Search This Blog
12.9.09
பூணூல் அறுப்பு என்பது காலத்தின் ஓர் உறுமல்
காலத்தின் உறுமல்!
நேபாளம் பசுபதிநாதர் கோயில் அர்ச்சகர்கள் இருவர் மாவோயிஸ்ட்களால் தாக்கப்பட்டனர்; பூணூல் அறுக்கப்பட்டது.நிர்வாணப்படுத்தப்பட்டனர் என்கிற சேதி தடபுடலாக ஏடுகளில் இடம் பிடித்தது.
தாக்கப்பட்ட இரு அர்ச்சகப் பார்ப்பனர்களும் கருநாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்; இதற்காக இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கண்டனம் தெரிவித்துள்ளார். நேபாள பிரதமர் மாதவ்குமார் அரசு சார்பாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஏராள மாவோயிஸ்ட்டுகள் கோயில் முன் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட மூவரும் விடுவிக்கப்பட்டனர்.
நேபாளம் பசுபதிநாதர் கோயில் அர்ச்சகர்களைத் தேர்வு செய்வது சிருங்கேரி மட சங்கராச்சாரியார் தானாம். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்த சம்பிரதாயம் நடைமுறையில் இருந்து வருகிறதாம்.
இப்பொழுது என்ன பிரச்சினை? எங்கள் நாட்டுக்கு இந்திய நாட்டு அர்ச்சகர்கள் தேவையில்லை என்கிற மண்ணின் மைந்தர் போராட்டம் தான் இது.
பக்தர்கள் போல 50 மாவோயிஸ்ட்கள் கோயிலுக்குள் நுழைந்து கிரிஷ்பட்டர் (வயது 32) மற்றும் ராகவேந்தர பட்டர் (வயது 32) ஆகிய இருவரும் தாக்கப்பட்டுள்ள செய்தி வருத்தப்படக் கூடியதுதான்.
நியாயமாக மாவோயிஸ்ட்களுக்கு சிருங்கேரி மடத்தம்பிரான்மீதும் அல்லது இந்தச் சம்பிரதாயத்தின்மீதும் தான் கோபம் வந்திருக்க வேண்டும்.
இரண்டாவதாக, நேபாளத்துக்கு இந்தியப் பார்ப்பன அர்ச்சகர்கள் தேவையில்லை என்ற பிரச்சாரத்தை நேபாளம் முழுவதும் முடுக்கி விட்டு, அதன்பின் போராட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு, கடைசிக் கட்டமாக கோயிலிலிருந்து பட்டர்கள் வெளியேறவில்லையென்றால், வெளியேற்றப்படுவார்கள் என்று எச்சரித்திருக்கலாம்.
இந்த முறைகளையெல்லாம் முறைப்படி கடைப்பிடிக்காமல் திடுதிப்பென கோயிலுக்குள் நுழைந்து தாக்குதல் தொடுத்திருப்பதில் கொஞ்சமும் ஒழுங்கு முறை இல்லைதான்.
ஆனாலும் ஓர் அடிப்படையான பிரச்சினையில் யாரும் நியாயம் பேசிட முன்வருவதில்லையே ஏன்?
ஒரே இந்து மதத்தில் இருந்து கொண்டு தாங்கள் மட்டுமே உயர்ஜாதி பிர்மாவின் நெற்றியிலிருந்து அவதரித்தவர்கள். அதன் அடையாளம் தான் இந்தப் பூணூல் என்கிறார்களே -இது ஒரு ஜாதி ஆணவம் அல்லவா? இவர்கள் பிறக்கும் போதே பூணூலோடு பிறந்தவர்களா? இவர்களாக சாத்திரங்களை எழுதி வைத்துக் கொண்டு, தாங்கள் மட்டுமே துவி ஜாதி (இரு பிறப்பாளர்கள்) மற்றவர்கள் சூத்திரர்கள் கீழ் ஜாதி மக்கள் பார்ப்பனர்களுக்குப் பரம்பரை பரம்பரையாகத் தொண்டூழியம் செய்து கிடக்க வேண்டியவர்கள், வைப்பாட்டி மக்கள் என்று இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் நடந்து கொள்கிறார்களே, இதனை எப்படி நியாயப்படுத்துகிறார்கள்? இது மனித உரிமைகளைக் கொச்சைப்படுத்துவது என்று ஏன் எவரும் கொந்தளித்து எழவில்லை? பிறவியில் ஏற்றத் தாழ்வு கூடாது என்று யாரும் ஏன் குரல் கொடுக்க முன்வரவில்லை?
ஒரு எண்பது ஆண்டு காலம் தென்னகத்தில் இதுபற்றி தன்மான இயக்கம் திராவிடர் கழகம் பிரச்சாரம் செய்து வந்தும். கருத்துமுழக்கம் செய்து வந்திருந்தும், இந்த நியாயத்தை ஏற்றுக் கொண்டு இந்தப் பூணூலை ஏன் அறுத்து எறியவில்லை?
மாறாக ஒவ்வொரு ஆண்டும் ஆவணி அவிட்டம் என்கிற பெயராலே பூணூலைப் புதுப்பித்துக் கொள்வதற்கென்றே ஒரு நாளை வைத்துக் கொண்டிருக்கிறார்களே இது பெரும்பான்மையான மக்களின் மான உணர்வை சீண்டுவதல்லாமல் வேறு என்ன?
பூணூல் அணிந்து வந்த காந்தியார் ஒரு நாளில் பூணூலை அறுத்து எறிந்தாரே ஏன்?
அர்ச்சகர்ப் பார்ப்பானும் பூணூல் அணிகிறான் அந்தக் கோயிலுக்குள் இருக்கும் ஆண்டவன் கழுத்திலும் பூணூல் தொங்குகிறதே இதன் தாத்பரியம் என்ன?
தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்த்ரா தீனம் து தெய்வதம்
தன்மந்த்ரம் பிராமணா தீனம்
பிராமணாமம தேவதா
இந்த ரிக்வேத சுலோகத்துக்கு யாது பொருள்?
இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது; கடவுள் மந்த்ரங்களுக்குக் கட்டுப்பட்டவர்; மந்த்ரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை. எனவே பிராமணனே நம் தெய்வம், அவனைத்தான் வணங்க வேண்டும் என்று பார்ப்பனர்களே ஏதோ ஒரு காலத்தில் தங்கள் வசதிக்காகக் கிறுக்கி வைத்துக் கொண்டு, அதனை என்றென்றைக்கும் ஏற்றுதான் தீர வேண்டும் என்று எதிர்பார்ப்பதும், இதற்கு எதிரான கிளர்ச்சிகள் மூண்டால் அதனைக் கொச்சைப் படுத்துவதும் எவ்வளவு காலத்திற்கு? தன்மான உணர்ச்சிக்குச் சவால் என்கிறபோது ஏதோ ஒரு காலத்தில் அந்த உணர்ச்சி கலவரமாக வெடிக்காதா? வன்முறையில் அது கொண்டு போய்விடாதா?
தங்கள் வருண தர்மத்தையும் காப்பாற்றிக் கொள்ள தண்டத்தை (ஆயுதத்தை) எடுத்துப் பார்ப்பான் சண்டை போட வேண்டும் (மனுதர்மம் அத்தியாயம் - 8 சுலோகம் 348) என்று எழுதி வைத்திருக்கிறார்களே - இது மட்டும் வன்முறையில்லையா?
மதத்தைக் காட்டி, சூழ்ச்சியாக எழுதி வைத்த சாத்திரங்களைக் காட்டி மற்றவர்களை வைப்பாட்டி மக்கள் என்று எழுதி வைத்துக் கொள்ளலாம்; அதனை நிலை நிறுத்த ஆயுதம் எடுத்துச் சண்டை போடலாம். இந்த அவமான நிலையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள சூத்திரர்கள் என்று இழித்துக் கூறப்பட்டவர்கள் மட்டும் எதிர்த்து சண்டை போடக் கூடாதா?
இந்தப் பூணூல்தானே எங்களை இழிவுபடுத்தும் ஜாதி ஆவணச் சின்னம் என்று கூறி இழிவுபடுத்தப்பட்டவர்கள் பொங்கி எழுந்தால், ஜாதி ஆணவச் சின்னத்தை அறுத்தால் அது என்ன பஞ்சமா பாதகமா? வேண்டுமானால் நட்ட ஈடாக 10 காசோ 20 காசோ கொடுத்து விட்டுப் போகலாம். அதற்குமேல் அதில் என்ன புனிதம் வாழ்கிறது?
பார்ப்பான் மட்டும்தானா பூணூல் அணிகிறான்? செட்டியாரும் ஆசாரியாரும் கூடத்தான் பூணூல் அணிகிறார்கள் என்று சோ போன்ற மனுவாதிகள் குதர்க்கம் பேசலாம்.
அது உண்மைதான் என்றால் அவாள் சாஸ்திரப்படி அது அங்கீகரிக்கப்படாததாயிற்றே!
சூத்திரன் பிராமண ஜாதிக்குறியை பூணூல் முதலியதைத் தரித்தால் அரசன் சூத்திரர்களின் அங்கங்களை வெட்டிவிட வேண்டும் என்று மனுதர்ம சாஸ்திரம் சொல்லுகிறதே (அத்தியாயம் 9 சுலோகம் 224)
பார்ப்பனர்கள் தாங்கள் பூணூல் தரிப்பை எந்த வகையில் நியாயப் படுத்த முடியும்? இதே நேபாளம் பசுபதிநாதர் கோயிலில் சோனியா காந்திக்கு ஏற்பட்ட அவமானம் நினைவில் இருக்கிறதா?
1987 நவம்பரில் நேபாளம் தலைநகரான காட்மாண்டுவில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சார்க் கூட்டம் நடந்தது. அப்போது நேபாளத்தில் உள்ள பசுபதிநாதர் கோயிலுக்கு இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியும் சோனியாகாந்தியும் சாமிதரிசனம் செய்ய விரும்பினார்கள். ஆனால் என்ன நடந்தது?
ஆகா, பிரதமரே தமது பாரியாளுடன் தரிசனம் செய்ய வருகிறார் என்று ஆனந்தக் கூத்தாடினார்களா?
மத ஆணவத்துடன்கூடிய ஜாதி ஆணவம்தானே அன்று கூத்தாடியது. சோனியா பிறப்பால் இந்து அல்ல என்று அடித்துக் கூறினரே!
வேண்டுமானால் ராஜீவ்காந்தி வந்து தரிசித்து விட்டுப் போகட்டும் என்றனர். ராஜீவ் காந்திக்கு கோபம் வந்தது. அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியவில்லை. குறைந்தபட்சம் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள என் மனைவிக்கு அனுமதியில்லையென்றால் எனக்கு மட்டும் ஏன் என்று கூறி வெடுக்கென்று சென்றுவிட்டார்.
அதற்குப்பிறகு அந்த அர்ச்சகர் பார்ப்பனர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? ராஜீவைக்கூட எப்படி அனுமதிக்க முடியும்? அவரும் இந்து அல்லவே - பார்சிதானே? (ஃபெரோஸ் காந்திதானே ராஜீவின் தந்தையார்) என்று திமிராகப் பேசினார்கள். அப்போது ஏடுகளில் வெளிவந்த செய்திதான் இது.
இப்படி இந்துத் திமிர்வாதம் பேசும் இந்தக்கூட்டம் இந்து வேளாங்கன்னிக்கும், நாகூர் தர்காவுக்கும் போவதைத் தடுக்க முடிந்ததா?
மற்ற மதத்தினர் தங்கள் வழிபாட்டு இடத்துக்கு வந்தால் எங்கள் சாமி தீட்டாகி விடும் கோயில் தோஷமாகிப் போய் விடும் என்று சொல்லுவதில்லை. இந்த அர்த்தமுள்ள இந்து மதத்தின் சாமி மட்டும் தீட்டாகி விடுகிறது தோஷமாகி விடுகிறதாம்! சாந்திக் கழிப்புத் தேவைப்படுகிறதாம்.
கோயில் கருவறைக்கு உரிமை கொண்டாடும் இந்த அர்ச்சகர்ப் பார்ப்பனர்களின் யோக்கியதை நாட்டுக்குத் தெரியாதா?
குஜராத் சவுமிய நாராயணன் கோயில் அர்ச்சகர்கள் கருவறையை காமப்பள்ளியாகக் கையாண்ட நாற்றம் மூக்கைத் துளைக்கவில்லையா? வீடியோ படங்கள் சிரிப்பாய்ச் சிரித்ததே. அப்பொழுதெல்லாம் கெட்டுப் போகாத கோயில் மற்றவர்கள் நுழைந்தால் மட்டும் கெட்டுப் போய் விடுகிறதோ!
பசுபதி கோயில் பூணூல் அறுப்பு என்பது காலத்தின் ஓர் உறுமல்-எச்சரிக்கை வெளிச்சம் அவ்வளவுதான்!
-------------மின்சாரம் அவர்கள் 12-9-2009 "விடுதலை"ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை
Labels:
பெரியார்-மின்சாரம்
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
//பக்தர்கள் போல 50 மாவோயிஸ்ட்கள் கோயிலுக்குள் நுழைந்து கிரிஷ்பட்டர் (வயது 32) மற்றும் ராகவேந்தர பட்டர் (வயது 32) ஆகிய இருவரும் தாக்கப்பட்டுள்ள செய்தி வருத்தப்படக் கூடியதுதான்.//
பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் நடுநிலை.
http://kgjawarlal.wordpress.com
Post a Comment