Search This Blog

5.9.09

அண்ணா நூற்றாண்டு நிறைவினையொட்டி சிறைக் கைதிகளை விடுவித்திடுக!


அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா
அண்ணா கொள்கைக்கு அண்ணா தி.மு.க. நாமம்!
அய்யா, அண்ணா கொள்கை பரப்பும் தி.மு.க.வின் வேகம்!!அண்ணா நூற்றாண்டு விழா குறித்தும், தி.மு.க. ஆட்சியில் சிறப்பாகக் கொண்டாடப்படுவது குறித்தும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தந்தை பெரியாரின் தலைமகனாம் அறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு இன்னும் சில நாள்-களே உள்ளன என்ற நிலையில், அய்ந்தாம் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று, பொற்கால ஆட்சியை நடத்திவரும் நமது மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் அவர்கள் அண்ணாவிற்கு எப்படியெல்லாம் பெருமை சேர்க்க முடியுமோ அதனை நூற்றாண்டில் ஓராண்டாகவே செய்து வருகிறார்கள்.
முதல்வர் தந்த இன்ப அதிர்ச்சி!

கடந்த ஆண்டு செப்-டம்பர் 15 அன்று ஒரு சிறப்பான கவியரங்கத்தோடு அண்ணா நூற்றாண்டு முதல்வர் தலைமையில் தொடங்கியபோது, அண்ணா அறிவித்த ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் திட்டத்தினை அறிவித்து, இந்தியாவையே இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கினார்!
கோடானு கோடி ஏழை, எளிய மக்கள் இத்திட்டத்தாலும், 50 ரூபாய்க்கு மலிவு விலையில் 10 பல சரக்கு பொருள்கள் கிடைக்கவும் ஏற்பாடு திட்டத்தாலும், அறிஞர் அண்ணா எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுத்து ஆக்க ரீதியாக அண்ணா விழாவைத் தொடங்கி வைத்தார்.

அப்போதும் பல கைதிகளை சிறையிலிருந்து விடுதலை செய்தார்கள்; அது பாராட்டத்தக்கதாகும்.

புதிய தலைமுறையினருக்கு துணை முதல்வரின் திட்டம்

துணை முதல்வர் மாண்புமிகு தளபதி மு.க. ஸ்டாலின், இளைஞர்கள், மாணவர்களிடையே அண்ணா புகழைப் பரப்ப, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி போன்ற பலவற்றையும் நடத்தி, இளைய தலைமுறையினருக்கு அண்ணாவை நினைவூட்டி அவர்தம் கருத்துகளைப் பதிய வைத்தார்கள்.

அண்ணா நாணயம் வெளியீடு!

அண்ணா நூற்றாண்டு நாளான 15.9.2009 அன்று சென்னையில் அண்ணா உருவம் பொறித்த நாணயம் வெள்ளி அய்ந்து ரூபாய் நாணயத்தை மத்திய நிதியமைச்சர் வெளியிடுகிறார். பெரிய விழா அரசு சார்பில் ஏற்பாடாகி, அதில் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்படவிருக்கிறது.

காஞ்சியில் அண்ணா விழா

தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த மண்ணாம் காஞ்சியில் ஒரு மாபெரும் மக்கள் கடல் கூடும் நிகழ்ச்சியை நடத்திட ஏற்பாடாகி வருகிறது! (26.9.2009).
அது ஓர் பெரு விழா! திருவிழா!!

விருதுகளும் வழங்கப்படவிருக்கும் அவ்விழா, இனமானப் பேராசிரியர் தலைமையில் நடைபெறவிருப்பது மகிழ்ச்சிக் குரியதாகும்!

சிறைக் கைதிகளை விடுவித்திடுக!

இந்நிலையில், அண்ணா நூற்றாண்டு நிறைவினையொட்டி, பல சிறைகளில் பல ஆண்டுகளாக வதியும் சிறைக் கைதிகளை, அவர்கள் இஸ்லாமியர்கள், இந்துக்கள், கிறித்துவர்கள் ஆகிய எம்மதத்தினராயினும் விடுதலை செய்வது அண்ணா விரும்பிய மனிதநேயத்தினைச் செயல்படுத்திக் காட்டும் வாய்ப்பாகும்!

குறிப்பாக கோவை போன்ற சிறைகளில் பல ஆண்டுகளாக, சிறுபான்மை சமூகத்தவரான முசுலிம்கள் மிகுந்த வேதனையோடு, தவறு செய்யாதவர்களும்கூட தவறான சேர்க்கை சிந்தனை காரணமாக வாடுகிறார்கள். குறிப்பாக இளைஞர்களைத் திருத்திடுவது அவசியம். எனவே, இதனை மனிதநேயத்தோடு நமது முதல்வர் அணுகவேண்டும் என அன்புடன் வேண்டுகிறோம்.


அறிஞர் அண்ணா போப் ஆண்டவரை சந்தித்ததே கோவாவில் தூக்குத் தண்டனை பெற்ற ஒரு கைதியை அடையாளம்கூடத் தெரியாத ஒருவரை விடுதலை செய்யத்தான் என்பது அண்ணாவின் புகழ் பூத்த வரலாற்றுச் சாதனை அல்லவா?

குற்றவாளிகள் திருத்தப்படவேண்டும்

அண்ணாவின் இதயத்தைப் பெற்ற நமது முதல்வர் கலைஞர் அவர்கள் இதனை இணக்கமாகப் பரிசீலித்து, அண்ணா நூற்றாண்டில், வாடிய மனிதப் பயிர்களையும், காப்பாற்றிடவேண்டுகிறோம்.

குற்றவாளிகள்கூட திருத்தப்படவேண்டும் என்பதே இப்போதுள்ள அணுகுமுறை என்பதை அறியாதவரல்ல நமது முதல்வர் அவர்கள்.

எனவே, அன்புடன் வேண்டுகிறோம்!

அண்ணா தி.மு.க. அண்ணா கொள்கைக்குப் போடும் நாமம்!
அண்ணாவுக்கு நாமம் போட்டுவிட்டு, அண்ணா நூற்றாண்டு நாளைக்கூட கொண்டாடாமல் இருப்பதுகூட, ஒரு வகையில் அண்ணா கொள்கைகளைக் காப்பாற்றிட உதவி செய்தவர்களே ஆவார்கள்.

அய்யா, அண்ணா என்ற கொள்கைக் குடும்பத்தின் புகழ் அகிலமெல்லாம் பரப்பிட, அதற்கு கலைஞர் துணை நிற்பவராக _ வேகம் கூட்டுபவராக என்றும் இருப்பது நல்லதோர் வாய்ப்பே!

--------------------"விடுதலை" 4-9-2009

0 comments: