Search This Blog

1.12.09

பெரியார் தத்துவங்களை உலக மயமாக்குவோம்

கல்வி,மருத்துவம், பெண்ணுரிமை
ஜாதி ஒழிப்பீத் திட்டங்கள் மூலம்

தந்தை பெரியார் தத்துவங்களை உலக மயமாக்குவோம் வாரீர்.
தமிழர் தலைவரின் பிறந்தநாள் செய்தி

77 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் தமது பிறந்த நாள் செய்தியாக விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

எனக்கு (2.12.2009) நாளை 77வது வயது பிறக்கிறது என்பது வரலாற்றுக் குறிப்பு.

நான் விரும்பாவிட்டாலும், கழகக் குடும்பத்தினர் அதை நினைவூட்டுவதோடு, பணிகளை முடுக்கிவிட அதனை ஒரு வாய்ப்பாகக் கருதி விரைந்து கழகக் கடமையாற்றுகின்றனர்.

1943இல் என்னுடைய ஆசிரியர் மானமிகு ஆ.திராவிடமணி அவர்களால் மேடை ஏற்றப்பட்டேன் - மேஜைமீது ஏற்றிவிடப்பட்டேன்!

முதல் கூட்டமே அறிஞர் அண்ணா, பூவாளூர் அ. பொன்னம்பலனார், காஞ்சி டி.பி.எஸ். பொன்னப்பா ஆகியோர் கலந்து கொண்ட திராவிட நாடு ஏட்டின் வளர்ச்சிக்கு அண்ணாவிடம் நிதியளிப்பு.

நிதியளிப்பு என்றால் பல ஆயிரம் அல்ல; ஒரு நூறும், சொச்சமும். அதுவே அந்நாளில் திரட்டப்பட்ட மிகப் பெரிய நன்கொடையாகும்! அண்ணா பார்வை என்மீது பட வாய்ப்பில்லை!

என்னுடைய ஆசிரியர் இயக்கியபடி பேசினேன். அடுத்து, ஆண்டு 1944 இல் தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு, விருதுநகர் வி.வி.இராமசாமி அவர்கள் தலைமையில். தந்தை பெரியார் என்னும் சிங்கத்தையும் அவரைப் பாதுகாக்கத் தன் வாழ்வை தியாகம் செய்த அன்னை மணியம்மையாரையும், தளபதி அறிஞர் அண்ணாவையும் அங்கே பார்த்தேன்.

அண்ணா முன் என் முதல் பேச்சு

எனது பேச்சு அண்ணா பேச்சுக்கு முன்னர் அமைந்தது. வழக்கம்போல் மேஜைப் பேச்சு தான். அண்ணா என்னைச் சுட்டிக்காட்டிதான் தமது உரையைத் துவக்கினார். அதைத்தான் இன்றும் நமது முக்கிய பேச்சாளர்களும், இயக்கத்தவரும் திராவிடர் இயக்கத்தின் திருஞானசம்பந்தர் என்று இவரை அறிஞர் அண்ணா கூறினார் என்பர்!

அதுமுடிந்து ஓரிரு மாதங்களில் சேலத்தில் 1944 இல் மாநாடு நீதிக்கட்சி பெயர் மாற்றப்பட்டு திராவிடர் கழகம் ஆன பிரம்மாண்ட மாநாடு. அதன் இடைவேளையில் எனக்கும் ஒரு வாய்ப்பு, பேச. அது என் வாழ்வின் பெரும் பேறு! வரலாற்றுப் பெருமைபெற்ற அம்மாநாட்டினைக் காணுவதே பெரும்வாய்ப்பு அல்லவா? இன்று நினைத்தாலும், மகிழ்ச்சி பொங்குகிறதே! அன்று முதலே நான் மாணவப் பேச்சாளன் ஆனேன்!

அன்றுமுதல் இன்றுவரை எனக்குள் இருக்கும் ஒரே தலைவர், அறிவு ஆசான் தந்தை பெரியார்தாம், அவர் தந்த கொள்கை லட்சியங்கள்தாம், அவர் தந்த கொடிதான், அவர் காட்டிய பாதைதான்! அவர் தந்த புத்தி தான்!

மாணவப் பருவக் குறும்புகளை அறியாதவனாக, என்னைப் பொது வாழ்க்கை ஆக்கிவிட்டது; காரணம், நான் பழகிடும் வாய்ப்பெல்லாம் பெரியவர்களிடம் தான் சிறு பையன்களோடு அல்ல!

அன்று தொடங்கிய, பெரியார் என்னும் தத்துவப் பாதையின் பயணம் இன்றும் எந்தவித சபலமும் இன்றித் தொடர்கிறது. இனியும் எனது மூச்சு நிற்கும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பது உறுதி!

நான் பொதுநலப் பணி செய்கிறேன் என்று கூறிக் கொள்வதைவிட, சுய நலத்தினை அனுபவிக்கிறேன். தந்தை பெரியார் கூறிய தத்துவப்படி. மனிதனுக்கு எது மன மகிழ்ச்சியைத் தருகிறதோ, அதைச் செய்து அவன் இன்பம் அனுபவிக்கிறான். பொதுநலமாக அது பிறரது கண்களுக்குப்பட்டாலும், அவனைப் பொறுத்தவரை அது சுயநலம்தானே!

1960 இல் தந்தை பெரியார் (நான் பி.எல். பட்டம் பெற்ற நிலையில்) கழகத்தின் இரு செயலாளர்களில் ஒருவராக திருச்சிக் கமிட்டியில் என்னை நியமித்தார்கள் (மற்றொருவர் அண்ணன் ஆனைமலை ஏ.என்.நரசிம்மன் பி.ஏ.) கழகத்தில் எவர் பெற்றாலும் அது பதவி அல்ல, பொறுப்புதான்! உணர்ந்தே பணிபுரிகிறோம் அனைவரும்!

விடுதலையை அய்யா அவர்கள் நிறுத்திவிடக் கூடாது என்பதற்காக அவரது ஆணையை ஏற்று என்னால் முடிந்தவரை, இன்றளவும் பணியாற்றி வருகிறேன். இதற்குப் பெரிதும் மூலகாரணமாக அமைந்ததும் அய்யா அம்மா செய்த ஏற்பாடு காரணமாகவே. தந்தை பெரியார் அவர்கள் அன்னை மணியம்மையாரை திருமணம் செய்து கொண்டது. இயக்க நலன் கருதி செய்யப்பட்ட ஏற்பாடு என்றார்; அன்று நாமும் தோழர்களும் உணரவில்லை; பிறகு உணர்ந்தார்கள்உண்மை என்பதனை.

அதுபோல 1958 இல் எனக்கு அய்யா அம்மா பெண் பார்த்து நடத்தி வைத்த வாழ்க்கை ஒப்பந்தத்திற்கும் கூட, அய்யா அவர்கள் சொன்ன விளக்கம்:

இயக்கத்தின் எதிர்காலத்திற்கு இது பயன்படும் என்று கூறி, அவரிடம் இசைவு வாங்கினேன். மறுப்பேதும் சொல்லாமல் முதலில் தயங்கிய வீரமணி, பிறகு ஒப்புக் கொண்டார்.

ஆம். அந்த ஜாதி மறுப்புத் திருமண ஏற்பாடு இயக்க வளர்ச்சியில் ஒரு முக்கிய திருப்பமாகியது. அதனால்தான் விடுதலை நாளேடு என்னும் தமிழர்களின் தனிப்பெரும் போர்வாளும், கேடயமும் இனமானம் காக்கும் அறிவுப் போரில் முதன்மையான படைக்கலனாக இன்றும் தொடர்கிறது.

விடுதலையுடன் 47 ஆண்டுகள்

47 ஆண்டுகளாக விடுதலையில் மற்ற தோழர்களைப் போல் நானும் தொடரும் வாய்ப்பை ஏற்படுத்தியதோடு,

விடுதலை பவள விழா என்பது இது வரை எந்தத் தமிழ் ஏடுகளும் பெறாத பெருமையான மத்திய அரசின் சிறப்பு அஞ்சல் உறை வெளியீட்டின்மூலம், ஊடகத் துறையில் ஒரு தனி வரலாற்றைப் பதித்தது!

எனக்குள்ள மன நிறைவு

அய்யாவின் ஆணையால், அன்று முதல் இன்று வரை நாணயம் கெடாமல், தனிப்பட்ட முறையில் எந்தப் பலனையும் காணாதவனாக, இனமான ஏற்றம் காணுவதே சரித்திர, சாதனையாகக் கருதி உழைத்து வருகிறேன். இதற்குப் பேராதரவு தரும் கழகக் குடும்பத்தவர் முதல் அனைத்துத் தமிழ் இன உணர்வாளர்கள், பகுத்தறிவாளர்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றியை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது பொது வாழ்வுப் பயணத்தில் 67 ஆண்டுகளில் 47 ஆண்டுகள் விடுதலையுடன் வாழும் பயனுறு காலமாக ஆகிவிட்டது எனக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது!

தமிழர்களுக்கு, விடுதலை கிடைக்க வேண்டும் என்பதற்காக, அதுவே என்னை தமிழ்ச் சமுதாயத்திற்கான நிரந்தர அடிமை ஆக்கியது. அடிமையாய் இருந்து உழைப்பதனால் மனிதர்கள் சுதந்திரச் சிந்தனையாளர்களாக மாறிட முடியும் என்பதே எனக்குள் உற்ற மனநிறைவு. எனது குடும்பம் என்பது, உலகம் முழுவதிலும் உள்ள இயக்கக் குடும்பத்தினரும், பகுத்தறிவாளர்களும், மனித நேயர்களும், பெரியார் பற்றார்களும்தாம்! இரத்த பாசத்தை விட கொள்கைப் பாசம்தான் இவ்வியக்கத்தின தனித்தன்மை.

கொள்கைப் பாசம்தான் என்று கூறும் போது, இயக்கத்தில் பொறுப்பேற்றுள்ள அனைவருமே இவ்வியக்கத்தில் எனக்கு தாய்கள், தந்தைகள், அண்ணன்கள், தம்பிகள், மகன்கள்தாம், என்பதைப் புரியாத பேதைகளின் புலம்பல் கண்டு பரிதாபப்படுகிறோம்.

உழைப்போர் உயர்வர்

திராவிடர் கழகத்தில் பணிதான் எவரையும் ஏற்றமுறச் செய்யுமே தவிர, தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு, பாசம், பந்தம், இவையெல்லாம் கவனத் தில் வராது; கணக்கில் எடுத்துக் கொள் ளப்படாது. உழைப்போர் இயக்கத்தில் எவரோ, அவரே உயர்வர்; இதுதான் அய்யா அம்மா காலம் முதல் இன்று வரை நடைமுறை.

அத்தகைய கழகக் குடும்பம் என்னை இந்த வயதிலும் தாங்கிப் பிடிக்கிறது. வாஞ்சையோடு; தாக்கப் புறப்படுவோரை தகர்த்து ஓட ஓட விரட்டுகிறது!

கெட்ட பெயர் எடுக்க அஞ்சாதவர்களே என் பின்னால் வரவேண்டும் என்றார் எந்தை! சிந்தையெல்லாம் அவரது கட்டளையே! நொந்த உள்ளமாக ஒருபோதும் ஆகாது எமது உள்ளம்!

இயக்கத்தினைப் பலப்படுத்திட தந்தை பெரியாரின் மாபெரும் தத்துவத்தை, ஒப்பாரும் மிக்காரும் இலாத அத் தலைவர் தந்துள்ள கொள்கையை, உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளோம்!

இந்திய எல்லையைத் தாண்டி இன்று பற்பல நாடுகளிலும் பெரியார் குரல் ஒலிக்கிறது! பெரியார் கொள்கை வெற்றிகள் ஏராளம் தென்படுகின்றன.

அமெரிக்காவில் துவக்கப்பட்டு பெரியார் பன்னாட்டு மய்யம் முதல் தென்கிழக்கு ஆசிய நாடுகளான மியான்மா, சிங்கப்பூர், வளைகுடா அரபு நாடுகள் (யு.ஏ.ஈ.), குவைத் போன்ற நாடுகளில் மனித நேய சுயமரியாதை இயக்கம் பரவி வருகிறது!

தந்தை பெரியார் அவர்கள் உடலால் 1973 இல் மறைந்து இன்றுடன் 36 ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில், அவர்தம் கொள்கைகள் மறைந்துவிடும் என்று நம் இன எதிரிகள் எதிர்பார்த்தனர்; ஏமாந்தனர்.

கட்டுப்பாடும், தன்னலம் கருதா சர்வபரித் தியாகமுமே தமது வாழ்வு என்று கொண்ட பல லட்சக்கணக்கான கருஞ்சட்டைக் கடமை வீரர்கள், கண்ணை இமை காப்பது போல் இயக்கத்தை, இலட்சியங்களைப் பாதுகாத்து வருகின்றனர்!

என்னை வளர்க்கும் மாமருந்துகள்

கழகம் வளர தங்களது பங்களிப்பைச் செய்கின்றனர்!

இந்தப் பூரிப்பே என்னை வளர்க்கின்ற நல்ல மாமருந்துகள்!

எவ்வளவுநாள் வாழ்ந்தோம் என்பதா முக்கியம்? வாழ்ந்த காலத்தில் நாம் நமது சமுதாயத்தினை மாற்றிட, வளர்த்திட என்ன செய்தோம் என்பதுதானே முக்கியம்?

இதை உணர்ந்தே எனது ஒவ்வொரு அடியும் அய்யாவின் அடிச்சுவட்டிலே தொடர்கிறது. இயக்க வளர்ச்சியே நம் அனைவருக்கும் முக்கியம் முதன்மையானது! தந்தை பெரியார் தத்துவங்களை கல்வி, மருத்துவம், பெண்ணுரிமை, ஜாதி ஒழிப்புத் திட்டங்கள் மூலம் உலகமயமாக்குவோம் வாரீர்! வாரீர்!

அண்மையில் நான் படித்த (சீனப் பேராசிரியர் ஒருவரது நூலில் அக்கவிதை யாருடையது என்று அவர் குறிப்பிடவில்லை) ஆங்கிலத்தில் எழுதியுள்ளதையே வயதாகி விட்டது என்று நினைவூட்டும் நண்பர்களுக்கு, பதிலாக கூற விரும்புகிறேன். கொண்டாட்டங்கள், வெளிச்ச விழாக்கள் வேண்டாம் கருப்பு மெழுகுவர்த்திகளாகிய நமக்கு. பிரச்சாரம், இயக்க நூல்கள், இயக்க ஏடுகள் இவைகளை பரப்புதலே முக்கியம்! நீங்கள் தரும் பரிசு பிறந்தநாள் பரிசு அதைவிட வேறு எதுவும் கிடையாது.

வயது என்பது உள்ளத்தின் தன்மையைப் பொறுத்ததே!

நீங்கள் உங்களின் லட்சியக் கனவுகளை பின்னுக்குத் தள்ளி விடுவீர்களானால்,

நீங்கள் உங்களது நம்பிக்கையை இழந்து விடுவீர்களானால்,

நீங்கள் காலத்தினை முன்னோக்குடன் பார்க்கத் தவறியவர்களானால்,

உங்களுக்குள் கனன்று கொண்டிருக்கும் லட்சியத் தீ அணைந்து விடுமானால்,

அப்போதுதான்

நீங்கள் வயதானவர்கள் முதுமையானவர்கள்:

ஆனால்

உங்களது வாழ்வின் சிறந்தவைகளை நீங்கள் எடுத்துக் கொண்டவர்களானால்,

உங்கள் வாழ்வில் நீதி நெறியை நீங்கள் விடாம லிருப்பவர்களானால்,

உங்களை நம்பியுள்ளவர்களை நீங்கள் நேசிப்பவரானால்,

ஆண்டுகள் எத்தனை ஆனாலும் அவை எப்படி வந்தாலும், அதைப் பொருப்படுத்தாத வர்களானால்,

உங்களுக்கென்று எத்தனை பிறந்த நாள்கள் பறந்து வந்தாலும்

உங்களுக்கு வயதாகவே இல்லை

நீங்கள் என்றும் இளமையானவர்கள்தாம்!

அய்யாவின் ஆணையால், அன்று முதல் இன்று வரை நாணயம் கெடாமல், தனிப்பட்ட முறையில் எந்தப் பலனையும் காணாதவனாக, இனமான ஏற்றம் காணுவதே சரித்திர, சாதனையாகக் கருதி உழைத்து வருகிறேன். இதற்குப் பேராதரவு தரும் கழகக் குடும்பத்தவர் முதல் அனைத்துத் தமிழ் இன உணர்வாளர்கள், பகுத்தறிவாளர்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றியை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். எனது பொது வாழ்வுப் பயணத்தில் 67 ஆண்டுகளில் 47 ஆண்டுகள் விடுதலையுடன் வாழும் பயனுறு காலமாக ஆகிவிட்டது எனக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது!

தமிழர்களுக்கு, விடுதலை கிடைக்கவேண்டும் என்பதற்காக, அதுவே என்னை தமிழ்ச் சமுதாயத்திற்கான நிரந்தர அடிமை ஆக்கியது.அடிமையாய் இருந்து உழைப்பதனால் மனிதர்கள் சுதந்திரச் சிந்தனையாளர்களாக மாறிட முடியும் என்பதே எனக்குள் உற்ற மனநிறைவு.

என்றும் உழைக்கும்,
தமிழ்ச் சமுதாய அடிமை,

1.12.2009 (கி.வீரமணி)

--------------------"விடுதலை" 1-12-2009

4 comments:

கோவி.கண்ணன் said...

//"பெரியார் தத்துவங்களை உலக மயமாக்குவோம்"//

பெரியார் பற்றிய நூல்கள் விடுதலை அடைந்து அரசுடமை ஆகுமா என்பதே எங்களுக்கெல்லாம் கேள்வியாக இருக்கு.

KASBABY said...

முதலில் பெரியாரின் நூல்களை பொதுவாக்குங்கள்.பின் தத்துவத்தை உலகமயமாகலம்.பெரியார்-ஒரு பொது சொத்து.அவர் தமிழகத்தின் அடையலாம்.தமிழர் முன்னேற்றத்தின் மூலம்.பொதுவுடைமை வாதியான பெரியாரை முதளித்துவ திராவிடர் கழகம் கபளீகரம் செய்து விட்டது.முதலில் பெரியாரை,அவரின் சிந்தனைகளை விடுதலை செய்யுங்கள்.பின்பு சிந்தனைகள் தானாகவே உலகமயமாகி விடும்.

மதி.இண்டியா said...

கழகத்தை குடும்ப சொத்தாக்கியாச்சு ,

மொதல்ல பெரியார் எழுத்துக்களை பொதுவுடமை ஆக்குங்க , அப்புறம் தத்துவத்தை பத்தி பேசலாம்

Velmaheshk said...

பெரியாரின் நூல்களை பொதுவாக்குங்கள்.....