Search This Blog

7.9.09

பெரியாரின் சிந்தனைத் துளிகள்..


காலத்துக்கேற்ற...

காலத்துக்கேற்ற மாறுதலுக்கு ஒத்துவராதவன் வெற்றிகரமாய் வாழ முடியாது. மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாய் இருக்கவேண்டும். முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்தே மனிதனே உலகப் போட்டிக்குத் தகுதியுடையவனாவான்.

---------------------குடிஅரசு,26.1.1936

கவனிக்கவேண்டும்

மதத்தைக் காப்பாற்றவே கோயில்களும், சொத்துகளும் அவற்றைக் காக்க மடங்களும், மடாதிபதிகளும் ஏற்பட்டனர். இவை மக்கள் வாழ்க்கைக்கு அவசியமா? அதனால் மக்கள் கஷ்டம் நீங்குமா, நீங்காதா என்பதைத்தான் கவனிக்கவேண்டும்.

------------------(விடுதலை,3.12.1962)

இயற்கைத் தடைகள்

நாளைக்கு வேண்டும் என்று தேடும் தன்னம்பிக்கையற்ற தன்மையும், எவ்வளவு கிடைத்தாலும் போதாது என்கிற ஆசை அடிமைத்தன்மையும், மனிதனின் பிறப்புரிமையாகிய தன்மானத்திற்கு இயற்கைத் தடைகள்.

----------------------- (குடிஅரசு,9.1.1927)

வாழ்க்கை

ஒருவன் வாழ்வது என்பது அவனுடைய வாழ்க்கையால் பிறர் நன்மையடைந்தார்கள், மற்றவர்கள் சுகங் கண்டார்கள் என்று அமையவேண்டும்.

-------------------- (விடுதலை,20.3.1956)

கவலை ஏன்?

மனிதர்கள் எந்த மதத்தில் இருந்தாலும், அவர்கள் எந்த மதத்திற்குப் போனாலும், மற்ற மதத்தைச் சார்ந்த மனிதனுக்கு அதனால் கவலை ஏன் ஏற்படவேண்டும்?

---------------------(குடிஅரசு,16.11.1946)


இன்றைய நிலைமையில்...

எப்போதோ சம்பாதித்த பொருள்களையும், லாபங்களையும் வேண்டுமானால் தொலைந்துபோகட்டும் என விடலாம். ஆனால், மக்கள் சமுதாயம் இன்றிருக்கிற நிலைமையில் மேலும் மேலும் தனிப்பட்ட ஆள்களிடம் பொருள் குவிவதற்கு ஏன் இடமளிக்கவேண்டும்?

------------------- (விடுதலை, 12.4.1950)

0 comments: