Search This Blog
7.9.09
புத்தகப் புரட்சி - ஓர் அறிவுப் புரட்சி - அறிவுத் தீனி
தமிழ்நாடு முழுக்க 12 நகரங்களில் பெரியார் அறக்கட்டளை திராவிடன் புத்தக நிலையம் இணைந்து நடத்தும் புத்தகப் புரட்சி!
புதுவை முதலமைச்சர் -அமைச்சர்கள் பங்கேற்கின்றனர் பொதுமக்களே வாங்கிப் பயன்பெறுவீர்!
தமிழர் தலைவர் முக்கிய வேண்டுகோள்
அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி பெரியார் அறக்கட்டளை - திராவிடன் புத்தக நிலையம் இணைந்து நடத்தும் புத்தகக் காட்சியில் அரிய நூல்களை வாங்கிப் பயன்பெறுவீர். அறிவுத் தீனியில் ஊட்டம் பெற்று உயர வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:
ஆறுநாட்கள் - அரிய புத்தகச் சந்தை
அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தமிழ் நாட்டின் முக்கிய நகரங்களில் நாளை (8.-9-.2009) முதல் 13-.9.-2009 அன்று வரை - ஆறு நாள்கள் - காலை 9 மணி தொடங்கி இரவு 9 மணி வரை பெரியார் புத்தகத் திருவிழா - கண்காட்சி - விற்பனை - அறிவார்ந்த நிகழ்ச்சிகளின் இணைப்புடன் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனமான (தந்தை பெரியார் அவர்களால் துவக்கப்பட்ட) பெரியார் அறக்கட்டளையும், திராவிடன் புத்தக நிலையமும் இணைந்து முற்றிலும் புதுமையான வகையில் நடைபெற பிரம்மாண்டமான ஏற்பாடுகளை நமது தோழர்கள், பொறுப்பாளர்கள் இணைந்து மிகச் சிறப்பாக செய்து வருவது அறிய மிக்க மகிழ்ச்சி.
முதலமைச்சர் - அமைச்சர் பெருமக்கள்
நாகர்கோயில், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திருப்பூர், கடலூர், தருமபுரி, சேலம், காஞ்சிபுரம், புதுச்சேரி, வேலூர், கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் நடைபெறவிருக்கும் இப்புத்தகக் கண்காட்சி, அறிவு விருந்தாக பெரியார் - அண்ணாவின் அருந்தொண்டுகளை குறிக்கும் நூல்கள், வாழ்வியல் பற்றிய நூல்களும் இடம் பெறுகின்றன. பல்துறையைச் சேர்ந்த பெரு மக்கள் மாண்புமிகு புதுவை முதல் அமைச்சர், தமிழ்நாடு அமைச்சர் பெருமக்கள், அறிவார்ந்த கல்வியாளர்கள், தொண்டறச் செம்மல்கள் முதலியோர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கண்காட்சி - அறிவு விருந்தின்போது விற்பனையாகும் நூல்களுக்கு 15 முதல் 51 விழுக்காடு கழிவு சலுகை (Discount) அறிவித்திருப்பது ஓர் அரிய வாய்ப்பு.
அண்ணா அறுவை சிகிச்சையைக் கூட தள்ளிப் போட்டார்
பல்வேறு கல்வி நிறுவனங்கள், நூலக அமைப்புகள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாய்ப்பு அண்ணா நூற்றாண்டுக்கான ஒரு விழிப்புணர்வு பிரச்சார இயக்கமேயாகும்.
அறுவை சிகிச்சையைக் கூட ஒரு நாள் தள்ளிப் போட வேண்டினார், புத்தகம் படித்து முடிக்க அறிஞர் அண்ணா.
பாமரர்களுக்கும் பரிமாறிய தலைவர்
அவர்போல புத்தகங்களை அப்படியே விழுங்கி செரிமானம் செய்து, பயனுள்ள அவற்றின் கருத்தை பாமரர்களுக்கும் பரிமாறிய தலைவர் - எழுத்தாளர் - பேச்சாளர் வேறு எவரையும் காணமுடியாது.
புத்தகப் புரட்சி ஓர் அறிவுப் புரட்சி
இன்று அண்ணாவால் அடையாளம் காட்டப் பட்டு, தந்தை பெரியார்தம் ஈரோட்டுக் குருகுலத்தில் பக்குவப்பட்ட பகுத்தறிவுப் பேரொளியான கலைஞர் அவர்கள் அது போல இலக்கியம் - சிறந்த எழுத்தோவியங்களைத் தருபவர் ஆவார்கள். காலத்தைத் தாண்டி நிற்கும் கருத் தோவியங்களைக் கண்டு, சுவைத்து, வாங்கிப் பயன் பெற தமிழ்ப் பெருமக்களும், கல்வியாளர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும், இளைஞர்களும், இருபால் தோழர்களும் முன்வரவேண்டும்.
புத்தகப் புரட்சி ஓர் அறிவுப் புரட்சி; புத்தாக்கப் புரட்சி . புதியதோர் உலகு செய்யும் முயற்சியின் முக்கிய கட்டம்.
மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பு!
பகுத்தறிவு நூல்களைப் படித்து அறிவுக்குச் சாணை பிடித்து, உயர்ந்திட இந்த நல்லதோர் முயற்சி நிச்சயம் வெற்றி வாகை சூடும்!
பெரியார் நூல்கள் போல மலிவுப் பதிப்புகள் வேறு எங்கும் கிடையாது! காரணம், தந்தை பெரியார் அவர்கள் மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பு அல்லவா?
அறிவுத் தீனி
எனவே, இதனை நன்கு பயன்படுத்தி நாளும் அறிவுத் தீனியில் ஊட்டம் பெற்று உயரவேண்டும் தமிழ்ப் பெருமக்கள் என்பதே நமது ஆசை! வெல்க இவர்தம் முயற்சிகள்!
-------------------"விடுதலை" 7-9-2009
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment