Search This Blog

8.12.09

தமிழ்நாட்டுக்குள் ஓடும் தொடர்வண்டியில் இந்தி எழுத்து தேவைப் படுவதன் அவசியம் என்ன?


இந்தீ!

சென்னை கடற்கரை வேளச்சேரி, சென்னை கடற்கரை தாம்பரம் மற்றும் அரக்கோணம் புறநகர் பகுதிகளில் காலை, மாலை மிக முக்கிய நேரங்களில் “மகளிர் மட்டும்’’ மின் தொடர்வண்டி (ரயில்) இயக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 12 முதல் மேற்கொள்ளப்பட்ட இந்த சேவை பொதுமக்கள் மத்தியில் நல்ல அளவு வரவேற்பினைப் பெற்றுள்ளது.

“மகளிர் மட்டும்’’ என்று நல்ல தமிழில் அனைத்துப் பெட்டிகளிலும் பளிச்சென்று பொறிக்கப்பட்டுள்ளது, மகிழ்ச்சி!

இப்பொழுது இதில் இன்னொரு இடைச்செருகல் “மாத்ரி பூமி’’ என்ற இந்தி வாசகம் அடங்கிய தகடு பொறிக்கப்பட உள்ளதாம்.

தமிழ்நாட்டுக்குள் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் ஓடும் மின் தொடர்வண்டியில் இந்த இந்தி எழுத்து தேவைப்படுவதன் அவசியம் என்ன?

பொதுமக்கள் யாரேனும் முறையிட்டார்களா? தமிழில் எழுதி இருப்பதால் எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை கண்களைக் கட்டி காட்டில் விட்டதுபோல இருக்கிறது; இந்தியில் எழுதாவிட்டால் எங்கள் கதி என்னாவது என்று மக்கள் மறியல் செய்தார்களா? நாளொன்றுக்கு இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டபெண்கள் ஆயிரக்கணக்கில் இவற்றில் பயணம் செய்கிறார்களா?

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லாத நிலையில், இந்த வீண் வேலை ஏன் இரயில்வே துறைக்கு?

சில ஆண்டுகளுக்கு முன் தேசிய நெடுஞ்சாலையில் எல்லைக் கற்களில் தேவையில்லாமல் இந்தியைத் திணித்து, நன்கு வாங்கிக் கட்டிக்கொண்டனர். ‘விடுதலை’ படத்துடன் செய்தி வெளியிட்டது, உடனடியாக அது அகற்றவும்பட்டது.

1990 ஜனவரி 25 ஆம் நாள் ஓர் அறிவிப்பு வெளிவருகிறது. சென்னைத் தொலைக்காட்சியில் இரவு 8.40 மணிக்கு இந்திச் செய்தி அறிக்கை இடம்பெறும் என்பதுதான் அந்த அறிவிப்பு. முதலமைச்சர் கலைஞர் அவர்களிடம் உடனே தொடர்புகொண்டு இதனைத் தெரிவித்தார் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி. எதையும் விரைந்து செய்யும் திறன் வாய்ந்த முதலமைச்சர் கலைஞர் அவர்கள், அன்றைய மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் உபேந்திராவுடன் தொடர்புகொண்டு, அதனை முறியடித்தார்.

எதையும் முளையில் கிள்ளும் துடிப்பு என்பது திராவிடர் கழகத்திற்கு உண்டு.

இந்தக் காலகட்டத்தில் தமிழர்கள் எப்படி இருக்கின்றனர் என்று மத்திய அரசு வாலை விட்டு (Feeler)ப் பார்ப்பதாகத் தெரிகிறது.

தமிழ்நாட்டில் ரயில்வே துறை செய்யவேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன. வீண் வம்பை விலைக்கு வாங்கவேண்டாமே!

-------------- மயிலாடன் அவர்கள் 8-12-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

1 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இந்தக் காலகட்டத்தில் தமிழர்கள் எப்படி இருக்கின்றனர் என்று மத்திய அரசு வாலை விட்டு (Feeler)ப் பார்ப்பதாகத் தெரிகிறது.//

உண்மை..முளையிலேயே இது போன்ற முயற்சிகளை கிள்ளி எறியவேண்டும்