பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில்
பெரியார் களஞ்சியம் குடிஅரசு முதல் தொகுதியைத் தொடர்ந்து
பல தொகுதிகள் வெளிவந்து சமதர்மச் சமுதாயம் உருவாக்கத் துணை புரியட்டும்!
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் பெரியார் களஞ்சியம் குடிஅரசு முதல் தொகுப்-பினை வெளியிட்டுள்ளது. மேலும் தொடர்ச்சியாக வெளிவந்து சமதர்ம சமுதாயத்தைப் படைக்கட்டும் என்றார் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர். இந்த முயற்சியில் ஈடுபட்ட இளவல் வீரமணியைப் பாராட்டுகிறேன் என்றும் முதலமைச்சர் தம் உரையில் குறிப்-பிட்டார்.
முரசொலி அலுவலகத்திலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் நூலை வெளியிட்டு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
ஆருயிர் இளவல் தமிழர் தலைவர் முனைவர் கி. வீரமணி அவர்களே!
அமைச்சர் நண்பர் ஆர்க்காடு வீராசாமி அவர்களே, தமிழக வேளாண் துறை அமைச்சர் தம்பி திரு. வீரபாண்டி ஆறுமுகம் அவர்களே!
அமைச்சர் தம்பி பொன்முடி அவர்களே,
மத்திய தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் தம்பி திரு. ஆ. இராசா அவர்களே!
சட்டமன்ற உறுப்பினர் தம்பி ராஜா அவர்களே, சாமிதுரை அவர்களே, பூங்குன்றன் அவர்களே, அன்புராஜ் அவர்களே,
திராவிடர் கழகத்தின் முன்னணித் தலைவர்களே! தொண்டர்களே! நண்பர்களே!
என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!
உங்கள் அனைவருக்கும் என் வணக்கம்.
திராவிட இயக்கத்தின் புதிய அத்தியாயம் தொடங்கப்பட்ட இடம் சேலம் மாநகரம். நீதிக்கட்சியின் பெயர் திராவிடர் கழகம் என அண்ணாவின் தீர்மானத்தால் மாற்றப்பட்ட பெருமைக்குரிய நகரம் சேலம் மாநகரம். இந்நகரில், திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 131 ஆவது பிறந்த-நாள் விழா, பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா, விடுதலை நாளிதழின் 75 ஆம் ஆண்டு பவளவிழா, திராவிடர் மாணவர் கழக மாநாடு ஆகியவைகள் கொண்டாடப்படுகின்றன.
இந்த விழாக்களையொட்டி, மின்ஊடகத் தொலைத் தொடர்பு வாயிலாக, பெரியார் களஞ்சியம் குடிஅரசு நூல் வெளியிடும் அருமையான வாய்ப்பு எனக்குக் கிடைத்தமை எண்ணிப் பெரிதும் மகிழ்கிறேன்.
குடிஅரசு இதழ் முரசொலி அலுவலகத்திலிருந்து இன்றைக்கு வெளியிடப்படுகிறது என்பதை எண்ணும் வேளையில், என்னுடைய நினைவுகள் இனிக்கிறது நெஞ்சம் விம்முகிறது. பழைய நாள் நினைவுகளை எண்ணி எண்ணி!
குடிஅரசு அலுவலகத்தில் நான்
குடிஅரசு பத்திரிகையின் துணை ஆசிரியராக தந்தை பெரியார் அவர்களின்கீழ் ஈரோட்டுக் குருகுலத்தில் பணியாற்றிய இனிய அனுபவங்கள் என் நினைவுக்கு வருகின்றன.
திருவையாறு தியாகராஜர் ஆராதனையின் போது இசைவாணர் தண்டபாணி தேசிகர் தமிழில் பாடினார் என்பதற்காக, அவரை அடுத்துப் பாட வந்த பாடகர் மேடை தீட்டாகி விட்டது, என்று சொல்லி அதற்குப் பிராயச்சித்தமாக மேடையைத் தண்ணீர்விட்டுக் கழுவிய பிறகே அந்த மேடையில் பாடினார் என்று ஒரு செய்தி வந்தது. அந்தச் செய்தி குறித்து, குடிஅரசு இதழில், தீட்டாயிடுத்து! எனும் பெயரில் கட்டுரை ஒன்றை அப்போது நான் எழுதினேன். அக்கட்டுரையைப் படித்துவிட்டுப் பெரியார் என்னைப் பாராட்டியதும், அதுபோலவே குடிஅரசு இதழில் அண்ணாமலைக்கு அரோகரா என திருவண்ணாமலை தீபத்தைப் பற்றி நான் எழுதிய கட்டுரையை அவர் பாராட்டியதும் இவ்வேளையில் என் நினைவுக்கு வருகின்றன.
என் இனிய நண்பர் கவிஞர் கருணானந்தம், ஏ.பி. ஜனார்த்தனம், தவமணி ராஜன் ஆகியோரும் குடிஅரசு அலுவலகத்தில் என்னோடு பணிபுரிந்து வந்தார்கள். ஒவ்வொரு நாளும், குடிஅரசு இதழுக்குத் தலையங்கம் எழுதி, அதனை எங்களிடம் படித்துக் காட்டுவது தந்தை பெரியார் அவர்களின் வழக்கமாக இருந்தது. அத்தகைய பெருமைக்குரிய குடிஅரசு இதழ் அப்பொழுது பகுத்தறிவு வெள்ளத்தைத் தமிழகத்திலே பாய்ச்சிக் கொண்டிருந்தது.
முனைவர் இளவல் வீரமணியின் சீரிய முயற்சி
குடிஅரசு இதழில் வெளியான தந்தை பெரியார் அவர்களின் எழுத்துகளும், சொற்பொழிவுகளும், தமிழர் தலைவர் முனைவர் வீரமணி அவர்களின் சீரிய முயற்சிகளின் பயனாகக் காலவரிசைப்படித் தொகுக்கப்பட்டு, அதன் முதல் தொகுதி இன்று வெளியிடப்படுவது மிகுந்த பாராட்டுக்குரியதாகும். தந்தை பெரியார் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சிந்தனையாளர்; ஒரு தலைசிறந்த பகுத்தறிவுவாதி; வருவது அறியும் வல்லமை சான்ற விஞ்ஞானி! எந்த ஒரு விஞ்ஞானியும் தீர்க்க தரிசனத்தோடு எதிர்காலம் எப்படியிருக்கும் எனக் கணித்துக் கூறியதில்லை. ஆனால், தந்தை பெரியார் தமது கூரிய சிந்தனையாற்றலால் _ பகுத்தறிவின் தொலைநோக்கு உணர்வோடு சிந்தித்தவர்; சிந்தித்து அவர் எழுதி, பேரறிஞர் அண்ணா அவர்களால், திராவிட நாடு வார இதழில் 1943 மார்ச்சு 21, 28 தேதிகளில் இனிவரும் உலகம் எனும் பெயரில் வெளியிடப்பட்ட கட்டுரைகள், அவரை பெரியார் அவர்களை ஒரு விஞ்ஞானி என்றே பறைசாற்றுகிறது.
சமதர்ம சமுதாயம் படைக்கப் பாடுபட்ட தலைவர் பெரியார்
பெரியார் அவர்கள் தமது வாழ்நாள் முழுதும் போராடி _ வாழ்க்கை முழுவதையுமே போராட்டக் களமாக்கி, உடல் நலிவுற்ற காலங்களிலும் அதனைப் பொருட்படுத்தாது குக்கிராமப் பகுதிகளுக்குக் கூடச் சென்று, அவர் கால்படாத இடங்களே தமிழகத்தில் இல்லை; அவர் குரலை எதிரொலிக்காத பகுதிகளே இல்லை எனக்கூறும் அளவுக்குச் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு_- மனிதனை மனிதன் மனிதனாக மதிக்க வேண்டும்; மனிதனை கடவுள் பெயரால் சாதி, சமயங்களின் பெயரால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் எனப் பேதப்படுத்தும் சாதிக்கொடுமைகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டாக வேண்டும்; மூடப் பழக்கங்கள் ஒழிய வேண்டும்; அரசு வேலைவாய்ப்புகளில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கடைப்பிடிக்கப்பட்டாக வேண்டும்; பெண்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு, சொத்துரிமைகள் அளிக்கப்பட வேண்டும்; விதவை மறுமணம், கலப்புத் திருமணம் நடைபெற வேண்டும் என்பன போன்ற கொள்கைகளைப் பரப்பி - சமதர்ம சமுதாயம் படைக்கப் பாடுபட்டவர் தந்தை பெரியார்!
இந்த அமைச்சரவையே பெரியாருக்குக் காணிக்கை!
பேரறிஞர் அண்ணா அவர்கள் பெரியாரிடமிருந்து பிரிந்தபின், பெரியாருடைய கருத்துகளைச் செழிக்க வைப்பதற்காக, செயல்படுத்துவதற்காக ஓர் அரசியல் இயக்கமாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்து, தேர்தலைச் சந்தித்து, அது ஆட்சிப் பொறுப்பு ஏற்கின்ற நிலைமையை உருவாக்கினார்கள். ஆட்சிப் பொறுப்பேற்றபின், பெரியாரைச் சந்தித்து அவரது கொள்கைகள் அரசு மூலம் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்கள்.
அதன்படி, அண்ணா முதலமைச்சரானபின், ஒருமுறை அதாவது, 20.6.1967 அன்று தமிழக சட்டமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர் ஒருவர், பெரியாருக்குத் தியாகிகள் பென்ஷனும், மானியமும் வழங்கப்படுமா? என்று கேட்ட போது, அதற்குப் பதிலளித்த அண்ணா அவர்கள், இந்த அமைச்சரவையையே அவருக்குக் காணிக்கையாகக் கொடுத்திருக்கிறோமே என்றார்கள். அண்ணா அவர்கள் சட்டமன்றத்தில் இப்படிக் கூறிய செய்தி மறுநாள் 21.6.1967 அன்று செய்தித்தாளில் வரவே, அதனைச் சென்னை அரசுப் பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, ஹிரண்யா நோய்க்காகச் சிகிச்சை பெற்றுவந்த தந்தை பெரியார் அவர்களுக்கு, ஆருயிர் இளவல் தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் படித்துக்காட்ட, பெரியார் அதைக்கேட்டுப் படுக்கையில் இருந்து வாரிச் சுருட்டி எழுந்து உட்கார்ந்து மிகுந்த மகிழ்ச்சியோடு, இந்த அன்பான சேதியினால் எனக்குத் தொல்லை அதிகம் ஏற்படலாம் என்ற போதிலும், எனக்கு இந்தச் சேதி பெருமளவில் (ஹிரண்யாவினால் ஏற்பட்ட) வலியைக் கூட குறைத்துவிட்டது என்றாராம். அதன்பின், அண்ணா அவர்கள் பெரியார் அறிமுகப்படுத்திய சுயமரியாதைத் திருமணம் செல்லும் என முன்தேதியிட்டுச் சட்டம்கண்டு, அதுவரை நடைபெற்ற அனைத்துச் சுயமரியாதைத் திருமணங்களுக்கும் சட்டப் பாதுகாப்பை ஏற்படுத்தித் தந்து ஒரு மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையை நிகழ்த்-தினார்.
பெரியார் எண்ணங்களை செயல்படுத்தும் தி.மு.க. ஆட்சி
அண்ணா அவர்களைத் தொடர்ந்து, தந்தை பெரியார் அவர்களின் எண்ணங்கள் ஏழை எளிய நலிந்த சாமானிய மக்களுக்குப் பயனளிக்கும் வகையில், 1969ஆம் ஆண்டுக்குப்பின் இந்த அரசினால் இன்றளவும் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன, சாதிகளை ஒழிக்கும் நோக்கில் 20,000 ரூபாய் நிதியுதவி தந்து அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமணத் திட்டம்; விதவை மகளிர் நல்வாழ்வு பெற 20,000 ரூபாய் நிதியுதவி தந்து டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணத் திட்டம்; பெண் கல்வியை ஊக்கப்படுத்-திட ஈ.வெ.ரா நாகம்மையார் நினைவு மகளிர் இலவசப் பட்டப் படிப்புத் திட்டம்; பட்டமேற்படிப்பு வரை நீட்டிப்பு;
கிராமப்புற ஏழைப்பெண்கள் குறைந்தது 10ஆம் வகுப்பு வரையேனும் படித்திட வேண்டும் என்னும் உணர்வோடு ஏழைப் பெண்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம்;
பெண்களுக்கு தனிச் சொத்துரிமை வழங்கும் சட்டம்;
அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு;
உள்ளாட்சி நிறுவனங்களில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு;
தாழ்த்தப்பட்டோர்க்கு 18 சதவிகிதம் -இதில் அருந்ததியர்க்கு 3 சதவிகிதம்; மலைவாழ் மக்களுக்கு 1 சதவிகிதம்; மிகப் பிற்படுத்தப்பட்டோர்க்கு 20சதவிகிதம்; பிற்படுத்தப்பட்டோர்க்கு 30 சதவிகிதம் - இதில் இஸ்லாமியர்க்கு 3.5 சதவிகிதம் என மொத்தம் 69 விழுக்காடு இடஒதுக்கீடுகள்;
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசு வேலை வாய்ப்புகளிலும், கல்வி நிறுவனங்களிலும் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு;
அனைத்துச் சாதியினரையும் கோவில்களில் அர்ச்சகராக்கும் சட்டம்;
இனமுரசு சத்யராஜ் பெரியாராகத் தோன்றி நடித்த தந்தை பெரியார் திரைப்படத் தயாரிப்புக்கு 95 இலட்ச ரூபாய் அரசின் நிதியுதவி;
இந்திய சுதந்திரப் பொன்விழா-வையொட்டி 1997ஆம் ஆண்டில் அறிவித்தபடி, அனைத்து சாதியினரும் ஒரே இடத்தில் வசிக்க ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள 145 பெரியார் நினைவு சமத்துவபுரங்களுடன் 2006க்குப்பின் மேலும் 95 சமத்துவபுரங்கள் அமைத்து 240 சமத்துவபுரங்களையும் தந்தை பெரியார் உருவச் சிலைகளுடன் நிர்மாணிக்கும் திட்டம்;
ஈரோடு நகராட்சிமன்றத் தலைவராகத் தந்தை பெரியார் பொறுப்பேற்றிருந்தபோது அந்நகராட்சி எல்லையை விரிவுபடுத்திடக் கருதி,
“The limits of the municipality of Erode be extended on the west. So as to include the hamlets of Veerappan Chatram, Periavalasu and Subramania Goundan Valasu of Erode, and Peria Semur Villages.”
என 19.11.1917 அன்று அந்நாளில் ஆங்கிலத்தில் பதிவுசெய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அப்போதைய சென்னை மாகாண அரசால் 23.10.1919 அன்று அரசாணை வெளியிடப்பட்டும், நிறைவேற்றப்படாமலிருந்த அந்தத் தீர்மானத்தை, 90 ஆண்டுகளுக்குப்பின், 15.9.2007 அன்று ஈரோட்டில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் இந்த அரசு நிறைவேற்றும் என அறிவித்து, 17.11.2007 அன்று அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்து, 1.1.2008 முதல் ஈரோடு நகராட்சியை மாநகராட்சியாக நிலை உயர்த்திப் பெருமிதம் கொண்டமை;
எனப் பெரியார் கொள்கைகளுக்கு உயிர் கொடுக்கும் திட்டங்கள் பல தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்படுகிறது
இந்நிலையில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின்மூலம் இன்று வெளியிடப்பட்டுள்ள இந்த பெரியார் களஞ்சியம் குடியரசு முதல் தொகுதி நூலைத் தொடர்ந்து, அடுத்தடுத்து மற்ற தொகுதிகளும் வெளிவந்து தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளைத் தொடர்ந்து முழங்கி தமிழகத்தில் சமதர்ம சமுதாயத்தை உருவாக்கிட துணைபுரியட்டும் என என்னுடைய நல்வாழ்த்துகளைத் தெரிவித்து இந்த சீரிய முயற்சியில் ஈடுபட்ட என்னுடைய ஆருயிர் இளவல் முனைவர் வீரமணி அவர்களுக்கும், மற்ற நண்பர்களுக்கும் என்னுடைய பாராட்டுகளை உரித்தாக்குகிறேன். நன்றி, வணக்கம்.
இவ்வாறு முதலமைச்சர் கலைஞர் வீடியோ கான்பரன்சிங்கின்மூலம் பேசினார்.
----------------நன்றி:-"விடுதலை" 18-9-2009
0 comments:
Post a Comment