Search This Blog

3.1.10

மார்கழி மாதப் பஜனைகள் மூலம் பீடைகள் நீங்கிவிடுமா?


மார்கழிப் பீடை


மார்கழி மாதம், பீடை மாதம்; அமங்கலமான மாதம்; ஆகையால் இந்த மாதத்தில், விடியற்காலத்தில் பஜனைகள் செய்ய வேண்டும்; கடவுள் என்பவர் மேல் தோத்திரங்கள் செய்ய வேண்டும்; காலையில் பொங்கல்கள் செய்து சாமிகளுக்குப் படைக்க வேண்டும்; நாமும் வயிறு நிரம்பச் சாப்பிட வேண்டும்; வீடுகள்தோறும் கோலம் போடவேண்டும்; வாயிற் படியில் புஷ்பங்கள் பரப்ப வேண்டும்; இரவில் தாதன் ஊர் முழுதும் சுற்றிப் பாட்டுப் பாட வேண்டும்; சேமக்கலம் கொட்டவேண்டும்; தப்புத்தட்ட வேண்டும். இப்படியெல்லாம் செய்தால்தான் பீடை நீங்கும் என்று செய்து வருகின்றனர்.

கோயில்களிலும் இந்த மார்கழி மாதத்தில் அதிகாலையிலேயே மேளதாளங்கள் முழங்குகின்றன; பூசைகள் நடைபெறுகின்றன; பொங்கல்கள் நைவேத்தியம் பண்ணப்படுகின்றன, கோயில் அர்ச்சகர்களும், வேலைக்காரர்களும் பொங்கலைப் பங்கு போட்டுக் கொள்கின்றனர். மூக்கால் மூன்று பருக்கை விழும்படி வயிற்றுக்குள் கொட்டுகின்றனர். வண்ணான் சாலைப் போல் வயிற்றைப் பெருக்க வைக்கின்றனர். பின்பு அஜீரணத்தால் அவதி அடைகின்றனர்.

வைதீகர்கள் வீடுகளில் காலையில் எழுந்தவுடன், சைவர்களாயிருந்தால், திருவாசகத்தில் உள்ள திருவெம்பாவை என்னும் பாடல்கள் ஓதப்படுகின்றன. வைணவர்களாயிருந்தால் நாலாயிரப் பிரபந்தத்தில் உள்ள ஆண்டாள் பாடிய திருவெம்பாவைப் பாடல்களை ஓதுகின்றனர்.

இவைமட்டும் அல்ல, மற்றொரு அதிசயமும் உண்டு. அது மிக வேடிக்கையான விஷயம். வைணவர்கள் பஜனைமடம் வைத்திருந்தால் அவர்கள் விடியற்காலை 4 மணிக்கே எழுந்திருப்பார்கள். வாலிபர்கள் மாத்திரம் அல்ல, சிறு குழந்தைகளும், வயதானவர்களும், வாலிபர்களும் விழித்துக் கொண்டு எழுவார்கள். குளிரைப் பொருட்படுத்தமாட்டார்கள்; பனியைப் பாராட்ட மாட்டார்கள்; கால்கைகள் குளிரினால் உதறும்; பற்கள் கப்பிரோட்டில் ஜட்கா வண்டி போவதுபோல் கடகட வென்று குளிரினால் ஆடும். அப்படியிருந்தும், பக்தியென்னும் முட்டாள்தனம், அவர்களை எழுப்பி விடுகிறது. இவர்களில் சிலர் குளிப்பார்கள்; குளிருக்கு அதிகமாகப் பயந்தவர்கள் கால் கைகளைச் சுத்தம் பண்ணிக் கொண்டு பட்டை நாமங்களைத் தீட்டிக் கொள்வார்கள். தாளம், மிருதங்கம், தம்பூரு அல்லது ஆர்மோனியத்தையும் தூக்கிக் கொள்வார்கள், தெருத்தெருவாக பஜனை செய்து கொண்டு வருவார்கள். இதைப் போலவே சைவ பஜனை மடம் வைத்திருக்கின்ற ஊர்களில் சைவர்கள் விபூதியைப் பட்டையடித்துக் கொள்வார்கள். ருத்திராக்கங்களைச் சுமந்து கொள்வார்கள். தங்களுடைய முஸ்தீப்புகளுடன் பாடிக்கொண்டு புறப்பட்டு விடுவார்கள். இந்த பஜனைக் கோஷ்டியினர் அரிசிப் பிச்சை வாங்குவதும் உண்டு.

இக்காட்சிகள், நாகரிகமுள்ள நகரங்களிலும் நாட்டுப் புறங்களிலும் நடைபெறுகின்றன. இப்பொழுது இவைகள் எல்லாவிடங்களிலும் இல்லை என்றாலும் சில இடங்களில் இருக்கின்றன. எந்தக் காலத்திலும் பைத்தியக்காரர்கள் இருந்துதானே தீருவார்கள்? அதற்கு நாமென்ன செய்யலாம்? நமக்குத் தெரிந்த மருந்தைக் கொடுக்கலாம். இவ்வளவுதான் முடியும்.

இச்செயல்களால், சாதாரண மக்களின் மனத்தில் உண்டாகும், பக்தியும், விசுவாசமும் அதிகம். அவர்கள் இந்தப் பஜனைக் கோஷ்டியாரைப் பக்த சிரோன் மணிகளாகக் கும்பிடுவார்கள்! நமஸ்கரிப் பார்கள். என்ன அறிவு! எவ்வளவு கேவலம்!

இது போகட்டும், இவர்கள் காலையில் எழுந்து தண்ணீரில் விழட்டும்; சன்னிபிறந்து சாகட்டும்; விடியற்காலத்தில் பொங்கல் சோற்றையும், பலகாரங்களையும் உண்ணட்டும்; அஜீரணத்திற்கு உள்ளாகட்டும்; காலரா நோய்க்கு ஆளாகட்டும்; பிறருக்கும் அந்நோயைப் பரவ வைக்கட்டும்; எந்தச் சந்தியிலாவது போகட்டும்; அதைப் பற்றி நமக்குக்கவலையில்லை. இதன் மூலமாக மக்கள் மனத்தில் முட்டாள்தனத்தை ஊட்டுகிறார்களே என்றுதான் கவலைப்படுகிறோம்.

மார்கழி மாதச் சனியன் இவ்வளவோடு விட்டதா! இல்லை! இல்லை! திருவிழாவுக்காக, வைகுண்ட ஏகாதசிக்காக, ஆருத்திரா தரிசனத்திற்காக, சீரங்கத்திற்கு ஓடச்செய்கிறது, சிதம்பரத்திற்கு ஓடச் செய்கிறது. குளிர்காலத்தில் பனிக்காலத்தில் காலராக் காலத்தில் எவ்வளவு தொல்லை! எவ்வளவு அலைச்சல்! எவ்வளவு பணச்செலவு! எவ்வளவு மூட நம்பிக்கை! எவ்வளவு முட்டாள்தனம்!

எதற்காகச் சீரங்கப் பயணம், எதற்காகச் சிதம்பர யாத்திரை! எல்லாம் மோட்சம் பெறத்தான்; மோட்சத்திற்கு இவ்வளவு கஷ்டம் ஏன்? மோட்சம் என்றால் சாவு என்றுதானே அர்த்தம்! இதற்கு ஒரு சாண் கயிறு கிடைக்கவில்லையா? அல்லது நமது அழகர் சொல்லுவது போல அரையணாவுக்குக் கவுரி பாஷாணம் கிடைக்கவில்லையா? இதுவும் இல்லா விட்டால், ரயில் தண்டவாளத்தில் போய்ப் படுத்துக் கொள்வதுதானே! இந்த மாதிரி சுகாதாரமற்ற பருவ காலத்தில் யாத்திரை செய்வதால் என்ன பலன் கிடைக்கிறது! பணம் செலவாகிறது; உடல் நலம் குன்றுகிறது, காலம் வீணாகிறது, தொற்று வியாதிகள் வருகின்றன; இவைதானே லாபம்! வேறென்ன? அறிவிருந்தால் ஆலோசித்துக் கொள்ளுங்கள்.

இம்மாதிரியான துன்பங்கள் ஏன் வருகின்றன? காரணம் என்ன? யோசித்துப் பார்த்தீர்களா? நீங்கள் யோசிக்காவிட்டாலும் நான் யோசித்துப் பார்த்தேன், சொல்லுகிறேன். மதம் என்னும் மடத்தனம், பக்தி என்னும் முட்டாள்தனம், மோட்சம் என்னும் கிறுக்கு, முன்னோர் வழக்கம் என்னும் மயக்கம், இவைகளால் தான் நாம் கெட்டலைகிறோம்! சீரழிகிறோம்! நான் சொல்லுவதைப் பற்றி திடீரென்று கோபித்துக் கொள்ள வேண்டாம். புத்தியைக் கொஞ்சம் செலவழியுங்கள்! மூளையைக் கொஞ்சம் உருகச் செய்யுங்கள்! விளங்கும்.

மார்கழி மாதத்தில் மேற்படி காரியங்களைச் செய்வதால் சந்தோஷமாகக் காலம் போக்குகிறோம் என்று சொல்ல வரலாம். சந்தோஷமாகக் காலம் போக்க இதுதானா வழி! முட்டாள்தனத்தையும், குருட்டு நம்பிக்கையையும் உண்டாக்கக் கூடிய செயல்களைப் புரிந்துதானா சந்தோஷப்பட வேண்டும்? சந்தோஷப்படுவதற்கு வேறு அறிவு வளர்ச்சியோடு கூடிய வழிகள் இல்லையா?

மார்கழி மாதக் கடைசியில், தை மாத முதலில் பொங்கல் பண்டிகையொன்று! அதற்கு எவ்வளவு தொல்லை! மனிதனுக்கு மாத்திரமா பொங்கல்! பொங்கல் நாலு நாள். பொங்கலுக்கு முதல் நாள் போகிப் பண்டிகையாம்! பொங்கலாம்! மாட்டுப் பொங்கலாம்! கன்னிப் பொங்கலாம்! இந்தப் பொங்கல்களில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களை என்ன சொல்லுவது? புதுஉடைகள் வாங்கி அணிந்து கொள்வார்கள் பலர்! சம்பந்தி வீடுகளுக்கு வரிசை அனுப்புவார்கள் பலர்! இவைகளில் ஆகும் செலவு அளவு கடந்தவை. வரிசை கொடுக்கும் வகையில் ஒருவர்க்கொருவர் சொந்தக்காரர்களுக்கு ஏற்படும் மனவருத்தங்கள் பல. எங்கும் படையல், சர்க்கரைப் பொங்கல் வேறு வெண் பொங்கல் வேறு. ஏழைகள் குடும்பங்களில் இந்தப் பொங்கல் சோறுகளை இரண்டு மூன்று தினங்களுக்கு வைத்துக்கொண்டு தின்று வியாதியடைவது வேறு. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வண்ணான், அம்பட்டன், தோட்டி, வேலைக்காரன் வீடுகள் தோறும் சோற்றுப் பிச்சைக்காக அலையும் பரிதாபமான காட்சி வேறு; இவ்வாறு பல வகையில் பொங்கல் பண்டிகை தொல்லைகளை உண்டாக்கி விடுகிறது. போதும் போதாமைக்கு ஆஸ்பத்திரிகளில் மருந்துச் செலவு அதிகம். டாக்டர்களுக்குத் தொல்லை. அட அப்பா! எவ்வளவு தொல்லை! பாழும் பொங்கல் பண்ணுவதைப் பாருங்கள்!

மார்கழி மாதச் சனியன் இம்மாதிரி பல வகையில் மக்களை அல்லோல கல்லோலப் படுத்தி விடுகின்றது, படுத்தி விட்டது; என்ன பரிதாபம்! நமது மக்கள் மூடத்தனத்தால், குருட்டுத்தனத்தால் எவ்வளவு துன்பத்திற்கு ஆளாகின்றனர். எல்லாவற்றையும் யோசித்துப் பாருங்கள். இவை பயனில்லாத காரியங்கள்; வீணான காரியங்கள் என்று விளங்காமல் போகாது. இவைகளை நடத்தாவிட்டால் என்ன முழுகிப் போய்விடும். பூமி நடுக்கம் உண்டாகி நாம் பாதாளத்திற்குப் போய்விடுவோமா? கடல் புரண்டு வந்துவிடுமா? ஒன்றுமில்லையே. அப்படியிருந்தும் ஏன் பண்டிகைகளென்றும், விரதங்களென்றும் திரு நாட்களென்றும் அலைகின்றீர்கள். அந்நியர்கள், நாகரிமுடையவர்கள் நகைக்க இடம் கொடுக்க வேண்டாம். பயனுள்ள காரியங்களைச் செய்யுங்கள்! அறிவோடு செய்யுங்கள்! நாம் மற்ற நாட்டினரைப் போலப் பெருமையடையலாம்! சுதந்திரமடையலாம்! செல்வமடையலாம்! சமத்துவமடையலாம்! இது உறுதி! உண்மை! நிச்சயமாக நம்புங்கள்! நம்பாவிட்டால் எக்கேடு கெட்டாவது போங்கள்! மேலே சொல்லிய நமது விரதங்களையும், நமது பக்திகளையும், நமது பஜனைகளையும், நமது பண்டிகைகளையும், பிறர் பார்த்தால் சிரிக்க மாட்டார்களா? நாமே நினைத்துப் பார்த்தால் சிரிப்பு வரவில்லையா? கேலிக்கு இடமாகத் தோன்ற வில்லையா? வைதீகக் கண்ணுக்குப் பரிசுத்தமாகத் தோன்றலாம்! உண்மையாகத் தோன்றலாம்! தெய்வீகமாகத் தோன்றலாம்! அதைப் பற்றிக் கவலை இல்லை. நாகரிகக் கண்ணால் பாருங்கள்! அறிவுக் கண்ணால் பாருங்கள்! உண்மை விளங்கும். நான் பொய் சொல்லவில்லை; உண்மையாகச் சொல்கிறேன். உறுதியாகச் சொல்கின்றேன்; நான் ஒரு ஸ்க்குரூஉலூஸ் என்று அலட்சியம் செய்ய வேண்டாம். வந்தனம், பிறகு சந்திக்கிறேன்.

-----------------------ஸ்க்ரூஉலூஸ் என்ற புனைப்பெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை - “ குடிஅரசு”, 27-12-1931

1 comments:

Sivamjothi said...

I think it's dedicated time for spiritual growth.

What do you think as life? Is it seeing cinema or TV serials? Going to pub and drink?

Like how SUN TV and other TVs are showing cinema programs.

Making people fools by bombarding cinema shows in TV.

Who has criticized it? who has guts? Any one ready to talk about the global warming?

You are also blindly following principles of PERIYAR..


Please throw away all this critics.

Its time to save the earth. Please write some articles for creating awareness to the people.











Who has guts?