Search This Blog

8.9.09

ராமலீலாவும் ராவணலீவாவும் !ராமலீலாவும் ராவணலீவாவும் !


கடந்த சில தினங்களுக்கு முன் டில்லி மாநகரில் ராம லீலா கொண்டாடினராம் - வைதீகர்கள். இராவணனையும் அவனது சந்ததியையும் அழித்த ராமனின், திருநாளாம் அது. அந்த விழாவைக் காண, பேரப் புதல்வனுடன், இந்தியப் பிரதமர் பண்டித நேரு வந்தாராம்! ராசேந்திர பிரசாத் - இந்தியக் குடியரசுத் தலைவர் - சென்றாராம்! டில்லி மந்திரிகள், அரசியல் தூதர்கள், அத்தனை பேரும் அங்கிருந்தனராம்! அந்தக் காட்சியைப் படம் எடுத்து நமது பத்திரிகைகள் வெளியிட்டிருக்கின்றன.

இந்திய சர்க்காரின் செய்தி இலாகா, இந்தக் கோலத்தைத் திரைப்படமாக்கி, சினிமா கொட்டகைகளில் இந்த வாரம் காட்டியும் வருகிறது.

இராவணன் - இராமன் யாராரென்பதை அறியாதவர் அல்ல நேரு. அவ்விருவருள்ளும் ஏற்பட்ட போராட்டத்தை அவரே தனது திருச்செல்வி இந்திராவுக்கு எழில்பட விளக்கியுள்ளார் `ஆரியருக்கும் திராவிட மக்களுக்குமிடையே நிகழ்ந்த போராட்டத்தை விளக்குவதுதான் இராமாயணம்’ என்று, இந்திராவுக்கு விளக்கிய, அந்த சரித எழுத்தாளன், பேரனுடன் சென்று இராவணனையும், கும்பகர்ணனையும், இந்திரஜித்தையும் கொடும்பாவிகளாக்கி எரிக்கும் காட்சி - அல்ல! அல்ல!! விழா - காணச் சென்றிருக்கிறார். அவர்கள் எரிவதைக் காட்டி பேரனின் குதூகலத்தோடு தானும் மகிழ்ந்து சிரிக்கிறார்.!

இராணவன் தென்னாட்டு மன்னன், திராவிடப் பெருங்குடிமகன். இது அறிந்தவர் நேரு. ஆனாலும் கலந்துகொண்டார் நேரு! தனது எதிர்காலப் பரம்பரை யொன்றையும் அழைத்தேகி, மகிழ்ந்திருக்கிறார்!

பண்டிதநேரு, கோயில் பூசாரியல்ல, கோலேந்தியவர், அந்தக் கோலேந்திக்கு, இந்தக் கொடும்பாவி விழா, மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. தீக்கு இரையான அந்த உருவச் சிலைகள், ஓரிரு ரூபாய்களில் செய்யப்பட்டவையாகயிருக்கலாம் - தீ வைத்ததும், பிடித்துக்கொண்டு சாம்பலாயிற்று ஒருசில நிமிடங்களில்.

ஆனால், அந்தக் காட்சியைப் படத்தில் கண்டதும் நமது உள்ளமெல்லாம் பதறியது. இரண்டு இலட்ச ரூபாய் செலவில், இந்திராகாந்தியின் மேற்பார்வையில் கட்டப்பட்ட காங்கிரஸ் மாநாட்டுப் பந்தல் எரிந்த போது, அங்கே தலைமை தாங்கவிருந்த நேருவின் நெஞ்சம் என்ன பாடுபட்டதோ, அதைவிட ஆயிரமடங்கு, ஆவேசமும் ஆத்திரமும் அலை மோதின!

திரையிலே காட்சி, பக்கத்திலேயிருந்த நண்பர் கருணாநிதி கேட்டார்.

"நாம், ராமன் உருவைச் செய்து கொளுத்தினால் என்ன?"

நான், பதில் தரவில்லை.

நண்பர் கேட்டதுபோல செய்தால்தான் யாரென்ன செய்ய முடியும்?


இராவணன், தென்னாட்டுக் கோமான். செப்புகிறது, ஆராய்ச்சி ஏடு! நேருவின் எழுத்துக்களும் இதை வலியுறுத்துகின்றன. தென்னாட்டில் பரவிவரும், திராவிட உணர்ச்சி, தத்தமது முன்னோரைப் போற்றும் ஆர்வம் குறித்து, தினசரி டில்லிக்கு நம்மைப் பற்றிச் சொல்லச் செல்லும் ஓலைகள் ஏராளம். இருந்தும், அவர்கள் ராமலீலா, நடத்துகிறார்கள். நம் உள்ளத்தில் உத்வேகத்தைத் தூண்டும் இந்த ஊதாரி விழா நடைபெறுகிறது - அதற்கு உலகறிந்த தலைவர்கள் ஆதரவு தருகிறார்கள்.


``ராமலீலா - பாரம்பரியமாகக் கொண்டாடப்படும் விழா’’

``அதை, யாருக்காகவோ, நிறுத்திவிட முடியுமா?’’

``நமது பிரானின் திருக்குணங்களைச் செப்புவது அல்லவா, அத்திருநாள்!’’
இப்படிப் பலர், பதில்கூற முன்வரலாம், நம் கண்டனம் கண்டால்.

``இந்தக் காரியங்களெல்லாம் இந்துமதத்தின் பெருமைகளை விளக்குவனவல்லவோ?’’ என்று கூறிட முன் வருவோரும் உண்டு.

ஆரியப் பரம்பரை புகுந்தபோது தம்மை எதிர்த்த மன்னாதி மன்னர்களை அரக்கர்களென்று தத்தமது வேதங்களில் குறித்ததாக, ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

அரக்கர், ராக்ஷசர் நீசர். இன்ன பிற இழிசொற்களால் திராவிடப் பூர்வக் குடிகளை ஆரிய மதோபதேசிகள் அழைத்ததாக சரித்திரம் கூறுகிறது.

அந்தச் சரித்திரத்துக்கு விளக்கம் தர வந்த பண்டித நேருவும், இந்த உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். இருந்தும், அரக்கன் ஒழிந்த நாள் கொண்டாடப்படுகிறது! ராவணேசுவர வதம் நடத்திக் காட்டுகிறார்கள்!!

கேட்டால், இந்துமதப்படி இவைகள் கொண்டாடப்பட வேண்டுமென்பர், வைதீகர்கள்.

-------------------நூல்:- "பேரறிஞர் அண்ணாவின் உள்ளம் வருந்திய நிகழ்ச்சிகள்"’ - இரண்டாம் தொகுப்பிலிருந்து

0 comments: