Search This Blog

13.1.10

தையலே வருக!



கவிஞர் கலி. பூங்குன்றன்



மண்ணில் முளைத்து மலைக்க நின்றாள்
மடி தரை விழுந்து மகிழ்ச்சி தந்தாள்
விண்ணில் பூத்து விழியில் நின்றாள்
வெள்ளிக் காசை வாரி இறைத் தாற்போல்
வெளிச்ச உடையில் வெடுக்கெனச் சிரித்து
விளங்கிக் கொள்ளென உலகை விரித்தாள்.
எல்லாத் திசையிலும் இவளே இவளே
இயற்கைத் தாயின் மகளே! மகளே!!

சலசல வென்றே சங்கீதப் பாட்டு
சலங்கை ஒலியின் இணைப்புக் கூட்டு
கலகல வென்றே களிறின் ஓட்டம்
கண்ணில் பட்டாள் ஓடைப் பெண்ணாள்
உள்ளே நுழைந்து நோட்டம் பார்க்கும்
உயர்தர அலுவல் அதிகாரி போலே
ஓடைப் பெண்ணாள் உயர்ந்தே நடந்தாள்
ஒய்யார நடையில் மிடுக்குக் கூட்டி!
இருபுறம் எங்கும் எழிலின் நடனம்
இனிய பசுமைக் கூத்தின் அரங்கம்!

பச்சைப் பயிரின் காந்தப் பார்வை
பச்சைக் கிளிகளின் காதல் சேட்டை
பூத்த மலரின் முறுவல் தோட்டம்
பூக்கள் தோறும் வண்டுகள் கூட்டம்!
மண்ணின் மகத்துவம் காட்டும் மரங்கள்
மடி யெல்லாம் கனிகளின் காய்ப்புத் தொங்கல்!
பறவைக் கூட்டப் பாடி வீடோ
பசியைப் போக்கும் தாயின் கூடோ!
மயிலின் ஆட்டக் கச்சேரி உண்டு
மந்திகள் கொட்டும் மேளமும் உண்டு
வாசம் நிறைந்த பாசக் கட்டு
வாயெல்லாம் ஊறும் இன்ப ஊற்று!

காளைகளை ஓட்டி காளை வருகிறான்
காலைக் கதிரவன் கனைப்பைக் கேட்டு!
சேலையை இழுத்து இடுப்பில் சேர்த்து
செந்தாமரைப் பெண்ணும் சேர்ந்து வருகிறாள்.
மானிடப் பசிக்கு மருத்துவம் பார்க்க மண்ணை உழுதார் மக்கள் அங்கே!
எங்கும் எங்கும் இயற்கையின் காட்சி
இதய மெல்லாம் இன்பத்தின் ஆட்சி!
எங்கள் நாட்டு நலம் நன்று நன்று இயற்கை வளத்திலோ பெருங் குன்று! குன்று!!
இயற்கையில் ஏற்றங்கள் நிரம்ப உண்டு எண்ணத்தில் தடைகளோ எண்ணிலடங்கா!
ஏட்டிலே எழுதிவிட்டான் என்ன செய்ய?
எல்லாம் அவன் விட்ட வழியே யப்பா!
ஒட்டாது ஒரு துளி மண்ணுங் கூட
உடம்பிலே எண்ணெய்யைத் தேய்த்திட்டாலும்!
கிட்டாது நமக்கெல்லாம் விதியின் கோடு
கிழித்திட்டான்! வேறு வேலை பாரு மய்யா!
வேதாந்தம் இப்படியே பேசிப் பேசி
விடியலையே காணாது போன மக்கள்!
தாழ்வுக்கும் தப்பாமல் தமக்குத் தாமே தருமங்கள் பேசுகின்ற தாழ்வு உண்டு!
காக்கைக்கும் பசியால் கத்துகின்ற
கதவோரம் பல்லிக்கும் பஞ்சாங்கம் பார்க்கும்
பயமென்னும் பயணத்தில் போகு மட்டும்
பலனில்லை; பயனில்லை! எல்லாம் பாழே!
மதமென்றால் ஒரு மயக்கம் மற்ற நாட்டில்
மதம் பிடித்த யானையும் தோற்கும் இந்த நாட்டில்!
பக்தி யிருந்தால் போது மென்பார்
பண்பாடு என்ன விலை என்று கேட்பார்
சடங்கின் சுமைகளை ஏற்றி ஏற்றி
கிடங்கின் கிழமாய்ப் போனான் போனான்!
மனித நேயப் பெரியார் சொன்னார் மனிதனை நினை மற் றதைமற என்றார்!
மானுடம் கேட்டிருந்தால் மாப்பழிதான்
மண்ணுக்கு வந்திடுமோ, மனதில் வைப்பீர்!
விண்ணைத் தொட்டு கன்னம் வருடும்
வியக்கும் கோபுரங்கள் விளைந் தென்ன!
மண்ணை நம்பி பிறந்த மனிதன்
மனத்தில் பேதம் தேவை தானா?
விழுதை ஊன்றி வெல்லக் கனிகள் வழங்கும் மரங்கள் சாதி பார்க்கா.
தின்னும் மனிதன் நாக்குச் சொல்லும்
திகட்டா இப்பழம் சாதி மாம் பழம்!
பிறந்த பிள்ளைக்கு கொடுப்பது இங்கே
பெற்ற தாயின் முலைப் பாலா?
பாழும் சாதியின் கள்ளிப் பாலா
படு மூட நம்பிக்கையின் மடிப் பாலா?
ஒட்டு மாம்பழந் தானே சுவைக்கும்!
ஒட்டு மாம்பழம் இரு கலப் புதானே?
ஒட்டு மாம்பழம் சுவைக்கு மனிதன்
ஒருசாதிக் குட்டையில் உழல்வது சரியா?

சுற்றமும் சாதியும் சுற்றிச் சுற்றி
சோடிகள் சேர்ந்து பெற்ற பிள்ளை குற்றமும் குறையுமாய்ப் பிறக்கு மென்று
கூறுவர் விஞ்ஞான கூடத் தார்கள்
தேவை ஒரு பிள்ளை மட்டும் தானே
தேவை மிஞ்சினால் திருட்டு தானே?
தேர்ந்த ஒரு பிள்ளை வேண்டு மென்றால்
தீர்த்திட வேண்டுமே ஒரு சாதி திருமணத்தை!
பழைய வீட்டை இடித்துத் தள்ளி
பார்க்கும் நண்பர்கள் பாராட்டிச் சொல்ல
வீட்டைக் கட்டி அழகு பார்ப்போம்
விளக்கமுற பூஞ்செடிகள் வாயிலில் வைப்போம்
நாய்க்கும் இட முண்டு; நல்ல விதமாய்
பூனைக்கும் புறாவுக்கும் பேழை யுண்டு
அடடா... புதுமை வாழ்வில் மிதக்க
ஆயிரம் அடிக்குமேல் தாவி விட்டோமே!
ஆனாலும் அடி நெஞ்சில் ஒரே ஒரு நெருடல்....
ஆயிரம் கால பழைமைச் சீக்கை
அடிமைப் படுத்தும் அழுக்குச் சகதியை
அறிவைத் தின்னும் அழிவுப் புழுக்களை பேதம் வளர்க்கும் பொல்லா நோயினை
பாசங் கொட்டி நேசங் காட்டி
அடிமன வாசலில் ஊஞ்சல் கட்டி
ஆராரோ பாடுவது என்ன நியாயம்?

கேட்டால் பழைமைக்கும் புதுமைக்கும் சமரசமாம்
கேழ்வரகில் வேப்பெண்ணெய் ஊற்றச் சொன்னால்
கேள்வி கேட்பானே ஆன மட்டும்
கிடுகிடுக்க வைப்பானே வீரன் போலே!

விடுதலை கொடு தம்பி வீணாய்ப் போன
விகாரப் பழைமைக்கு என்று சொன்னால்
வியர்த்துப் போகின்றான்; வெட வெடப்பு
உடம்பெல்லாம் பெருந்துடிப்பு; உணர்ச்சி இழப்பு!
பெருஞ் சிகிச்சை தேவை இங்கு; பெரியார் சொன்ன
பெருஞ் சிறப்புத் தத்துவங்கள் மலர வேண்டும்
நாட்டு நலம் வீட்டு நலம் எல்லாம் பெருக
நாகரிகப் பேருலகம் பூத்துக் குலுங்க
மனித நேயப் பூக்காடு மணமொண்டு வீச
மனித குலமே சூளுரைக் கவேண்டும்.
தைதை யென்று நாட்டிய மாடி
தையில் பிறக்கும் பொங்கல் நாளில்
புதுமனித ராவோம்-புகழ் மணி ஒலிப்போம்!
பொங்கலோ பொங்கல் - புதிய பொங்கல்!


------------------12-1-2010 "விடுதலை” யில் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் எழுதிய கவிதை


1 comments:

subra said...

தந்தை பெரியார் இன்னும் வாழ்கிறார் என்பதற்கு
இக்கவிதை சான்று ,மிகவும் அருமை அய்யா.
வாழ்த்துக்கள் .சி நா மணியன் .