தென்னாட்டுப் பிராமணர் ஒருவர் தீண்டாமையை ஒழிப்பது நியாயமல்லவென்றும், தீண்டாதார்கள், மாமிசம் சாப்பிடுகிறார்கள், மீன் பிடிக்கிறார்கள், தூய்மையற்றவர்கள், ஆதலால், அவர்களைத் தெருவில் விடுவதும் தப்பென்று மகாத்மாகாந்தி அவர்களுக்கு எழுதிய கடிதத்திற்குப் பதிலாக தமது யங் இந்தியா எழுதுவதின் சாராசம்சம்:
"இந்நிருபர் சொல்லுவதில் உள்ளதவறுதல்களை எடுத்துக்காட்ட வேண்டியது எனது கடமை. முதலாவது பிராமணர்கள் மாமிசம் சாப்பிடவில்லையென்று சொல்லுவது, தென்னாட்டைப் பொறுத்தவரையில் உண்மையாவதனாலும், மற்ற இடங்களில் பிராமணர்கள் மீன் சாப்பிடுவதோடு, வங்காளம், காஷ்மீரம் முதலிய இடங்களில் உள்ள பிராமணர்கள் மாமிசமும் சாப்பிடுகிறார்கள். அல்லாமலும், தென்னாட்டில் மாமிசம் சாப்பிடுபவர்கள் அனைவரும், மீன் தின்பவர்கள் அனைவரும் நெருங்கப்படாதவர்களாயும், தீண்டப்படாதவர் குலத்தில் பிறந்ததினாலேயே தூய்மையாயிருக்கப்பட்டவர்களைத் தீண்டாதார்களென்றே கருதுகிறார்கள்.
மாமிசம் தின்னும் பிராமணரல்லாதார் அதிகாரம் படைத்தவர்களாயிருந்தால், அவர்களுடன் பிராமணர்கள் நெருங்கிப் பழகுவதில்லை? இறைச்சி தின்னும் இந்து அரசர்களுக்குப் பிராமணர்கள் தலை வணங்குவதில்லையா? இந்நிருபர் போன்றவர்கள் தங்களுடைய பேராசையினால் தாங்கள் சொல்லுவது இன்னதென்பதே அறியாமல், அழியப் போகும் வழக்கத்தை நிலை நிறுத்தப் பார்ப்பது ஆச்சரியமாய் இருக்கிறது. தாம் நினைக்கும் தூய்மையென்ற ஒன்றை நிலை நிறுத்துவதற்காக ஆயிரக்கணக்கான மக்களுக்கு கொடுமை விளைவிப்பதை இவர் கவனிக்கவேயில்லை. மாமிசம் சாப்பிடுவதினால் அவரைத் தொடக் கூடாது என்று சொல்லுவது கொஞ்சமும் அறிவுடைமையானதல்ல.
மாமிசம் சாப்பிடக் கூடாது என்பதை நான் பாராட்டுகிறேன். மாமிசம் சாப்பிடாத பிராமணர்களைப் பற்றியும், தூய்மையான வாழ்க்கையுள்ள பிராமணர்களைப் பற்றியும், அவர்கள் அபிவிருத்தியடைந்திருப்பதுபற்றியும், எனக்குத் தெரியும். அவர்கள் உயர்ந்த நிலையிலிருக்கும் போது தங்கள் நிலையைப் பாதுகாக்க இவ்வளவு கஷ்டப்படவில்லை. உண்மையில்லாத ஒழுக்கம் தங்கள் பலத்தை இழந்து விடத்தான் செய்யும். இந்தப் பிராமணர் வேண்டியவாறு தங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்பது இக்காலத்தில் முடியாத காரியம். இத்தகைய பாதுகாப்பை விரும்பாதவர்களும், சீர்திருத்தத்தில் கவலையுள்ளவர்களுமாகிய பிராமணர்களின் தொகை அதிகரித்து வருகின்றது. இதனால் சீக்கிரத்தில் இக்குருட்டு நம்பிக்கையும், பேராசையும் சீக்கரத்தில் ஒழிந்துவிடுமென்றே நம்புகிறேன். தாழ்த்தப்பட்ட, வகுப்பார்களுக்கும், என்னால் கூடிய அளவு ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும், தவறவிடாமல் அவர்கள் தூய்மைக்காகப் பாடுபட்டே வந்திருக்கிறேன்; அவர்களும் கூடியவரையில் திருப்திகரமாகவே நடந்து வருகிறார்கள்.
---------------குடிஅரசு14.2.1926
0 comments:
Post a Comment