Search This Blog

29.9.09

தலித் விடுதலை முன்னோடி – பெரியார் - 2

இதில் இன்னொரு உண்மையும் பொதிந்து கிடக்கிறது. அது என்னவெனில் “தலித்துகளின் பார்ப்பனிய எதிர்ப்பை பெரியார் தமதாக்கி கொண்டார்” என்று தலித் பார்வையில் ஒரு சிலர் வைத்த கருத்தும் உண்மைக்கு புறம்பானது என்பதும் இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றவர்கள் முன்வைத்த பார்ப்பனிய எதிர்ப்புக்கும், பெரியாரின் பார்ப்பனிய எதிர்ப்புக்கும் அடிப்படையிலேயே வேறுபாடு உண்டு. ஒப்பீட்டுடன் பார்க்க வேண்டுமானால், அயோத்திதாசாரின் பார்ப்பனிய எதிர்ப்பும், பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பும் எப்படிப்பட்டது? இது குறித்து பேராசிரியர் திரு.அ.மார்க்ஸ் தரும் தகவல் இதோ

பெரியாரின் அரசியல் என்பது கடவுள் மறுப்பு புராண இதிகாச ஒழிப்பு ஆகியவற்றோடு ஜாதி ஒழிப்பை இணைப்பதாக உள்ளது. ஆனால் அயோத்திதாசாரின் பவுத்தமோ, புத்தரைக் கடவுளாக ஏற்றல், இந்துப் புராணங்களுக்கும் இதிகாசங்களுக்கும் பதிலாக புதிய புராணங்களையும், தொல் கதைகளையும் மாற்று மரபுகளிலிருந்து தேடிப்பிடிப்பது என்பதாகவே உள்ளது. இருவரின் நோக்கங்களும் ஒன்றான போதிலும் பாதைகள் முற்றிலும் வேறானதாகவும் இறுதி இலக்கு வரை வழியில் எந்தப் புள்ளியிலும் சந்திக்க இயலாதவையாகவும் உள்ளன. எனவே பெரியாரால் எந்த வகையிலும் அயோத்திதாசரை முன்மாதிரியாக கொள்ள இயலாத நிலை இருந்ததை நாம் விளங்கிக் கொள்வது அவசியம். நடைமுறையில் கூட இறைவணக்கங்களையும் பண்டிகைகளையும் ஒழிப்பதாக பெரியாரது பார்வை இருந்தது. அயோத்திதாசாரின் பார்வையோ புதிய பெயர் சொல்லி, விளக்கம் கூறி எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வதாகவும், கொண்டாடுவதாகவும் இருந்தது. கார்த்திகை தீபத்தை “கார்த்துலதீபம் எனவும் தீபாவளியைத் “தீபவதிப் பண்டிகை எனவும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அயோத்திதாசர் பரிந்துரை செய்வது கவனிக்கத்தக்கது. மொத்தத்தில் பெரியாரின்

பகுத்தறிவு சார்ந்த நவீனத்துவப் பார்வையும், அயோத்திதாசாரின் தொன்ம மீட்புப் பார்வையும் சந்திக்க இயலாதவையாக இருந்தன.

-“கவிதாசரண் மே-ஜூன் 2003

ஓத்தகருத்துடையவர்களை, ஒத்த தத்துவங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி பரப்பியவர் பெரியார். சான்றாக கம்யூனிசத்தை ரஷ்யாவுக்கு செல்வதற்கு முன்பே மக்களுக்கு அறிமுகம் செய்து பரப்பினார். ஆதேபோல் அம்பேத்கரை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி அவரின் ‘ஜாதி ஒழிய வழி எனும் நூலை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு பட்டி தொட்டியெல்லாம் பரப்பியவர் பெரியார்.

தாழ்த்தப்பட்ட , பிற்படுத்தப்பட்ட. ஒடுக்கப்பட்ட மக்ககளின் உயர்வு என்பது பிறவி ஆதிக்க சக்தியான பார்ப்பனிய ஒழிப்பில் தான் உள்ளது என்ற காரணத்தினால்தான். “பாதைகள் வேறாக இருந்தாலும், நோக்கம் ஒன்றாக இருந்ததால்தான் அயோத்திதாசாரின் நூல்களை படிக்க வலியுறுத்தி தனது ‘குடியரசுஇதழில் விளம்பரம் செய்த பெருந்தகையாளர் பெரியார்.

எனவே., பெரியாரின் “பார்ப்பனிய எதிர்ப்பு என்பதே இந்துத்துவத்தின் இடுப்பு எலும்பை முறிக்க கூடியதுதான்.

கடவுள், மதம், ஜாதி, சாஸ்திரம் புராணங்களில்தான் இந்துத்துவத்தின் உயிர் அடங்கியிருக்கிறது. இவைகளை ஒழிப்பதில் பெரியார் தொண்டர்களைத் தவிர வேறு யாரும் இப்பணியை முன்னெடுத்துச் செ(ய்)ல்வதில்லை. இப்பணியை செய்யாவிட்டாலும் பரவாயில்லை முட்டுக்கட்டை போடாமலாவது மற்றவர்கள் இருக்க வேண்டும் என்பதே பெரியாரின் தொண்டர்களின் வேண்டுகோள்.

உதாரணமாக, தமிழக அரசு கோயில்களில் ஆடு, மாடு, கோழி, பலியிடும் தடைச் சட்டத்தை கொண்டு வந்தபோது அதை எதிர்த்து செயல்பட்டவர்கள் யார்? யார்? என்பதை நாடு அறியும். கலாச்சாரம், பண்பாடு என்ற பெயரால் யார் எவ்விதமாக நடந்து கொண்டாலும் கண்டிக்கத் தயங்காதவர்கள் பெரியாரும், பெரியார் தொண்டர்களும்.

ஷெட்யூல்டு வகுப்புக் கலாச்சார ஆண்டு விழா மலர் ஒன்றுக்காக பெரியாரிடம் வாழ்த்துக் கேட்டார்கள் அவ்வமைப்பினர். அதற்கு பெரியார் அளித்த வாழ்த்து இதோ.

செட்யூல்டு வகுப்பினர் கலாச்சார ஆண்டு விழாவை ஒட்டி மலர் ஒன்று வெளியிட இருப்பதைத் தங்களின் மூலம் அறிந்தேன்.

செட்யூல்டு வகுப்பினரின் தாழ்விற்குக் காரணமான கலாச்சாரத்தின் பெயரால் ஒரு அமைப்பு குறித்து வெட்கப்படதக்கதாகும். செட்யூல்டு வகுப்பினரின் தாழ்விற்கும், சமுதாய இழி நிலைக்கும் காரணம், அவர்களின் கலாச்சாரமும், ஏற்றுக் கொண்டிருக்கிற பரம்பரைத் தொழிலும், கடவுள் , மத, சாஸ்திர பழைமை நம்பிக்கையுமேயாகும். இவையாவற்றையும் விட்டொழிந்தால்தான், செட்யூல்டு வகுப்பினர் தங்களின் சமுதாக இழிவற்று, சுதந்திரமாக, சமத்துவமாக, மனிதனோடு மனிதராக வாழமுடியும். அதற்கு இக்கூட்டம் வகை செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.

(96-வது பெரியார் பிறந்த நாள் மலர் )

தமிழ்நாட்டு கலாச்சாரத்தின் மீது பெரியாரின் தாக்கம் எப்படியிருந்தது என்பதை இதன் மூலம் டாக்டர் வேலு அண்ணாமலை உணர்ந்து கொள்ளட்டும். தமிழ்நாட்டில் பெரியாரின் தாக்கம் ஆழமாக வேருன்றி இருந்த காரண்ததால் தான், இந்தியாவில் தலை விரித்தாடும் “இந்துத்துவம் தமிழ்நாட்டில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. பெரியார் தத்துவம் இருக்கும்வரை, எந்தப்பட்டாளத்துடன் கூட்டு சேர்ந்து வந்தாலும் “இந்துத்துவம் தலையெடுக்க முடியாது. ஓட்ட நறுக்கப்படும் பெரியார் தொண்டர்களால்.

பார்ப்பனிய எதிர்ப்பில் பெரியார் தெளிவாக இருந்ததால்தான், அவர் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே அலறுகிறது. “இந்துத்துவா. “இந்துத்துவாவை எதிர்த்தவர்களை எலலாம் தன் வயப்படுத்தியது பார்ப்பனியம். இன்று வரை “பார்ப்பனியம்பலிக்காத ஒரே தலைவர் “பெரியார்மட்டுமே. யாராலும் யாருக்காகவும், தன் கொள்கைகளை விட்டுக் கொடுக்காத தன்னலமற்ற தத்துவம் “பெரியாரியல்

“இந்துத்துவா வளராமல் இருப்பதற்கு டாக்டர் வேலு அண்ணாமலை அவர்கள் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. முட்டுக்கட்டை போடாமல் இருந்தாலே போதும்.

----------------------------------தொடரும்

0 comments: