Search This Blog

4.12.09

காமக் கொடூரன் காஞ்சிபுரம் பார்ப்பன அர்ச்சகரும்-காப்பாற்றாத கடவுளும்

அப்போதெல்லாம் அவர்களைக் காப்பாற்றிய கடவுள்
இப்போது இவர்களைக் காப்பாற்ற முன்வரவில்லையே; ஏன்?

ஆற்றில் தண்ணீர் குடிக்கச் சென்றது ஒரு யானை, அது தண்ணீர் பருகிக் கொண்டிருக்கும்போது தண்ணீருக்கடியிலிருந்த முதலை ஒன்று யானையின் காலைப் பற்றித் தண்ணீருக்குள் இழுத்தது. யானை வலி தாளாமல் கதறியது. முதலை வாயிலிருந்து தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று கடவுள் பெயரைச் சொல்லிச் சொல்லி கதறியழுதது.

அந்த யானையின் கூக்குரல் கேட்டு கடவுள் அந்த இடத்தில் பிரசன்னமானார். யானையை முதலை வாயிலிருந்து மீட்டுக் காப்பாற்றினார் என்பது ஒரு கதை!

*********************************************

மிருகண்டு முனிவருக்கு பல வருடங்களாகப் புத்திரபாக்கியம் இல்லை. தனக்கு ஒரு மகன் பிறக்கவேண்டும் என்று வேண்டி அவர் போகாத ஊர் இல்லை; பிரார்த்திக்காத கடவுள் இல்லை.

ஒருநாள் கடவுள் மிருகண்டு முனிவர் கனவில் தோன்றினார்.

உனக்கு நீண்டகாலம் வாழக்கூடிய மகன் வேண்டுமா? அல்லது 16 வயது வரையில் மட்டுமே வாழக்கூடிய நற்குணங்கள் படைத்த மகன் வேண்டுமா? - என்று கேட்டார்.

மிருகண்டு முனிவர் 16 வயது வரையில் வாழும் நல்ல குழந்தை கொடுத்தால்போதும் என்று வரம் கேட்கிறார்.

மிருகண்டு முனிவருக்கு ஓர் அழகான குழந்தை பிறக்கிறான்; அவனைப் பாலூட்டிச் சீராட்டி பாசத்தோடு வளர்க்கிறார். மார்க்கண்டேயன் என்பது அவனது பெயர்.

அவனுக்கு 16 வயது நிறையப் போகிறது. 16 வயது நிறைவு நாளன்று மரணத்துக்குக் கடவுளான எமதர்மனின் தூதர்களான யமகிங்கரர்கள் அவனது உயிரை எடுக்க வருகிறார்கள்.

அவன் கோவிலுக்குள் ஓடிப்போய் சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டு பகவானே காப்பாற்று என்று கதறுகிறான். யமகிங்கரர்களோ பாசக் கயிற்றை வீசுகிறார்கள்.

சிவலிங்கத்தையும் சேர்த்துப் பாசக் கயிற்றால் இழுக்கிறார்கள். அப்போது அங்கே சிவபெருமான் தோன்றி யமனுக்கு சாபம் கொடுத்துவிட்டு மார்க்கண்டேயனைக் காப்பாற்றுகிறார். அது மட்டுமல்ல, அவனுக்கு எப்போதும் 16 வயதுதான் என்று வரமும் தருகிறார்.

இதுவும் ஒரு கதைதான்!

******************************************************************

மயிலாப்பூரில் ஒரு சிவபக்தர். அவருக்கு ஒரு மகள். பூம்பாவை என்று பெயர்.

அவளைத் திருஞான சம்பந்தருக்குத்தான் திருமணம் முடிப்பது என்று சபதமிட்டுக் கொள்கிறார் அந்த சிவபக்தர். ஒருநாள் -

அந்தப் பெண் இறந்து போய்விடுகிறாள். மனமுடைந்த சிவபக்தர் அந்தப் பெண்ணின் உடலை எரித்து சாம்பலை சேகரித்து ஒரு செம்பில் வைத்து பத்திரமாக மூடிவைக்கிறார்.

சில காலம் கழித்து -

மயிலாப்பூருக்கு திருஞான சம்பந்தரே வருகிறார். அவரைத் தனது இல்லத்திற்கு அழைத்து வந்து அவர் முன் சாம்பலடங்கிய செம்பை முன் வைத்து கண்ணீர் மல்க உங்களுக்குத் திருமணம் செய்து தரவேண்டும் என்ற ஆசையோடு வளர்த்து வந்தேன் என்று கம்மிய குரலில் கூறுகிறார்.

திருஞான சம்பந்தர் கவலைப்பட வேண்டாம்; உங்கள் பெண்ணை நான் உயிர்ப்பித்துத் தருகிறேன் என்று கூறிவிட்டு

மட்டிட்ட புன்னைக் கான

மடமயிலைகட்டிட்டம் கொண்டான்

கபாலீச்சுரம் அமர்ந்தான்...

என்ற பதிகத்தைப் பாடினார். என்ன ஆச்சரியம் அந்தப் பெண் உயிரோடு எழுந்துவிட்டாள்!

இதுவும் ஒரு கதைதான்!

********************************************************

திருநாவுக்கரசர் என்னும் அப்பரடிகளுக்கு ஒரு வெறி பிடித்த பக்தர் பெயர் அப்பூதியடிகள்.

தனது பிள்ளைகளுக்கெல்லாம் அப்பர் சுவாமிகளின் பெயரையே சூட்டியிருந்தார்! ஒருநாள்

அப்பர் அவரது வீட்டிற்கு எழுந்தருளினார். அவருக்கு விருந்து படைக்க அப்பூதியடிகள் அறுசுவை உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அவரது மகன் தலைவாழை இலை பறித்து வரக் கொல்லைப்புறம் சென்றான். அவன் இலை அறுத்துக் கொண்டிருந்தபோது ஒரு பாம்பு அவனைத் தீண்ட அங்கேயே விழுந்து இறந்துவிட்டான்.

தகவலறிந்த அப்பூதியடிகள் பதறிப் போனார். எனினும் மகன் இறந்த செய்தியை வெளியிட்டால் அப்பர் தன் இல்லத்தில் விருந்துண்ணும் பாக்கியம் தனக்குக் கிடைக்காமல் போய்விடுமே என்று நினைத்து மகன் இறந்த செய்தியையே மறைத்துவிட்டு விருந்து படைக்க முன்வந்தார். அப்பர் கேட்டார் உன்னுடைய இன்னொரு மகன் எங்கே? என்று!

அவரது காலடியில் வீழ்ந்து கதறி நடந்தவற்றைச் சொல்லி மன்னிப்புக் கோரினார் அப்பூதியடிகள்.

அப்பர் சுவாமிகள் அவரது பக்தியை மெச்சினார். ஒரு பாடலைப் பாடினார்;

பாம்பு கடித்து இறந்த மகன் உயிர் பிழைத்து எழுந்து வந்தான்!

- இதுவும் ஒரு கதைதான்!

*********************************************************************

திருச்செங்காட்டாங்குடி என்று ஒரு ஊர். அந்த ஊரிலே ஒரு சிவனடியார். சிறுத்தொண்டர் என்று பெயர். அவர் சிவபக்தர்தான். அவரை அணுகி என்ன கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் கேட்டதைக் கொடுக்கக்கூடியவர். அவரது இல்லத்துக்கு ஒரு சிவனடியார் வந்தார். வழக்கம் போல் சிறுத்தொண்டர் என்ன வேண்டுமென்று கேட்டார்.

‘‘உன் மகனை வெட்டிக் கறி சமைத்து எனக்கு விருந்து வை’’ என்று கேட்டார் சிவனடியார்.

சிறிதும் தயக்கமின்றி சிறுத்தொண்டர் தனது மகனை வெட்டி பிள்ளைக்கறி சமைத்து சிவனடியாருக்கு விருந்து படைக்க முன் வந்தார்.

பிள்ளைக் கறி கேட்ட அந்த சிவனடியார் வேடத்தில் வந்த சிவபெருமான்,

சிறுத்தொண்டர் முன் தோன்றி பக்தா உன் பக்திக்கு மெச்சினேன் என்று பாராட்டி கறி சமைக்கப்பட்ட மகனுக்கு உயிர் கொடுத்தார்.

- இதுவும் ஒருகதைதான்!

திருவாரூரில் மனுநீதிச் சோழன் - தனது அரண்மனை வாயிலில் ஓர் ஆராய்ச்சி மணியைக் கட்டித் தொங்கவிட்டிருந்தான்.

பொதுமக்களுக்கு ஏதாவது குறை என்றால் அந்த மணியை அடித்தால் மன்னனே நேரில் வந்து குறை கேட்டு கோரிக்கையை நிறை வேற்றி வைப்பான்!

ஒருநாள் ஆராய்ச்சி மணி ஒலித்தது. மன்னன் வெளியே வந்து பார்த்தபோது மணியின் கயிற்றை தன் வாயால் கவ்வி ஒலியெழுப்பிக் கொண்டிருந்தது ஒரு பசு மாடு. அதன் கண்களிலிருந்து கண்ணீர் கரகரவென்று சுரந்து கொண்டே இருந்தது.

மந்திரியை அழைத்த மன்னன்,

‘‘இந்தப் பசுவுக்கு என்ன குறை?’’ என்று கேட்டான்.

‘‘மன்னா, இந்தப் பசுவின் கன்று மீது நமது இளவரசர் தேரேற்றிக் கொன்றுவிட்டார்’’ என்று காரணம் சொன்னார் அமைச்சர்.

அப்படியா? - கன்றை இழந்து தவிக்கிறது இந்தப் பசு; இது போலவே கன்றின் மேல் தேரை ஏற்றிக் கொன்ற எனது மகனை இளவரசனை நடுவீதியில் கிடத்தி தேரை ஏற்றிக் கொன்று விடு என்று கட்டளையிட்டான் மனுநீதிச் சோழன்.

இளவரசனைத் தெருவில் கிடத்தி தேர் ஏற்றி நீதி வழங்கப்பட்டபோது தியாகேசப் பெருமான் தோன்றி கன்றுக் குட்டிக்கும் இளவரசனுக்கும் உயிர் கொடுத்து அருள் பாலித்தார்!

இதுவும் ஒரு கதைதான்!

************************************************************

இதோ இன்னொரு கதை அல்ல - நடந்த உண்மை நிகழ்வு.

காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக இருந்த தேவனாதக் குருக்கள், கோவிலுக்குள் சாமி சிலையின் பின்புறம் பல பெண்களை அழைத்துச் சென்றுஅந்த மறைவிடத்தில் மன்மத லீலைகள் நடத்தி வந்தார். இப்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

தேவநாதக் குருக்களின் காமவலையில் சிக்கி வாழ்வை இழந்த எத்தனையோ பெண்களில் ஒரு பெண்போலீசாரிடம் தந்த வாக்குமூலம்:-

நான் காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகில் உள்ள மச்சேஸ்வரர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றேன். அப்போது அர்ச்சகர் தேவநாதன் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார். சாமிக்கு கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டிய பிறகு திடீரென அவர் நாக்கை நீட்டு என்றார். உடனே அவர் நாக்கில் ஏதோ மருந்தை லேசாக தடவினார்.

அதை தடவிய சிறிது நேரத்தில் நான் அரை மயக்கத்திற்கு தள்ளப்பட்டேன்.

அப்போது கருவறையில் என்னுடன் உறவு கொள்ள விரும்புவதாக கூறினார். நான் மறுத்தேன்.

அதையும் மீறி எனது சம்மதம் இல்லாமல் என்னுடன் உறவு கொண்டார்.

மேலும் அந்த காட்சியை அவருடையசெல்போனில் படம் பிடித்தார்.

பிறகு அடிக்கடி எனக்கு போன் செய்து, செல்போனில் உனது படம் உள்ளதென மிரட்டி பலமுறை கோவில் கருவறையிலும், வீட்டிலும் என்னுடன் உறவு கொண்டார்.

இப்போது நான் உண்மையை சொல்ல வேண்டிய மனநிலையில் வந்துள்ளேன்.

- இவ்வாறு அந்த பெண் வாக்கு மூலத்தில் கூறி இருக்கிறார்.

***********************************************************************

யானையைக் காப்பாற்றிய கடவுள்; கறி சமைக்கப்பட்ட பாலகனை உயிர்ப்பித்துத் தந்த கடவுள்; தேர் ஏறிக் கொலையுண்ட கன்றையும், இளவரசனையும் காப்பாற்றிய கடவுள்

தான் குடிகொண்டுள்ள கோவிலில் தன் பின்பக்கமே வாழ்விழந்த பெண்களை காமக் கொடூரனின் மிருக இச்சையிலிருந்து காப்பாற்றாமல் சும்மா இருந்து விட்டாரே; ஏன்?

நன்றி: ‘முரசொலி’, 2.12.2009

2 comments:

மிரட்டல் said...

சாமி தூங்கும் நேரமா பார்த்து சாமியார் தன்னுடைய வேலையை ஆரம்பித்திருப்பார்.அவர்தான் பல வருடங்களாக அந்த அறையில் வேலை பார்த்தவராயிற்றே.சாமி எப்போது தூங்கும் எப்போது முழித்திருக்குமென அவருக்கு இதுகூடவா தெரியாமல் போயிருக்கும்.

kavinsandron said...

லண்டனில் சில வருடங்களுக்கு முன்
வினாயகர் கோவிலில் தமிழ் அர்ச்சகரின் காம லீலை http://www.thisislocallondon.co.uk/news/topstories/633533.hindu_priests_rape_conviction_was_unsafe_court_hears/