீர்கள்?

திருமா: திராவிடர் கழகத்தைப் போலவே தேர்தலில் ஈடுபடாத அமைப்பாகவே நடத்திட விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தைத் தொடங்கினேன். 91இல் தொடங்கி 99 வரை அப்படிப்பட்ட வகையில்தான் பணி யாற்றினோம். மதுரையில் தொடங்கிய எங்கள் இயக்கத்தின் பணிகள் வட மாவட்டத்திலும் வளர்ச்சி பெற்றது. கடலூர் மாவட்டத்தில் 1995, 96 வாக்கில் எங்கள் இளைஞர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் உள்பட கடுமையான சட்டங்கள் ஏவப்பட்டன. அந்நிலையில் முன்னணித் தலைவர்கள் ஒன்றுகூடி, நாம் தேர்தலைப் புறக்கணிப்பதால் தீவிரவாதிகளாக அரசு நம்மைக் கருதுகிறது; விடுதலைச் சிறுத்தைகள் என்ற பெயரில் இயங்குவதால் விடுதலைப் புலிகளின் பின்னணியில் இயங்குபவர்கள் என்று அரசு அச்சப்படுகிறது. இந்நிலையில் இயக்கத்தின் பெயரை மாற்ற வேண்டும் அல்லது தேர்தல் பாதையில் ஈடுபடவேண்டும். இல்லையேல் பொதுவாழ்க்கைக்கு வர விரும்பும் இளைஞர்கள் வருவதற்குரிய வாய்ப்புகள் இல்லாமல் போய்விடும். இயக்கம் முடங்கிவிடும் என்று கூறினார்கள். இயக்கத்தின் பெயரை மாற்றுவதற்கு நான் உடன்படவில்லை. தேர்தல் பாதைக்குச் சென்றால் அரசு நம்மை எப்படிக் கருதினாலும் மக்கள் நம்மை ஏற்றுக் கொள்வார்கள் என்கிற கருத்துப் பரவலாக வந்தது.

எனவே, தேர்தலில் நாம் வேட்பாளரை நிறுத்தாவிடினும் நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டுமோ அவர்களை அடையாளம் காட்டிட வேண்டும். நம் பின்னே வருகிற மக்களின் வாக்குகளை அளித்திடவேண்டும் என்று கருதினோம். எனவேதான் 1999இல் விழுப்புரத்தில் கூடிய மாநில செயற்குழுவில் தேர்தல் புறக்கணிப்பைக் கைவிடுவது என்கிற முடிவை இயக்கம் எடுத்தது. ஆக இந்த இயக்கத்தின் மீது வன்முறையாளர்கள் என்ற முத்திரை குத்தி ஓரங்கட்டி விடக்கூடாது என்று முடிவெடுத்தோம். புரட்சியாளர் அம்பேத்கர்கூட தேர்தல் புறக்கணிப்பை வலியுறுத்தவில்லை. ஆகவே தேர்தலில் நிற்க முடிவெடுத்தோம்.

விடுதலை
: நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள உங்களின் பணி நாடாளுமன்றத்தில் எத்திசையில் அமையும்?

திருமா: ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் ஒட்டுமொத்த தமிழர்களின் நலன்களுக்காகவும் நாடாளுமன்றத்தில் எம்மால் இயன்ற அளவு குரல் கொடுப்போம். குறிப்பாக ஈழத் தமிழர்கள் மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்பு தொடர்பாக இந்திய அரசு ஆற்றவேண்டிய பணிகளை சுட்டிக்காட்ட முயற்சிப்பேன். சிறு பான்மை மக்கள்நலன், மகளிர் மேம்பாடு, இடஒதுக்கீடு ஆகியவற்றுக்குக் குரல் கொடுப்பேன். நான் ஒற்றை உறுப்பினராக இருப்பதால் உரை யாற்றுவதற்கே நேரம் போராடித்தான் பெறவேண்டியிருக்கும். வலிமையுள்ள எதிர்க்கட்சி அல்லது அதற்கு அடுத்த நிலையில் இருக்கின்ற கட்சிகளுக்கு வாய்ப்புகள் நிறைய இருக்கக்கூடும். எனவே, கிடைக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்ற உலகெங்கும் வாழும் தமிழர் களின் உரிமைகளுக்காகக் கட்டாயம் குரல் கொடுப்பேன். தேர்தல் தொடர்பாக தொகுதிக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப் பாடுபடுவேன். கூரை இல்லாத வீடுகள் கட்டித் தருவோம் என்று சொல்லியிருக்கிறோம். அதனையும் நிறைவேற்றுவோம்.
-------------"விடுதலை"ஞாயிறுமலர் 6-6-2009




பெரியாரே எம் வழிகாட்டி!

தொல். திருமாவளவன் பேட்டி விடுதலை ஏட்டின்மூலம் உள்வாங்கிய அரசியல்தான் இன்றும் எம்மை வழி நடத்துகிறது!



தந்தை பெரியாரை நாம் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டால் யார் நம் எதிரிகள் என்பதையும், யார் நம்முடைய நண்பர்கள் என்பதையும் எளிதாக அடையாளம் காணலாம் என்பதை விளக்கி தொல். திருமாவளவன் அவர்கள் அளித்த பேட்டியின் சென்ற இதழின் தொடர்ச்சி வருமாறு:

விடுதலை : தமிழீழம் வரும் காலத்தில் எப்படி அமையும்?

திருமா: நாம் எதிர்பாராத வகையில் ஈழத் தமிழ் சமூகம் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் மிகப் பெரும் சேதத்தை அல்லது தடையை சந்திக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டு விட்டது. இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு முற்றிலுமாக தமிழ் மக்களின் வாழ்நிலை சிதைக்கப்பட்டிருக் கிறது. பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் உலகெங்கும் சிதறிக் கிடக்கிறார்கள். மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சிங்கள ராணுவம் வதை முகாம்களில் சிக்கித் தவிக்கிறார்கள். எஞ்சியுள்ள தமிழர்கள் அடக்குமுறைகளுக்கு ஆளாகி வருகிறார்கள். அந்த மக்களின் ஒற்றைப் பாது காவலராக இருந்த விடுதலைப்புலிகளும் ஒரு கட்டுக்கோப்பான நிலையிலிருந்து சிதறடிக் கப்படுகிற நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். களப்பலியானவர்களைத் தவிர எஞ்சியுள்ளவர்கள் அந்தப் போராட்டத்தை முன்னெடுக்க பெரிதும் வாய்ப்பிருக்கிறது. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் அய்ந்தாம் கட்ட போரை விரைவில் அறிவிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ஆனாலும் சர்வதேச சமூகத்தின் ஆதரவை தமிழ் சமூகம் இன்னும் பெறவில்லை. அதற்கான முயற்சியில் நாம் வெற்றி பெறவில்லை என்பதை நாம் எதார்த்தமாக ஒப்புக் கொள்ள வேண்டும். இவ்வளவு பெரிய நெருக்கடியில் இந்தியா மட்டுமல்ல, உலகத்தின் எந்த நாடும் தமிழர்களை பாதுகாக்க முன் வரவில்லை. போரை நிறுத்த வேண்டும் என்று ஒட்டு மொத்த தமிழர்களும் குரல் கொடுத்தும்கூட பேச்சு வார்த்தை புலிகளுடன் நடத்த வேண்டும் என்று முனைப்பைக் காட்டவில்லை. எனவே தமிழீழ விடுதலைப் போராட்டம் வெற்றி பெற வேண்டுமானால் சர்வதேச சமூகத்தின் ஆதரவு கட்டாயம் தேவை. எனவே அங்கு நடைபெறுவது தேசிய இன விடுதலைப் போராட்டம்தான் என்பதை நம்மைப் போன்றவர்கள் சர்வதேச சமூகத்திற்கு உணர்த்தப் பாடு பட வேண்டும்.

விடுதலை: ஜாதி ஒழிப்பிற்காகவே வாழ்நாள் முழுதும் பாடுபட்ட தந்தை பெரியாரை தாழ்த்தப்பட்டவர்களுக்காகவே நடத்தப்படும் அமைப்புகளில் சிலர் கடுமையாக விமர்சிப்பது குறித்து?

திருமா: பெரியார் ஒரு பன்முகப் பரிமாணம் உள்ளவர்; அவரை முழு பரிமாணத்தோடு பார்க்கிற வலிமை இல்லாதவர்கள் அவரவர்கள் நிற்கிற வளையத்துக்குள் நின்று கொண்டு விமர்சித்திருக்கலாம். அந்த விமர்சனங்களை பெரியார் வாழ்ந்த காலத்திலும், சரி, மறைந்த காலத்திலும் சரி இத்தகைய விமர்சனக் கணைகள் எழுந்திருக்கின்றன. விடுதலைச் சிறுத்தைகளைப் பொறுத்தவரை தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் தலை நிமிர்வுக்கு தந்தை பெரியார் அவர்களின் ஈடு இணையற்ற அர்ப்பணிப்பும், உழைப்பும் தான்! அடிப்படை. புரட்சியாளர் அம்பேத்கருடைய பங்களிப்பு எத்தகைய போற்றுதலுக்குரியதோ, அதைப் போலவே பெரியாரின் பங்களிப்பும் போற்று தலுக்குரியது தான். பெரியாரையும், அம்பேத்கரையும் தனது அரசியல் வழி காட்டிகளாகக் கொண்டு விடுதலைச் சிறுத்தைகள் செயல்படுகிறது. எனவே இத்தகைய விமர்சனங்கள் பொருளற்றது என்று நான் கருதுகிறேன்.

விடுதலை: தந்தை பெரியார் அவர்களின் கருத்துகள் இன்றையக் கால கட்டத்தில் எந்த அளவுக்குத் தேவை என கருதுகிறீர்கள்?

திருமா: எந்த காலத்துக்கும் பொருந்தி வருகிற கருத்தியல் தான் தந்தை பெரியார் அவர்களின் கருத்தியல் ஆகும். எந்தப் பொருளையும் பகுத்துப் பார்க்கிற ஆற்றலைக் கொடுப்பது தந்தை பெரியாருடைய கருத்தியல். ஆகவே அனைத்துக் காலங்களிலும், சூழல்களிலும் தேவைப் படுகின்றன என்பதை இன்றைக்கும் நடை முறையிலே காணலாம். தந்தை பெரியாரையே நாம் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டால் யார் நம் எதிரிகள் என்பதையும், யார் நம்முடைய நண்பர்கள் என்பதையும் எளிதாக அடையாளம் காணலாம். அதைப்போல சகிப்புத் தன்மையோடு, மனம் தளரா உறுதியோடு போராட வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த முன்மாதிரியாக விளங்குபவர், முழுமையான அர்ப்பணிப் போடு களம் கண்ட ஆற்றலைப் பெற்றவர் தந்தை பெரியார் அவர்கள். ஆகவே, எக்காலத் திற்கும் ஏற்ற இயல்பான கருத்தியலைக் கொண்டதுதான் தந்தை பெரியாரின் கருத்தியல் என்பதை நான் உறுதியோடு பதிவு செய்கிறேன்.

விடுதலை: திராவிடத் தேசியம் - தமிழ்த் தேசியம் என்பதில் தங்களின் நிலைப்பாடு அல்லது கருத்து?

திருமா: மொழிவழியாக மாநிலங்களை பிரித் தாண்ட நேரத்தில் அதாவது 1956க்கும் முன்னர் ஆரிய-திராவிடக் கருத்தியலே ஒன்றுக்கொன்று முரண்பாடாக மோதிக்கொண்டிருந்தன. அப்போது மொழிவழியான உணர்வுகள் மேலோங்காத காலகட்டம். ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்க்க வேண்டும் என்பது மட்டும்தான் அன்றைய இந்திய மக்களிடையே முன்னிருந்த ஒரு சவாலாகும். ஆகவே, இந்தியர்கள் என்ற உணர்வு ஊட்டப்பட்டு ஒருங்கிணைக்கப் பட்டிருந்தாலும், இந்தியர்களுக்குள்ளேயே ஆரியர்-திராவிடர் என்கிற வேறுபாடுகளும், முரண்பாடுகளும் நிலவிவந்த நேரம். ஆரியத்தின் ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கும், ஆரிய தேசியத்தை எதிர்ப்பதற்கும் திராவிடத் தேசியம் அன்றைக்கு வலிமையான ஆயுதமாக நமக்குப் பயன்பட்டது. 1956க்குப் பின்னர் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு சென்னை ராஜதானி, கர்நாடகாவாகவும், ஆந்திரவாகவும், கேரளாவாகவும் பிரிக்கப்பட்ட பிறகு திராவிடத் தேசியம் என்கிற கருத்தியல் பின்னுக்குத் தள்ளப்பட்டு மலையாள தேசியம், கன்னட தேசியம், தமிழ்த் தேசியம் என்கிற கருத்தியல் வளர்ச்சியைத் தொடங்கி இன்றைக்கு மொழிவழி தேசியம் இம்மண்ணில் தலை தூக்கத் தொடங்கியுள்ளது. இதில் குறிப்பாக தமிழ்தேசியம் என்பது திராவிடத் தேசியத்திலிருந்து இன்னும் வலிமையான தேசியமாக தமிழ் மண்ணில் வளர்க்கப்பட்டு வருகிறது.

ஆகவே, ஒன்றிலிருந்து மற்றொன்று என்னும் இயங்கியல் விதிப்படி திராவிடத் தேசியத்திலிருந்து தமிழ்த்தேசியம் என்பது ஒரு குறிப்பான புள்ளியை நோக்கி நகர்ந் திருக்கிறது, வளர்ந்திருக்கிறது. அந்த வகையில் தமிழ்த் தேசியம் என்பது பிற மொழிவழி தேசியங்களுக்கு இணையாக அல்லது ஒத்ததாக நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருகிறது. இந்த தமிழ்த் தேசியம் ஆரிய தேசியத்திற்கும், பிறமொழித் தேசியத்திற்கும் எதிரானது. இது தமிழ்த் தேசியம் திராவிடத் தேசியத்திலிருந்து பரிணாமம் அடைந்த, ஆற்றல் வாய்ந்த ஒரு கருத்தியல். இது திராவிடத் தேசியத்திற்கு எதிரானது அல்லது முரணானது என்று கருதப்பட்டாலும் பேசப்பட்டாலும் திராவிடத் தேசியத்திலிருந்து வளர்ந்த ஒரு கருத்தியல்தான் தமிழ்த்தேசியம் என்பதை நாம் மறுத்துவிட முடியாது. திராவிடத் தேசியமாக எழுந்த கருத்தியல்தான் மேலும் குறிப்பான ஒரு செழுமை பெற்ற கருத்தியலாக வளர்ந்திருக்கிறது. ஆகவே, திராவிடத் தேசியத்திற்கும், தமிழ்த் தேசியத்திற்கும் உள்ள முரண்பாடு ஆரிய தேசியத்திற்கும், திராவிடத் தேசியத்திற்கும் உள்ள முரண்பாட்டை போல அல்ல. இதை தீவிரமான பகை முரண் பாடாகப் பார்க்க முடியாது.

விடுதலை: பவளவிழா காண்கிற விடுதலை உடனான தொடர்பு பற்றி?

திருமா: 1979இல் இருந்துதான் விடுதலை ஏட்டைப் படிக்கிற வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். கல்லூரியில் படிக்கும்போது நூலகங்களில் நான் தேடிப்படிக்கிற ஏடுகள் விடுதலை, முரசொலி ஆகிய ஏடுகள்தான். அதன்மூலம் நான் உள்வாங்கிய அரசியல்தான் இன்றைக்கு எம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறது. தந்தை பெரியார் அவர்கள் ஆசிரியராக இருந்து நடத்தப்பட்டு வந்த இந்த ஏடு, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வலிமைமிக்க வழிகாட்டுதலால் கடந்த 50 ஆண்டுகளை நெருங்கக் கூடிய அளவிற்கு ஆசிரியரின் ஈடில்லா உழைப்பின் மூலம் வெற்றி கரமாக நடந்தேறி வருகிறது. உலகெங்கும் வாழ்கிற தமிழர்களை கருத்தியல் ரீதியாக தமிழ்ச் சமூகத்தை ஒருங்கிணைக்கிறது எனும் போது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது.
தந்தை பெரியார் அவர்கள் மறைந்த பிறகு அவர் விட்டுச் சென்ற பணிகளை போற்றுதலுக்குரிய முறையில் வெற்றிகரமாக தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் இயக்கத்தின் ஊடகப் பணிகளையும் முன்னெடுத்துச் சொல்கிறார். அவரோடு நான் பல ஆண்டுகளாக நெருங்கிப் பழகக்கூடிய வாய்ப் பினைப் பெற்றிருக்கிறேன். எதிலும் பதற்றப்படாமல் தந்தை பெரியார் அவர்களிடம் கற்றுக்கொண்ட தலைமைப் பண்புகளின் அடிப்படையில் எந்தப் பிரச்சினையையும் இலகுவாகக் கையாள்கிறார்.
தற்போது ஈழப்பிரச்சினையில்கூட நான் மிகுந்த பதற்றத்திற்கு உள்ளாகி இருந்தபோது, அவ்வப் போது எனக்கும் வழிகாட்டுதல்களைத் தந்து பதற்றப்படாமல் பிரச்சினைகளை கையாள ஆலோசனைகளை வழங்கினார். அதை என்றும் என்னால் மறக்க இயலாது. தந்தை பெரியார் எந்த அளவுக்கு இவரை செதுக்கி ஆளாக்கியிருக்கிறார் என்பதை அவருடைய உழைப்பிலிருந்தும், அணுகுமுறையிலிருந்தும் காண முடிகிறது. பெரியார் உருவாக்கியிருந்த ஒன்றைப் பத்தாக்கி இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழினமும் பெருமைப்படக்கூடிய வகையில் பெரியாரின் இயக்கப் பணிகளை, கல்விப் பணிகளை, சமூகப் பணிகளை, அரசியல் பணிகளை மிகச்சிறந்த முறையிலே முன்னெடுத்திருக்கிறார். தந்தை பெரியார் இன்றிருந்தால் இவரைப் (ஆசிரியரை) பாராட்டி, பாராட்டுப் பட்டயங்களை, பதக்கங்களை வழங்கி உச்சி மோந்து பாராட்டியிருப்பார். அந்தளவு ஓர் ஆற்றல் மிக்க, நிருவாகத் திறன்மிக்க தலை வராகத் தமிழர் தலைவர் விளங்குகிறார். அடுக்கடுக்கான போராட்டங்களை நடத்துகிற போர்க்குணம் உள்ளவராகவும், இந்த வயதிலும் விடாப்பிடியான களப்போராளி யாகவும் விளங்குகிறார்.
அவருடைய பணியைப் பாராட்டாமல் எவரும் இருக்க முடியாது. எனவே, அந்த வகையில் நானும் அவரை நெஞ்சாரப் பாராட்டுகிறேன். தந்தை பெரியாரைப்போல அவர் நூறாண்டுக்கும் மேலாக வாழவேண்டும். 75 ஆண்டுகாலமாக தமிழ்மக்களுக்கு வழிகாட்டி வந்திருக்கிற விடுதலை ஏட்டிற்கும், அதன் ஆசிரியர் தமிழர் தலைவரையும் வாழ்த்துகிறேன்
என்று அகம் நிறைந்த வாழ்த்துகளைக் கூறிய மானமிகு தொல்.திருமா வளவன் அவர்களுக்கு நன்றி கூறி, விடைபெற்றோம்.

------------நேர்காணல்: நம்பியூர் சென்னியப்பன்- "விடுதலை"ஞாயிறுமலர் 13-6-2009

3 comments:

Unknown said...

//ஒட்டு மொத்த தமிழர்களுக்காகவும் குரல் கொடுப்பேன்//

எதிர் பார்க்கிறோம்.

friend said...

சோனியா போடும் எழும்புத்துண்டுக்கு ஆசைப்பட்டு, கொலைகாரி என்று தெரிந்தும் கூட்டு சேர்ந்து , இன்னும் என்ன இருக்கு பாடு பட?
அதுதானே எல்லாம் முடிந்து விட்டது.
இனியென்ன அடுத்த தேர்தலில் சனத்தை ஏமாற்ற எவ்வளவு சுருட்டனுமோ அவ்வளவு சுருட்ட வேணும்....

தமிழரை அழிக்கும் கூட்டத்துக்கு கூட்டணி அமைச்சவனின் பேட்டியை எல்லாம் ஏனைய இடுகையா இட்டு தமிழைக் கொல்லுறீங்க?

தமிழன் said...

சேகுவேரா - வின் முதுகில் குத்தியதா கியூபா?
சே வின் பிறந்த நாளில் தமிழர்களின் சூளுரை
”உலகமே எதிர்ப்பினும் உரிமையை மீட்போம்”


http://maanamumarivum.blogspot.com/