தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை -2
ஒரு தடவை, எங்கள் ஊருக்கு நெரிஞ்சிப்பேட்டை சாமியார் (சங்கராச்சாரி போன்றவர்) வந்தார். அது 1902 ஆம் வருஷமாய் இருக்கலாம்; அவருக்கு, எங்கள் ஊர் நகரத்து செட்டியார் வகுப்பு வியாபாரிகள் தடபுடலாய் பிட்க்ஷ (பிட்சை) நடத்துகிறார்கள். எங்கள் தகப்பனாரும் 50 ரூபா கொடுத்தார். பெரிய சமாராதனை நடக்கிறது. அந்தச் சாமியார் தம்பி ஒரு மைனர்; கடன்காரன்; அவனும் கூட
வந்திருந்தான். அவன், ஈரோட்டில் ஒரு வியாபாரிக்கு கடன் கொடுக்கவேண்டும்; அது கோர்ட்டில் டிக்ரி ஆகி இருந்தது. அந்த சமயம், அந்த வியாபாரி அக்கடனை வசூல் செய்ய, என்னை யோசனை கேட்டார். நான் அவசரமாய் ‘படிபோட்டு, வாரண்டு கொண்டு வா’ என்று சொன்னேன். உடனே, நிறைவேற்ற விண்ணப்பம் போட்டு அன்றே, வாரண்டு வந்தது. மறுநாள், பகல் 12 மணிக்கு வாரண்டு எடுத்துக்கொண்டு சேவகனுடன் அந்த வியாபாரி என்னிடம் வந்தார்.
நான் அவர்களைக் கூட்டிக் கொண்டு, ஈரோட்டில் சாமியார் இறங்கியிருந்த “எல்லைய்யர் சத்திரம்” என்கின்ற இடத்துக்குப் போனேன். உள்ளே, சுமார் 200 பேர்கள் சாப்பிட்டுக் கொண்டி ருக்கிறார்கள். சத்திரத்திற்குப் பக்கத்தில், வெளியில், நான் நின்று கொண்டு, சாமியார் தம்பிக்கு நான் ஆள் அனுப்பினேன்; உள்ளே இருந்து, அவர் ரோட்டுக்கு வந்தார். சேவகனுக்கு கைகாட்டி, ‘இவர்தான்’
என்று சொன்னேன். சாமியார் தம்பி, ‘வாரண்டு என்று தெரிந்ததும், ஓடினார். நான் கூடவே கையைப் பிடித்துக்கொண்டு, இழுத்துக்கொண்டே போனேன்; திமிரிவிட்டு ‘சட்’டென்று வீட்டுக்குள் புகுந்து, வெளிக்கதவைத் தாளிட்டுக் கொண்டான். நான் உடனே தூணைப் பிடித்து, தாழ்வாரத்தின்மீது ஏறி, ஓடுகள் உடைய ஓடி, புறக்கடைப்பக்கம் வீட்டிற்குள் குதித்து - சாப்பாடு இருக்கும்
இடத்தையும், பார்ப்பனர் சாப்பிடும் பந்தியையும் தாண்டிவந்து, வீதிக் கதவைத் திறந்துவிட்டு, சாயபு சேவகனைக் கூப்பிட்டு ஒரு அறைக்குள் ஒளிந்துகொண்ட, சாமியாரின் தம்பி கையைப் பிடித்து ஒப்புவித்தேன். அவன் திமிரினான்; என் கடை ஆட்கள் நாலைந்து பேர்கள் அங்கிருந்தவர்களை - `இவனைப் பிடித்து, வெளியில் தூக்கிக்கொண்டு போங்கள்’ என்று சொன்னேன்; தூக்கிவந்துவிட்டார்கள். கூட்டம்
சேர்ந்துவிட்டது. சாப்பிட்டுக்கொண்டிருந்த பார்ப்பனர்கள் சுமார் 200
பேர்கள், அரைச் சாப்பாட்டோடு இலையை விட்டெழுந்து கழுவிக்கொண்டார்கள். ஆளைப் பிடித்து ஒப்புவித்துவிட்டு நான் நேரே வீட்டிற்கு சாப்பாட்டுக்குப் போய்விட்டேன்.
சாமியார் கோஷ்டி போலீசில் பிராது எழுதி வைத்துவிட்டு, டெபுடி கலெக்டரிடம் பிராது கொடுக்க ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார் என்பதாக எனக்குத்
தெரியவந்தது, பிட்சை நடத்துபவர்கள் வியாபாரிகள்; என் தகப்பனாரும் 50 ரூபா, கொடுத்திருக்கிறார்; ஈரோடு நகரத்துச் செட்டிமார் பெரிதும் என் தகப்பனாரிடம் லேவாதேவி செய்பவர்கள்; சினேக முறையில் பழகுபவர்கள்; ஈரோடு வக்கீல்களும், பிராமணர்களும் என் தகப்பனாரிடம் தாக்ஷண்ய மனோபாவமுடையவர்கள்; ‘என்ன நடக்கிறது, என்று பார்க்கலாம்’ என்றே கலக்கத்துடன், சாப்பிட்டுவிட்டு கடைக்கு வந்தேன். கடை வீதியில், வழிநெடுக. இதைப்பற்றி பெரிய பிரஸ்தாபம். கடையில் வந்து நான் உட்கார்ந்த உடன் “நீ அந்தப் பார்ப்பானைப் பிடித்துக் கொடுத்தது சரி. ஆனால், அந்த பிராமண
சமாராதனையைக் கெடுத்து விட்டாயே, அதைப்பற்றிதான் உன்மீது
எல்லோருக்கும் வெறுப்பேற்பட்டு விட்டது” என்று என்னிடம் வந்து பலர்
சொன்னார்கள். “நல்லவேலை செய்தாய்; எப்படியும் அந்தப் பார்ப்பானைப் பிடித்தே தீர்த்தாயே. அவன் எத்தனை பேர்களை ஏமாற்றிக்கொண்டு வாங்கின கடன் கொடுக்காமல் திரிகிறான்” என்று சிலர் சொன்னார்கள். நான் அப்போதுதான் “நாம் கண்ணால் பார்த்தால், சமாராதனை எப்படிக் கெட்டுப்போகும்; இந்தப் பார்ப்பான்கள் அங்கு வந்து சாப்பிட்டது தண்டசோறு; நாம் கொடுத்த பணம்; நான்
ஒன்றையும் தொட்டுவிடவும் இல்லை; இப்படி இருக்க சமாராதனை எப்படிக் கெடும்? . . . . . கெட்டால்தான் கெடட்டுமே, என்ன முழுகிப் போய்விட்டது? பார்க்கலாமே!” என்று ஒரு மாதிரி திடப்படுத்திக் கொண்டு கடைவேலை பார்த்துக்கொண்டும்., வருகிறவர்கள் போகிறவர்களிடம் இதைப் பற்றிப் பேசிக்கொண்டும் இருந்தேன். என் தகப்பனாருக்கு, இதைப்பற்றி ஒன்றும் தெரியாது. அவர் பிற்பகல் 3 அல்லது 4 மணி சுமாருக்கு வீட்டிலிருந்து கடைக்கு வந்தார். வந்து சிறிது நேரம் ஆனவுடன் ஒரு கூட்டம் சுமார் இருபது பேர்கள் கடைக்கு வந்தார்கள். அவர்கள் பெரிதும் நகரத்துச் செட்டியார் வகை; பெரிய
ஆள்கள்; வக்கீல் குமாஸ்தா; பார்ப்பனப் பிள்ளைகள் - 2, 3 பேர், சாமியாருடைய அதிகாரி ஒருவர், இப்படியாக வந்தார்கள். இவர்கள் வந்த உடன் என் தகப்பனார் மறுபடியும் சாமியார் விஷயத்திற்கு ஏதாவது வசூலுக்கு வந்திருக்கிறார்களோ என்னமோ என்று நினைத்துக்கொண்டு மேலும் ஏதாவது கொடுக்கவே முடிவு
செய்துகொண்டு சாமியார் “பிட்சை (சமாராதனை, ஊர்கோலம்) பற்றி ‘நன்றாய் நடந்ததா?’ என்பதுபற்றி சிரித்த முகத்துடன் விசாரித்தார். வந்தவரில் பெரிய வர்த்தகச் செட்டியார் ஒருவர் - “அந்தக் கண்றாவியை ஏன் கேட்கிறீர்கள். அங்கு வந்து பாருங்கள், 200 - 300 பேர் பட்டினி. இனிமேல்தான், சமையல் நடக்கவேண்டும். ஆச்சார்ய சாமிகளுக்கு மிகமிக மனவேதனை” என்று சொல்லிக்கொண்டு வரும்போதே ஒருவர், ‘எல்லாம் பாழாய்விட்ட’தென்றும், மற்றொருவர், ‘ இந்த அக்கிரமம், இதுவரை எங்கும் நடந்திருக்காது’ என்றும், என்ன என்னமோ என்னைப் பார்த்துக்கொண்டே பேசுகிறார்கள். நான் கடைக்கு உள் உட்கார்ந்திருந்தவன், வெளியில் வந்து, தாழ்வாரத்தின் சுவற்றுடன்
சாய்ந்து நின்றுகொண்டேன். என் தகப்பனாருக்கு, ஒன்றும் புரியவில்லை. சங்கடமான வருத்தக் குறியுடன் முகத்தைச் செய்துகொண்டு ‘என்ன சங்கதி?’ என்று ஆச்சரிய பாவத்துடன் கேட்டார். “ சங்கதி என்ன, எல்லாம் உங்கள் மகன் நம்ம ராமுவால்தான்” என்று செட்டியார் பதில் சொன்னார். “எங்க ராமனாலா? அவன் என்ன, இந்த காரியத்தில் சம்மந்தம்?’ என்று மனவருத்தத்துடனும், ஆத்திரத்துடனும் கேட்டார், என் தகப்பனார். “அந்த அநியாயத்தை ஏன் கேட்கிறீர்கள்? அங்கு வந்துபாருங்கள், சாப்பாடு பண்டங்கள் நாசமாய்க் கிடப்பதை, மலையாட்டம் கெட்டுப்போன பண்டம் குவிந்துகிடக்கிறது” என்றார் வக்கீல் குமாஸ்தா பார்ப்பனர்; “என்ன சங்கதி, எனக்குப் புரியவில்லை. சொல்லுங்கள் தெரியும் படியாக” என்று அவசரமாகக் கேட்டார் என் தகப்பனார்.
“சமாராதனை நடந்துகொண்டிருக்கும்போது, உங்க ராமு வீட்டின்மீது ஏறி புறக்கடைப் பக்கம் குதித்து, பந்தி நடந்த பக்கம் வந்து வெளிக்கதவைத் திறந்து துலுக்கனையெல்லாம் கூட்டி வந்து உள்ளே விட்டு விட்டான்; பிராமணாள் 200, 300 பேர் சாப்பிடச் சாப்பிட இந்த அக்கிரமம் நடந்ததால், அவர்கள் அத்தனை பேரும் எழுந்துவிட்டார்கள். பின்புறம் செய்து வைத்திருந்த சாப்பாடு, கறி, குழம்பு, பதார்த்தம் எல்லாம் நாசமாய்விட்டது” என்றார் மற்றொரு வக்கீல் குமாஸ்தா பார்ப்பனர்; “ சொல்லுங்கள் சாமி, நன்றாய் நாய்க்கருக்கு விளங்கும்படி சொல்லுங்கள்” என்றார் மற்றொரு செட்டியார்; என் தகப்பனார் மகா ஆத்திரத்துடன் “என்னடா ராமா என்ன நடந்ததுடா? அங்கென்னத்துக்கு நீ போனாய்? என்ன சங்கதி சொல்லு . . . .” என்று ஆவேசம் தாண்டவமாட, அதிகார தோரணையில் கேட்டார். நான் “ஒன்றும் இல்லையப்பா; இந்த சாமியார் தம்பியை வாரண்டு சேவகன் வாரண்டில் பிடித்துவிட்டான்; பிறகு, கையெழுத்துப் போடாமல் தப்பி ஓடி எல்லைய்யர் சத்திரத்திற்குள்ளே போய் புகுந்து கதவைத் தாளிட்டுக் கொண்டார்; நான் ‘சட்’ டென்று ஓட்டுமேல் ஏறி குதித்து கதவைத்
திறந்து விட்டேன். பிறகு சேவகன் வந்து பிடித்துக்கொண்டு போய்விட்டான். அதனால், இவர்கள் சமாராதனை கெட்டுப் போய்விட்டதாம்” என்றேன். என் தகப்பனாருக்கு ஏற்பட்ட கோபத்துக்கும், ஆத்திரத்துக்கும் அளவே இல்லை! “அடத் தேவடியாள் மகனே, உனக்கென்ன அங்கு வேலை? வாரண்டுக்காரனிடமிருந்து ஓடிவிட்டால், சேவகன் என்னமோ பார்த்துக்கொள்ளுகிறான். நீ ஏன் சுவர் எட்டிக் குதித்து உள்ளே போனாய்?” என்றார். இதற்கு மத்தியில் “அது மாத்திரமில்லிங்கோ நாய்க்கர்வாள்; பிராம்மணர் வரிசையாக பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு
மத்தியில் இலைகளை மிதித்துக்கொண்டு ஓடி கதவைத் திறந்துவிட்டு ஒரு நூறு பேருக்கு மேல் துலுக்கன், மலுக்கன், கண்டவன், நின்றவன், தெருவில் போனவன், எவனெவனோ வந்து உள்ளே புகுந்து அத்தனையையும் தோஷமாக்கி வெளியில் வாரிக்கொட்டப்பட்டது. இன்னமும் இப்ப மணி 4 ஆகியும் அத்தனை பிராம்மணாளும் பட்டினியாய் இருக்கிறார்கள். என் மனம் பதறுதுங்கோ” என்று
சொன்னார்.
“ஆமாங்காணும், உங்கப்பன் வீட்டுச் சாப்பாடு நாசமாய்ப் போய் விட்டதாக்கும்; மிகப் பாடுபட்டு உழைத்த பிராமணாள் பட்டினி கிடக்கிறாங்களாக்கும். வாங்கின கடனை மோசம் பண்ணி, கடங்காரனை ஏமாத்திவிட்டு, வாரண்டு சேவகனிடமிருந்து தப்பிக்கொண்டு திருட்டுப் பயலாட்டம் ஓடிவிடுகிறது; சமாராதனையில் போய் ஒளிந்துகொள்வது; கதவைத் தாள் போட்டுக் கொள்வது;
இதெல்லாம் மிக நியாயமான சங்கதி . . . நான் கதவைத் திறந்ததால் . . . . உலகம் முழுகிப்போய்விட்டது. இந்தப் பிராமணாள் பட்டினி கிடந்தால் உலகமே இருண்டு போகுமாக்கும். ஏகாதசி என்று நினைத்துக் கொள்ளட்டுமே . . . வந்துவிட்டார்கள் . . . வெட்கமில்லாமல், பிராது சொல்ல” என்று நானும் ஆத்திரமாகக் கேட்டேன். உடனே என் தகப்பனார் எழுந்தார். “இரங்கேசா . . . . எனக்கு இப்படிப்பட்ட
பிள்ளையையா நீ கொடுக்க வேணும் . . . ? நான் முன் ஜென்மத்தில் என்ன பாவம் பண்ணினேன்” என்று மார்மாராக, பெண்களைப் போல் ஓங்கி ஓங்கி அடித்துக்கொண்டார். “என்ன முழுகிப்போய்விட்டது? அந்தத் திருட்டுப் பார்ப்பான் பண்ணினதைப்பற்றி சிந்திக்க மாட்டேன் என்கிறீர்கள். இவர்கள் கொழுத்துப் போய் சோற்றை எடுத்துத் தெருவில் கொட்டிவிட்டால், அதற்கு யார் என்ன பண்ணுவார்கள்? இன்னமும் பணம் அடிக்கலாம் என்று இந்தப் பார்ப்பான்கள், இந்தச் செட்டியார்களைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார்கள்” என்றேன்,
அதற்குள் வக்கீல் குமாஸ்தா பார்ப்பனர் “ நான் அப்போதே சொல்ல வில்லையா? . . . கலெக்டரிடம் பிராது கொடுத்துவிடுங்கள் என்று” என்று சொன்னார். என் தகப்பனாருக்கு நான் சொன்ன பதில் மேலும் ஆத்திரத்தைக் கிளப்பிவிட்டது. “சாமி நீங்க சும்மா இருங்க” என்று சொல்லிக்கொண்டு, குனிந்து பக்கத்தில் இருந்த அவரது செருப்புகளில் ஒன்றை எடுத்துக்கொண்டு, என்மீது வெத்திலை பாக்கு எச்சிலைத் துப்பி, என் குடுமியை பலமாய்ப் பிடித்துக்கொண்டு தலை - முகம் -
முதுகு - என்று ஒன்றும் பார்க்காமல் 7, 8 அடி - வாயில் வந்தபடி வைதுகொண்டு, பலமாக அடித்தார். செட்டியார்மார்கள் எல்லோரும் எழுந்து ‘அண்ணா, அண்ணா, விட்டுவிடுங்கள்..... அவனுக்கு இன்னமும் சரியாப் புத்தி வரவில்லை; நாளாவட்டத்தில் வந்துவிடும்; அடிக்காதீர்கள்” என்று மத்தியில் புகுந்து அடிப்பதைத் தடுத்து நிறுத்தினார்கள். தகப்பனாருக்கு கோபம் தணியவில்லை; நானும் அடிக்குப் பயந்து, குனிந்து கொடுக்காமல் - இந்தப் பார்ப்பனர்களை
முறைத்துப் பார்த்த வண்ணமே நின்று கொண்டிருந்தேன். என் தகப்பனார் செருப்பைக் கீழே போட்டுவிட்டு, கையைக் கழுவிக் கொண்டு, பெட்டிக்கு முன் உட்கார்ந்து, பெட்டியைத் திறந்து ஒரு அய்ம்பது ரூபாய் நோட்டு ஒன்றையெடுத்து பெரிய செட்டியார் கையில் கொடுக்க, எழுந்து நின்று “நீங்க பெரிய மனது பண்ணி, என்னை மன்னித்து, இதை மறந்துவிடவேண்டும். இவன் எனக்கு மகனல்ல;
சத்ரு . . . என் பெயரைக் கெடுக்கத் தோன்றியவன். ஏதோ இரண்டு ஆளைவிட்டு, நன்றாக உதைத்து, கையையோ, காலையோ ஒடித்துவிடுங்கள். நான் ஏன் என்றுகூட கேழ்பதில்லை. எனக்குப் போதும் . . . இந்தப் பிள்ளையைப் பெற்ற பெருமை. இவன் துலைய வேண்டும்; இல்லாவிட்டால் நான் துலையவேண்டும்; இனி இரண்டில் ஒன்றுதான். சரி, இனிமேல் என்ன செய்வதென்பதை நான்
பார்த்துக்கொள்கிறேன்” என்று சொல்லிக்கொண்டே, கண்களில் நீர் தாரை தாரையாக ஒழுக அவர் கையைப் பிடித்துக்கொண்டு “நீங்கள் பெரிய மனசு பண்ணி மன்னிக்கவேண்டும்” என்று சொல்லி 50 ரூபா நோட்டை கையில் கொடுத்தார். இரண்டொரு செட்டியார் ‘பணம் வாங்க வேண்டாம்’ என்று கண் ஜாடை காட்டிவிட்டு,”நீங்கள் இதற்காக கவலைப்படாதீர்கள். தம்பியை மேலும் கோபிக்காதீர்கள்; எல்லாம் கொஞ்ச நாளில் சரியாய்ப் போய்விடும் மன வருத்தப்படாதீர்கள்” என்று என் தகப்பனாருக்குச் சமாதானம் சொல்லி அவரை கையைப் பிடித்து உட்காரவைத்துவிட்டு, என்னைப் பார்த்து “தம்பி இனிமேல் இந்தப் பதட்டத்தை விட்டுவிடு. உங்கய்யா பேரைக் காப்பாற்று. அய்யா
எவ்வளவு மனவேதனைப் பட்டாரு, பார்த்தாயா? இதற்கா பிள்ளை பிறப்பது அவர் செய்கிற தர்ம தானத்திற்கு நீ இந்த பெயரா எடுப்பது?” என்று எங்கய்யாவுக்கு சமாதானம் சொல்லியும், எனக்கு புத்தி சொல்லியும் விட்டு, ரூபாயையும் வாங்காமல் மனவருத்தத்துடன் அதாவது நாய்க்கர் மனதுக்கு இவ்வளவு சங்கடத்தை உண்டு பண்ணிவிட்டோமே என்கிற பரிதாபத்துடன் சென்றுவிட்டார்கள்.
அவர்கள் போன உடன் ஒரு மாதிரி மயக்கம் பிடித்தவர்போல் சாய்வு பெட்டியில் சாய்ந்து கண்ணை மூடிக்கொண்டு இருந்தார்.
நான் கல்யாணமான பையன்; ஒரு குழந்தையும் பிறந்து 5 மாதத்தில் இறந்துவிட்டது; கடை வீதியில் ‘நாய்க்கர் மகன்’ என்கிற பெருமையும், சற்று செல்வாக்கும் எனக்குண்டு; இந்த நிலையில் சுமார், 100, 200 பேர்களுக்கு முன்னிலையில் என்னைக் கண்டபடி திட்டி, முகத்தில் காரி வெத்திலை பாக்கு போட்ட எச்சிலைத் துப்பி, என் துணியையெல்லாம் வெத்திலை பாக்குக் கரை செய்து, செருப்பால் அடித்ததானது என் தகப்பனார் மனதை வாட்டுகிறது என்பது எனக்கு நன்றாகத் தெரிகிறது.
போலீசு கச்சேரி எங்கள் கடைக்கு எதிர்த்த கட்டடம். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் பதவி கிடையாது. ஏட்டுதான் ஸ்டேஷன் அவுஸ்ஆபீஸர். அவர் ஒரு நாயுடு; எனக்கு ஸ்நேகிதர். அவரும் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து 5, 6 கான்ஸ்டெபிள்களுடன் பார்த்துக்கொண்டு இருக்கிறார். கூட்டம் போன பின்பு நான் எங்கள் கடைத் திண்ணையில் இருந்து குறுஞ்சிரிப்புடன் அவரைப் பார்த்தேன். அவரும் என்னைப்பார்த்து சிரித்துவிட்டு, எழுந்து நேரே எங்கள்
கடைக்கு வந்து என் தகப்பனாரைக் கும்பிட்டு விட்டு - தெலுங்கில் “என்னங்கோ அண்ணா தங்களுக்கு இவ்வளவு கோபம் வரலாமா” என்று கேட்டுக்கொண்டே பெஞ்சின் மீது உட்கார்ந்திருந்தார். என் தகப்பனார் நிமிர்ந்து உட்கார்ந்து, “எல்லாம் கர்ம பலன், நான் என்ன செய்யட்டும்? என் மானமே போய்விட்டது இன்றைக்கு. நான் எப்படி நாளைக்கு கடைவீதியில் நடப்பேன்? இப்படிப்பட்ட பிள்ளையைப்
பெத்துவிட்டு” என்றார். “ஒன்றும் முழுகிப்போய்விடவில்லை நீங்கள் இதற்காகப் பிரமாதமாய் வருத்தப்படாதீர்கள். என்னிடத்தில்கூட இந்தப் பிராது வந்தது. இரண்டு பிராமணர்கள் வந்து எழுதி வைத்தார்கள். ‘இதில் நான் ஒன்றும் செய்ய முடியாது. கச்சேரியில் பிராது கொடுங்கள்’ என்று சொல்லி அனுப்பிவிட்டேன். அந்த சாமியார் தம்பி ஒரு அயோக்கியன். அவன் வாரண்டை மீறி ஓடிப்போய் ஒரு வீட்டில் நுழைந்தது தப்பிதம்; கோர்ட்டுக்குப் போனாலும் அவன் பழைய சங்கதி.
. . . அவன் ஒரு படையாச்சி பெண்ணை வைத்திருப்பது, `சாமியார் யோக்கிதை’ எல்லாம் வெளியில் வரும்; அந்த பசங்க போகமாட்டார்கள்; நீங்கள் கவலைப்படாதீர்கள்” என்று சொன்னார். “கோர்ட்டு கிடக்கட்டுமுங்கோ. . . . அவன் ஜெயிலுக்குப் போகட்டும், வேணும் அவனுக்கு . . . என் யோக்கியதை என்ன ஆச்சுது பாருங்கள்” என்றார் என் தகப்பனார். நான் மிக்க தைரியத்தோடு, “என்னப்பா கெட்டுப் போச்சுது, இன்னும் நாலடி வேண்டுமானாலும் அடித்துக் கொள்ளுங்கள். நான் என்ன திருடினேனா? முடிச்சவித்தேனா? இந்தப்
பார்ப்பானுங்கோ திங்கிறதைக் கண்ணில் பார்த்தால் அந்தச் சோறெல்லாம் புழுவாய்ப் போய்விடுமா? தண்டச்சோறு தின்கிறாங்கோ; அதுவும் நாம் எல்லோரும் கொடுத்த பணம். இவன் வாரண்டை மீறி ஓடினது தப்பில்லை, நான் கதவைத் திறந்துவிட்டது தப்பு என்றால் . . . என்ன நியாயம்? நாளைக்கு எல்லோரும் இப்படித்தானே செய்வார்கள். கச்சேரிக்குத்தான் போகட்டுமே. நான் எட்டிக்குதித்துப் போனது பொதுச் சத்திரம். அந்தப் பார்ப்பான் வெகு பேருக்குக் கடன் கொடுக்கவேண்டும்; எல்லோரையும் ஏய்க்கிறான். அவனைச் சும்மா
விடுவதா?. . . இதனால் சாமியாருக்கு நாம் என்ன தவறு செய்துவிட்டோம்” என்றேன். அங்கிருந்த ஏட்டும் “தம்பி சொல்லுறது ரொம்ப சரிதான் . . . அண்ணா நீங்க வருத்தப்படாதீங்க. தம்பியை நீங்கள் அத்தனை பேர் எதிரில் அடித்தது. . . எனக்கு ரொம்ப வருத்தமாயிட்டது. என்ன பிரமாதமான காரியம் ஏற்பட்டுவிட்டது . . . உங்களுக்கு ரொம்ப ஆத்திரம் வந்துவிட்டது. என்றாலும் நீங்கள்
தகப்பன்தானே. . . அடித்தது போகட்டும்; இனி ஒன்றும் மனதில்
வைக்காதீர்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். என் தகப்பனார்,
தனக்குக் களைப்பாய் இருப்பதாகச் சொல்லிவிட்டு, வண்டியைக் கட்டச்
சொல்லி, வீட்டுக்குப் போய்விட்டார். எங்கய்யா, வீட்டிற்குப் போன உடன்
என்னிடம் சுமார் 40, 50 பேருக்குமேல் இதைப்பற்றிப் பேச வருவதும், போவதுமாகவே இருந்தது. இதே பேச்சுதான்; ‘சமாராதனை கெட்டுப் போச்சு’ என்பவர்களும் ‘கெட்டால் என்ன? இந்த பாடுபடும் பாட்டாளி மக்களுக்கு முழுகிப் போய்விட்டதா?” என்பவர்களும் இப்படியாக பெரிய தர்க்கம் ஏற்பட்டு, ‘நான் செய்தது சரி’ என்கிற முடிவு ஏற்பட்டு, இந்த செய்கையால் கடைவீதியில் நான் ஒரு வீரனாகிவிட்டேன். “பார்ப்பான் சாப்பிடுவதை நாம் பார்த்தால் குற்றம், தோஷம் என்று சொல்லுவது நமக்கு அவமானம் என்றும், கடை வியாபாரிகள், குமாஸ்தாக்கள், மனதில் படும்படியாக ஏற்பட்டுவிட்டது. இந்தப் பிரஸ்தாபம்
ஜாதிபேதத்தைப்பற்றிய பேச்சாகி, கடைசியில் சாயபு வீட்டில் சாப்பிட்டால்தான் என்ன கெடுதி? என்று ஏற்பட்டு, அப்போது முதலே சமபந்தி சாப்பாடு - வியாபாரிகளுக்குள் - வருஷா வருஷம் சித்ரா பவுர்ணமி அன்று - என் தலைமை ஆதிக்கத்தில் நடப்பதும் எல்லா ஜாதியார் - மதத்தார் வந்து சாப்பிடுவதும் வழக்கமாகிவிட்டது. ‘ சாப்பிடுவதைக் கண்களால் பார்த்தால் ‘குற்றம்’ என்பதில் ஆரம்பித்த விவகாரம், ‘சாப்பாட்டில் ஜாதி பேதம் காட்டுவது, அறியாமை’ என்கிற
முடிவு - உண்மையாகவே - மக்களுக்கு ஏற்படும்படி, அந்தச் சம்பவம்
செய்துவிட்டது.
------------------------தொடரும் ............
------------------- நூல்:- “தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை” பக்கம் : 4 - 11
Search This Blog
30.12.09
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
இன்றும் சவுண்டிப் பாப்பானுக்கு மரியாதையும்,சுப்புணிப் பாப்பானுக்கு
பிறந்தநாளும் கொண்டாடும் தமிழர்களை என்ன செய்வது?
அட மடையர்களா நீங்கள் திருந்துவதெப்போது ?அவனாவது கடன் தான் தரவில்லை.கொலை செய்யச் சொன்னவரையே தூக்கிவைத்து ஆடும் புத்திசாலிகளே மானம் இருக்கிறதா? உங்களுக்கு.
Post a Comment