Search This Blog

31.1.10

கடவுள் - மதவாதிகளே, பதில் சொல்லுங்கள்! -3

மதவாதிகளே, பதில் சொல்லுங்கள்!

மனிதன் ஒழுக்கமான வாழ்வு வாழவேண்டும், குற்றங்கள் புரியாமல் வாழவேண்டும் என அனைவருமே ஆசைப்படுகிறார்கள். நடைமுறை வாழ்க்கையில் ஏராளமான குற்றங்கள் நடைபெறுகின்றன. மனிதன் உருவான காலம் முதற்கொண்டே இத்தகைய குற்றங்கள் நடைபெறுகின்றன. காரணம் என்ன?

கடவுள் படைத்தார் மனிதனை என்கிறார்கள். யூத, கிறித்துவ, இசுலாமிய மதங்கள் கால வரிசைப்படி உண்டாக்கப்பட்டு மனிதனைக் கடவுள் படைத்தது என்கிற கட்டுக் கதையை அவிழ்த்து விட்டன ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே! அந்தக் கதைகளைக் கடவுளே சொல்லிற்று என்றும் கதை விட்டனர். கடவுள் சொன்ன கதைகள் அடங்கிய நூல்தான் இந்த மதங்களின் அடிப்படை; வேத நூல்கள் எல்லாமே!

ஆதாம் என்னும் ஆணை முதலில் படைத்ததாகவும், பின்னர் ஏவாள் எனும் பெண்ணைப் படைத்ததாகவும் மூன்று மதங்களின் கதைகளும் ஒரே மாதிரியாகக் கூறுகின்றன. அந்த ஆதாம், ஏவாள் இணையருக்குப் பிறந்த பிள்ளைகள் காயீன், ஆபேல். இவர்கள் இருவருமே ஒற்றுமையாக இல்லாமல் ஆபேலைக் காயீன் கொலை செய்து விட்டான் என்றும் கதை போகிறது. கொலைவெறி முதல் முறை மனிதரிடையே தோன்றியதற்கு எது காரணம்? யார் காரணம்? கடவுளா? கடவுளின் படைப்பில் ஏற்பட்ட கோளாறா? முன்-ஜென்மக் கர்ம வினையா? தலைவிதியா? கடவுளின் கட்டளையா? கடவுளின் சித்தமா? கடவுளின்(திரு)விளையாடலா? எது?

இத்தகைய குற்றங்களுக்குக் கொடுமையான தண்டனைகள் கொடுப்பதன் மூலம் குறைத்து விடலாம்; மனிதர்களைத் திருத்திவிடலாம் என்று நினைத்துத்தானே மதங்களின் இ.பி.கோ. எழுதப்பட்டுள்ளன. ஹலாச்சா, பைபிள், ஷரியா என்ற பெயர்களில்!

பார்த்தால் கண்ணைத் தோண்டு, கேட்டால் காதை அறு, தொட்டால் காலை வெட்டு, எடுத்தால் கையை வெட்டு, உட்கார்ந்தால் பின்பக்கத்தை அறுத்துவிடு என்றெல்லாம் காட்டு விலங்காண்டித்தனமான தண்டனை முறைகளை விதித்திருக்கிறார்களே! இவற்றால், குற்றங்கள் குறைந்து விட்டனவா? மதம் தலைவிரித்தாடும் நாடுகளில் குற்றங்களே இல்லையா?

மாறாக, மதம் தோற்றுப் போன நாடுகளில் - மனித நேயம் மலர்ந்து உள்ள நாடுகளில் குற்றங்கள் குறைந்து காணப்படுகின்றன. மதச்சார்பற்ற, கடவுள் நம்பிக்கையற்ற வாழ்க்கையை வாழ்பவர்கள் குற்றங்களைக் குறைவாகப் புரிகிறார்கள் என்றே கூறலாம். அப்படிப்பட்ட வாழ்க்கை நிலவும் ஸ்கான்டினேவிய நாடுகளில் (நார்வே, சுவீடன், டென்மார்க் முதலியவை) குற்றங்கள் மிகமிகக் குறைந்த அளவிலேயே உள்ளன என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். (நியூயார்க் பல்கலைக் கழகம் 2008 இல் வெளியிட்ட கடவுள் இல்லாத சமூகம்- (Society without God) எனும் நூல் ஆசிரியர் ஃபில் ஜூகர்மேன்), கடவுள், மத நம்பிக்கையாளர்களின் பதில் என்ன?

கடவுளை மற; மனிதனை நினை என்றார் தந்தை பெரியார்! மனிதனைப் பற்றி நினைத்துச் செயல்படும் மனித நேய வாழ்வு (Humanism) என்பதே - நல்ல வாழ்வு, நல்ல சமூகம் - கடவுள் தேவையில்லாமல் - என்பதுதான்.

கடவுளை நம்பி, கும்பிட்டு, வாழ்வில் வழிகாட்ட வேண்டிக் கொண்டு வாழ்ந்த சர்வாதிகாரி இட்லர் என்ன சொன்னான்? யூதர்களை இலட்சக் கணக்கில் கொன்று குவித்தபோது என்ன சொன்னான்? இந்த உலகத்தைப் படைத்த, சர்வ சக்தியுள்ள கடவுளின் எண்ணப்படியே நான் செயல்படுகிறேன். யூதர்களைக் கொல்வதன் மூலம் கடவுளின் வேலையை நான் செய்கிறேன் என்று சொன்னான். தன் படை வீரர்களின் இடுப்பு பெல்டில் (Belt) பொறித்து வைத்த வாசகங்கள் - கடவுள் நம்முடன் இருக்கிறார் (ஜெர்மன் பழமொழி) என்பதே! இனப்படுகொலைக்குப் பாதுகாப்பாகக் கடவுள் இருந்துள்ளார்.

அண்மையில் ஓர் ஆளை அமெரிக்கக் குடியரசுத் தலைவராக உலகம் பார்த்தது. ஜார்ஜ் புஷ் எனும் அவர், கடவுளிடம் பேசி, அதனுடைய சம்மதத்தைப் பெற்றுத்தான் ஈராக் நாட்டின் மீது போர் தொடுத்து ஆயிரக்கணக்கான முசுலிம்களைக் கொன்று குவித்தார் என்று அவரே தெரிவித்தார். இந்த மடத்தனமான பேச்சைக் கேட்டு உலகமே கைகொட்டிச் சிரித்தது. என்றாலும் நாங்கள் கடவுளை நம்புகிறோம் (In God we Trust) என்கிற வாசகங்களை டாலர் நோட்டில் அடித்து வைத்திருக்கும் அமெரிக்காவின் அதிபர் அது பற்றிக் கவலைப்படவில்லை.

இந்த அமெரிக்க நாட்டின் புகழ் பெற்ற இரட்டைக் கோபுரக் கட்டடங்களை விமானத்தால் மோதி, இடித்துத் தகர்த்து தரை மட்டமாக்கிய அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடன் என்பாரும் அந்தக் கொடுமையைச் செய்ததற்கான காரணம் என்று அல்லாவைக் கைகாட்டி விட்டார். இசுலாத்தின் பெருமையைக் கட்டிக் காப்பாற்றும் புனிதப் போரில் தாம் ஈடுபட்டு இருப்பதாகக் கூறி வருகிறார். உலகின் பல நாடுகளிலும் இந்தப் பகையாளிகள் பரவி, படு பாதகங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இட்லர் எனும் கிறித்துவர், யூதர்களைக் கொன்றார். புஷ் எனும் கிறித்துவர் இசுலாமியரைக் கொன்றார். ஒசாமா எனும் இசுலாமியர் கிறித்துவர்களைக் கொன்றார்.

மதம் எங்கே நல்வழிப்படுத்துகிறது? கடவுள் இல்லாமல் ஒருவரும் நல்லவராக இருக்க முடியாது என்கிறார்களே, அது சரியான கருத்தா? தவறு என்றுதானே வரலாறு நிரூபிக்கிறது?

ஆபிரகாமின் கொடி வழியில் வந்த யூத, கிறித்துவ, இசுலாமிய மதங்களுக்குள் ஏன் இவ்வளவு கொலைவெறி? வணிகப்போட்டி என்பதைத் தவிர வேறு என்ன?

யூதர்கள் பழமொழி ஒன்று முன்பெல்லாம் தேவதைகள் மண்ணில் நடமானடினார்கள் இப்போது அவர்கள் வானுலகத்தில் இருந்தும் காணாமல் போய்விட்டார்கள் என்கிறது. அந்த நிலை வந்ததற்குக் காரணம் யார்? எது?

யேசு, தான் தேவகுமாரன் என்று கூறிக் கொண்டார். ஆனால் (யூதமத) மோசே கடவுளுக்குக் குமாரர்களே இல்லை எனக் கூறிவிட்டார். மற்றவர்களைப் போல யேசுவும் ஒரு மனிதனாகப் படைக்கப்பட்டவர்தான் என்று முகம்மது நபி கூறிவிட்டார் என்கிற கருத்தை இசுலாமிய மனிதநேயர் அபுபக்கர் அல்ரஜி என்பவர் கூறி இருக்கிறார். ஆனால், இன்று நாம் காண்பது என்ன? தேவகுமாரனாக இருந்த யேசு, தேவனாகவே மாறிவிட்ட, மாற்றப்பட்ட அற்புதம் பைபிள் பிரசங்கிகளால் ஏற்பட்டுவிட்டது.

பைபிள் ஒருவரால் எழுதப்பட்டது அல்ல; பலரால் பல காலங்களில் எழுதப்பட்டது. கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்ட மக்கள் (Chosen People) என யாரும் கிடையாது. இந்தப் பிரபஞ்சம்தான் கடவுள், நம்பிக்கை கொள்வதைவிட ஏன், எப்படி என்று காரணம் கேட்பது முக்கியம் என்று பேசினார் பருஷ் பெனடிக்ட் ஸ்பினோஸா எனும் ஆலந்து நாட்டு யூதர். பொது ஆண்டு 1632 இல் பிறந்த இவர் யூத மதத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்; ஆயுளுக்கும் திரும்பி வரக்கூடாது என்று ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இயற்கைதான் கடவுள் என்று கூறியதற்காக ஸ்பினோஸாவுக்குத் தண்டனை தந்தை யூத இனம், கடவுள் தங்களைக் காப்பாற்றுவதற்காகக் கடலைப் பிளந்து வழி அமைத்தார் - பின் தொடர்ந்த ஃபாரோ மன்னரின் படைகளைக் கூண்டோடு அழிக்கக் கடல் நீரைப் பயன்படுத்தினார் என்று கதை கட்டி வைத்துள்ளனர். இத்தனையையும் இவர்களுக்காகக் கடவுள் செய்ததற்குக் காரணம், இவர்கள் கடவுளால் தேர்ந்து எடுக்கப்பட்ட மக்கள் என்பதுதானாம். அதனால்தான், இவர்களைத் தேர்ந்து எடுத்து, இட்லர் கொன்று குவித்தான். ஃபாரோ மன்னனைக் கொன்ற கடவுள் இட்லரைக் கொல்ல வரவில்லையே!

ஆஸ்திரியா நாட்டில் பிறந்த இட்லர் ஜெர்மனியில் கட்சி தொடங்கி, ஆட்சியைப் பிடித்து, ஆஸ்திரியாவின் மீது படையெடுத்து வெற்றி கொண்டு, ஜெர்மனியுடன் சேர்த்துக் கொண்டான். இதற்கான விழாவில் உரையாற்றும்போது இட்லர், ஆஸ்திரிய நாட்டுச் சிறுவன் ஜெர்மனியின் அதிபராக ஆகித் தன் நாட்டை ஜெர்-மனியுடன் இணைப்பது என்பது கடவுளின் விருப்பம்; அதனை என் மூலம் நிறைவேற்றிக் கொண்டது கடவுள் எனக் கூறினான் என்றால் கடவுளின் விருப்பம் போர் நடத்துவதா? லட்சக் கணக்கில் மக்களைப் போரில் கொல்வதா? கிறித்துவக் கடவுளின் ஆசை, யூதர்களைக் கொல்வதா? அப்படியானால், கடவுள் எப்படி கருணை மயமானது?

-----------------------சு. அறிவுக்கரசு அவர்கள் 31-1-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

3 comments:

Bala said...

நண்பா, உங்களுக்கு நேரம் இருந்தால் "எது பகுத்தறிவு" என்கிற விவேகனந்தர் அவர்களின் பேச்சு தொகுப்பையும் அவர் எழுதிய ஞான யோகம் என்கிற புத்தகத்தையும் படித்துப்பாருங்கள்.

நம்பி said...

//Bala said...

நண்பா, உங்களுக்கு நேரம் இருந்தால் "எது பகுத்தறிவு" என்கிற விவேகனந்தர் அவர்களின் பேச்சு தொகுப்பையும் அவர் எழுதிய ஞான யோகம் என்கிற புத்தகத்தையும் படித்துப்பாருங்கள்.
February 6, 2010 2:44 PM //

நேரமிருந்தால் அதே விவேகானந்தரின் நூல்கள் இன்னும் சிலவற்றையும் படிக்கலாம்...ஒரு மனிதனுக்கு...குழந்தை, வாலிபம், இளைஞன், முதியவர் என்ற பருவங்கள் உண்டு...விவேகானந்தருக்கு இளைஞரோடு போய்விட்டது...முதியவராக ஆகும் முன்னே மறைந்து விட்டார்...ஆகையால் ஒவ்வொரு பருவத்திலும் அவருக்கு தோன்றிய கருத்துக்களையும் அந்த காலகட்டத்திற்கு ஏற்றார் போல் அந்த மௌடிககாலத்திற்கு ஏற்றார்போல் வைத்தார்...அவரால் முடிந்த பகுத்தறிவு...அது பல இடங்களில் வேறுபடும்...இந்த கருத்தை சற்று உள்ளவாங்கி பாருங்கள்...இது அவர் வைத்தது தான், அவர் அவரைபற்றியும் ஆராய சொல்லியிருக்கிறார் அது ஏன்? எதற்காக? என்பதனையும் அவரே கூறியிருக்கிறார்...இது தான் இதன் சாரம்சம்...

விவேகானந்தர் நியுயார்க்கில் 1896 இல் ஜனவரி 5 ஆம் நாள் ஆற்றிய கிளைம்ஸ் ஆப் ரிலிஜியன் (The claims of Religion) என்ற பெயரில் ஆற்றிய சொற்பொழிவின் ஒரு பகுதி மட்டும்...தகவல் திரட்டு ஸ்ரீ ராமகிருஷண மடம், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் அச்சகம், மைலாப்பூர்

மதம் ஒரு தேவையா...?.

விவேகானந்தர்...
குருட்டு நம்பிக்கை என்ற பொருளில் எந்த நம்பிக்கையும் உண்மையான மதத்தில் கிடையாது. எந்த பெரிய போதகரும் அப்படி போதித்ததில்லை. சீரழிவின் காரணமாகத்தான் இது நிகழ்கிறது. மூடர்கள் தாங்கள் யாராவது ஒரு பெரிய மகானின் சீடர்கள் என்று சொல்லிக்கொண்டு, அவர்களுக்கு அதற்குரிய அதிகாரம் இல்லாவிட்டாலும்கூடக் கொள்கைகளை அப்படியே நம்பும்படி மக்களுக்கு உபதேசிக்கிறார்கள். எதை நம்புவது? கண்மூடித்தனமாக நம்புவது மனிதனை கீழ்நிலைக்கே கொண்டு செல்லும். வேண்டுமானால் நாத்திகர்களாக இருங்கள், ஆனால் கேள்வி கேட்காமல் எதையும் நம்பாதீர்கள். ஏன் உங்களை மிருக நிலைக்கு இழிவு படுத்த வேண்டும்? அதனால் நீங்கள் உங்களை மட்டும் கெடுத்துக் கொள்ளவில்லை, சமுதாயத்தையும் கெடுக்கிறீர்கள், உங்கள் பின்னால் வரப்போகிறவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறீர்கள்.

எழுந்து நில்லுங்கள், பகுத்தறிவுடன் பாருங்கள், கண்மூடித்தனமாக எதையும் நம்பாதீர்கள், நம்புவதல்ல மதம். மதம் என்பது இருப்பதும் ஆவதும். அதுதான் மதம். அந்த நிலையை அடைந்தால் தான் உங்களுக்கு மதவுணர்வு இருக்கிறது என்பது பொருள். அதற்கு முன்பு நீங்கள் மிருகங்களை விட உயர்ந்தவர்கள் அல்ல. புத்தர் பெருமான் கூறியது போல், நீங்கள் கேட்டதை நம்பாதீர்கள், தலைமுறை தலைமுறையாக உங்களிடம் வந்த கொள்கைகள் என்பதற்காக நம்பாதீர்கள், பலர் கண்மூடித்தனமாக பின்பற்றுகிறார்கள் என்பதற்காக நம்பாதீர்கள், யாரோ ஒரு மகான் சொன்னார் என்பதற்காக நம்பாதீர்கள், பழக்கத்தால் உங்களுக்கு பிடித்துப்போனவை என்பதற்காக நம்பாதீர்கள், உங்கள் ஆச்சாரியர்களும் பெரியவர்களும் சொல்கிறார்கள் என்பதற்காக நம்பாதீர்கள். சிந்தித்து பாருங்கள் சீர்தூக்கிப் பாருங்கள், அதனால் வருகின்ற முடிவு பகுத்தறிவுக்கு ஒத்ததாக இருக்குமானால், அது எல்லோருக்கும் நன்மை பயக்குமானால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள் அதன்படிச் செல்லுங்கள்.

பெரியாருக்கு முன்பே ஒருவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்...யார் நீங்கள் குறிப்பிட்ட அதே விவேகானந்தர் தான்...இதை மீறலாமா...? அவருக்கு செய்யும் துரோகம் இல்லையா...என்று ஒரு வேளை கருத்து வைப்பார்களோ....?