Search This Blog

14.1.10

அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டுப் பொங்கல் நல்வாழ்த்துகள்!


புத்தாண்டுப் பொங்கல் நல்வாழ்த்துகள்

தமிழனுடைய நாடு படையெடுப்பால் அழிக்கப்பட்டது; தமிழனுடைய நூல் கடல் நீரால் அழிக்கப்பட்டது; தமிழனுடைய கல்வி பார்ப்பனர்-களால் ஒழிக்கப்பட்டது; தமிழனுடைய அறிவு புராணங்களால் மழுக்கப்பட்டது; தமிழனுடைய ஒற்றுமை ஜாதிகளால் பிரிக்கப்பட்டது; தமிழனுடைய பதவி வஞ்சனையால் கவரப்பட்டது; தமிழனுடைய வீரம் உபதேசத்தால் அடக்கப்பட்டது; தமிழனுடைய பொருள் புரோகிதத்தால் பறிக்கப்பட்டது. தமிழா, நீ இழப்பதற்கு என்ன மீதியிருக்கிறது? இன்னும் ஏன் நீ உயிர் வாழவேண்டும்.

- இது குடியரசு இதழில் வெளிவந்த வரலாற்று உண்மைகள் நிறைந்த பகுதியாகும்.

தமிழன் இனி உயிர் வாழவேண்டுமானால் மேற்கண்ட இழப்புகளைத் தமிழன் சரி செய்தாக வேண்டும் என்ற பொருளும் அதற்குள் அடங்கியிருக்கிறது.
இந்த இழிவுக்கும், உரிமைகள் மறுப்புக்கும் அடிப்படைக் காரணம் - தமிழனுடைய மதி மயக்கம்- அந்த மதி மயக்கத்துக்குக் காரணம் அவன் மூளையைக் கவ்விப் பிடித்த பக்தி என்னும் போதை.

தந்தை பெரியார் கடவுள் மறுப்பாளர், - மத எதிர்ப்பாளர் என்று மேலோட்டமாக விமர்சனம் செய்து பயனில்லை. மூல பலத்தோடு போர் புரிவதுதான் தந்தை பெரியார் அவர்களின் போர் முறை என்று மிக அழகாக, ஆழமாகச் சொன்னார் அறிஞர் அண்ணா.

ஆம், அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் மூல பலத்தை நோக்கிப் போர் புரிந்தார். அவரின் போர் முறையைப் புரிந்து கொள்வதற்கு நம் மக்கள் அவ்வளவு நிதானத்தோடு இல்லை. காலவோட்டத்தில் தான் தந்தை பெரியார் கருத்துகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்துகொள்ள ஆரம்பித்தனர்.

இன்றைக்குத் தமிழர்கள் கொண்டாடும் பல பண்டிகைகள் எனப்படுபவை பார்ப்பதற்கு கடவுளைச் சார்ந்ததாக - மதத்தின் வழிப்பட்டதாகத் தோன்றக்கூடும். உண்மையல்ல அது; தமிழனின் அறிவுவீச்சு அதனைக் கடந்து வெளிச்சத்துக்கு வந்துவிடக்கூடாது என்பதுதான் அதனுள் அடங்கிக் கிடக்கும் மோசடியாகும்.

தீபாவளியைக் கண்டித்த தந்தை பெரியார்_ தமிழர் திருநாளாகப் பொங்கலை அடையாளம் காட்டினார். அது மிகச் சிறப்பான அடையாளமாகும். வேளாண்மை என்பது தமிழர்களின் வெறும் பயிர்த் தொழில் மட்டுமல்ல; உயிர்த் தொழில். பார்ப்பனர்களுக்கோ அது பாவத் தொழில்.

பயிரிடுதலை மேலான தொழில் என்று சிலர் கருதுகின்றனர். ஆயினும் பெரியோர் அதைப் பாராட்டவில்லை. ஏனெனில் இரும்புக் கொழு நுதியுடைய கலப்பை, மண்வெட்டி இவற்றைக் கொண்டு பூமியையும், பூமியில் வாழும் சிறிய உயிர்களையும் வெட்ட, கொல்ல நேரிடுகின்றதன்றோ!
- (மனுதர்மம் அத்தியாயம் 10, சுலோகம் 84)

பார்ப்பனர்களாகிய ஆரியர்களின் தர்மம் வேறு_ தமிழர்களாகிய திராவிடர்களின் தர்மம் வேறு என்பதற்கு இது ஒன்று போதாதா?

தந்தை பெரியார் கண்ட இயக்கம் தமிழர் விழாவான பொங்கலை முன்னிறுத்தி அதன் மூலமாக ஆரியர்கள் அந்நியப்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில்தான் தமிழர் திருநாளான பொங்கல் விழாவை சங்கராந்தி என்று கூறி, அதிலும் புராணக் கருத்துகளைப் புகுத்தினர்.

இன்றைய தினம் மானமிகு - மாண்புமிகு கலைஞர் அவர்களின் தலைமையிலான தி.மு.க. அரசு தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்ததும் பொங்கல் விழாவை சமத்துவப் பொங்கலாக நாடெங்கும் கொண்டாட வேண்டும் என்று முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்ததும் - வரலாற்றுக் கண்ணோட்டத்தில் தமிழர் பண்பாட்டை ஆரியப் பிடியிலிருந்து மீட்டெடுத்த மகத்தான அரும்பெரும் செயலாகும்.

ஆரியப் பார்ப்பனர்கள் அரசர்களைக் கையகப்படுத்தித்தான் தமிழர்கள் மீது தங்கள் பண்பாட்டைத் திணித்தனர். மனுநீதிசோழன் என்ற அடைமொழியிலே ஒரு தமிழ் அரசன் என்றால் அது பெருமைக்கு உரியதுதானா?

தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் பொன்னாளில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இத்திசையில் சிந்தனை அசை போடுவார்களாக!

தந்தை பெரியார் உடலால், மறைந்தாலும், அவர் ஊட்டிய உணர்வை ஒவ்வொரு நொடியும் புதுப்பித்துக் கொண்டே இருப்பதன் மூலமாகத்தான் உண்மைத் தமிழன் உயிர் கொண்டு மேலெழுவான்!

சிந்திப்போம்! செயல்படுவோம்!
செழுந்தமிழ் இனத்தை
வீறுகொண்டு எழச் செய்வோம்!
பொங்கலோ பொங்கல்!
அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டுப்
பொங்கல் நல்வாழ்த்துகள்!

-----------------------விடுதலை” தலையங்கம் 13-1-2010

2 comments:

விஜய் said...

பொங்கல் ஓகே

தமிழ் புத்தாண்டு ஏற்க முடியாது

(வேற யாராவது ஆட்ச்சிக்கு வந்து ஆடித்தான் தமிழ் புத்தாண்டு சொல்லுவாங்க)

பொங்கல் வாழ்த்துக்கள்
விஜய்

அண்ணாமலையான் said...

நன்றி...