மதத்தை அபினுக்கு ஒப்பிட்டார் கார்ல் மார்க்ஸ். நம்மீது ஆதிக்கம் செலுத்த ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூழ்ச்சி என்னும் கட்டடமானது "மதம் என்னும் சிமென்ட் சுண்ணாம்பினால், கடவுள் கற்களைக் கொண்டு என்றும் அழியாதது மாதிரி பலமாகக் கட்டி, வேத சாஸ்திர, புராணம், மறுபிறவி, சொர்க்கம், மோட்சம் என்னும் அழகான சித்திர வேலைகளுடன் பூச்சுப் பூசப்பட்டிருக்கிறது” என்கிறார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் (“குடிஅரசு” 30.6.1929)
மனிதன் தன்னறிவு பெறவும், தன்மீது அழுந்திக் குந்தியிருக்கிற ஆதிக்கக் கோட்டைகளைத் தகர்க்கவும் பகுத்தறிவு என்னும் பேராயுதம் தேவைப்படுகிறது.
மதம் தனி மனிதனை மட்டும் கெடுதலுக்கு ஆளாக்கவில்லை. ஒட்டு மொத்தமான சமுதாய வளர்ச்சிக்கே பெருங்கேடாகக் குடி கொண்டிருக்கிறது.
எடுத்துக்காட்டாக சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்பது நாட்டுக்கான ஒரு வளர்ச்சித் திட்டம். அதில் கொண்டுவந்து ராமன் என்ற இந்து மதக் கதா பாத்திரத்தைத் திணித்து, அந்தத் திட்டத்தையே முடக்கி விட்டார்களே! மதம் என்னும் வெறியில் திளைக்கிறார்களே தவிர, மனித சமூகத்துக்குத் தேவையான ஒரு வளர்ச்சித் திட்டம் தடுக்கப்படுவது பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லையே!
இந்த மதப் போதை சாதாரண பாமரனிடத்தில் மட்டுமல்ல, படித்தவர்களிடத்திலும், நீதிமன்றத்திலே குளுகுளு அறையிலே வாசம் செய்பவர்கள் மத்தியிலும்கூட ஆழமான இடம் பிடித்துவிட்டது.
மக்களிடத்திலே பரம்பரை பரம்பரையாக வந்து பழக்கப்பட்ட இந்தப் பக்திப் போதை மான உணர்ச்சியைக்கூட பறி கொடுக்கக் காரணமாக இருக்கிறது.
பக்தியின் பெயரால் பெண்கள் நிர்வாணப் பூசை நடத்துவது, சாமியார்களைத் தேடிச் சென்று தங்களின் உடலைப் பறிகொடுப்பது சாமியார்களும் மக்களின் பக்திப் போதையைப் பயன்படுத்திக் கொண்டு அவர்கள்மீது ஆதிக்கம் செலுத்துவது என்பதெல்லாம் நாட்டில் சர்வ சாதாரணமாகிவிட்டதே!
ஜெகத் குரு என்று விளம்பரப்படுத்தப்படும் ஆசாமிகள் பெண்களைப் போகப் பொருள் என்று கருதி வேட்டையாடுகிறார்கள்.
கோயிலுக்கு வரும் பக்தைகளை கோயில் கருவறைக்குள்ளேயே அர்ச்சகப் பார்ப்பான் “காமப்பசி”யாறுகிறான். சென்னையில் வேலை தேடி வந்த ஒரு பெண்ணுக்குக் காபியில் மயக்க மருந்து போட்டுக் கொடுத்து அந்தப் பெண்ணைக் சூறையாடிதாக ஏடுகளில் தற்போது செய்திகள் வந்துள்ளன.
முற்றும் துறந்தவர்கள் என்பதற்கு அடையாளம் காவி வேட்டி என்று பிரச்சாரம் செய்து வைக்கப்பட்டுள்ளதால், அதனை நம்பி அந்த ‘முகமூடிக் கொள்ளையர்களிடம்’ பெண்கள் பரிதாபமாக மானத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது.
பணம் சம்பாதிக்க இந்தப் பக்தியும், மதமும் எளிய மார்க்கமாகி விட்டன. திருப்பதி உண்டியலில் கோடிக்கணக்கில் பணம் குவிவது அந்த அடிப்படையில் தானே! “முற்றும் துறந்த மடங்களில்” சொத்துகள் குவிந்து கிடப்பது எப்படி? பணத்தை பாதகாணிக்கை என்று கொட்டிக் கொடுக்கிறார்களே! அந்தப் பணத்தைக் கண்ணிவெடியாக வைத்துக் கன்னிகளைப் பிடிக்கிறார்களே!
ஒழுக்கம் குறைந்து வருவதற்குக் காரணம் பக்தி குறைந்து வருவதுதான் என்று சந்தடி சாக்கில் கந்தகப் பொடி தூவும் சில விளம்பரம் பெற்ற ‘பெரிய மனிதர்கள்’ உண்டு.
அந்த மனிதர்கள் எல்லாம் இப்பொழுது எங்கே போனார்கள்? காஞ்சிபுரம் தேவநாதன் லீலைகளையும், சென்னை மாம்பலம் ஈஸ்வர ஸ்ரீ குமார்களின் அயோக்கியத்தனங்களையும் விமர்சிக்க இவர்கள் முன்வராதது ஏன்?
திருநீறு அணிந்தால் தாயைப் புணர்ந்த பாவமும் போகும் என்று சாஸ்திரம் எழுதி வைத்துள்ள நாட்டில் எப்படி ஒழுக்கம் வளரும்? சாமியார்களைக் கண்காணிக்க காவல் துறையில் ஒரு தனிப் பிரிவை அரசு ஏற்படுத்தினால்கூட நல்லதுதான்!.----------------------------”விடுதலை” தலையங்கம் 17-12-2009
2 comments:
சாமியார்களை கண்காணிக்க தனிப்பிரிவை போடுவது பிறகு ஏற்கெனவே பலமுறை நான் சொல்லிவருவதை மனதிலிருத்தி நம்பிக்கைகளையும், மூட நம்பிக்கைகளையும் பிரித்து மேய்ந்தால் தங்கள் பதிவு மேலும் கவனம் பெறும். மூட நம்பிக்கைகளற்ற இறை நம்பிக்கையாளர்களையும் தாங்கள் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என்பது என் கருத்து.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சித்தூர்.எஸ்.முருகேசன்
Post a Comment