Search This Blog
25.6.09
யார் இந்த மாவோயிஸ்ட்கள்?
2004ஆம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி உருவாக்கப்பட்டதே சிபிஐ மாவோயிஸ்ட் கட்சி. இது ஒரு அரசியல் கட்சியாக பெயரளவில்தான் இருந்தது. உண்மையில் இது ஒரு நக்சல்பாரி வன்முறை இயக்கமாகவே செயல்பட்டு வந்தது.
சிபிஐ (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), மக்கள் போர், இந்திய மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மய்யம் ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்ட கட்சிதான் சிபிஐ மாவோயிஸ்ட்.
இந்த இணைப்பு 2004ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. மக்கள் போர் அமைப்பின் தலைவரான முப்பால லட்சுமண ராவ் என்ற கணபதியே, இந்த மாவோயிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார்.
கணபதி, ஆந்திர மாநிலம் கரீம் நகரம் மாவட்டம் பீர்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் ஆசிரியராகப் பணியாற்றியவர் கணபதி. வாரங்கலில் உயர் படிப்புக்காகப் போன இடத்தில், மாவோயிஸ்ட் தலைவர்களான நல் ஆதிரெட்டி, கொண்டபள்ளி சீதாராமய்யா ஆகியோரைச் சந்தித்து அவர்களின் செயல்பாடுகளால் கவரப்பட்டு நக்சல்பாரி இயக்கத்தில் இணைத்துக் கொண்டார்.
மேற்கு வங்க மாநிலத்தில் 1967ஆம் ஆண்டு தோன்றி பெரும் வெற்றியைப் பெற்ற நக்சல்பாரி இயக்கத்தின் கருத்துக்களை ஒத்ததாக மாவோயிஸ்ட் கட்சி விளங்கியது. மேலும், இந்தக் கட்சியும் நக்சல்பாரி இயக்கமாகவே மாறி செயல்படத் தொடங்கியது.
மாவோயிஸ்ட் கட்சியின் முதல் நோக்கமே மக்களைத் திரட்டி அரசுகளுக்கு எதிராக போர் புரிவது என்பதுதான். சீனாவில் மாசே துங் (மாவோ) மக்களைத் திரட்டி கொரில்லாப் போரில் ஈடுபட்டதால் அந்த அடிப்படையை மாவோயிஸ்டுகள் பின்பற்றி வருகின்றோம் எனச் சொல்கின்றனர்.
இந்தியாவில் பிகார், ஆந்திரா, சட்டீஸ்கர், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஒரிஸ்ஸா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்ட்டுகளுக்கு அமைப்பு உள்ளது.
இந்த மாநிலங்களில் பெரும்பாலான பகுதிகளைப் பிடித்து புரட்சிகர பகுதியாக மாற்றும் திட்டத்துடன் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். அதன் ஒரு அங்கமாகவே லால்கரையும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களையும் அவர்கள் தங்களது கட்டுப்பாட்டில் கடந்த 9 மாதங்களாக வைத்துள்ளனர். இவர்களுக்கு உள்ளூர் பழங்குடியின மக்களும் உறுதுணையாக இருந்ததால் இது சாத்தியமாயிற்று.
சிபிஐ மாவோயிஸ்ட் உருவாக்கப்படுவதற்கு முன்பு செயல்பட்டு வந்த ஆயுதப் பிரிவுகளான மக்கள் விடுதலை கொரில்லா ராணுவம், மக்கள் கொரில்லாப் படை ஆகியவற்றை இணைத்து மக்கள் விடுதலை கொரில்லாப் படை என்ற பெயரில் ஆயுதக் குழுவை இந்தக் கட்சி உருவாக்கியது. இந்த ஆயுதக் குழுதான் தற்போது பல்வேறு தாக்குதல்களை மேற்கண்ட மாநிலங்களில் நடத்தி வருகிறது.
மாவோயிஸ்ட் நக்சலைட் அமைப்பில் கிட்டத்-தட்ட 9000 முதல் 10 ஆயிரம் ஆயுதப்படையினர் வரை இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களில் 6500 அதி நவீன துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்டவை இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர இந்தியா முழுவதும் இவர்களுக்கு கிட்டத்தட்ட 20 ஆயிரம் சாதாரண தொண்டர்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேற்கு வங்க மாநிலத்திற்குள் ஒரு தனி மாநிலமாகச் செயல்படும் சம்பவத்திற்குப் பின்னர் மாவோயிஸ்டுகளுக்குக் கடிவாளம் போட வேண்டிய நேரம் வந்து விட்டதாக உணர்ந்துள்ள மத்திய அரசு தற்போது சிபிஐ மாவோயிஸ்டுகளுக்குத் தடை விதித்துள்ளது.
-------------------- "விடுதலை" 24-6-2009
Labels:
பொதுவானவை
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
//மாவோயிஸ்ட் கட்சியின் முதல் நோக்கமே மக்களைத் திரட்டி அரசுகளுக்கு எதிராக போர் புரிவது என்பதுதான். //
மக்கள் நல பணிகள் தவிர வேறொன்றும் செய்ய தெரியாத அரசையா ???
போராட்ட முறைகள் எப்படி இருந்தாலும், எதற்காக போராடுகிறார்கள் - காரணம் என்ன போன்ற பகுத்தறிவு கருத்துகள் எதையும் இல்லாத இந்த கட்டுரை மூலம் நீங்கள் மன்மோகன் சிங்கிக்கு ஊதுகுழலாக இருப்பதையே காட்டுகிறது
அய்யா ,
இந்த விஷயத்தில் உங்கள் நிலைபாட்டையும், திராவிட கழக நிலைப்பாட்டையும் பற்றி நீங்கள் எழுத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தெரியாத ஒன்றை தெரிந்து கொண்டேன் நன்றிகள் பல.
அடிப்படையில்லாத மற்றும் தவறான தகவல்களைக் கொண்ட கட்டுரை.
Post a Comment