Search This Blog
15.9.09
பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்ன செய்தார்? என்று வரலாறு தெரியாமல் பேசுவது, எழுதுவது ....
பெ.சு.மணியின் நீதிக் கட்சியின்
திராவிடன் நாளிதழ் - ஓர் ஆய்வு நூல் சில வரலாற்று உண்மைகள்
சமீபத்தில் நெல்லை சென்றபோது திரு தி.க.சி. அவர்களை வழக்கம்போல் சந்தித்தேன். ஆம்! வழக்கம் போல்
ஏனென்றால் தி.க.சி. அவர்கள் குடியிருக்கும் திருநெல்வேலி நகர் சுடலைமாடன்கோவில் தெருவிற்கும் எனக்கும் அய்ம்பது ஆண்டுக் காலப் பந்தம் உண்டு. அங்கே - என் மாமனாரும், அவருடைய துணைவியார் என் தந்தையின் சகோதரியின் குடும்பமும் வாழ்ந்து வந்தனர்.
ஆனால், தி.க.சி. அவர்களை நான் 1965_67_களில் பச்சையப்பன் கல்லூரியில் பயிலுகையில், அவர் தியாகராயநகரில் தங்கியிருந்த வேளையில் எனக்கு என் நண்பர் பள்ளித் தோழர் அறிமுகம் செய்து வைத்தார். அவர் பெயர் சுந்தரமகாலிங்கம்.
நான் பள்ளிப் பருவத்திலிருந்தே - கல்லூரிப் பருவத்திலும் திராவிட இயக்கப் பற்றாளன். இருப்பினும் என் மீது, என் எழுத்தின் மீது மிகுந்த அன்பும் ஈடுபாடும் கொண்டவர். அது மட்டுமல்லாது எப்போது நெல்லை சென்றாலும் அவரைப் பார்த்து விடுவேன். நுழைகையிலேயே மகிழ்வு பொங்க அந்த நெல்லைத் தமிழில் அவர் வாங்கய்யா, வாங்க என்று வரவேற்று அளவளாவி அவருடைய வீட்டு வாயில்வரை உடன் வந்து, வாயிலிலும் நின்று ஓர் அய்ந்து நிமிடம் உரையாற்றி அனுப்புவார். என் எழுத்துப் பணிக்கு அவரைச் சந்தித்து விட்டு வந்தாலே புதிய ஊக்கம், உத்வேகம் கிடைக்கும். சமீபத்தில் நான் வரைந்த கட்டுரைகளை அவர் பாராட்டியபோது மகிழ்ந்து போனேன். தியாகதீபம் மணியம்மையாரின் எளிமை, சிக்கனம், கொள்கை உறுதி ஆகியவைகளை யெல்லாம் கூறி, மணியம்மையார் வரலாற்று நூலை நிறைவு செய்திருக்கிறேன் என்றவுடன் உண்மையிலேயே செய்யவேண்டிய பணி என்று அப்படியே பூரித்துப் பாராட்டினார்.
அவருடைய இல்லத்தில்தான் நெல்லை கண்ணன் அவர்களுடைய மகன் நடத்தும் ஏட்டினைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. 2007 இல் வெளியான நீதிக்கட்சியின் திராவிடன் நாளிதழ் ஓர் ஆய்வு எனும் பெ.சு.மணி அவர்களின் நூல் பற்றிய ஒரு பக்கம் செய்தி காணப்பட்டது.
அதில் காணப்பட்ட செய்திகள் வரலாற்று ஆய்வாளனான எனக்கு வலிந்து கூறப்பட்டவைகளாகத் தென்பட்டன. சென்னை வந்தபின் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடமிருந்து அந்நூலை வாங்கிப் படித்துப் பார்த்தபோது பெ.சு.மணியின் முன்னுரையில் திராவிட இயக்கத்தை மட்டம் தட்டும் உள்நோக்கம் கொண்ட முன்னுரை காணப்பட்டது. நூலுக்கும் இந்த முன்னுரைக்கும் தொடர்பு இல்லை. திராவிடன் இதழ் குறித்த ஆய்விற்கும் அவர் வலிந்து கூறிய கருத்துகளுக்கும் தொடர்பு ஏதுமில்லை. முழுக்க, முழுக்க பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பிலும், பிராமணீய எதிர்ப்பிலும் திராவிட இயக்கத்திற்கு முதன்மை இல்லை அல்லது திராவிட இயக்கத்திற்கு அப்பெருமை கிடையாது என நிறுவ மேற்கொள்ளப் பெற்ற முயற்சியாகவே தென்பட்டது.
திரு பெ.சு.மணி ம.பொ.சி.யின் இயக்கத்தவர் என்பதும், பார்ப்பனர் என்பதால் இதழாய்வு என்ற பெயரில், தம்முடைய ஆய்வில் தம் இயக்க, வகுப்பு நஞ்சைக் கலக்க முயல்வதாகவே குற்றம் சாட்ட நடுநிலையோடு நோக்குகையில் தோன்றுகிறது.
7.2.1998 இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும், சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத் துறையுடன் இணைந்து டாக்டர் மா.இராசமாணிக்கனார் இதழியல் ஆய்வு மய்யம் நடத்திய திராவிட இயக்க இதழ் கருத்தரங்கம் ஒன்றில் திராவிடன் இதழ் ஆய்வுக் கட்டுரையில் விரிவாக்கமாக நீதிக்கட்சியின் திராவிடன் நாளிதழ்- ஓர் ஆய்வு எனும் நூலை வெளியிட்டுள்ளார்.
ஆனால், தாம் எழுதிய ஆய்வுக் கட்டுரையின் விரிவாக்கமாக மேலும் திராவிடன் இதழ்கள் குறித்த விமர்சனமோ, விளக்கமோ, புதிய தகவல்களோ - திராவிடன் இதழ்கள் குறித்து மட்டும் எடுத்துக் கூறியிருந்தால் உண்மையிலேயே பாராட்டுக்குரியதாக அமைந்திருக்கும்.
ஆனால், இவர் 360 பக்க கிரவுன் அளவில் எழுதிய நூலில் 260 பக்கம் திராவிடன் இதழ் பற்றிய எந்தச் செய்தியும் கிடையாது. ஆனால் திராவிடன் குறித்த நூறு பக்கப் பார்வையும் பார்ப்பனியப் பார்வையாகவே முழுதும் இருக்கிறது. திராவிடன் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப் பெற்ற மக்களுக்குச் செய்த தொண்டு, 1929 இல் செங்கல்பட்டில் நடைபெற்ற முதலாவது சுயமரியாதை இயக்கத்திற்கு என முதல் முதலில் மலர் வெளியிட்டது, சுயமரியாதை மாநாட்டைக் கண்முன் நிறுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டது எதுவும் இவர் கண்ணில்படவில்லை.
ஆய்வாளர்கள் என்ற போர்வையில் இப்படி ஒருதலைச் சார்பாகச் செய்திகளைத் திரித்து என்பதைவிட குதறி வெளியிடும் ஆபத்துக் கருதிதான் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பெரியார் எழுத்துகள் திராவிடர் கழகத்தின் சொத்து என்பதை நிலை நாட்டப் போராடி வருகிறார்கள்.
பெ.சு.மணி அவர்களின் முன்னுரையைப் படித்தாலே அவருடைய பார்ப்பனிய உள்நோக்கம் பளிச்சென வெளிப்பட்டுவிடுகிறது.
எதையோ எழுதினால் எழுதிவிட்டுப் போகட்டும், இதற்கெல்லாம் மறுப்பெழுத விளம்பரம் கொடுக்க வேண்டுமா? என்று கூடச் சிலர் நினைக்கக்கூடும். ஆய்வாளராக மதிக்கப்படுபவர்களின் கருத்துகள் கருத்தரங்குகளில் அரங்கேறுவதும், பின் அச்சேறுவதும் கருத்து சுதந்திரமாகாது. கருத்து முரண்பாடு கூட அல்ல; கருத்துத் திரிபு, பார்ப்பனியக் குறும்பு, திராவிட இனத்திற்கு எதிரான காழ்ப்புணர்வு என்றே ஆகும்.
திராவிட மக்களிலேயே ஒரு சிலர் கிளம்பி இருக்கிறார்கள். பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்ன செய்தார்? என்று வரலாறு தெரியாமல் பேசுவது, எழுதுவது, தெரிந்தாலும் வேண்டுமென்றே பார்ப்பனரல்லாதவர் இடையேயே பாகுபாட்டை வளர்ப்பது என்று அவர்களுக்கு இது போன்ற நூல்கள் பிரித்தாளும் சூழ்ச்சிக்குத் துணை போய்விடக் கூடாது என்னும் நோக்கம்தான் நாம் இதனை எழுதப் போந்தது.
அறக்கட்டளைச் சொற்பொழிவின்போது இவர் இப்போது எடுத்து வைத்துள்ள முன்னுரையில் காணப்படும் கருத்துகளைக் கூறவில்லை. சொற்பொழிவு விரிவாக்கம் என்ற பெயரில் பார்ப்பனிய வாலை நீட்டும் முயற்சியே என்னும் அய்யப்பாடு தோன்றுகிறது.
திராவிடன் நாளிதழ் - ஓர் ஆய்வு எனும் தலைப்புப் போட்டவர் ஒரு பைசாத் தமிழன், தமிழன்! justice, பறையன் ஆகிய ஏடுகளில் தலைப்புப் பக்கத்தை அட்டையில் போட்டு விட்டு தாம் மேற்கொண்ட ஆய்விற்கு உரிய திராவிடனுக்குக் கீழே அத்தோடு ஒன்றாகச் சேர்த்திருப்பதே, முதல் சான்று.
நல்லவேளையாக முன்னுரையில் திராவிட இயக்க இதழ்களில், திராவிடன் தலையாயது. இந்த இதழ் முழுவதும் கிடைக்காத நிலையில் முழுமையான ஆய்வு நிகழ்த்த வாய்ப்பில்லாமல் போய்விட்டது. எமது பார்-வைக்கு 1.6-.1917 முதல் 7.12.1917 வரையிலான அய்ந்து இதழ்களும், 1922, 1928, 1929 ஆம் ஆண்டுகளின் அய்ந்து இதழ்களும் கிடைத்தன என்று கூறியுள்ளார். அதாவது ஓர் அரைகுறை ஆய்வுதான். அய்ந்து இதழ்களும் எவை எவை எனும் குறிப்புக் காணப்படவில்லை என்பதோடு பெரும்பாலும் 1917 ஆம் ஆண்டுச் செய்திகளும், சுயமரியாதை இயக்க மாநாடு குறித்த ஒரு பத்தியுமே காணப்படுகின்றன.
ஏற்கெனவே ஒரு கருதுகோள் (hypothesis) திராவிட இயக்கப் பெருமைகளைச் சிதைப்பது அல்லது திராவிட இயக்கப் பணிகளைக் குறைத்து மதிப்பீடு எனும் நோக்கம் கொண்டு இந்த நூலை எழுதியிருப்பதாகத் தெரிகிறது.
பகுத்தறிவு இலக்கிய வரலாறு என்னும் நூலைத் தமிழ் விரிவுரையாளர் கு.வணங்காமுடி எழுதி உள்ளார். அந்நூலில் க. அயோத்திதாஸ் பற்றிய சிறு குறிப்பும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது என்று குறை கூறும் பெ.சு. மணி மேலும் இவர் தமது நூலில் மாமேதை சிங்காரவேலர் என்பவர் ஒருவர் இருந்ததாகக் குறிப்பிடவில்லை. இந்தக் குறைபாட்டை அணிந்துரை எழுதிய பேராசிரியர் க.அன்பழகனும், பாராட்டுரை எழுதிய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணியும் சுட்டிக் காட்டவில்லை என்று வலிந்து குறை கூறுகிறார்.
அது விமர்சனக்காரர்களின் பணியாக அமையலாமே தவிர அணிந்துரை எழுதியவரும், பாராட்டுரை எழுதிய ஆசிரியர் அவர்களும் சுட்டிக் காட்டவில்லை என்று குறைப்படுவது நியாயமாகப்படவில்லை. தமிழில் தலித் இலக்கியத்தின் ஆதி கர்த்தாவாகப் பண்டிதர் க.அயோத்திதாசைக் குறிப்பிடலாம் இலக்கியத்தில் அது என்ன தலித் இலக்கியம்? தலித் மக்களை மட்டுமல்லாமல் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, நசுக்கப்பட்ட உழைப்பாளர் குறித்த இலக்கியம் என்று வேண்டுமானால் கூறலாம்.
நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள், தாழ்த்தப்பட்ட உடன் பிறப்புகளிலேயே நூற்றுக்கு ஓரிருவர் தவிர எத்தனை பேர் அயோத்திதாசர் அவர்களை அறிந்த அளவிற்கு அவருடைய இலக்கியப் படைப்பாளர்களைக் குறித்த பகுத்தறிவு இலக்கிய வரலாறு படைத்த கு.வணங்காமுடி. அயோத்தி தாசரின் இந்து சமயப் பற்று, அத்வைத்தானந்த சபை நிறுவியது, சமயவாதம் செய்வதில் அவருக்கிருந்த பேரார்வம் ஆகியவற்றினால் பகுத்தறிவு இலக்கிய வாதியாக அடையாளம் காணமுடியாமல் போயிருக்கலாம். மேலும் நீலகிரியில் வாழ்ந்த காலத்தில் பழங்குடி மக்களை மதமாற்றம் செய்வதை எதிர்த்தவர், தியோசபிகல் சொசைட்டி தொடர்பு கொண்டிருந்தார். தென்னிந்திய சாக்கைய பவுத்த சங்கம் நிறுவியவர் அவர். பவுத்தமே தாழ்த்தப்பட்டவர்களின் சமயம் எனும் கருத்துடையவர்.
----------------தொடரும்....
-----------முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் -"விடுதலை" 14-9-2009 நாளிதழில் எழுதிய ஆய்வுக் கட்டுரை
Labels:
திராவிடர் இயக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment