Search This Blog

11.9.09

தலைவர்கள் பிறந்தநாளும் - கடவுள்கள் பிறந்தநாளும்




பிறந்த நாள்


தந்தை பெரியார் கூறுவார்: பிறக்காத கடவுளுக்கெல்லாம் பிறந்த நாள் கொண்டாடுகிறார்கள். மக்களுக்காகத் தொண்டாற்றுகிறவர்களுக்கு விழா கொண்டாடுவது அவர்களின் கொள்கைகளைப் பரப்புவதற்குப் பயன்படும் என்பார்கள்.

ஆத்திக சிரோன்மணிகளும், ஆன்மிகச் சீலர்களும், அறிவு ஜீவிகள் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு தத்துவ விசாரணை நடத்தும் மத வியலாளர்களும் என்ன சொல்லுகிறார்கள்?

கடவுள் உருவமற்றவர் _ அரூபி பிறப்பு இறப்பு அற்றவர் எல்லாவற்றையும் கடந்தவர் என்றெல்லாம் ரீல் விடுகிறார்களே, அந்தத் தட்டில் உள்ள மக்கள் கூட கிருஷ்ணஜெயந்தி கொண்டாடுவதும், ராமநவமி கொண்டாடுவதும், வருஷா வருஷம் சுந்தரருக்கும் மீனாட்சிக்கும் கல்யாணம் நடக்கும் வைபவங்கள் பற்றி ஆராதனை செய்வதுமான வேலைகளில் ஈடுபடுகிறார்களே, இது என்ன இரட்டை வேடம்?

இறைவன் என்ற நம்பிக்கையில் உண்மையான ஈடுபாடு கொண்ட மெய்யன்பர்களாக இவர்கள் இருப்பது உண்மையானால், இந்தக் குப்பைக் கூளங்களை உதைத்து உடைத்தெறிய முன்வரமாட்டார்களா?

இன்றைக்கு ஒரு சேதி: கண்ணன் பிறந்த நாளையொட்டி குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு தடபுடலான விருந்தாம். ஒன்றரை லட்சம் ரூபாய்க்கான பால் பாயாச சீட்டு பக்தக் கே()டிகளுக்கு விற்கப்படுமாம். காலை 9 மணிமுதல் விருந்து பரிமாறப்படுமாம். அதன் பிறகு கிருஷ்ணன் புறப்பாடாம்!

இது என்ன கூத்து? தலைவர்களுக்குப் பிறந்த நாள் கொண்டாடினால் அதுபற்றிக் கேலி, கிண்டல் செய்யும் துக்ளக் பார்ப்பனர் கூட்டம் கற்பிக்கப்பட்ட கடவுள் பொம்மைகளுக்கு இப்படியெல்லாம் பிறந்த நாள் கொண்டாடி தாம்தூம் செய்கிறார்களே, இதுகுறித்து மூச்சு விடுவதில்லையே, ஏன்?

காரணம் இருக்கிறது. இந்தக் கோயில் அமைப்பு முறையில்தானே அவாளின் பிழைப்பு நடக்கிறது. இந்த அமைப்பு முறை இல்லாவிட்டால் தட்சணைகள் வருமா? நேர்த்திக் கடன்கள் என்ற பெயரால் பக்தர்களின் பணத்தை எப்படி சுருட்ட முடியும்?

பக்தி ஒரு பிசினஸ் என்று வேறு வழியின்றி சங்கராச்சாரியாரே கூறிவிட்டாரே, அதற்குப் பிறகு என்ன?

இன்னொரு துக்கடா! (Tail Piece): கிருஷ்ணன் பிறந்த அஷ்டமியும், இராமன் பிறந்த நவமியும் சாஸ்திரப்படி கெட்ட அபசகுன நாள்களாம்.

ஹி.... ஹி....

----------------- மயிலாடன் அவர்கள் 11-9-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

0 comments: