Search This Blog

6.1.10

மதவாதிகளே, பதில் சொல்லுங்கள்!-1



(நம் நாட்டில் 6 மதங்கள் இருக்கின்றன என்றாலும் இந்து மதத்தில் உள்ள பகுத்தறிவாளர்களும் நாத்திகர்களும் தங்கள் கருத்தை வெளியிடுவதைப் போல, பிற மதத்தவர்கள் வெளியிடுவதில்லை. அப்படிப்பட்ட கருத்தை மறை பொருளாக ஒரு சிலர் வெளியிட்டபோது ஊர்க்கட்டுப்பாடு போட்டு மடக்கி, முடக்கிட முயல் கிறார்கள். இம்மாதிரி நிலை வேறு சில மத அடிப்படைவாதம் நிலவும் நாடு களிலும் இருக்கின்றன. அவற்றில் ஒன்று சோமாலியா. வாழ்வதற்கு வழியில்லாமல், பட்டினியால் நாள் தோறும் நூற்றுக்கணக்கில் செத்து விழுந்தவர்களின் தொகை பல பத்து லட்சங்களைத் தொடும் நிலையில், அவர்களுக்கு ஏதும் செய்யாத மதம், தொழுகைக் கட்டுப்பாடுகளை இறுக்கி அவர்கள்மீது இரக்கம் காட்டாத நிலை தான் இன்றும்.

அந்த நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் எழுதியவற்றின் சுருக்கம் கீழே தரப்பட்டுள்ளது.)

நான் குழந்தையாக இருந்தபோதே, தொழுகையின் போது நான் ஏன் என் தம்பிக்குப் பின்னால் நிற்கவேண்டும் என நான் கோபப்பட்டது உண்டு. ஆனாலும் நான் என் பெற்றோருக்கு, என் இனமக்களுக்கு, என்மத குருக்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்தேன்; கேள்விகள் கேட்டால் அவர்களை மதிக்காமல் நடக்கிறேன் என்று ஆகிவிடுமோ? என்கிற தயக்கம்தான். இளமைப் பருவத்தில் இசுலாத்திற்கு எதிரான என் கருத்து கூடுதலானது. ஆனால், நான் யார் அல்லாவுக்கு எதிராகப் பேச? குடும்ப கவுரவத்தைப் பெரிதாக நினைக்கும் என் குடும்பம், என் இனம் முக்கியமாகப்பட்டது. மேற்கத்திய நாடுகளிலிருந்து வந்த நூல்களைப் படித்தபோது, பெண்களுக்கு சுதந்தரம் அளித்திடும் மற்றொரு உலகம் இருக்கிறது என்பதை நான் அறிந்தேன்.

ஆனாலும் நான் கருப்பு புர்க்கா அணிந்து தலை முதல் கட்டை விரல் வரை மறைத்துக் கொண்டும் அய்ந்து வேளை தொழுதுகொண்டும் குரானும் மத நூலான ஹிடித்தும் விதித்துள்ள எல்லா கட்டுப் பாட்டுக்குள்ளும் இருந்து வந்தேன். காரணம் நரகம் பற்றிய பயம். நரகத்தைப் பற்றிய வருணனைகளைக் குரான் விஸ்தாரமாகவே செய்கிறது; வலி ஏற்படுத்தும் புண்கள், கொதிக்கும் நீர், தோலை உரித்தல், தசையைச் சுடுதல், குடலை உருவுதல் போன்ற கொடுமைகள். மதப் பிரச்சாரம் செய்பவர்கள் எல்லாருமே நரக வேதனைகளை வருணித்ததைக் கேட்டு நான் குலை நடுக்கம் எடுத்துப் பயந்து கொண்டிருந்தேன்.

எனக்குத் திருமணம் செய்து வைக்க இருப்பதாக என் தந்தை தெரிவித்தபோதுதான் என் எதிர்காலம் முழுவதுமே, முன்பின் அறிந்திராத ஒருவனுடன் வாழ வேண்டும் என்கிற அச்சம் ஏற்பட்டது. வீட்டை விட்டு வெளியேறினேன். ஹாலந்து நாட்டிற்குத் தப்பிச் சென்றேன். அங்குள்ள நல்ல மனது உள்ளவர்களின் உதவியால் படித்தேன். அரசியல் அறிவியல் படிக்கும் போதுதான் முசுலிம் சமுதாயம்- அல்லாவின் இனம் ஏழையாக, முரடர்களாக இருப்பதற்கான காரணம் தெரிந்தது; நாத்திகர்கள் என்று முசுலிம்களால் கூறப் படும் நாட்டினர் வசதியாகவும் அமைதியாகவும் வாழ்கின்றனர் என்பதும் விளங்கியது. ஆனாலும் நான் முசுலிமாகவே, அல்லாவின் விருப்பத்தைக் குறை கூற முடியாமலேயே இருந்தேன்.

பல்கலைக் கழகத்தில் படிக்கும்போதுதான் நான் நம்பிக்கையை இழந்தேன். அங்கே நான் கற்றறிந்த உண்மைகள் வலுவானவை என்றாலும் அது வரை நான் சொல்லி வளர்க்கப்பட்ட கருத்துகளோடு அவை மோதின. ஸ்பினோஸா, ஃபிராய்டு, டார்வின், லாக்கி மற்றும் மில் ஆகியோரின் கருத்துகள் உண்மை; குரானில் சொல்லப்பட்டிருப்பவையும் உண்மைதானே! இருப்பினும் இவை இரண்டுக்குமான வேறுபாடுகளைப் பற்றி ஒரு நாள் சிந்தித்து முடிவுக்கு வரலாம் என முடிவு செய்து அவர்களின் கருத்துகளைத் தொடர்ந்து படித்து வந்தேன். இது சரியா என்பது ஒருபுறம் இருக்க, அறிவு வளர்ச்சிக்கு அல்லா தடையல்லவே என எனக்குள் எண்ணி நான் சமாதானம் அடைந்தேன்.

ஆலந்து நாட்டுக்கு வந்தவுடன் என் முசுலிம் உடைகளை விட்டு ஜீன்ஸ் அணியத் தொடங்கினேன். சோமாலியக்காரர்களுடன் பழகுவதைத் தவிர்த்தேன். பிறகு முசுலிம்களுடன் பேசுவதை நிறுத்தினேன். பிறகு ஒரு நாள், என் சிநேகிதனுடன் முதன் முதலாக ஒயினை ருசித்தேன்.

அமெரிக்காவின் இரட்டைக் கட்டடங்கள் ஒசாமா பின் லேடனின் ஆள்களால் தகர்க்கப்பட்ட போது அதனை நியாயப்படுத்திய ஒசாமாவின் செயல் சரிதானா? அவருடைய கருத்தை ஒப்புக்கொள்வதா? இது கடவுளின் கட்டளை என ஏற்க முடியுமா? இவற்றைச் செய்ய இயலாது என்றால் - நான் முசுலிமா?

அந்த நேரத்தில் ஹெர்மன் ஃபிலிப்சே எழுதிய நாத்திகப் பிரகடனம் (Atheist Manifesto) நூலைப்படித்தேன். அந்த நூலில் 4 பக்கங்களைப் படித்த உடனே, அல்லாவைப் பல ஆண்டுகளுக்கு முன்பே கைகழுவி விட்டதாக உணர்ந்தேன். நானும் ஒரு நாத்திகவாதிதான். மதத்தைக் கைகழுவி விட்டவள்தான். நம்பிக்கையற்றவள்தான். இது எனக்குப் புரிந்தது. உடனே முகம் பார்க்கும் கண்ணாடி முன்னால் நின்று என்னையே பார்த்து நான் கடவுளை நம்பவில்லை என்று சோமாலிய மொழியில் உரக்கக் கூவினேன்.

அதன் பின் மனதுக்கு இதமாக இருந்தது. வலி ஏதும் இல்லை; தெளிவு பிறந்தது. நான் கொண்டிருந்த நம்பிக்கை களில் இருந்த முரண்பாடுகள் சுக்கு நூறாக உடைந்து போயின. நரகத் தீயைப் பற்றி நெடு நாள்களாகப் பதிந்திருந்த பயம் நீங்கியது. கடவுள், சைத்தான், தேவதைகள் போன்ற மனிதனின் கற்பனைகள் மறைந்து இவையெல்லாம் எளியோர் மீது தம் கருத்தைத் திணிக்கும் வலியோரின் கற்பனைகள் எனத் தெளிவு பிறந்தது. இதற்குப் பின் உலகில் சுயமரியாதை, காரண காரியம் ஆகியவற்றின் அடிப்படையில் நான் பயணம் தொடர்வேன் எனும் நம்பிக்கை ஏற்பட்டது. எனக்கு வழிகாட்டி, எனக்குள் இருக்கிறது; புனித நூல்களில் இல்லை என்பதும் புரிந்தது.

அடுத்தடுத்த மாதங்களில் நான் மியூசியங்களுக்குப் போய், பதப்படுத்தப்பட்ட மம்மி உடல்கள், இறந்து சிதைந்து போன உடல்கள், எலும்புக் குவியல்கள் ஆகியவற்றைப் பார்த்தபோது நாமும் இறந்தபிறகு இப்படித் தான் எலும்புக் கூடாக இருப்போம் என நினைப்பு வந்தது.

கடவுள் பற்றிய நம்பிக்கை இல்லாமலேயே வாழ முடியும் என உறுதியானது. இசுலாத்தில் நீங்கள் அல்லாவின் அடிமைகள், சுயமாக எதையும் செய்யக் கூடாதவர்கள்; நீங்கள் சுதந்தரமானவர் அல்ல; நரகம் பற்றிய அச்சம் ஊட்டப்பட்டிருப்பதால் நீங்கள் நல்லவராக நடிக்கிறீர்கள்; உங்களுக்கென்று நல்ல கோட்பாடுகளே கிடையாது.

மனிதர்களாகிய நாம் நமக்கு நாமே வழி காட்டிகள்; நல்லவை, கெட்டவை அறியக்கூடியவர்கள்; நம் ஒழுக்கத்திற்கு நாமே பொறுப்பானவர்கள் என்கிற முடிவுக்கு வந்தேன். மதங்களின் நோக்கம் எனச் சொல்லப்படுபவற்றை, எவ்விதமான கட்டுப்பாடுகளுக்கும் விதிமுறை களுக்கும் பயந்து தலை வணங்கி ஏற்றுக் கொள்ளாமல் - நம் விருப்பத்தை நசுக்காமல் நாமும் நல்லவர்களாக வாழ்ந்து பிறர்க்கும் நல்லவர்களாக இருக்கலாமே என்கிற முடிவுக்கு வந்தேன். ஏற்கெனவே என் வாழ்வில் பல பொய்களைச் சொல்லியிருக்கிறேன்; போதுமான அளவுக்குச் சொல்லிவிட்டேன்; அவை போதும் என என் மனதுக்குள் உறுதி செய்து கொண்டேன்.

இன்ஃபிடல் (Infidel) (நம்பிக்கை அற்றவர்) எனும் நூலை 2007 இல் எழுதி வெளியிட்ட பிறகு அமெரிக்கா போனேன். ஏசு கிறிஸ்துவின் போதனைகளின்பால் ஈர்ப்பு உண்டா என என்னிடம் கேட்கப்பட்டது. மத நம்பிக்கையற்றவளாக இருப்பதை விட இசுலாத்தை விட மனிதாபிமானம் உள்ள கிறித்துவத்தில் நம்பிக்கை வைக்கலாமே எனக்கேட்டனர் போலும்! பேசும் பாம்புகள், சொர்க்கலோகத் தோட்டங்கள் பற்றிப் பேசும் மதம்தானே அது? முசுலிம்களை விட நாடகபாணியில் நரக வேதனையைக் கிறித்துவம் கூறுகிறது என்றாலும் அந்தக் கதைகள் எல்லாம் என் பாட்டி எனக்குச் சொன்ன தேவதைகள், ஜின்கள் பற்றியவை போன்றே எனக்குத் தோன்றின.

எதையும் தெளிவாகத் தெரிந்து கொள்ளக் கூடிய ஒலி! நாத்திகமே! அது ஒரு மதக் கோட்பாடல்ல. இறப்பு நிச்சயம். சொர்க்கம் பற்றிய ஆசையோ நரகம் பற்றிய அச்சமோ இல்லாத நிலை. எல்லாவிதமான ரகசியங்கள், துன்பங்கள், அழகு, வலிகள் போன்றவற்றுடன் கூடிய இவ்வுலக வாழ்வில் நாம் தடுமாறுகிறோம், சமாளித்து எழுகிறோம், துக்கப்படுகிறோம், பாதுகாப்பின்மையை உணர்கிறோம், நம்பிக்கையுடன் இருக்கிறோம், தனிமையை உணர்கிறோம், மகிழ்ச்சியுடன் இருக்கிறோம், அன்பு செலுத்துகிறோம். இதற்கு மேல் ஒன்றும் இல்லை; இதற்கு மேல் எதுவும் எனக்குத் தேவையில்லை.

-------------சோமாலிய (மாஜி) முசுலிம் பெண் அயான் ஹர்சி அலி எழுதிய Infidel எனும் நூலின் ஒரு கட்டுரை இது. The Portable Atheists (எடுத்துச் செல்லக்கூடிய நாத்திகர்கள்) எனும் தலைப்பில் கிறிஸ்டோபர் ஹிட்சின்ஸ் தொகுப்பாசிரியராக இருந்து தந்துள்ள 47 கட்டுரைகளில் கடைசிக் கட்டுரை இது).


-----------நன்றி: - சு. அறிவுக்கரசு, தி.க. பொதுச்செயலாளர் -”விடுதலை” 3-1-2010

3 comments:

Sivamjothi said...

Many time i felt very sorry for Muslim ladies. Wear black pardas in hot towns like vellore/chennai.

Also kalal meat should be taken when we dont have other choice of food. But it is taken even though there is aboundance of the vegetables are avilable.


Most of good information in quran are hidden from non muslims.

I think youth muslims are easlily subjected to brainwash..

nerkuppai thumbi said...

Thank you for psoting this version from a woman, born muslim, presently a human being not bound by any religion.
I also appreciate your honest statement that non-believers from religions other than Hinduism do not articulate their views.

Ansar said...

தமிழ் ஓவியா!

விடுதலை இதழில் வெளியிடப்பட்ட இந்த தமிழ் மொழிபெயர்ப்பின் மூலம் எந்த மொழியில் எழுதப்பட்டுள்ளது..
அதன் Original லிங்கை அனுப்பி வைக்கவும்.