வடலூரார்
காந்தியார் மதவெறி ஆரியக் கூட்டத்தால் படுகொலை செய்யப்பட்ட அதே தேதியில் (ஜனவரி 30) அதே ஆரியத்தின் சூழ்ச்சியால் மர்மமான முறையில் மரணத்தின் பிடியில் தள்ளப்பட்ட வடலூர் இராமலிங்க அடிகளாரின் நினைவு நாளும் வருவது ஒரு வகையில் பொருத்தம்தான் (1874).
தொடக்கத்தில்ஆரிய இந்து மதச் சுழற்சிக் கூண்டுக்குள் சிக்கி அவர் தவித்திருந்தாலும், பிற்காலத்தில் ஆறாம் திருமுறையில் கடவுள் உருவ வழிப்பாட்டையும் மூடநம்பிக்கையையும் சக்கை சக்கையாகக் கிழித்து கவிதையால் சூடுபோட்டார்.
வேதாகமங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர் வேதாகமத்தின் விளைவறியீர் சூதாகச் சொன்னதலால் உண்மை வெளி தோன்ற உரைக்கவில்லை. என்ன பயனோ இவை
என்று வேதாகமங்களைத் துவட்டி எடுத்தார்.
பெரியபுராணத்தில் வரும் 63 நாயன்மார் கதைகளும் தத்துவங்களே தவிர, மனிதர்கள் அல்ல என்று மட்டை இரண்டு கீற்றாகக் கிழித்தார்.
வேதநாயகம் பிள்ளை எழுதிய நீதி நூலுக்கு சாற்றுக்கவி தந்தார் இராமலிங்கனார். வேதநாயகம் நீதி நூலுக்கு முன் மனுநீதி நூல் வெறும் கயிற்று நூலே என்று எள்ளி நகையாடினார்.
இப்படிப் பாடிய பெரியவரைப் பார்ப்பனர்கள் விட்டு வைப்பார்களா?
காஞ்சி சங்கராச்சாரியாரும், இராமலிங்கனாரும் வாதிட்ட ஒரு நிகழ்வு மிக முக்கியமானது. சமஸ்கிருதத்தை பித்ரு பாஷை என்றார் சங்கராச்சாரியார். அப்படியானால் தமிழ் மாத்ரு பாஷை என்று நயமாகப் பதிலடி கொடுத்தார். சமஸ்கிருதம் தந்தை மொழி என்றால், தமிழ்தாய்மொழி என்று சங்கராச்சாரியாருக்குச் சூடு கொடுத்தார்.
பல வகைகளில் தந்தை பெரியார் கருத்துகளை ஒத்திருந்தன அவரது பாடல்கள். வடலூரில் அவர் தோற்றுவித்த சத்திய ஞான சபையில் உருவ வழிபாடு கிடையாது. பின்னர் அந்த இடத்தை ஆக்கிரமித்த ஒரு பார்ப்பனர் லிங்கம் உள்ளிட்ட ஆரிய வழிபாட்டைத் திணித்தார். கலைஞர் ஆட்சியில் அவர் வெளியேற்றப்பட்டார்.
பன்னூறு உருவங்களை வழிபட்டுக் கிடந்த மூட மக்களிடையே அவற்றைத் துறந்து, புரோகிதப் பிடுங்கல்களுக்கு இடமில்லாமல், ஜோதியை வணங்கு என்று சொன்னது கூட அந்தக் கால கட்டத்தில் ஒரு மகத்தான சீர்திருத்தம்தானே!
-------------------- மயிலாடன் அவர்கள் 30-1-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
2 comments:
அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை !
:)
வள்ளலார் புரியாத புதிர் அல்ல.அவரது நூலில் மனிதன் தன்னை மேம்படுத்திம்கொள்ள தேவையான அனைத்து வழிகளையும் வெளிபடுத்தியுள்ளார்.
உணவே அனைத்து குணாதிசியங்களையும் தோற்றுவிக்கிறது என்றார்.விலங்கின் உடலை மனிதன் தின்றால் கருணை ,இரக்க குணம் அழியும் என்றார்.
உயிர் கொலையை பெரும் பாவம் என்றார்.ஆரோக்கியத்தை பேணுவதை உயிராக போற்றினார்.மனிதனின் அடிப்படை வஞ்ச்னை,சூது,கோபம்,பொறாமை போன்ற குணங்களை அடியோடு அழிக்க உணவு பழக்க முறை சரியாக இருக்க வேண்டும் என கண்டறிந்து விளக்கினார்..
Post a Comment