Search This Blog

17.9.09

பெரியாரைத் துணை கொள்!செப்டம்பர் 17 _ தமிழ்கூறும் நல்லுலகம் நெஞ்சில் நிறுத்தும் நாள். ஆம், தமிழர் வாழ்வில் புது ரத்தம் பாய்ச்சிய பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாள்.

அய்யா அவர்களின் பிறந்த இந்நாளை தமிழர்களுக்கு மானம் பிறந்த நாள் என்று சொல்லவா? பகுத்தறிவு பிறந்த நாள் என்று சொல்லவா? பழைமைக்கு விடை கொடுத்துப் புதுமைக்கு வரவேற்பு கொடுத்த நாள் என்று பகர்வதா? பெண்ணடிமைக்குக் குழிவெட்டி பெண் விடுதலையை மலர்வித்த மகத்தான நாள் என்று கூறுவதா?

ஒரு வரியில் சொல்லவேண்டுமானால், மனித சமத்துவத்திற்கும், சமதர்மத்துக்கும் வழி கோலி, பேதமற்ற திருப்தியான இடம் என்னும் புத்துலகத் திறவு கோல் பிறந்த நாள் என்று கூறலாம்.

தமிழர்களுக்குத் தலைவர், தென்னாட்டு சாக்ரட்டீஸ் என்பதெல்லாம் பழைய நிலை. இன்றைய நிலையில் தந்தை பெரியார் அவர்களின் தத்துவம் அவரை உலகத் தலைவர் என்னும் நிலைக்கு உயர்த்தியுள்ளது.

மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று புரட்சிக்கவிஞர் தொலைநோக்கோடு கணித்தது மிகமிகச் சரியே என்பதை இப்பொழுது உணர முடிகிறது.

மானமும் அறிவும் மனிதர்க்கழகு என்றாரே.இது என்ன குறிப்பிட்ட பகுதி மக்களுக்காக மட்டும் சொல்லப்பட்டதா?

திருக்குறளில் கூட ஏழு சீர்கள் உண்டு. ஆனாலும், அய்யா சொன்ன இந்தக் கருத்தாக்கத்தில் நான்கே நான்கு சீர்கள்தான் உள்ளன.

மானம் _ அறிவு இந்த இரு சொற்களின் ஒப்புயர்வற்ற அடையாளத்தைத் தாண்டி மனிதனைப் படம் பிடிப்பதற்கு எஞ்சியிருப்பது எது? இந்த இரு சொற்களுக்குள் உண்மையான மனிதன் முடங்கிப்போய் விடுகிறான்.

பகுத்தறிவு என்பது மனிதனின் சிந்தனை வளத்துக்கானது; மானம் என்பது எந்த வகையான அடிமைத்தனத்தையும் தலைகுப்புற வீழ்த்திவிட்டு நிமிர்ந்து நிற்கும் போர்க்குணத்தை ஊட்டவல்லது.

பார்ப்பனர் அல்லாதார் மதப்படியும், கடவுள் நம்பிக்கைப் படியும் ஏன் இன்றைய இந்திய அரசமைப்புச் சட்டப்படியும் சூத்திரர்களாக இன்று இருக்கிறார்கள். இழிவு சுமந்த மக்களாகத்தானிருக்கிறார்கள் என்றால், இதிலிருந்து விடுபடுவது என்பது வெறும் பகுத்தறிவைச் சார்ந்தது மட்டுமல்ல, இன இழிவை உடைத்தெறிய வெடித்துக் கிளம்புவதற்கு மான உணர்வு, போராட்ட உணர்வு மிகவும் அவசியமானது.

எனவே, மானமும் அறிவும் மனிதத் தன்மையுடன் தலைநிமிர்ந்து வாழ்வதற்குத் தேவையான உணர்வுகளாகும். இந்த இரு உணர்வுகளை உண்டாக்க தந்தை பெரியார் கொடுத்த வெளிச்சம்தான் சுயமரியாதை என்பதாகும்.

இந்தியாவின் சமுதாயத் துறையில் தமிழ்நாடு மட்டும் சிறந்தோங்கி நிற்பதற்கும், மதக் கலவரங்களிலிருந்து விலகி நிற்பதற்கும், தமிழர்களின் பெயர்களில் ஜாதி வால் ஒட்டாமலிருப்பதற்கும் காரணம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளும், ஒரு இயக்கம் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருவதும்தான்.

உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கவேண்டும். உரிமைகளுக்காகப் போராடவேண்டும். கஷ்ட நஷ்டம் என்னும் விலை கொடுக்கவேண்டும் என்ற உணர்ச்சியை தமிழ்நாட்டு மக்களிடம் ஊட்டிய தலைவர் தந்தை பெரியார்.

மக்கள் மத்தியில் பொதுக்கூட்டம் போட்டு அவரவர் கருத்துகளை எடுத்துரைக்கும் ஒரு முறையை உண்டாக்கிக் கொடுத்ததுகூட தந்தை பெரியார் அவர்கள்தான். விவாத முறையைத் தூண்டி விட்டதும் அந்தத் துணிவுமிக்க தூய தலைவர்தான்.

தந்தை பெரியார் அவர்களை மய்யப்படுத்தி சிந்தனை நீரோட்டத்தைக் கொண்டு போய் எங்கெங்கெல்லாம் சேர்க்கப்படுகிறதோ, அங்-கெங்கெல்லாம் ஒரு சம நிலை _ ஒப்புரவு நிலை உடைய சமுதாயம் மலரும் என்பதில் அய்ய-மில்லை.

பெரியாரைத் துணை கொள்! என்ற புதிய குரலை உலகப் பந்து முழுமையும் கொண்டு சேர்ப்போம்.

தந்தை பெரியார் பிறந்த நாளில் இந்தச் சிந்தனை உறுதிபடட்டும்!

வாழ்க பெரியார்!


-------------------"விடுதலை" தலையங்கம் 17-9-2009

0 comments: