Search This Blog

22.6.09

அரசு அலுவலகவளாகத்துக்குள் மத நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமா?





எச்சரிக்கை!


இந்திய அரசமைப்புச் சாசனப்படி இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். அரசு அலுவலகங்கள் நடை முறைகள் அனைத்தும் எந்த மதத்தன்மைக்கும் அப்பால் நடந்தாக வேண்டும். கார ணம், இந்தியத் துணைக் கண்டம் என்பது பல இன, மொழி, மத, மதச் சார்பற்ற, பண்பாடு உள்ள 110 கோடி மக்களைக் கொண்டதாகும்.

1950 சனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட அரசமைப்புச் சாசனத்தில் இடம் பெறாத மதச் சார்பின்மை (secular) என்ற செயல் பிற்காலத்தில் கவனமாக (1976) இணைக்கப்பட்டது.

தமிழ்நாட்டைப் பொறுத் தவரை அறிஞர் அண்ணா அவர்கள் முதல்அமைச்சராகப் பொறுப்பேற்றபின் வெளியிட்ட முக்கியமான அறிவிப்புகளில் ஒன்று - அரசு அலுவலகங்களில், வளாகங்களில் எந்த மதத்தைச் சேர்ந்த வழிபடுதலுக்குரிய சின்னங்கள், கடவுள் படங்கள் இருக்க கூடாது என்பதாகும்.

இவ்வளவு சட்டப் பாதுகாப்பு இருந்தும், ஆணைகள் இருந்தும் அரசு அலுவலகங்கள் இவற்றை யெல்லாம் எச்சில் இலை போல தூக்கி எறிந்து பார்ப்பனிய சிந்தனை வழிப்பட்ட மத நடப்புகள் அரசு அலுவலகங்களில், வளாகங்களில் நடைபெற்றுக் கொண்டுதானிருக்கின் றன. பூமி பூஜை போட்டு தான் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படுகின்றன. அரசு கட்டடம் கட்டப்படும் பொழுதே, ஒப்பந்தக்காரர்களிடம் பேசி ஒரு பிள்ளையார் கோயிலுக்கு வழி செய்து விடுகிறார்கள்.

கோயில் இல்லாத இடங்களில் புதிதாகவும் கட்ட ஆரம்பிக்கிறார்கள். காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், நீதிமன்றவளாகம், வட்டாட்சியர், ஊராட்சி ஒன்றியங்கள் என்று எங்கு பார்த்தாலும் இந்த சட்ட விரோத நடவடிக்கைகள்; இதற்கு சட்டத்தை மதிக்க வேண்டிய அதிகாரிகளே உடந்தை என்பதெல்லாம் எத்தகைய அநாகரிகம் - ஆபத்து.

பல ஊர்களில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச் சந்தித்து, அரசு ஆணைகளைக் காட்டித் தடுத்து விடுகின்றனர்.
கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பிள்ளையார் கோயில் கட்ட ஏற்பாடு மும்முரமானபோது கழகத் தோழர்கள் தலையிட்டுத் தடுத்து நிறுத்தினர். கட்டப்பட்ட மேடை அப்படியேயிருக்கிறது.





இந்த மேடையில் பிள்ளையார் சிலையை வைக்கப் போவதாக உள்ளூர் இந்து முன்னணியினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஒரு அரசு அலுவலகவளாகத்துக்குள் ஒரு வெளி அமைப்பு அத்துமீறி நுழைந்து மத நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமா?

இதுகுறித்து குடந்தை திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கு. கவுதமன் காவல்துறை ஆய்வாளருக்கு அதிகாரப் பூர்வமாக புகார் கொடுத்துள்ளார். மிகவும் சரியான நடவடிக்கை இது. கழகத் தோழர்கள் இதுபோல் கண்காணித்துச் செயல்படுவது அவசியமாகும்.

தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலர், மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அனைத்து அலுவலகங்களுக்கும் இதுகுறித்து தெளிவுபடுத்துவது அவசியமாகும். இல்லாவிட்டால் அலுவலர்களுக்கிடையே தேவையற்ற பிரச்சினைகளும், சர்ச்சைகளும் உருவாகக் கூடும். தந்தைபெரியாரின் அமைதி மண்ணை அமளிப்படுத்த அனுமதிக்கக் கூடாது!

----------- மயிலாடன் அவர்கள் 21-6-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

5 comments:

சவுக்கு said...

தலைமைச் செயலக கட்டிடப் பணிகள் தொடங்குகையில், அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில், பூமி பூஜை நடை பெற்றதே. அதை திராவிடச் கழகத் தலைவர் வீரமணி கண்டித்திருக்கலாமே.

AJAX said...

I am 100% sure there wont be reply to the above question.

if normal ppl follow religion, its acceptable.

but அமைச்சர் துரைமுருகன் ..

plz reply Oviya

அஸ்குபிஸ்கு said...

நாம் மதச் சார்பற்ற நாட்டில் வாழ்கிறோம் என்று யார் சொன்னது? எல்லாருமே எதாவது ஒரு மதத்தை பின்பற்றுபவர்களாகத்தானே உள்ளனர். இன்னும் சொல்லப் போனால் நீதிதேவதை கண்ணைக் கட்டிக் கொண்டு இருக்கும் நீதிமன்றங்களிலும் இதுதானே நிலைமை. நான் இதுகுறித்து பலமுறை சிந்தித்திருக்கிறேன். ஒன்று எந்த மதத்தின் அடையாளங்களும் அரசு இயந்திரங்களில் இருக்கக் கூடாது. இல்லையேல் எல்லா மதத்தினருடைய வழிபாடுகளுக்கும் இடம் ஒதுக்கப்படவேண்டுக்ம். மக்களின் கண் திறக்கும்போதுதான் இது நடக்கும்.

தமிழ் ஓவியா said...

மூடநம்பிக்கையை யார் கடைபிடித்தாலும் கண்டணத்துக்குரியதுதான். விடுதலை இது குறித்து பல தலையங்கங்கள் தீட்டியுள்ளது. ஒப்பாரி வைக்காமல் ஒழுங்காகப் படித்தால் உண்மை விளங்கும்..

தமிழ் ஓவியா said...

//ஒன்று எந்த மதத்தின் அடையாளங்களும் அரசு இயந்திரங்களில் இருக்கக் கூடாது. இல்லையேல் எல்லா மதத்தினருடைய வழிபாடுகளுக்கும் இடம் ஒதுக்கப்படவேண்டுக்ம். மக்களின் கண் திறக்கும்போதுதான் இது நடக்கும்..//

எந்த மதத்தின் அடையாளங்களும் அரசு இயந்திரங்களில் இருக்கக் கூடாது
என்பதுதான் சரியானது.

பின்னது மதச் சண்டைகளுக்கு வழிவகுத்துவிடும்.