"ஒரு பகுத்தறிவாளன் என்கிற எனக்கு மதப் பற்றோ, கடவுள் பற்றோ, இலக்கியப் பற்றோ, மொழிப்பற்றோ எதுவும் கிடையாது. அறிவிற்கு ஏற்றது, மக்களுக்கு நன்மை பயப்பது, மக்களின் அறிவை வளர்ச்சி அடையச் செய்வது எதுவோ அதைப் பற்றியே பேசுவேன்".
(விடுதலை,- 20.4.1965)
என்கிறார் தந்தை பெரியார். மனிதப் பற்றுதான் தந்தை பெரியாருக்கு உரியதாகும். மானுடத்தைத் தந்தை பெரியார் மதித்ததும், போற்றியதும் மானுடம் தந்தை பெரியாரைப் போற்றியதும் இந்தத் தன்மையில்தான்.
"தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிருகங்கள் போல் நடத்தப்படுகிற பாட்-டாளி, கூலி, ஏழை மக்கள்தான் எனக்-குக் கண் வலியாய் இருப்பவர்கள். அவர்களைச் சம மனிதர்களாக ஆக்குவதுதான் என் கண்ணோய்க்குப் பரிகாரம்"
(விடுதலை,- 15.10.1967)
பிறவியிலேயே பெரும்பான்மை மக்கள், பிறவித் தொழிலாளர்களாக இருக்கிறார்களே என்பதை எண்ணினால் எனக்கு ரத்தக் கொதிப்பாக இருக்கிறது என்றும் செல்லுகிறார்.
தன் உடலுக்கு ஏற்பட்டுள்ள உபாதைகளை நோய் என்று கருதவில்லை அந்த மானுடத் தந்தை; மாறாக குறிப்பிடத்தக்க மக்கள் பகுதியினருக்கு இழைக்கப்பட்டுள்ள தீங்குகளை, உரிமை மறுப்புகளைக் கண்டு கொதிக்கிறார். அந்தத் தீங்குகளை அகற்றி, சமத்துவம் உள்ளவர்களாக மாற்றி அமைப்பதைத்தான் தனது தொண்டறமாகக் கருதுகிறார்.
மனிதன் தானாகப் பிறக்கவில்லை. எனவே தனக்காக வாழக் கூடாதவன் என்னும் அவரின் கூற்றிலே பொதிந்து கிடக்கும் மானுடப்பற்று மகத்தானது.
மானிடத்தின் சமத்துவத்துக்காகத்தான் தந்தை பெரியார் கடவுள் முதல், ஜாதி, மத, கோத்திரங்கள் வரைக் கடுமையாக எதிர்த்தார்.
1927 குடிஅரசு மே முதல் தேதி இதழில் தந்தை பெரியார் கூறியதைப் படிக்கும் தொறும் படிக்கும் தொறும் மிகவும் மலைப்பாக இருக்கிறது. இதோ அந்த எழுத்துகள்.
பொதுவாக நமது பிரசங்கத்தினாலும், குடிஅரசுவினாலும் நான் செய்து வந்த பிரச்சாரத்தில் அரசியல் இயக்கங்கள் என்பவற்றைக் கண்டித்தேன். மதம் என்பதைக் கண்டித்தேன். மதத் தலைவர்கள் என்பவர்களைக் கண்டித்தேன். மதச் சடங்கு என்பவற்றைக் கண்டித்திருக்கின்றேன். வேதம்என்று சொல்லுவதைக் கண்டித்திருக்கின்றேன். சாத்திரம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். புராணம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். ஜாதி என்பதனைக் கண்டித்திருக்கின்றேன். அரசாங்கம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். உத்தியோகம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். நியாயாதிபதி என்பவர்களைக் கண்டித்திருக்கின்றேன். நீதி ஸ்தலம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். ஜனப் பிரநிதித்துவம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். தேர்தல் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். கல்வி என்பதைக் கண்டித்திருக்கின்றேன். சுயராச்சியம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். ஒரே துறையில் வேலை செய்து வந்த நண்பர்களைக் கண்டித்திருக்கின்றேன். இன்னும் என்னென்னவற்றையோ,யார் யாரையோ கண்டித்திருக்கின்றேன். கோபம் வரும்படி வைதும் இருக்கின்றேன்.
எதைக் கண்டித்திருக்கின்றேன் ; எதைக் கண்டிக்கவில்லை என்பது எனக்கு ஞாபகத்திற்கு வரமாட்டேன் என்கிறது. இன்னமும் ஏதாவது எழுதலாமென்று பேனாவை எடுத்தாலும், பேசலாமென்று வாயைத் திறந்தாலும் கண்டிக்கவும்வையவும் துக்கப்படவுமான நிலைமை ஏற்படுகிறதே ஒழிய வேறில்லை. கண்டிக்கத் தகாத இயக்கமோ, திட்டமோ, அபிப்பிராயமோ என் கண்களுக்குப்படமாட்டேன் என்கிறது என்கிறார்.
விரக்தியின் மேலீட்டால் தந்தை பெரியார் இப்படி எழுதவில்லை. மானுடத்தின் நேர்த்திக்காக, சமத்துவத்துக்காக, ஏற்றத் தாழ்வுகளைத் தரை மட்டம் ஆக்குவதற்காக, மக்கள் தொகையில் சரி பாதியாக இருக்கும் பெண்களின் உரிமைக்காகப் போராடும்போது, தொண்டாற்றும்போது யாரெல்லாம் முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள் என்பதை ஒரு வகையில் பட்டியலிட்டுக் காட்டுகிறார் என்றே கருதவேண்டும். இவர்களை, இவைகளை எதிர்த்துத்தான் தீரவேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார்.
ஒரே ஒரு எடுத்துக்காட்டு:
சிதம்பரத்தில் சகஜானந்தாவின் பள்ளியில் ஆண்டு விழா. அதற்குப் பெரியார் அழைக்கப்பட்டார். அந்தப் பள்ளி நிருவாகிகளுக்கும், உள்ளூர் சனாதனிகளுக்கும் பகைமை உண்டு. அதுவும் பெரியார் வருகிறார் என்றவுடன் அது பல மடங்காகப் பெருகியது. பெரியார் வந்தால் கலகம் செய்வது தாக்குவது என்று முடிவு. அடியாட்கள் தயாரிக்கப்பட்டனர். கையில் ஆயுதங்களுடன் கூடினர். பெரியார் ரயிலில் வர இருந்தார். அந்த நிகழ்ச்சிக்குப் போயிருந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நிலைமைகளை நேரில் பார்த்து அறிந்தார். பெரியாரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் செய்வதே நல்லது என்று முடிவு செய்து, ரயில்வண்டி நிலையத்துக்கு விரைந்தார்.
அங்கு என்ன நடந்தது? அதைப் புரட்சிக் கவிஞரின் வாயாலேயே கேட்போம்.
பெரியார் வண்டியில் வந்திறங்கினார். அங்குள்ள நிலைமையைக் கூறினோம். கேட்டுக் கொண்டே விடுவிடு என்று ஊருக்குப் போனார். போக வேண்டாம் ஆபத்து, ஆபத்து என்று கூறக் கூறக் கேட்டுக் கொண்டே போனார். எந்த வழியில் போகக் கூடாது என்று நினைத்தோமோ அந்த வழியிலேயே போனார். போய் டக் என்று நின்றார். அதுவும் எந்த இடம்? எந்த இடத்தில் நிற்கக்கூடாது என்று பயந்தோமோ, அதேஇடம்! காலிகளின் கூட்டம் எதிர்ப்பை ஆரம்பித்து விட்டது. காலிகளின் ஆயுதம் தாங்கிய கரங்கள் உயர்ந்து விட்டன. இன்று என்ன செய்யப்போகிறோம்? என்று எங்கள் கூட்டில் உயிர் இல்லை.
இந்த நிலையில் பேசவும் ஆரம்பித்துவிட்டார் பெரியார். எப்படிப்பட்ட பேச்சு? பாமரர் முதல் அனைவருக்கும் புரியும் முறையில் அழகாக உள்ளம் கவரும் விதத்தில் பேசினார்.
உங்கள் பையன் ஒருவன் படித்திருக்கிறான், உயர்சாதிப் பையன் ஒருவன் படித்திருக்கிறான். நீங்கள் என்ன விரும்புவீர்கள்? உங்கள் பையனுக்கு வேலை கிடைக்க வேண்டுமென்றுதானே? ஆனால் இன்றைய ஆதிக்க நிலையில் யாருக்குக் கிடைக்கும்?இதைத்தானே நான் கூறுகிறேன் என்று ஆரம்பித்தார். அவர்கள் மத்தியிலே கருத்து மழை பொழிந்தார். அந்த நேரத்தில் அந்தக் கூட்டம் பெரியார் எதைச் சொன்னாலும் அதைச் செய்யத் துடித்தது; எதிரிகள் மீதுஅதை எளிதாகத் திருப்பி விட்டிருக்கவும் முடியும். அதைப் பெரியார் செய்யவில்லை. சாகடிக்கப்படவிருந்த பெரியார், சாவடிக்க வந்தவர்களையே கருத்தால் மாற்றிவிட்டார் என்று புரட்சிக்கவிஞர் கூறுகிறார்.
மக்களுக்குத் தொண்டாற்றுவது, அதுவும் சமூகப் புரட்சியை மேற்கொள்வது என்பது உயிரைப் பணயம் வைப்பதாகும். இத்தகைய தொண்டைத்தான் தந்தை பெரியார் செய்தார்.
தந்தை பெரியார் மானுடக் குடும்பத்தில் தனித் தன்மையானவர், தனி வழி காட்டிய தத்துவ ஒளி விளக்கு!
வழக்கத்தால், செக்கு சுற்றி வந்த மந்தையில் தனிப்பாதையைக் காட்டி தலைகளைத் தூக்க வைத்து, முதுகு எலும்புகளை நிமிர வைத்து, கண்களைத் திறந்து வைத்து, கால்களுக்கு வலுவூட்டி, மூளை இயந்திரத்தை முடுக்கிவிட்டு கைநீட்டிக் கம்பீரமாக நடக்க வைத்த தன்மானபகுத்தறிவு மூலிகைத் தோட்டம் அவர்.
அவர்களின் ஒவ்வொரு எழுத்திலும், சொல்லிலும், அசைவு இயக்கத்திலும் பகுத்தறிவு மணம் இருக்கும்! தன்மான வெடி இருக்கும்; மனித நேயத் தேன் சுரக்கும்; மனித உரிமைப் பாளை வெடிக்கும்!
அதிர்ச்சி தருகிறதே - ஆபத்தாக முடியுமோ? திடுக்கிட வைப்பதாக இருக்கிறதே - தீங்கு விளையுமோ? நம்பிக்கைகளைத் தகர்க்கப் பார்க்கிறதே - நாசம் விளையுமோ? - என்றுதான் அவரின் புரட்சிக் கருத்துகளை, புதுமை முழக்கங்களைக் கேட்டவர்கள், படித்தவர்கள் அதிர்ந்து போவார்கள். ஆனால் அவையனைத்தும் மானுடத்தை வாழ வைக்கும் மீட்சிப் படகுகள், முன்னே கசந்து பின்னே இனிக்கும் முது நெல்லிக் கனிகள் என்பதைப் பின்னர் உணர்ந்தனர். வசைபாடிய வாய்கள் வாழ்க முழக்கமிட்டன. வாழ்விக்க வந்த தந்தையே என்று வாழ்த்துப் பாடின! கற்களைத் தூக்கியடித்த கரங்கள் கனத்த மாலைகளைத் தூக்கி வந்து அந்த மனித குலச் சிற்பிக்குச் சூட்டி மகிழ்ச்சியில் திளைத்தன!
ஆனால் தந்தை பெரியார் அவற்றை எல்லாம் எப்படிப் பார்த்தார்? ஆண்டு முழுவதும் அய்யா அவர்களுக்குப் பிறந்த நாள் விழா நடக்கும். இந்த அதிசயம் அய்யா அவர்களுக்கு மட்டும்தான் தமிழ் நாட்டில். ஏராளமான பரிசுப் பொருள்களைக் கொண்டு வந்து குவிப்பார்கள். அவற்றை எல்லாம் பெற்றுக் கொண்ட அறிவுத் தந்தை கூறுவார் :
இவ்வளவு பரிசுப் பொருள்களை எனக்குக் கொடுத்தீர்கள். இதே ஊரில் இதே இடத்தில் 50, 60 ஆண்டுகளுக்கு முன் வந்து பேசி இருக்கிறேன். அப்பொழுதெல்லாம் கடும் எதிர்ப்பு! கற்களை வீசுவார்கள்; பன்றிகளை, பாம்புகளைக் கூட்டத்தில் விட்டுப் பொது மக்களைக் கலைப்பார்கள். இப்பொழுது அதே ஊருக்கு அதே மனிதனாகிய நான் வந்திருக்கிறேன். அதே மனிதருக்கு இவ்வளவு வரவேற்பு - அன்பளிப்பு என்றால் என்னவோ நம்ப முடியவில்லை. நான் ஏதாவது மாறிவிட்டேனா? கொள்கையில் பல்டி அடித்துவிட்டோனா? அல்லது பொது மக்களாகிய நீங்கள்தான் மாறிவிட்டீர்களா? என்று யோசித்துப் பார்த்தேன். என்னைப் பொறுத்தவரை என் கொள்கையில் மேலும் மேலும் தீவிரத் தன்மை கொண்டுதான் பணியாற்றி வந்திருக்கின்றேன். எதிலும் நான் பின் வாங்கிவிடவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
உங்களிடம்தான் மாறுதல் வந்திருப்பதாகக் கருதுகிறேன். உங்களை அன்று அழுகிய முட்டைகளைக் கொண்டு வீசிய நாங்கள் இப்பொழுது திருந்திவிட்டோம். எங்களுக்குப் புத்தி வந்துவிட்டது என்று காட்டிக் கொள்வதற்காகத்தான் இந்தப் பரிசுகளை எனக்கு அளிக்கிறீர்கள் என்று கூறுவார்.
தனக்குப் பரிசுகளை அள்ளிக் குவித்த பொது மக்களைப் பார்த்து இப்படிக் கூறும் துணிவு நாட்டில் எவருக்கு வரும்?
தந்தை பெரியாருக்கு அப்போது 40 ஆவது வயது. நாக்கில் புற்றுநோய் ஏற்பட்டது. தந்தை பெரியார் மருத்துவராகிய டாக்டர் பி.எம்.சுந்தரவதனத்திடம் காட்டினார். அட சனியனே, உங்களுக்கா இது வரவேண்டும், என்று கூறி சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் அனுப்பி வைத்தார். அந்த நோயும் குணப்படுத்தப்பட்டது. இதைப் பற்றி தந்தை பெரியார் கூறுவதுதான் முக்கியம்.
நான் கவலைப்பட்டது நாக்கில் புற்று நோய் வந்ததால் சாகப் போகிறோம் என்றல்ல! இந்தப் பாவி கடவுளை, மதத்தைத் திட்டினான், அதனால்தான் நாக்கில் புற்று வந்து செத்தான் என்று என் கருத்துக்கு எதிர்ப்பானவர்கள் அவதூறு பரப்பிவிடுவார்களே. . . அதனால் நமக்குப் பின்னும்இந்த வேலைக்கு எவனும்துணிந்து வரமாட்டானே என்ற கவலைதான் எனக்கு என்று பெரியார் கூறுகிறார்.
தனக்கு நோய் வந்தது என்பதை விட, அதனால் கொள்கைக்குக் குந்தகம் ஏற்பட்டுவிடுமோ என்கிற நோக்கும் சிந்தனையும்தான் அவர்களுக்கு! பொதுவாக நோய் வயப்படும் மனிதன் பலகீனமடைவான். ஆனால் அந்த நேரத்திலும் கொள்கைக்கு முன்னிடம் கொடுத்துச் சிந்தித்த மன உறுதிக்குப் பெயர்தான் பெரியார். அந்த நோயை வென்று காட்டியதன் வாயிலாகவும் தந்தை பெரியார் தமக்கு எதிர்ப்பான சக்திகளை முறியடித்து விட்டார்!
அதனால்தான் உடலால் அவர் மறைந்திருந்தாலும் அன்றாடம் பெரியார் பேசப்படுகிறார், போற்றப்படுகிறார்.
மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். ஆம், அவர் மண்டைச் சுரப்பான சிந்தனைகளை உலகம் முழுவதும் பரவச் செய்ய அவர் வழி வந்த திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீமணி அவர்கள் பல திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் சிகாகோ நகரைத் தலைமை யிடமாகக் கொண்டு பெரியார் பன்னாட்டு மய்யம் உருவாக்கப்பட்டுள்ளது. லண்டன், பிரான்சு, சிங்கப்பூர், மியான்மா நாடுகளில் எல்லாம் இவைகளைப் பரப்பி செயல்பட்டு வருகிறார்.
சோதனைக் குழாய்க் குழந்தையைப் பற்றி 1938 ஆம் ஆண்டிலேயே தொலை நோக்குப் பார்வையோடு கூறியவரும் அவரே!
அந்த இனி வரும் உலகம் என்ற நூல் பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு, பாரிசில் வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியில் பெரியார் மய்யம் பெரியார் அறக்கட்டளையின் சார்பில் எழுப்பப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவனின் கருத்துக் கதிர்களை ஊடுருவச் செய்யும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
பெரியார் காணும் உலகைக் காண்போம்! வாழ்க பெரியார்!
---------------- கலி.பூங்குன்றன், தி.க. பொதுச்செயலாளர் அவர்கள் தந்தை பெரியார் நினைவு நாளான
(24.12.2009) அன்று நிகழ்த்திய
வானொலி நிலைய உரை