Search This Blog

11.6.09

பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராகச் செயல்பட்டாரா? - 7




"1. நீதிக்கட்சியும் பெரியார் ஈ.வெ.ரா அவர்களும் ஏனைய தலைவர்களும் பிரகடனப்படுத்தியது போல். தீண்டாமை என்பது ஒழிக்கப்பட்டுவிட்டதா?
2. சமூகத்தில் தலித்துகள் பிராமணரல்லாத வகுப்பாரின் பிரிக்க முடியாத அங்கமாக நடத்தப்படுகிறார்களா?
3. தலித்துகள் சமூக, பொருளாதார அரசியல் நிலைகளில் உயர்வதற்கு வாய்ப்புகள் அளிக்கபட்டடுள்ளதா? என்ற கேள்விகளுக்கு அவர் இல்லையென்பதையும் தெரிவித்துள்ளார்.

இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் வேறு யாருமல்ல டாக்டர் பத்மநாபன் ஐ.ஏ.எஸ் (ஓய்வு)தான். இவர் சுமார் 40 ஆண்டுகாலம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் உயர்பதவிகளிலும், தமிழகத்தில் தலைமைச் செயலாளராகவும் பின்பு மிசோரம் மாநிலத்தின் கவர்னராகவும் இருந்திருக்கிறார் என்ற போது அவரது விளக்கமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்படுகிறது என்கிறார் மா.வேலுசாமி."

மேற்கண்ட திரு.பத்மநாபன் அய்யா அவர்களின் கேள்விகளில் நாங்கள் எள்ளளவும் மாறுபடவில்லை. இன்றும் தீண்டாமை ஒழிக்கப்படாததற்கு காரணம் யார்? தலித்துக்கள்- பார்பனரல்லாத வகுப்பாரின் பிரிக்க முடியாத அங்கமாக நடத்தப்பட தடுப்பது யார்? தலித்துக்கள் சமூக பொருளாதார அரசியல் நிலைகளில் உயர்வதற்கு வாய்ப்புகள் அளிக்கப்படாமல் குறுக்கே நிற்பது யார்? இந்த கேள்விக்கான பதிலை நாணயமாக உண்மையாக ஆராயந்து பாருங்கள். பார்ப்பனர்கள் என்பதுதான் பதிலாக வரும்.

தீண்டாமை ஒழியாமல் இருப்பதற்கு காரணமான கடவுள், மதம், சாதி இவைகளுக்கு ஊற்றுக் கண்ணாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள் பார்ப்பனர்கள் தானே?

அதே போல் அன்றிலிருந்து இன்றுவரை ஆட்சியாளர்களும் சரி, ஆதிக்கவாதிகளும் சரி பிறவிப் பார்ப்பனர்களாகவே இருப்பது எப்படி? எதனால்? இதோ அம்பேத்கர் பேசுகிறார்.

“பார்ப்பனர்கள் பெற்றிருக்கும் அந்தஸ்தும் அதிகாரமும் இந்து நாகரிகம் தந்தது அது அவர்களை மட்டுமே உயர்ந்தவர்களாக ஆக்கியது. மற்றவர்களை எதையும் அறிந்து கொள்ள முடியாமல் செய்து, பார்ப்பனர்களுக்கு எதிராக எழுந்துவிடக் கூடாத நிலையில் வைத்து விட்டது. ஏனவே அவன் சந்நியாசியோ, கிருஹஸ்தனோ, அறிவாளியோ இல்லையோ, பழைமைவாதியோ, எதிரானவனோ தங்கள் உயர்வினை பாதுகாத்துக் கொள்வதில் ஒவ்வொரு பார்பபானும் முயலுவதில் வியப்பில்லை”

(நூல்:- தீண்டப்படாதவர் வரலாறு முன்னுரையிலிருந்து)


• 1948 இலேயே சாதி ஒழியாமல் தீண்டாமை எப்படி ஒழியும் என்று கேட்டவர் பெரியார் அதோடு “இந்திய அரசியல் நிர்ணய சபையால் செய்யப்படும் விதிகளில் இனிமேல் , சுதந்திர, சமதர்ம இந்தியாவில் மக்கள் பிறவியில் பிராமணன், சூத்திரன், பஞ்சமன் அரிஜனன் என்பதான பிரிவுகள் இருக்கக் கூடாது இப்பிரிவுகள் கொண்ட ஆதாரங்கள் இருக்கக் கூடாது, இருக்கப்படவுமாட்டாது இல்லாமல் செய்யப்படும் என்று ஒரு வாக்கியம் இருக்க வேண்டும்” (விடுதலை 2.12.1948) என்று குரல் கொடுத்தவர் பெரியார். குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் சாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டத்தை 1957ல் கொளுத்தியும் காட்டினார்.

இந்திய அரசியல் சட்டத்தை நான் எழுதியதாகச் சொல்லுகிறார்கள் இப்போது சொல்லுகிறேன். அந்தச் சட்டத்தை தீ வைத்துக் கொளுத்த நான் முதல் ஆளாக இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அம்பேத்கர் 3.9.1953 அன்று பாராளுமன்றத்திலேயே பேசியுள்ளார்.


ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு என்றுமே தடையாய் இருப்பவர்கள் பார்ப்பனர்கள் என்பதை அம்பேத்கரும் பெரியாரும் தெளிவாக கூறியுள்ளார்கள். ஆனால் முனிமா குழுவினர் பார்ப்பனர்களை விட்டுவிட்டு ஆதரவாளர்களான பெரியார் தொண்டர்களையும் ஒத்த கருத்தியல் தத்துவமான பெரியாரையும் விமர்சிக்கின்றனர். ஆதில் ஏதாவது உண்மை இருக்கிறதா? திரு மா.வேலுசாமி அவர்கள் குறிப்பிடும் மதிப்பிற்குறிய அய்யா பத்மநாபன் அவர்களையே கேட்டு விடுவோம்.

கேள்வி:- பெரியாரைக் குற்றம் சுமத்தி அவரைத் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக சித்தரிக்கும் முயற்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மிசோரம் மாநில முன்னாள் ஆளுநர் திரு.ஆ.பத்மநாபன் அவர்களின்
பதில்:-

முட்டாள்தனம், அப்படிச் சித்தரிப்பது முட்டாள்தனம், பெரியார் இல்லை என்றால் இந்த அளவு கூட மனிதர்களாக நாம் இருந்திருக்க முடியாது.

அவர்கள் யாராவது பெரியாரைப் பார்த்திருக்கிறார்களா? அவருடைய பேச்சைக் கேட்டிருப்பார்களா? அவர் ஒவ்வொரு கூட்டத்திலும் ஆதி திராவிடர்களை பற்றிப் பேசாமல் இருக்க மாட்டடர். நான் அண்மையில் அம்பேத்கர் அகாதமியில் பேசும் போது கூட இது பற்றிப் பேசினேன். பெரியார் தான் பார்பனரல்லாத மக்களை மானமுள்ள மனிதர்களாக ஆக்கினார். பெரியாரைப் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்? பெரியார் கருத்துக்களை முழுமையாகப் படித்திருப்பார்களா?


----------------“உண்மை”, டிசம்பர் 1-15,2002.

திரு.பத்மநாபன் அய்யா அவர்களின் விளக்கத்திதற்கு எந்தப் பொழிப்புரையும் தேவையில்லை. ஆதேபோல் இது குறித்து ஆதிதமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் திரு.அதியமான் என்ன சொல்கிறார் என்பதையும் பார்ப்போம்.

“இது ஒரு திரிபுவாதம் என்றே நான் கருதுகிறேன்;. அது சரியான கருத்தல்ல பெரியாரைப் பற்றி முழுமையாக புரிந்து கொண்டவர்கள் அப்படி நிச்சயமாக சொல்ல மாட்டார்கள். பெரியாரை எந்த வகையிலும் நாம் ஏற்றுக் கொள்கிறோம் இன்னும் சொல்லப்போனால் பெரியாரே கூட 1930, 33 கால கட்டங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு நான் வழிகாட்டலாகவும், உதவி புரிதலாகவும் இருக்க முடியுமேயொழிய உங்களுடைய போராட்டங்களை நீங்களோ, உங்கள் தலைவர்களோ முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற கருத்தை சொல்லியிருக்கிறார்கள். ஆகவே பெரியார் அவர்கள் மிகத் தெளிவாக தம்முடைய வரம்பை ஒரு காலகட்டத்திலே சொல்லிவிட்டார்கள்"
(“இனி” இதழ்)

பெரியாரைத் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக சித்தரிப்பது ஒரு திரிபுவாதம், முட்டாள்தனம் என்று சொல்லியுள்ளார்கள் தலைவர்கள்.

பாதிப்புள்ளாகும் போது பெரியாரும், பெரியார் தொண்டர்களும், தமிழ்ஓவியா உட்பட அனைவரும் கொதித்தெழுந்து அப்பிரச்சனைகளை, அப்பாதிப்புகளை நீக்க பாடுபட்டு வருகிறார்கள் என்பதுதான் உண்மை நிலை. உதாரணமாக முதுகுளத்தூர் கலவரத்தின்போது பெரியார் யார் பக்கம் நின்றார் என்பதைப் பார்ப்போம்.

1957ல் நடந்த தேர்தலில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அணிக்கும், தோழர் இம்மானுவேல் அணிக்கும் பகை வலுவடைந்து செப்டம்பர் 11ம் தேதி இரவு 8.30 மணியளவில் இம்மானுவேல் வெட்டிக் கொல்லப்படுகிறhர். தேவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக பெரியாரின் நிலைப்பாடு என்ன என்பதை “இம்மானுவேல் தேவேந்திரர் கதைப்பாடல்” எனும் நூலில் செ.சண்முகபாரதி அவர்கள் பதிவு செய்துள்ளார். ஆதன் விபரம் இதோ.
“கலவரத்தை ஒடுக்குவதில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் தனது முழுக்கவனத்தையும் செலுத்தியது. காங்கிரசின் செயலுக்காகப் பெரியார் காமராஜரைப் பாராட்டினார். அது மட்டுமின்றி இக்கலவரத்தில் சமூக விரோதிகளைக் கடுமையாய் தண்டித்துச் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தபடாவிட்டால் அமமக்களின் சார்பில் போராட்டத்தில் குதிப்பேன் (விடுதலை) என்று அறிக்கையும் விட்டார்”.

பிராமணர்களிடமிருந்த அரசியல் அதிகாரத்தைப் பறித்து பிராமணரல்லாதாரிடம் கொடுத்ததைத் தவிர தமிழக அரசியலில் பெரியார் பெரியதாக சாதித்து விடவில்லை என்று எழுதும் வேலுச்சாமி, முனிமா குழுவினர் பெரியாரின் மேற்கண்ட செயல்களைப் பார்த்த பின்பாவது தங்களை திருத்திக் கொள்ள வேண்டுகிறோம்.


தாழ்த்தப்பட்டவர்களை பெரியார் ஏமாற்றுபவராக இருந்தால் தேவர் கைது செய்யப்படக் காரணமாயிருப்பாரா? உயர்ந்த வகுப்பார் ஆதரவு பெற்றவர் பெரியார் என்று எழுதியுள்ளீர்களே அந்த உயர்ந்த வகுப்பார் பெரியாருக்கு கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

“தாழ்த்தப்படடவர்களை இழிவாகக் கருதும் சூத்திரர்களாகிய கள்ளர் சமுதாயத்தினரைக் குறித்து பார்ப்பனர்கள் இழிவாக எழுதி வைத்திதருப்பதை வெள்ளைக்கார அறிஞர் எடகார்தர்ஸ்டன் என்பவர் குறிப்பிட்டுள்ளதை பெரியார் தனது இறப்புக்கு சில நாட்களுக்கு முன் மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் (தி.க.பொதுச்செயலாளர் கி.வீரமணியும், வே.ஆனைமுத்துவும் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில்)வே. ஆனைமுத்துவைப் படிக்கச் செய்தார். கிடைத்த பலன் என்ன? மேடையை நோக்கி கற்கள் வீசப்பட்டன. தோழர்களும், பொது மக்களும் புடை சூழ்ந்ததால் கல்லடியிலிருந்து உயிர் பிழைத்தார் பெரியார்”.

(விடுதலை 2.11.1973 நூல்:- எஸ்.வி.ராசதுரை எழுதிய பெரியார் ஆகஸ்ட் 15, பக்கம் 620-621)
மா.வேலுச்சாமி மற்றும் முனிமா குழுவினர் பெரியாரைப் பற்றித் தவறாக விமர்சிப்பதைப் படிக்கும்போது டாக்டர் அம்பேத்கார் தனது இறுதி நாட்களில் நானக்சந்த் திரட்டு அவர்களிடம் கூறிய வாசகங்கள் தான் நினைவுக்கு வருகிறது. அந்த வாசகம் இதோ.

என் வாழ்நாளின் இறுதிவரை ஒடுக்கப்பட்ட எனது சகோதரர்களுக்காகவும், இந்நாட்டிற்காகவும் எனது பணியைத் தொடர்வேன். என் மக்கள் பயணிக்கும் இந்த ஊர்தியை மிகவும் சிரமப்பட்டே இப்போது இருக்கும் இடத்திற்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறேன். வழியில் வரும் தடைகளையும் மேடு பள்ளங்களையும், சிரமங்களையும் பொருட்படுத்தாமல் இந்த ஊர்தி முன்னேறிச் செல்லட்டும், மாண்புடனும் மரியாதையுடனும் என் மக்கள் வாழ நினைத்தால், இச்சமயத்தில் அவர்கள் கிளர்ந்தெழவேண்டும். என் மக்களும் என் இயக்கத்தினரும் அந்த ஊர்தியை இழுத்துச் செல்ல முடியாது போனால் அது இப்போது எங்கே நிற்கிறதோ, அங்கேயே விட்டு விட்டுச் செல்லட்டும். ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் அந்த ஊர்தியை பின்னோக்கித் தள்ளிவிடவேண்டாம். இதுவே என் செய்தி”

----------------(எழுச்சி தலித் முரசு – பிப்ரவரி 2003)

தாழ்த்தப்பட்டவர்களுக்கு நெருக்கமான தோழமையுடன் இருப்பவர்கள் பெரியார் தொண்டர்கள். ஆதவரான கருத்தியல் பெரியாரியல். அனைவருக்கும் பெரியாராக உழைத்தவரை, தவறாக, முட்டாள்தனமாக, திரிபுவாதம் செய்யும் முனிமா குழுவினருக்கு உண்மை வரலாற்றைச் சுட்டிக் காட்ட ஆதாரங்களுடன், சான்றுகளுடன் எங்கள் விமர்சனத்தை வைக்கிறோம். தனிப்பட்ட எந்த முனிமாவையும் விமர்சிப்பது எங்கள் நோக்கமல்ல. தேவையுமில்லை. முனிமா குழுவினரின் விமர்சனங்கள் தொடர்ந்து இதேபோல் இருக்குமானால் அம்பேத்கர் சொன்னது போல் அந்த ஊர்தியை பின்னோக்கித் தள்ளிவிடுவதில் பெரும்பங்கு அவர்களையே சாரும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்..


-------------------நன்றி:-"களத்துமேடு" ஜூன் 15 - 2004 பக்கம்:-13-15

6 comments:

Unknown said...

பெரியாரைப் பற்றிய பல செய்திகளை இத் தொடர்கட்டுரை மூலம் அறிந்து கொண்டேன்.

த மி ழ் இ னி யா said...

பெரியார் தொடர்பான ஏழு பாகங்கள் அடங்கிய தொடர் கட்டுரையை வாசித்தேன்.

சிறப்பாகவும் சிந்திக்கவும் வைத்து பல உண்மைகளை தெரிந்து கொள்ள முடிந்தது இத் தொடர் கட்டுரை மூலம்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கர்த்துக்கும் மிக்க நன்றி திருநாவு

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ் இனியா

Unknown said...

ஆதாரங்களடங்கிய அருமையான கட்டுரை.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இன்பா