Search This Blog

13.9.09

ஏசு வந்துவிட்டார்!கிறித்து நானே என்கிறார் ஒருவர்!


ஆற்றங்கரை மரங்கள்

இராஜஸ்தான் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று டோங்க் (Tonk) நவாப் ஒருவரின் ராஜ்யம். மன்னர் மான்யம் ஒழிக்கப்பட்ட பிறகு ஓட்டாண்டியாகிப் போய்விட்டனர் நவாபின் வாரிசுகள். 570 க்கும் மேற்பட்ட வாரிசுகளுக்குத் தரப்படும் மாதாந்திர உதவித் தொகை ரூ 11 _ 65 பைசா. இது எதற்கும் போதுமானது அல்ல என வழக்கு போட்டனர் 1989 இல்! 20 வருடம் கழித்து தீர்ப்பு வந்துள்ளது. உதவித் தொகையை நூறு ரூபாயாக உயர்த்தி! உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதைக் கொண்டுதான் என்ன செய்ய முடியும்? முதியோர் உதவித் தொகை இதைப்போல 4 மடங்கு தரப்படுகிறது. இருந்தாலும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி 1989 முதல் தொகை வழங்கப்பட வேண்டும். 20 ஆண்டுத் தொகை சுமாராக 20 ஆயிரம் கிடைக்கலாம். நவாபின் வாரிசு இதனை ரம்ஜான் நாளில் கிடைத்த கொடை என்கிறார்.

ஒரு காலத்தில் காரில் பயணம் செய்தது போய், ரிக்ஷாவுக்கு மாறி, இப்போது அதுவும் இல்லாமல் போய் விட்ட வறுமை.

கடைசி நவாபின் மகன் யாகூப் அலிகான் 79 வயதானவர். இவருக்கு 60 பிள்ளைகளாம். இவர்கள் அன்றியும், இப்படி அப்படி பிறந்த பிள்ளைகள் நிறையப் பேராம். 1947 க்கு முன்பு இவருக்கு விரலில் வலி என்றால், உடனே 10 பேர் ஓடோடிவந்து கவனிப்பார்களாம். இன்று ? எப்போதாவது, யாராவது வந்து இவரைப் பார்த்துப் பேசினாலே சந்தோஷமாக இருக்கும் எனக் கூறி ஏங்குகிறார்.

ஆற்றங்கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் ... என்பது பாடல். அரசராகவே இருந்தவர்களின் நிலை இன்று, இது!

***************************************************************************

அரைக்கால் சட்டைகளின் ஆதிக்கம்

2009 தேர்தலில் பா.ஜ.க. தோற்றாலும் தோற்றது. பைத்தியம் பிடித்தாற்போல் அலைகிறார்கள். ஆர்-எஸ்-எஸ் காக்கிக் கால் சட்டைக்காரர்கள். இந்து கலாச்சாரம் என்கிறார்களே, காக்கிக்கால் சட்டை இந்து வா? தோல் பெல்ட்டும், தோல் ஹூக்களும் இந்துவா? மேல் சட்டையை உள்ளே திணித்து கால் சட்டையை மேலே இழுத்துப் போடுவதும் இந்துவா?

இந்தக் கேள்விகளுக்கு எந்த ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக்கும் பதில் கூறாது ! சர்சங்சாலக்கும் பதில் கூறாது!

பாஜகட்சியை வலுப்படுத்தப் போகிறார்களாம். புதிய தலைவரைப் போட்டு. புதிய தலைவரை யார் தேர்ந்தெடுப்பது? தேர்ந்தெடுப்பதாவது ஒன்னாவது? எல்லாமே நியமனம் தானே! அந்த நியமனத்தை யார் செய்வது? ஆர்எஸ்எஸ் அரைக்கால் சட்டைகள்தான்!

இதுவரை வண்டியின் பின் சீட்டில் உட்கார்ந்து, இப்படிப்போ, அப்படிப்போ என்று ஓட்டிக் கொண்டிருந்தவர்கள் இப்போது ஓட்டுநர் இடத்திலேயே உட்கார்ந்து கொள்ளப் போகிறார்கள்!

கட்சியின் 6 பொதுச் செயலாளர்களில் 5 பேர் அரைக்கால் சட்டைகள். மராட்டியத்தின் கோபிநாத் முண்டே தவிர. இவரும் கூட அரைக்கால் சட்டையின் மாணவர் அமைப்பில் (ஏபிவிபி) இருந்து வந்தவர்தான்.

கட்சியின் 10 துணைத் தலைவர்களில் ஆறுபேர் அரைக்கால் சட்டைகள்தான்.

கட்சியில் முக்கிய இடங்களில். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் 300 பேருக்குமேல் அரைக்கால் சட்டைகளே! உத்தரப் பிரதேசத்தில் 86 மாவட்டக் கிளைகளில் கட்சிப் பொறுப்பில் 30 முதல் 40 பேர் வரை ஒவ்வொரு கிளையிலும் அரைக்கால் சட்டைகள் இருக்கின்றன. உறுப்பினர்களிலே கூட 80 விழுக்காட்டினர் அரைக்கால் சட்டையினர். இரட்டை உறுப்பினர் முறை!

உத்தரப்பிரதேச பாஜகட்சியின் ஆகப்பெரும் அதிகாரம் கொண்ட தலைவர் சகசங்காத்தன் மந்த்ரி அரைக்கால் சட்டைதான். ராகேஷ் ஜி என்பவர். தலைநகர் லக்னவ் நகரில் கட்சி அலுவலகத்திலேயே தங்கியிருக்கிறார். இவருக்கு முன் இந்தப் பதவியில் இருந்தவர் சஞ்சய் ஜோஷி. அரைக்கால் சட்டைகள் திருமணம் செய்து கொள்கை கூடாது. இந்த ஜோஷி திருமணசுகத்தைக் கட்சி அலுவலகத்தில் கண்டு அனுபவிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். அதைப் படம் பிடித்து குறுந்தகட்டில் பதிவு செய்து அனைவரும் பார்க்கும்படி ஆக்கி விட்டார்கள். இந்த அசிங்கம் பிடித்த அரைக்கால் சட்டையை அகற்றி விட்டார்கள் அந்தப் பதவியிலிருந்து!

இப்பேர்ப்பட்ட ஒழுக்கக்கேடான அரைக்கால் சட்டைகள் இலட்சிய வீரர்கள்!

அத்வானியை சற்றே நகரும் பிள்ளாய் எனக்கூறி வெளியேற்றிவிட்டு இளையவர்களை உட்கார வைக்கப் போகிறார்கள். பழைய கழிதலைச் செய்து முடித்துப் புதியன புகுதலை அத்வானியே ஏற்பாடு செய்ய வேண்டும் என அரைக்கால் சட்டைகள் கூறிவிட்டன. காயத்தை உண்டாக்கி அதில் உப்பையும் தேய்க்கிறார்கள்.

சுஷ்மாசுவராஜோ, அருண்ஜெட்லியோ பாஜக தலைவராக வரமுடியாதாம். காரணம் இவர்கள் அரக்கால் சட்டைகள் அல்லர். வித்தியாசமான கட்சிதான்!


***********************************************************************************

ஏசு வந்துவிட்டார்

ஏசு வருகிறார் எனத் துந்துபி முழங்கிக் கொண்டே இருக்கின்றனர் கிறித்துவர்கள், பல ஆண்டுக் காலமாக! தேதி குறிப்பிடாமலே பேசி ஏமாற்றிக் கொண்டு வருகிறார்கள். இவர்களின் இந்துமதக் கூட்டாளிகள் கல்கி அவதாரம் வருகிறது என ஏமாற்றிக் கொண்டுள்ளது. பலபேர் தங்களைக் கல்கி எனக் கூறிக்கொண்டு மோசடி செய்கிறார்கள் இங்கு !

இந்துக்களின் கிறித்துவக் கூட்டாளிகள் என்ன இளிச்சவாயர்களா? கிறித்து நானே என்று ஓர் ஆள் கிளம்பிவிட்டான்.


எங்கே என்கிறீர்களா? நம்முடைய பொது உடைமைப்புலிகள் ஆட்சி செய்து கொட்டிக் கவிழ்த்துக் கலைத்துப் போட்ட சோவியத் நாட்டின் தலைப்பகுதி நாடான ரஷியாவில் தான்! செர்ஜி என்ற 48 வயது முன்னாள் கான்ஸ்டபிள்தான் இந்த ஏமாற்றுப் பேர்வழி, பெட்ரோ பாவ்லோவ்கா எனும் ஊரில் வசிக்கும் இந்த ஆள் பிறந்ததைக் கொண்டு ஆண்டுக்கணக்கையே தொடங்கிவிட்டனர். அவர்களுக்கு இது 49ஆம் ஆண்டாம்.

உலகமே அழியும்போது, இவர் இருக்கும் சைபீரியப் பகுதிமட்டுமே அழியாது என்று புளுகிக் கொண்டு ஆள் சேர்த்து வருகிறான் இந்த எத்தன். இந்த இயக்கத்தில் சேர்ப்பவர்கள் தங்கள் சொத்துகளை , நிலங்களை எழுதிக் கொடுத்துவிட வேண்டுமாம். இந்தவகை மோசடி நம் நாட்டில் (புதுச்சேரி) அரவிந்த ஆசிரமம், (புதுக்கோட்டை) அன்ன வாசலில் மெய்வழிச்சாலை போன்ற இடங்களில் கடைப்பிடித்து வரும் தந்திரங்கள்தாம் முட்டாள்தனமும் முடிச்சவிழ்க்கித்தனமும் உலகத்திற்கே சொந்தம் போலும்!


-------------------------12-9-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் செங்கோ அவர்கள் எழுதிய கட்டுரை

0 comments: