Search This Blog
16.9.09
கோயில் நுழைவும் அண்ணாவும்!
நமது நகருக்கு எம்.எல்.ஏ.வாக இருக்கும் நண்பரைக் கலந்தாலோசியுங்கள். பெருவாரியான ஓட்டுகளை அவருக்குப் பெற்றுத் தந்த இளைஞர்களே! அவரை இப்பணி புரிய முன்வரும்படித் தூண்டுங்கள் அவர் வரத்தவறினால், மனம் உடைந்துவிட வேண்டாம். நாட்டுக்கான நற்காரியங்களை எல்லாம் எம்.எல்.ஏ., க்களேதான் செய்துவிட முடியும் என்று எண்ணவேண்டாம். நாமும் செய்யலாம்! நாமே செய்வோம்!
சட்டம் இல்லை. நாங்களே, நாங்களே திறந்தோம் ஆலயங்களை என்று மார்தட்டிக் கூற முனையுங்கள். இப்பணி, பொதுப்பணி நெடுங்காலமாக நாட்டை நலியச் செய்யும் ஜாதிப் பிணியை ஓட்டும் பணி, சுயாட்சியில் சூது இராது என்று பேச்சளவில் அல்ல, செயலளவில் காட்டுவதற்கான பணி இதை இன்றே துவக்க வேண்டுகிறேன்.
நானும் காங்கிரஸ்காரனே! என்று ஓட்டுக்காகக் கூறும் ஒய்யார புருஷர்கள் யார் உண்மையில் நாட்டுப்பற்றும், நாட்டு மக்களின் சமத்துவ முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்கள் யார்? என்பதைக் கண்டறிய, இந்தக் கிளர்ச்சி, தக்கதோர் பரீட்சை.
இந்த நற்காரியத்திற்குத் துணை புரிய, காஞ்சி திராவிடர் கழகத்தார், சித்தமாக உள்ளனர். அவர்கள், ஆலயம் நுழைவது மட்டும் போதாது ஆதித்திராவிடர் முன்னேற என்ற கருத்தினர் எனினும் மனித உரிமைப் போர் என்ற முறையில் கோயில் நுழைவுக்கான கிளர்ச்சியிலே ஒத்துழைக்கத் தயார். எங்கே பார்ப்போம், எத்தனை காங்கிரஸ் இளைஞர்கள் இதற்கு முன் வருகிறார்கள் என்பதை.
இதுபற்றிய யோசனைகளையும் திட்டங்களையும், எமக்குக்கூற விரும்புவோர், நேரில் வரலாம்; கடிதமும் அனுப்பலாம்.
காஞ்சிபுரக் கோயில்கள் பொங்கற் புதுநாளன்று, பழங்குடி மக்கட்குத் திறந்து விடப்பட வேண்டும். கோயில்களின் சாவிகளெல்லாம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமன்றோ உள்ளன என்று மலைக்காதீர். மக்களின் மனதைத் திறக்கும் சாவி உம்மிடம் இருக்கிறது. எங்கிருந்தால் என்ன? இளைஞர்களே! இந்தப் பணிபுரிய முன்வாருங்கள்!
------------- சி.என்.அண்ணாதுரை, "திராவிட நாடு" 1.12.1946
Labels:
அண்ணா
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment