Search This Blog

2.9.09

ஈழப் பிரச்சினையில் அரசியல் நடத்தலாமா? சுருதி பேதம் காட்டலாமா?


ராஜபக்சே குற்றவாளி கூண்டில் நிறுத்தப்படவேண்டும். தமிழக அரசு சொல்வதை மத்திய அரசு செயல்படுத்தவேண்டும். இல்லையேல் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிவித்தார்.

கைதாவதற்கு முன்பு சென்னை பெரியார் திடல் வாசலின் முன்பு தலைவர்கள் நின்றனர். கழகப் பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன் மறியல் பற்றி விளக்கினார்.

உலகத் தமிழர் பேரவை இரா. ஜனார்த்தனம் பேசுகையில் ஈழத்தமிழர்களின் இன்னல்கள் மீட்கப்படவேண்டும். அதற்கு துரோகம் செய்யக்கூடாது என்று கூறினார்.

சுப. வீரபாண்டியன்

திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் தமது உரையில், ஈழத் தமிழர்கள் முள்வேலிக்குள் படும் இன்னல்களை ஈழத் தமிழர்கள் சாவதைக் கண்டு உலக நாடுகள் கள்ள மவுனம் சாதிப்பது வேதனைக்குரியது.

தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை மூன்றாவது குற்றவாளி. கலைஞர்தான் உலக முதல் குற்றவாளி என்று நேற்று பரமக்குடியில் நடந்த கூட்டத்தில் ஓர் அணியினர் பேசியுள்ளனர் என்பது கண்டிக்கத்தக்கது. இலங்கை தமிழர்களுக்குப் பாதுகாப்பாக தேவையான உதவிகளை கலைஞர் செய்துகொண்டு வருகின்றார் என்றார்.


தமிழர் தலைவர் உரை

இறுதியாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தமது உரையிலே கூறியதாவது:

நாம் மகிழ்ச்சியோடு இங்கு கூடியிருக்கவில்லை. நம்முடைய இதயத்தில் வழிந்து கொண்டிருக்கின்ற ரத்தத்தை துடைத்துக் கொண்டே இங்கு கூடியிருக்கின்றோம்.

சரியாக ஒரு ஆண்டுக்கு முன்னாலே இதே செப்டம்பர் மாதத்திலே ஈழத் தமிழர் பிரச்சினைக்காக நாம் ரயில் மறியல் செய்து கைதானோம்.

இன்றைக்கும் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க, உலக மக்களின் கவனத்தை ஈர்க்க ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவிருக்கின்றோம்.

இந்திய அரசு தெரிந்தோ, தெரியாமலோ ஈழத் தமிழர் பிரச்சினையில் கொள்ளிக் கட்டையை எடுத்துத் தலையில் சொரிந்து கொள்ள முற்படுகிறது.

தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஈழத் தமிழருடைய பிரச்சினைக்காக தன்னுடைய பதவி ஆட்சிப் பொறுப்பை இரண்டு முறை இழந்தவர்.

கலைஞர் வலியுறுத்துவதை அலட்சியப்படுத்தினால்...

கலைஞர் அவர்கள் ஈழத் தமிழர் பிரச்சினையில் வலியுறுத்துகின்ற செயலை மத்திய அரசு செய்யவில்லை என்று சொன்னால், திராவிடர் கழகம் அடுத்து மாபெரும் போராட்டத்திற்கு மக்களைத் திரட்டும்.

அய்ரோப்பிய நாட்டு மக்கள் கப்பலில் அனுப்பிய உணவு, மருந்து பொருள்களை வேறு கப்பலுக்கு மாற்றி ஈழத் தமிழர்களுக்காக அந்தப் பொருள்களை அனுப்பி வைத்தவர் நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்கள்.

அப்படிப்பட்ட கலைஞரைப் பார்த்து ஈழத் தமிழர்களுக்கு விரோதமானவர் என்று
சொல்லுவதா?

இது விபீஷ்ணத்தனம் அல்லவா? பழைய ராமாயணக் கதை திரும்பக்கூடாது.
முள்வேலிக்குள் எந்தவித வசதியின்றி கழிப்பிடம்கூட போதிய அளவு இல்லாமல் ஆண், பெண் இரு பாலரும் அவதிப்பட்டிருக்கின்ற நிலையில் அவர்கள் அழிந்து கொண்டிருக்கின்ற நிலையில், தமிழர்களாகிய நாம் ஒன்றுபட்டு குரல் கொடுப்பதற்குப் பதிலாக இதில் போய் அரசியல் நடத்தலாமா? சுருதி பேதம் காட்டலாமா?

ஈழத் தமிழர் பிரச்சினை யாரால் முடியும் என்பதை முதலில் பார்க்கவேண்டும். முதல்வர் கலைஞர் அவர்கள் அதற்குத் தேவையானதை செய்து கொண்டிருக்கின்றார்.

தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றியவர் (அனைத்து ஜாதியினர் அர்ச்சகர்) கலைஞர். அதேபோல இலங்கையிலே முள்வேலிக்குள் இருக்கின்ற தமிழர்களைக் காப்பாற்ற அந்த முள்வேலியையும் அகற்றக் கூடியவர்தான் நம்முடைய கலைஞர் (பலத்த கைதட்டல்).
போர் முடிந்துவிட்டது. இனி ஈழத் தமிழர்கள் அவரவர்களுடைய வாழ்விடங்களுக்கு அனுப்புவதை விட்டுவிட்டு, அந்த இடங்களில் எல்லாம் ராஜபக்சே சிங்களவர்களை குடியமர்த்துகின்றார்.


ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமை பெற, நாங்கள் எந்த விலையையும் கொடுக்கத் தயார்.
ஈழத் தமிழர்களுடைய பிரச்சினையைத் தீர்ப்பது உலக நாடுகளுக்கும் கடமை இருக்கிறது. சிங்கள அரசுக்கு சீனா தளம் அமைத்து தருகிறது. பாகிஸ்தான் ஆயதங்களைத் தருகிறது. மத்திய அரசு இனி என்ன செய்யப் போகிறது? ராஜபக்சே அரசு இந்திய அரசின் இறையாண்மைக்கு சவால் விட்டிருக்கின்றது.

இலங்கையில் தமிழ் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பத்திரிகை சுதந்திரமான நான்காவது தூண் அங்கு அழிந்து போய்விட்டது.

இங்கிலாந்து சேனல் 4 ஒலி, ஒளிபரப்பிய செய்திகள் சிங்களவர்களின் கொலை வெறித்தனத்தை வெளிக் கொணர்ந்துவிட்டது. நம்முடைய இதயமெல்லாம் வெடித்துவிடக் கூடிய அளவுக்கு கொடுமை நடந்துள்ளது.

நார்வே நாட்டுக்கு இருக்கின்ற உணர்ச்சி இங்குள்ளவர்களுக்கும், இந்திய அரசுக்கும் இல்லையே!

கலைஞர் அவர்கள் ஈழத் தமிழர்களுக்காக சென்னை கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்தபொழுது, திராவிடர் கழகத்தின் சார்பில் அப்பொழுதே அறிவித்தோம்.

ஈழத் தமிழர்களின் இன்னல்கள் களையப்படவில்லை என்றால், தமிழர்கள் அனைவரையும் திராவிடர் கழகம் ஒன்று திரட்டி இங்குள்ள இலங்கை துணை தூதுவர் அலுவலகத்தை பூட்டு போட்டு மூடுவோம் என்பதை அறிவித்திருந்தோம்.

அந்தப் போராட்டம் தள்ளி வைக்கப்பட்டிருக்கின்றதே தவிர, அது கைவிடப்படவில்லை.
ராஜபக்சே உலக நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்


ராஜபக்சே உலக நீதிமன்றத்தின் முன்பு முதல் குற்றவாளியாக நிறுத்தப்படவேண்டும்.
இந்த போராட்டம் தொடரும்.

நாம் ரயில் மறியல் செய்யப் போகிறோம்.

கட்டுப்பாடாக நாம் நடந்துகொள்ளவேண்டும். காவல் துறையினருக்கு ஒரு சிறு தொல்லைகூட நம்மால் ஏற்பட்டுவிடக் கூடாது.

இவ்வாறு தமிழர் தலைவர் உரையாற்றினார்.

--------------"விடுதலை" 2-9-2009

7 comments:

கோவி.கண்ணன் said...

இந்த போராட்டம் எந்த ஆண்டு நடந்தது ?

Unknown said...

மூடனே,
தன்னலம் கருதாது தொண்டாற்றி வரும் ஆசிரியரையும்,மாணக்கன் ஓவியாவையுமா இவ்வாறு கிண்டலடிப்பது.

ஓர்மைகள் said...

இலங்கையில் சுமூக நிலை நிலவுகிறது என்று கருணாநிதி சொல்கிறார். அங்கே தமிழர்கள் வதைக்கப்படுவதாக வீரமணி போராடுகிறார். என்ன கோமாளித்தனம் இது? யார் சொல்வதை நம்புவது?

KANTHANAAR said...

எல்லா கோபங்களையும் கணைகளையும் அந்த ராச பக்ச மேல் திருப்பி விட்டால் பலர் தப்பித்து விடலாம்.. நல்ல உத்தி

செந்திலான் said...

இந்த போராட்டத்தால ஒண்ணும் ஆகப் போறது இல்ல. இது அங்கு வந்த "தலைவர்களுக்கே" நல்லா தெரியும். கலைஞர் டி .விக்கும் ,சன் டி.விக்கும் ஒரு பிட் நியூஸ் அவ்வளவு தான் ஈழத் தமிழர்களை வெச்சு காமெடி கீமடி பண்ணலையே ?.

அப்பாவி முரு said...

எதுக்கும் ஒரு ஆறுமாசம் கழிச்சு வந்து வாக்குறேன்.

(அன்னிக்கும் இதே மாதிரி போராட்டம், தெருமுனை கூட்டம், உத்தேச ரயில் மறியல் போன்றவற்றில் ராசபக்சேயை குற்றவாளி கூண்டில் நிப்பாட்டுவதை பத்தித்தான் பேசிக்கிட்டு மட்டும் தான் இருப்பீங்க)

தமிழ் ஓவியா said...

//இலங்கையில் சுமூக நிலை நிலவுகிறது என்று கருணாநிதி சொல்கிறார். அங்கே தமிழர்கள் வதைக்கப்படுவதாக வீரமணி போராடுகிறார். என்ன கோமாளித்தனம் இது? யார் சொல்வதை நம்புவது?//

இது குறித்து குமுதம் இதழுக்கு கலைஞர் அளித்த பேட்டி உங்களை தெளிவு படுத்தும்.


"கேள்வி: சர்வக்ஞர் சிலை திறப்பு விழாவில் தாங்கள் பேசும்போது இலங்கையில் சுமுக நிலை திரும்பியிருப்பதாக பேசியதற்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறதே. இலங்கையில் சுமுக நிலை திரும்பி உள்ளதாக நீங்கள் கருதுகிறீர்களா?

கலைஞர்: நான் பேசியதை சில விஷமிகள் தங்கள் வசதிக்கு ஏற்ப மாற்றிக் கொண்டார்கள்.

கேள்வி: இலங்கைப் பிரச்சினை தீவிரமாக இருந்தபோது அங்கு அமைதி திரும்பிவிடக்கூடாது என்று சிலர் தீவிரமாய் இருந்தார்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். யார் அவர்கள் என்று வெளிக்காட்ட இயலுமா?

கலைஞர்: சொல்லித்தான் தெரியவேண்டுமா?

கேள்வி: நீங்களும் மத்திய அரசும் நினைத்திருந்தால் விடுதலைப் புலிகளுக்கு இந்த முடிவு ஏற்பட்டிருக்காது என்றும் ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. அதற்கு தங்களின் பதில் என்ன?

கலைஞர்: மத்திய அரசின் கருத்துக்கள் ஏற்கப்படாவிட்டாலும், நான் மதிக்கப்படாவிட்டாலும், இந்த முடிவு ஏற்பட்டிருக்கக்கூடாது.

இவ்வாறு முதல்வர் கலைஞர் பேட்டியளித்தார்.