Search This Blog
22.9.08
பெரியார் விருதுக்கு உரியார் கலைஞரே!
பெரியார் விருதுக்கு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் உரியார் என்பதற்கான காரணத்தை, தந்தை பெரியார் அவர்கள் கூறிய, எழுதியவற்றை எடுத்துக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
திருச்சியில் நேற்று (21.9.2008) மாலை தி.மு.க. சார்பில் நடை பெற்ற முப்பெரும் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரை யாற்றியதாவது:
கலைஞர் அறிவாலயத்தை அற்புதமாக அமைத்து, இன்றைக்கு மாநாடு போல நிகழ்ச்சி களை தமிழகப் போக்குவரத் துத் துறை அமைச்சர் அருமைச் சகோதரர் கே.என். நேரு ஏற்பாடு செய்துள்ளார். பெரியார் விருதை இன்றைக்குத் தலைவர் கலைஞர் பெற்றிருக்கிறார். கலைஞர் அவர்கள் குறித்து நாம் என்ன சொல்கிறோம் என்பதைவிட, பெரியார் என்ன கூறுகிறார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் பழைய வரலாறுகள் இன்றைய இளைஞர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
நம் சமூகத்தில் ஒரு தவறான மூடநம்பிக்கை இருக்கிறது. அதாவது ஒருவர் உயிருடன் இருக்கும்போது பாராட்டக் கூடாது என்று நினைக்கின்றனர். வாழும் போதும் பாராட்ட தவறுபவர்கள் இச்சமூகத்தில் நிறையவுள்ளனர்.
ஆனால் இன்றைக்கு அதற்கு மாறாகப் பெரியார் விருது பெறும் கலைஞர் அவர்கள், பலராலும் சரியான நேரத்தில் பாராட்டப்படுகிறார். சென்னையில் எப்படி அண்ணா அறிவாலயம் இருக்கிறதோ, அதைப்போல தந்தை பெரியார் தலைமையிடமாகக் கொண்ட திருச்சியில் கலைஞர் அறிவாலயம் எழுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் வாழும்போது கலைஞர் அவர்கள் சிறப்பாகப் பாராட்டுப் பெறுகிறார்கள்.
அதேநேரம் எந்தப் பெரியார் விருதை கலைஞர் அவர்கள் பெறுகிறார்களோ, அதே பெரியார் 1967ஆம் ஆண்டு கலைஞர் குறித்து என்ன பேசினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா ஆட்சியில், கலைஞர் அவர்கள் அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, திட்டக்குடி ஊராட்சி மன்றத்தில் கலைஞர் படத்தினை 12.06.1967இல் பெரியார் திறந்து வைக்கிறார்.
நாங்களெல்லாம் பெரியார் குருகுலத்து மாணவர்கள். அப்படிப்பட்ட மாணவரான கலைஞரின் படத்தைத் தலைவர் பெரியார் திறந்து வைக்கிறார் என்றால், இதிலிருந்தே கலைஞரின் சிறப்புகளை அறிய முடியும்.
இதோ பெரியார் பேசுகிறார், கேளுங்கள்.
ஒருவருடைய படத்தினைத் திறப்பதென்றால் அவரைப் பற்றி அவரது தொண்டுகளைப் பற்றி சிலவற்றைச் சொல்ல வேண்டியது அவசியமும், சம்பிரதாயமும் ஆகும். நண்பர் கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள அறிவாளிகளில் முன்வரிசையில் உள்ள அறிவாளி ஆவார். தி.மு.கழகம் இந்த அளவு பரவுவதற்கு அவரது முயற்சியும், அறிவும்தான் காரணமாகும். அண்ணாதுரை கழகத்தின் தலைவராக இருந்தார்; அவரும் கழகத்தைப் பரப்பினார் என்றாலும், கருணாநிதியின் உழைப்பும், முயற்சியும் இல்லாவிட்டால் கழகத்தின் செல்வாக்கு இந்த அளவு வளர்ந்து இருக்காது. இதைச் சொல்வதால் அண்ணாதுரையை நான் குறைத்துச் சொல்வதாகாது. அண்ணா துரைக்குப் பல வேலை, பல கருத்து! அவர் ஒருவராலேயே கழகத்தை இந்த அளவு பரப்பி இருக்க முடியாது. கருணாநிதி அவர்கள் அண்ணாதுரைக்கு வலது கையாக இருந்து உதவி வந்திருக்கிறார்.
அண்ணாதுரை மிகவும் கெட்டிக்காரர்தான், ஆனால் கருணாநிதிக்கு இருக்கிற முன் யோசனை அவருக்குக் கிடையாது. நண்பர் இளம்வழுதி சொன்னது போல, பள்ளிக் கூடத்தை விட்டதும் என்னிடம் நேராக வந்தார். எனக்கு பொதுத்தொண்டு செய்ய ஆவலாக இருக்கிறது என்று கூறினார். நானும், என்னிடம் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் நீங்களும் இருங்கள் என்று சொன்னேன். எனது வீட்டிலேயே இருந்தார் குடிஅரசு அலுவலகத்திற்குப் போய் வந்துகொண்டிருந்தார். பிறகு எழுதவும், மேடையில் பேசவும் ஆரம்பித்தார். நல்ல கருத்தாளர் ஆனார். எழுச்சியுள்ளவரானார். வர வர நல்ல கருத்து பிடிபட்டது. பிரசாரக் கலையும் பிடிபட்டது.
பின்னர் எங்களை விட்டு விலகினாலும் அண்ணாதுரைக் கூறாமல், அவர்தான் எங்கள் தலைவர், அவரது கொள்கைதான் எங்களுக்கும் என்று சொல்லி நல்ல அளவு மக்களிடையே செல்வாக்குப் பெற்றுவிட்டனர்.
அண்ணாதுரையாவது, கருணாநிதியாவது என்னைக் குறிப்பிட்டு என் காரியத்தைக் குறிப்பிட்டு இதுவரை ஒரு சிறு குறைகூட கூறியது கிடையாது. இன்றைக்கும் அண்ணாதுரை என் தலைவர் பெரியார்தான் என்று கூறுகிறார்.
அதேபோல் கருணாநிதியும், என்னை எங்கு கண்டாலும் செல்லப்பிள்ளை மாதிரி நெருங்கி, மிக உரிமையோடு உரையாடுவார். இன்னமும் தி.மு.கவுக்கு கருணாநிதியின் தொண்டு பயன்படத் தக்கதாகும். அவரது தொண்டும், முயற்சியும் பிறர் கடைப்பிடிக்க வேண்டியதாகும் என அவரது படத்தைத் திறந்து வைத்துப் பாராட்டினார்.
அதேபோல் 03.06.1972 இல் இன்றைய முதல்வர் கலைஞர், அன்றைக்கும் முதல்வராக இருக்கிறார். அப்போது கலைஞரின் வயது 43. அவரைத் தந்தை பெரியார் எப்படி வாழ்த்தினார் தெரியுமா?
பெரியார் விருதுக்கு உரியார் இவரை விட்டால் பிறர் யார்? என்பதை இக் கடிதம் பறைசாற்றும்.
இதோ படிக்கிறேன், கேளுங்கள்!
மாண்புமிகு கலைஞர் டாக்டர் கருணாநிதி அவர்களுக்கு 49ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா நடப்பது குறித்து நான் மிகுதியும் மகிழ்ச்சியடைகிறேன்.
டாக்டர் அவர்களது வாழ்நாள் ஒவ்வொன்றும் மக்கள் நலம் பற்றி சிந்திப்பதிலும், தொண்டாற்றுவதிலுமே நடந்த கழிவதை நான் மனப்பூர்வமாக உணர்கிறேன். மனம் பூரித்து திருப்தி அடைந்து வருகிறேன். டாக்டர் செய்து வருகிற காரியங்கள் பெரிதும் மற்றவர் சிந்திக்கக்கூட பயப்படும்படியான காரியங்கள் என்பதோடு அவைகளை வெகு எளிதிலே செய்தி முடித்துவிடுகிறார்.
இதன் பயனாகவே அரசியல் உலகில் அவருக்கு எதிர்ப்பாளர்கள் அதிகமாகி வருகிறார்கள். காரணம் டாக்டர் அவர்களது ஆட்சி நீண்ட நாளைக்கு நிலைத்து விடுமோ என்கின்ற பொறாமையும், வேதனையும்தான் என்றாலும் டாக்டர் அவர்கள் யாருடைய எதிர்ப்புக்கும் பயப்படாமல் எப்படிப்பட்ட தொல்லைக்கும் சளைக்காமல் துணிந்து காரியமாற்றி வருகிறார். பொதுவாகவே சமுதாயத்துறையில் சீர்திருத்தத் தொண்டு ஆற்றினால் யாருக்கும் சுயநலக்காரருடையவும், பழைமை விரும்பிகளினுடையவும் எதிர்ப்பு ஏற்பட்டுத்தான் தீரும். கலைஞர் டாக்டர் அவர்களுடைய புரட்சிகரமான தொண்டுக்கு எதிர்ப்பும், தொல்லையும் ஏற்படுவது அதிசயமல்ல. அவற்றைப்பற்றி சிறிதும் இலட்சியம் செய்யாமல் துணிந்து தொண்டாற்றி வரும் டாக்டர் அவர்களை மனதாரப் பாராட்டி அவர் வாழ்வு எல்லையற்று நீண்டு மக்களுக்கு புதிய உலகம் ஏற்படவேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.
என அற்புதமாக பெரியார் குறிப்பிடுகிறார்.
பெரியார் விருது பெற கலைஞர் அவர்களுக்கு முழு சிறப்பும் உண்டு என்பதைப் பெரியார் பேச்சுகளே நமக்கு உணர்த்துகின்றன. அதேபோல் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, கலைஞர் விருது வழங்குவது மிகவும் பொருத்தமாகும். மு.க.ஸ்டாலின் எப்போதுமே எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாதவர். மிசாவின் போது சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஸ்டாலினை, அவரின் உறுதியை, திறமையை நான் நேரில் கண்டிருக்கிறேன்.
அதேபோன்று ஆர்க்காடு வீராசாமி அவர்களுக்கு அண்ணா விருதும், துரைமுருகன் அவர்களுக்குப் பாவேந்தர் பாரதிதாசன் விருதும் வழங்கப்பட்டு, சிறப்புச் செய்வது சாலப் பொருத்தமாகும். சென்னையில் அண்ணா அறிவாலயம் போல, திருச்சியில் கலைஞர் அறிவாலயம் பெரும் வரலாறாய் நிமிர்ந்து நிற்கிறது. நீங்கள் தி.மு.கழகத்தைப் பாதுகாக்கின்ற வாளாக இருங்கள். நாங்கள் அதைக் காக்கின்ற கேடயமாக இருப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் பேசினார்.
--------------------------நன்றி: "விடுதலை" 22-9-2008
Labels:
திராவிடர் இயக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இனிமேல் தமிழக முதல்வர் டாக்டர் பெரியார் என்று கூறலாம் அல்லவா?
எல்லை மீறும் புகழ்ச்சி வியாபாரிகளிடம், எச்சரிக்கை தேவை!
‘பெரியார் விருது’ பெற்ற கலைஞர் பார்வைக்கு...
ஒரு தலைவர் தனது புகழுரையில், பெரியாரைவிட கலைஞர் உயர்ந்து நிற்கிறார் என்றும்; பெரியார் உயர்சாதிக்காரர், கலைஞரோ மிகவும் பின் தங்கிய சாதிக்காரர். எனவே பெரியாரைவிட கலைஞர் மிஞ்சி நிற்கிறார் என்றும்; இலக்கியப் படைப்புகளில் அண்ணாவையும் கலைஞர் மிஞ்சியவர் என்றும் பேசினார். மற்றொரு தலைவரோ, கலைஞருக்கு விருது வழங்கக்கூடிய போதுமான தகுதி பெரியாருக்கு இல்லை என்ற பொருளில் - பெரியார் விருது கலைஞருக்கு போதுமானது அல்ல; பெரியார் விருதையும் தாண்டி நிற்கும் விருது கலைஞர் விருதாகவே இருக்கும் என்றும் , கலைஞருக்கு தகுதியான விருது கலைஞர் விருதாக மட்டுமே இருக்க முடியும் என்றும் அவர் பங்குக்கு பேசினார். பெரியார் நூல்களை அரசுடைமையாக்கி விடக் கூடாது என்ற ஒரே கவலையோடு கலைஞரைப் பாராட்டத் துடித்த கருஞ்சட்டைத்தலைவர் - அண்ணாவைவிட, சிறந்த தலைவர் கலைஞர் என்றும், இதை பெரியாரே கூறி யுள்ளார் என்றும், இன்னும் ஒரு படி மேலே போனார்.
இப்படி எதார்த்தங்களுக்கு மாறாக - கலைஞரை சங்கடத்துக்கு உள்ளாக்கும் புகழ்ச்சி வியாபாரிகள் - ஏற்கனவே கலைஞரை வசைமாறி பொழிவதையே லட்சியமாகக் கொண்டு செயல்பட்டவர்கள் தான் என்பதும் கலைஞர் அறியாதது அல்ல! இந்த அதீத புகழுரைகளால் கலைஞர் மனம் குளிர்வார் என்று, இவர்கள் கருதுவதே - கலைஞரைப் பற்றி இவர்கள் மிக பலவீனமான மதிப்பீடுகளைக் கொண்டுள்ளார்கள் என்பதை உணர்த்தி நிற்கிறது.
இவற்றுக்கும் கலைஞரின் பெரியார் திடல் உரையிலேயே பதில் இருக்கிறது. “நானே வளர்ந்தேன் - இவைகளையெல்லாம் நானே கற்றுக் கொண்டேன் - நானை இவைகளையெல்லாம் சிந்தித்தேன் - நானே புதிய ஞானோதயம் பெற்றேன் - எனவே இவைகளை யெல்லாம் சொல்லுகிறேன் என்று சொல்வது சுலபம்... ஆனால் எதிர்காலத்திலே வரலாறு எழுதுகின்றவர்கள் உண்மைகளைத்தான் எழுதுவார்கள். அந்த உண்மைகளை எழுதும் போது, அதிலே ஒரு பொய்யனாக நான் இருக்க விரும்பவில்லை” என்று கலைஞர் அருமையாக படம் பிடித்துள்ளார்.
மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் போன்றவர்கள் காங்கிர° கட்சியிலே இருந்தாலும்கூட - தமிழ் நாட்டில் இன்று கிராமங்களில் தலைவிரித்தாடும் சாதி, மூடநம்பிக்கைகள், கட்டை பஞ்சாயத்துகளுக்கு எதிரான சமூகப் புரட்சியை கலைஞர் நடத்திட வேண்டும் என்ற ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை முன் வைக்கிறார்கள். தங்கபாலு போன்றவர்கள் - சமூகநீதிக்கு நேர்ந்துள்ள ஆபத்துகளை பட்டிய லிட்டுக் காட்டுகிறார்கள்.
ஆனால், பெரியார் இயக்கத் தலைவர்களோ, பாராட்டுப் பத்திரங்களை வாசிப்பதற்கு மட்டுமே துடித்துக் கொண்டு நிற்கிறார்கள். பெரியாரையும் - அண்ணாவையும் மிஞ்சிய சாதனையாளர்கள் எவருமே இருக்கக் கூடாது என்று நாம் கூறவரவில்லை; அத்தகைய சாதனையாளர், புரட்சியாளர் வருவதுதான் பெரியார்-அண்ணா கொள்கைக்கான வெற்றியாக இருக்க முடியும். ஆனால், சமூகத்தில் அந்த நிலை வந்து விட்டதா என்பதே பரிசீலிக்கப்பட வேண்டிய கேள்வி. பெரியார் விருது பெற்றுள்ள கலைஞரின் பார்வைக்கு நாம் கவலையுடன் சில பிரச்சினைகளை அவரது கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறோம்.
• தமிழக கிராமங்களில் - சாதி வெறியும் தீண்டாமை யும் தலை விரித்தாடுகிறது. இரட்டைக் குவளைகள், இரட்டைச் சுடுகாடுகள் தொடருகின்றன; தீண்டப் படாத மக்களுக்கு கோயில் நுழைவு உரிமை மறுக்கப்படுகிறது; சாதி மறுப்புத் திருமணங் களுக்கு பாதுகாப்பு இல்லை; சாதி வெறிக்கு கட்சித் தடைகள் ஏதுமில்லை; ஆதிக்கசாதியினர் வாழும் ஒவ்வொரு கிராமத்திலும் அவர்கள் சாதி வெறியில் ஒரே அணி தான். சாதி வெறிக்கோ, தீண்டாமைக்கோ, துணை போகும் கழகத்தினர் மீது - சாதி ஒழிப்பு பேசும் கழகங்கள் நடவடிக்கை எடுத்தாலே கிராமங்களில் பாதி சாதிக் கலவரங்கள் நின்று போகும் வாய்ப்பு உண்டு! தி.மு.கழகம், இதை ஏன் கண்டிப்பாக பின்பற்றக் கூடாது என்பதே நமது கேள்வி.
• தமிழ்நாட்டில் - மதவெறி சக்திகள் தலைவிரித்தாடு கின்றன. பெரியாரைப் பற்றி இந்து முன்னணி - பா.ஜ.க. - மேடைகளில் எச். இராஜா போன்ற பார்ப்பனர்கள் கீழ்த்தரமாக பேசுகிறார்கள். பெரியார் இயக்கங்களின் கூட்டங்களில் கலவரம் செய்கிறார்கள். கோவையில் - இயக்குனர் சீமான் பேசிய பகுத்தறிவுப் பிரச்சாரக் கூட்டத்தில் இந்து முன்னணியினர் பெரும் கலவரத்தை நடத்தினர். சென்னைக்கு அருகே உள்ள போரூரில் தொடர்ந்து பெரியார் பிரச்சாரக் கூட்டங்கள் மதவெறியர்களால் குலைக்கப்படுகின்றன; மத வெறி சக்திகளுக்கு காவல்துறை ஆதரவாகவே செயல்படுகிறது.
• பெரியார் திராவிடர் கழகம் - மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலங்கள் நடத்த அனுமதி மறுக்கப் படுகிறது. திராவிட இயக்க தமிழர் பேரவை - தி.மு.க.வின் ஆதரவு அமைப்பு தான். அந்த அமைப்பின் சார்பில் சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் பிரச்சாரக் கூட்டம் நடத்த அனுமதி கேட்ட போது, காவல்துறை மறுத்து விட்டது; அதற்கு காவல்துறை கூறிய காரணம் தான் விசித்திரமானது.
சிந்தாதிரிப்பேட்டையில் இந்து முன்னணி தலைமை அலுவலகம் இருப்பதாலும், அதே பகுதியில் இந்து முன்னணி தலைவர் இராம கோபாலன் தங்கியிருப்பதாலும், அனுமதி மறுக்கப்படுகிறது என்று காவல்துறை எழுத்து மூலம் பதில் தந்துள்ளது. மீண்டும் அண்ணா நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கேட்டும், காவல் துறை எழுத்துப்பூர்வமாக அண்ணா நூற்றாண்டு விழாவுக்கும் அனுமதி மறுத்துள்ளது.
• அரசு அலுவலகங்களில் கடவுள் படங்களை அகற்றுமாறு - அண்ணா ஆட்சிக்கு வந்தவுடன் பிறப்பித்த அரசாணை இன்னும் உயிரோடு இருக்கிறது. ஆனால், அரசு அலுவலகங்களும், காவல் நிலையங்களும் - பஜனை மடங்களாகவே காட்சி அளிக்கின்றன.
• தமிழ் நாட்டில் அரசு அலுவலகங்களில் தாழ்த்தப்பட்டோர் - பழங்குடியினருக்கான 20000 பதவிகள் பூர்த்தி செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் படித்து வேலை வாய்ப்பின்றி தவிக்கும் நிலையில், இப்படி ஒரு அவலம் தொடருகிறது.
• இப்போது தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட் டோர் வேலை வாய்ப்புகளை - தனியார் துறையில் மட்டும் தான் பெற முடியும். பொதுத் துறை நிறுவனங்கள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநாடுகளில் தனியார் துறைகளில் இடஒதுக் கீட்டை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டு வருகின்றன. இந்த நிலையில் இதற்காகவே அமைக்கப்பட்ட மத்திய அரசின் குழு தனியார் துறை இடஒதுக்கீட்டையே கைகழுவ முடிவு செய்துவிட்டது. அறிவிப்பு வந்து 15 நாட்கள் ஓடி விட்டன. அரசு சார்பில் - எந்த எதிர்ப்பும் வரவில்லை. பார்ப்பனர்களுக்கு ஆதரவாக உ.பி.யில் ஆட்சி நடத்தும் முதல்வர் மாயாவதி கூட மாநிலத்தின் தனியார் தொழிற்சாலைகளில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை, சட்டப்பூர்வமாக்கியிருப்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
• 17 ஆண்டுகாலமாக சிறையில் வாடிவரும் நளினி, பேரறிவாளன் உள்ளிட்டோர், தங்களின் விடுதலையை கோரி நிற்கிறார்கள். ராஜிவ் கொலையில் நேரடி தொடர்புடைய பலரும் மரணமடைந்துவிட்டனர். வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதற்கு சட்டரீதியான நியாயங்களும், மாநில அரசுக்கு உரிமைகளும் இருந்தும்கூட கலைஞர் இதைக் கண்டு கொள்ளாமல் இருக்கலாமா என்ற கேள்வியை வேதனையுடன் எழுப்புகிறோம்; கலைஞர் ஆட்சியிலே இவர்களுக்கு விடிவு கிடைக்காவிடில் - வேறு எந்த ஆட்சியில் கிடைக்க முடியும்? இதைப் பரிசீலிப்பதற்கு - தகுதியுள்ள ஒரே ஆட்சி கலைஞர் ஆட்சி தானே? அன்று தூக்கில் தொங்கிய மலேசியா கணபதிக்கு குரல் கொடுத்த கலைஞர், தோழர் தியாகு - புலவர் கலிய பெருமாள் உள்ளிட்டோரை, தூக்குத் தண்டனையிலிருந்து, காப்பாற்றிய கலைஞர், இன்று, பெரியார் குடும்பத்தின் பிள்ளை பேரறிவாளனுக்கு, நளினிக்கு - தோழர்களுக்கு பரிவு காட்ட வேண்டாமா?
• தமிழ்ச் செல்வன் - படுகொலைக்கு கண்ணீர் கவிதை வடித்து, உள்ளத்தின் உணர்வுகளை வெளிக்கொட்டினார் கலைஞர். பார்ப்பன சக்தி கள் உடனே மிரட்டின. அவர்கள் எதைச் செய் தாலும் மிரட்டவே செய்வார்கள். எந்தச் சூழலி லும் அவர்களின் ஆதரவுக் கரம் கலைஞரை நோக்கி நீளப் போவது இல்லை. ஈழத் தமிழர் களைக் கொன்று குவிக்கும் இலங்கை இராணு வத்துக்கு ஆயுதங்களை வழங்கி வரும் இந்திய அரசு - அவர்களின் ராணுவத்துக்கு உதவிட - இந்தியாவின் பொறியாளர்களையும் அனுப்பி வைத்துள்ள செய்தி அம்பலமாகியுள்ளது. எம்.கே. நாராயணன் - ‘இந்து’ ராம் - சுப்ரமணியசாமி - ஜெயலலிதா - இல.கணேசன் - இராம. கோபாலன் என்ற பார்ப்பன வட்டம், ஈழத் தமிழர்களின் போராட்டத்துக்கு எதிராக, தங்கள் முழு செல் வாக்கையும் பயன்படுத்தி வரும் நிலையில், கலைஞர் ஆட்சி, மவுனம் காக்கலாமா? உண்மை யான வன்மையான கண்டனத்தை எழுப்ப வேண்டாமா?
• அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் மகத்தான சமூகப் புரட்சியை தமிழக முதல்வர் கலைஞர் செய்து காட்டினார். பார்ப்பனர்கள் மீண்டும் உச்சநீதிமன்றம் போனார்கள். கோயில்களில் பின்பற்றப்படும் சம்பிரதாயங்களை மீறக் கூடாது என்று உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து விட்டது. ஏற்கனவே கலைஞர் மிகவும் சாதுர்யமாக காய் நகர்த்துகிறார் என்று என்ன காரணத்தினாலோ கி.வீரமணிகள் எழுதினார்கள். அதை எதிர்த்து சட்டரீதியான நடவடிக்கை களை அரசு மேற்கொள்ளவில்லை.
• அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை தமிழக அரசு 6 கோயில்களில் தொடங்கியது. அதில் அனைத்து சாதியையும் சார்ந்த 207 பயிற்சியாளர்கள் ஓராண்டு பயிற்சியையும் முடித்தனர். இப்போது என்ன நிலைமை? பயிற்சி முடித்து வெளிவந்து,. எந்த கோயிலிலும் அர்ச்சகராக நியமிக்க முடியாத நிலைக்கு, அவர்கள் உள்ளாகி விட்டனர். உச்சநீதிமன்றத்தில் தடையாணை இருப்பதால், நியமனம் செய்ய முடியாது என்று இந்து அறநிலையத் துறை கை விரித்து விட்டது. அனைத்து சாதியினரும், அர்ச்சகர் ஆகும் திட்டம் - மீண்டும் பெரியார் ‘இதயத்தில் தைத்த முள்ளாகவே’ மாறிவிட்டது.
• எல்லாவற்றிற்கும் மேலாக பெரியார் - அண்ணா வழி ஆட்சியில் பெரியார் விருது பெற்ற பிறகும் - கலைஞர் - பெரியார் நூல்களை நாட்டின் பொதுச் சொத்தாக அறிவிக்கத் தயங்கலாமா?
பெரியாரை - தனி உரிமையாக்கும் சிலரைத் திருப்திப்படுத்துவதற்காக இந்த வரலாற்றுக் கடமையை ஆற்றத் தவறலாமா? என்று கேட்கிறோம்.
- இப்படி எத்தனையோ சமூகப் பிரச்சினைகள் சூழ்ந்து நிற்கின்றன. சிலவற்றை மட்டுமே பட்டிய லிட்டோம். இவை அனைத்தும் ஒரு ஆட்சியின் கொள்கை முடிவாலும், நிர்வாக முடிவாலும் செயல்படுத்தக் கூடியவைகள் தான்.
மக்கள் நலத் திட்டங்களில் பெரும் சாதனைகளை படைத்து வருகிறது இந்த ஆட்சி; அதை எவரும் மறுக்க முடியாது. அதையும் தாண்டிய ஆழமான சமூகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவது முன்னுரிமைக்குரிய செயல்பாடு அல்லவா?
இந்தப் பிரச்சினைகளில் கலைஞர் உரிய கவனம் செலுத்தி செயல்படும்போது, கலைஞருக்கு கிடைத்த பெரியார் விருது பெருமையுறும், கலைஞர் மேலும் பெருமை பெறுவார். கலைஞரின் புகழ் வரலாற்றில் பதிந்து நிற்கும்.
நிலைத்த புகழ் செயல்களில் தான் அடங்கியிருக் கிறது. மேடைப் புகழ்ச்சியாளர்களின் புகழாரங்களில் அல்ல என்பது கலைஞருக்கு தெரியாத ஒன்றா?
நன்றி. www.dravidar.org/mulakkam.php
Post a Comment