Search This Blog

4.9.09

ஜாதி மதம் ஒழிய, இஸ்லாமே நன் மருந்து என்று பெரியார் கூறியது எதற்காக?ஏன்?


மதத்தை ஒழித்தால்தான் சாதி மறையும்!


மற்ற எந்த நாட்டிலும் மனிதன்தான் உண்டு, ஜாதி கிடையாது. இந்த நாட்டிலேதான் - இந்து மதத்தில்தான் ஜாதி என்றும், பறையன், பள்ளன், சக்கிலி, தீண்டப்படாதவன் என்ற பேதமும் உள்ளது. யோக்கியமான கடவுள், ஒழுக்கமான கடவுள், பகுத்தறிவுக்கு ஒப்பிய பேதமில்லாத மதம், சாஸ்திரம், புராணம் இவை இருந்தால் கவலையில்லை. இவைகளினால் தான் நம் நாட்டில் நாம் கீழ் ஜாதியாகவும், உடல் உழைப்புக்காரர்களாக - ஏர் உழுது, வண்டி இழுத்து, மூட்டை சுமந்து, பாடுபட்டும் வயிறாரக் கஞ்சிக்கும் வழியில்லாமல், தாழ்ந்த ஜாதி என்பதால் படிப்புக்கும், உத்தியோகத்திற்கும் வசதியில்லாது கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கவும், மேல்ஜாதி என்று இனமாகிய பார்ப்பான் மட்டும் தன்னை இதன் மூலம் மேல்ஜாதி என்று கூறிக்கொண்டு படிப்பு - உத்தியோகம் முதலிய எல்லா வசதிகளையும் பெற்றுச் சுக வாழ்வு வரும்படியாகவும் இருக்கின்றது. எனவேதான் இந்தக் கடவுள், மதம், சாஸ்திரம், புராணம் இவைகள் ஒழிய வேண்டும் என்று கூறிப் பாடுபட்டு வருகிறோம்.


இந்த 30, 40 வருடமாக சத்தம் போட்டதால் தானே பறையன் கலெக்டராகவும், மற்றப் பல பெரிய உத்தியோகங்களும் பெற முடிந்தது? திராவிடர் கழகம் (அதாவது ஜஸ்டிஸ் கட்சி) தோன்றிய பிறகுதான் அந்தக் காலத்தில்தான் பறையன், பள்ளன், பஞ்சன் என்பவன் எம்.எல்.ஏ.வாகவும், கலெக்டர் - முன் சீஃபாகவும் ஆனான். அதற்கு முன்பே இது நடந்தது என்று யாராவது சொல்ல முடியுமா? முன்பெல்லாம் சூத்திரனுக்கென்றால் கிடைக்காது. காங்கிரஸ் செல்வாக்கு ஏற்பட்டது முதல் 50-வருடம் இப்படித்தான். ஜஸ்டிஸ் கட்சி (நீதிக் கட்சி) தோன்றிய பிறகுதான் தேர்தல் இல்லாவிட்டாலுங்கூட நாமினேஷன் (நியமனம்) மூலமாவது கொடுக்க வேண்டும் என்ற நிலை வந்தது. எனக்கு வயது 81-ஆகிறது. இந்த 75-வருடத்தில் நடந்தவை எனக்கு நன்றாகத் தெரியும்.


நான் படித்த போது ஒரு பறையன், சக்கிலி என்பவன் கூட என்னுடன் படிக்கவில்லை. நாங்கள் உள்ளே உட்காருவோம். பறையன் என்பவன் வந்தால் வரும் போதே கையில் ஓலைப்பாய் கொண்டு வந்து வெளியில் உட்காருவான். மணலைக் குவித்து வைத்து எழுதுவான். அவனுக்கென்றுத் தனியாகப் பாடம் சொல்லித்தர மாட்டார்கள். ஆசிரியர் எங்களுக்குச் சொல்லித்தரும் போது அவன் வெளியில் இருந்து கேட்டுக் கொண்டு ஆசிரியர் போகச் சொன்னதும் போய்விடுவான். இதுதான் அன்றைய நிலை. ஜஸ்டிஸ் கட்சி தோன்றிய பிறகுதான் ஆதிதிராவிடர்கள் எம்.எல்.ஏ. ஆக வேண்டும்! பள்ளிக்கூடத்திலே இடம் தரவேண்டும் என்றும் சட்டம் போட்டதோடு, பஞ்சாயத்து போர்டுகளில் பறையன் என்பவனை நாமினேஷன் போட வேண்டும் என்று தீர்மானம் போட்டோம்.


இப்போதுதான் தேர்தல். அப்போதெல்லாம் நாமினேஷன் தான். தஞ்சை ஜில்லா போர்டின் (மாவட்டக் கழகம்) தலைவராக திரு.சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் இருந்தபொழுது, அவர் ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு ஆதித்திராவிடன் என்பவனைப்போட்டு விடுவார். அப்போது பட்டுக் கோட்டைப் பகுதியில் திரு.நாடி முத்துப்பிள்ளை என்ற பிரபலஸ்தர் ஒருவர் இருந்தார். அவர் ஜஸ்டிஸ் கட்வியினால் பதவிக்கு வந்தவர். பின்னால் காங்கிரசுவாதியானவர். அங்கு ஒரு தாழ்த்தப்பட்டவனைப் பன்னீர் செல்வம் பஞ்சாயத்து போர்டுக்கு நாமினேஷனில் போட்டுவிட்டார். அவர் என்ன செய்தார் தெரியுமா? அந்த ஆளை உள்ளேயே விட மறுத்து வெளியில் உட்கார வைத்துக் கையெழுத்து வாங்கினார். அவ்வளவு கொடுமை! அப்போதுதான் நான் காங்கிரசைவிட்டு வெளியில் வந்திருந்தவன். "குடிஅரசு" பத்திரிகை ஆரம்பித்து ஆதி திராவிடர்கள் பற்றி அடிக்கடி எழுதி வந்தேன்.


இந்தப் பட்டுக்கோட்டையில் நாடிமுத்து பிள்ளையின் செய்தி வந்தது. உள்ளேயே விடமாட்டான் என்கிறானே என்று நாங்கள் கிளர்ச்சி செய்தோம். அந்த ஆளை உள்ளே இழுத்துக் கொண்டு சென்றோம். அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவ்வளவு கொடுமை இந்தச் ஜாதியின் பெயரால்!

ஜாதி மதம் ஒழிய, இஸ்லாமே நன் மருந்து என்று கூறினேன்.
ஏன் அப்படிக் கூறினேன் என்றால் - மதம் மாறும் எண்ணம் வந்தது என்றால் - இந்து மதத்தில் இருப்பதால்தானே அவன் பறையன் ஆகக் கருதப்பட்டுக் கொடுமைப்படுத்தப் படுகிறான். எனவே தான் மதத்தைப் பற்றி எனக்குக் கவலையில்லை. அது எந்த மதமாக இருந்தாலும் சரி. எந்த மதத்தில் பறையன், பள்ளன் என்று இல்லையோ அதில் அவர்கள் இஷ்டம்போல் மாறலாம் என்றேன்.


வைக்கத்தில் ஈழவர்கள் வீதி வழியே போக்கூடாது என்பதை எதிர்த்து அறப்போர் செய்தபோது தினம் 4-பேர் மறியல் செயல் சிறை சென்றோம். கடைசியில் மாநாடு கூட்டிச் ஜாதி ஒழியவேண்டுமானால் அதற்கு ஆதாரமான இந்து மதத்தை விட்டு இஸ்லாம் மதத்தில் சேருவது என்றோம். சிலர் கிறிஸ்தவ மதம் என்றனர். கடைசியில் இந்து மதத்தை விட்டு மாறிவிடுவது. எந்த மதத்தில் சேருவது என்பது அவரவர்கள் இஷ்டம் என்று 20-ஆயிரம் பேர் கூடிய அம்மாநாட்டில் எதிர்ப்பு இல்லாமல் தீர்மானம் நிறைவேறியது, அந்த இடத்திலேயே 400-பேர் சாயபுகளாக (இசுலாமியராக) மாறினர். எந்த வீதியில் நடக்கக்கூடாது என்று இருந்ததோ அங்கெல்லாம் போரிட வேண்டியிருந்தது.


மேல் ஜாதிக்காரர்கள் சில சமயம் தாழ்த்தப்பட்டவர்களை வேலை காரணமாக வீட்டிற்குப் பின்னால் அழைத்துச் செல்ல நேரிடும்போது சந்து வழியாக அழைத்துச் செல்வது வழக்கம். சந்து இல்லாதபோது வீட்டிற்குள்தான் அழைத்துச் செல்ல வேண்டும். அவன் வீட்டிற்குள் நுழையக் கூடாது. அதற்காக கழுத்தில் சிலுவை மாட்டச் செய்து, எந்த இடத்தில் நுழையக்கூடாது என்றார்களோ அந்த வழியாக அழைத்துச் செல்வார்கள்! அவன் சிலுவை மாட்டிக் கொண்டால் பறையன் இல்லையாம். கிறிஸ்தவனாக ஆகிவிடுகிறானாம். வேலை முடிந்து வெளியில் வந்ததும் சிலுவையைக் கழற்றி வாங்கிவிடுவார்கள்! இது எனக்கு ஆதாரமாக இருந்தது.

நாம் இந்துவாக இருக்கும்வரை ஒத்துக் கொள்ள மாட்டான். எனவே நாம் மதத்தை விட்டு மாறிவிட வேண்டும் என்று கூறினேன்.

ஆலைப்புழையில் ஒரு கடையில் சென்று சாயபுவாக மாறியவன் சாமான் கேட்டான். அந்த நாயர், "என்னடா உள்ளே வந்து விட்டாயா?" என்று கேட்க, இவன் "நான் தீண்டப்படாதவன் அல்ல; இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவன்" என்று கூறினான். உடனே அவன் ஒரு மரக்கட்டையால் (அதாவது காசு வாங்கவும், சாமான் கொடுக்கவும் பயன்படும் தட்டு) அவன் மண்டையில் அடித்துவிட்டான். மண்டை உடைந்து இரத்தமும் வந்துவிட்டது. சாயபுகளின் கூட்டமும் சேர்ந்துகொண்டு "எப்படி அடிக்கலாம்?" என்று கேட்டு பெரிய கலவரம் ஆக்கிவிட்டனர். சாயபு 2-பேரும், நாயரில் 3-பேரும் செத்தார்கள். அந்தக் கலவரத்தின் பயனால் அங்கு அப்போது திவானாக இருந்தவர். சர்.சி.பி.இராமசாமி அய்யர். அவருக்குத் தந்தி மூலம் செய்தி போயிற்று. அவர் மிகவும் தந்திரசாலி, கெட்டிக்காரர். இந்து முஸ்லிம் தகராறு வந்துவிடப் போகிறது என்று பயந்து, முன்கூட்டியே "இது முதலாளி - தொழிலாளி தகராறு தொழில் தகராறு என்று கிளப்பி விட்டு விடு. மீதியை நான் கவனித்துக் கொள்கிறேன்" என்பதாகச் செய்தி அனுப்பி அந்தப்படியே செய்துவிட்டார்.


உடனே எதாட்டியத்தில் மகாராஜாவிடம் போய் இனி நாம் நல்லபடியாக பிழைக்க முடியாது. ஆபத்து நெருங்கிவிட்டது. துணிந்து ஒவ்வொரு முஸ்லிம் ஆண் பெண்களும் கிளம்பினால் என்ன செய்வது என்று என்ன என்னமோ கூறினார். அதன் பிறகு அதற்கு என்ன செய்வது என்று ஆலோசித்துக் கடைசியில் "எங்கள் இராஜ்ஜியத்தில் இனிமேல் ஜாதி வித்தியாசம் கிடையாது. எல்லோரும் ஒரே ஜாதிதான். பிரிவினை கிடையாது. தாழ்த்தப்பட்டவர்கள், ஈழவர்கள் என்பவர்களெல்லாரும் கோயிலில் பிரவேசிக்கலாம்! குளம் கிணறுகளில் தண்ணீர் எடுக்கலாம்! சர்க்காருக்குச் சொந்தமான இடத்தில் போக உரிமை உண்டு" என்பதாக உத்தரவு போடச் செய்து இதைத் திடீரென்று இராஜாவின் பிறந்தநாளில் பிறந்தநாள் அறிக்கை என்று அவரே பிரகடனம் செய்தார். அத்துடன் அங்கே ஜாதி மேல் கீழ் சண்டை ஒழிந்து போய்விட்டது. பெயருக்குத்தான் ஜாதி என்று இருக்கிறதே ஒழிய மற்றப்படி ஒன்றும் இல்லை.


உலகத்திலேயே அதிகம் படித்தவர்கள் உள்ளது மலையாளம்தான். இங்கே தமிழ் நாட்டில் 100-க்கு 2-பெண்கள்தான் படித்தவர்கள். திருவாங்கூரில் 30- பெண்கள் படித்தவர்கள்! இங்கு ஆண்கள் 18, 20-பேர் படித்தவர்கள். அங்கு 45- பேர் படித்தவர்கள்! அங்குப் படிப்புக்காக அதிகம் செலவிடப்படுகிறது. சமதகுதி அளிக்கப்படுகிறது. அய்ந்து ஜட்ஜ்கள் இருந்தால் அதிலே 2-ஜட்ஜ்கள் ஈழவர்கள். ஏன் அப்படி? மதம் ஒழிகிறது என்றவுடன் வழிக்கு வந்துவிட்டான்! அவ்வளவுதான்! திருச்சியில் நான் எல்லோரும் மதத்தை விட்டு சாயபுவாக மாறவேண்டும் என்று பேசிய எட்டாவது நாள் சென்னை சட்டசபையில் டாக்டர் இராசன் என்ற பார்ப்பனர் எல்லோரும் கோயிலில் பிரவேசிக்கலாம் என்று சட்டம் கொண்டுவந்து பிரரேபித்துப் பேசினாரே! அதற்கு என்ன காரணம்? மதம் போகிறதே! அழிகிறதே! என்ற கவலைதான்.


வைதீகத்தில் கையை வைத்து மதம் மாறவேண்டும் என்றவுடன்தான் திருவாங்கூரில் சட்டம் வந்தது. இங்குக் கோயில் பிரவேச (நுழைவு) சட்டம் வந்தது. இப்படியே விட்டுவிட்டாலே நம் மதம் இருக்க இருக்க தேய்ந்து அழிந்துவிடும் என்று பயந்துதான் கோயில் பிரவேச சட்டம் வந்தது. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் மதத்தை ஒழித்தால் சாதி ஒழியும்; மதத்தை ஒழிக்கத் தயாராக இருந்தால் பார்ப்பான் பணிந்து விடுவான். ஜாதி, மதம், சாஸ்திரப் புராணங்களையெல்லாம் நெருப்பு வைத்துக் கொளுத்த நாம் தயாராக இருந்தால், வருணாசிரம தருமம் என்பது பற்றிப் பேசமாட்டான்.-------------சிதம்பரம் வட்டம் காட்டுமன்னார் கோயிலில் 15-10-1959 அன்று பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு."விடுதலை" 27-10-1959

3 comments:

இளையான்குடி முரசு said...

முஸ்லிமாகச் சாவேன்: ஈ.வே. ரா அறிக்கை!

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-
‘‘நான் சாவதற்கு சில நிமிடமிருக்கும் வரையிலும் இந்த ஜாதி, மத, புராணப் புரட்டுகளை ஒழிக்கப் போராடி சாகுந்தருணத்தில் முஸ்லிமாகத்தான் சாவேன்.

ஏனென்றால் நான் செத்த பிறகு என் சொத்துக்களை, என்னை மோட்சத்திற்கு அனுப்புவதான புரட்டுகளால் என் சந்ததியாரை ஏமாற்றிப் பறிக்கப்படாமலும், அவர்கள் மூடநம்பிக்கையிலீடுபடாமலிருக்கச் செய்யவும்தான் நான் அவ்வாறு செய்யத் தீர்மானித்திருக்கின்றேன்.

நான் செத்தபிறகு என் சந்ததியார் என்னை மோட்சத்திற்கனுப்பப்படுமென்ற மூடநம்பிக்கையினால் பார்ப்பனர் காலைக்கழுவி சாக்கடைத் தண்ணீரை குடிக்காமலிருக்க செய்ய வேண்டுமென்பதற்காகவும்தான் நான் முஸ்லிமாகச் சாவேன் என்கிறேன். (திராவிடன் 05-08-1929)

இஸ்லாம் மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமென்றும்,
இஸ்லாம் மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமென்றும், பகுத்தறிவின் பரிச்சைக்குவிட்டு அதன்படி நடக்கத் தயார் என்றும் முஸ்லிம்கள் இன்று தைரியமாகச் சொல்லுகிறார்கள்.

அந்தப்படிச் சொல்ல மற்ற மதக்காரர்களுக்கு ஏன் தைரியமில்லை?

எனெனில் திரு. முகம்மது நபி கொள்கைகள் அனைத்தும் அநேக விஷயங்களால் அது பகுத்தறிவுக்கு நிற்கத்தக்க யோக்கிதையுடையதாய் இருக்கின்றது. -

குடி அரசு. ஆக. 23, 1931.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

Anonymous said...

"நான் படித்த போது ஒரு பறையன், சக்கிலி என்பவன் கூட என்னுடன் படிக்கவில்லை. நாங்கள் உள்ளே உட்காருவோம். பறையன் என்பவன் வந்தால் வரும் போதே கையில் ஓலைப்பாய் கொண்டு வந்து வெளியில் உட்காருவான். மணலைக் குவித்து வைத்து எழுதுவான். அவனுக்கென்றுத் தனியாகப் பாடம் சொல்லித்தர மாட்டார்கள். ஆசிரியர் எங்களுக்குச் சொல்லித்தரும் போது அவன் வெளியில் இருந்து கேட்டுக் கொண்டு ஆசிரியர் போகச் சொன்னதும் போய்விடுவான்."
கேட்கவே கொடுமையாக இருக்கிறது அதை அனுபவித்தவர்களின் மன்வேதனை எப்படியிருந்திருக்கும். நல்லவேளை அப்படிப்பட்ட காலகட்டங்களில் நாங்கள் பிறக்காமல் போனது எங்களுடைய அதிர்ஷ்டம் என்றே சொல்லலாம்.இதையெல்லாம் அனுபவித்து சகித்து கொள்ள முடியாதலால்தான் எங்களுடைய முன்னோர்களெல்லாம் மதம் மாறிவிட்டார்கள் போலும்.