பார்ப்பன வீடுகளில் பெண்கள் பெரியார் படத்தை வைக்கவேண்டும்! பெரியார், அண்ணா ஜெயலலிதாவுக்கு அரசியல் வியாபார லேபிள்
ஆசிரியருக்கும், கலைஞருக்கும் - பெரியார் அண்ணா குருதி ஓட்டத்தில் கலந்தது!
பார்ப்பனப் பெண்கள் தங்கள் வீடுகளில் பெரியார் படத்தை மாட்டி வைக்க வேண்டுமென்று பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பேசினார். ஜெயலலிதாவுக்கு அரசியல் வியாபாரம் நடத்தி அண்ணா, பெரியார் பெயரை லேபிளாகப் பயன்படுத்துகிறார். ஆசிரியர் அவர்களுக்கும், கலைஞர் அவர்களுக்கும் பெரியார், அண்ணா என்பது அவர்களுடைய குருதி ஓட்டத்தில் கலந்த ஒன்று என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கூறினார்.
தென்சென்னை மாவட்ட தி.க. சார்பில் திருவல்லிக்கேணியில் 18.9.2009 அன்று தந்தை பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சுப.வீரபாண்டியன்
இந்நிகழ்ச்சியில் திராவிட இயக்கத் தமிழர்பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் ஆற்றிய உரை வருமாறு:
இங்கே நமது திராவிடர் கழக பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பேசும்பொழுது இந்த திருவல்லிக்கேணி பகுதி திராவிட இயக்க முதல்விதை விதைத்த மண் என்று குறிப்பிட்டுச் சொன்னார்கள். செப்டம்பர் மாதம் என்று சொன்னால் அது தந்தை பெரியார் பிறந்த நாளான செப். 17ஆம் தேதியும், செப். 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாள் என்பதுதான். நமக்கு ஞாபகம் வரும்.
செப்டம்பர் 5ஆம் தேதி
செப்டம்பர் 5ஆம் தேதி என்றால் அது டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள். அது ஒரு முக்கிய நாள் என்று அதைத்தான் சொல்வார்கள். தெரிந்தே நான் இதை விட்டுவிட்டேன். அதற்குக் காரணம் உண்டு. செப்டம்பர் 5 ஆம் தேதி என்பது செக்கிழுத்த செம்மல் தியாகி வ.உ.சி. பிறந்தநாள் என்பதை மறைத்துவிடுகிறார்கள், அவர்கள் பார்ப்பனர்கள் என்பதை நாம் அறியாதவர்கள் அல்லர். திருத்தணியில் பார்ப்பன குலத்தில் பிறந்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். தூத்துக்குடியில் சூத்திரனாகப் பிறந்தவர் வ.உ.சிதம்பரனார் என்பதுதான் அதற்குக் காரணம்.
பார்ப்பனர் வீட்டில் பெரியார் படம்
நம் இனத்திற்காகவும், தமிழினத்திற்காகவும், உலக மனிதநேயத்திற்காகவும் பாடுபட்ட தந்தை பெரியார் அவர்கள் எடுத்துவைத்த அத்துணை கருத்துகளையும் இன்றைக்கு உலகத்தில் உள்ளோர் உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.
தந்தை பெரியார் உலகில் உள்ள மக்கள் சமத்துவத்துடன் வாழவேண்டும் என்பதற்காக பாடுபட்டார். குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர்.
பார்ப்பன பெண்கள் மொட்டை அடித்து மூலையில் உட்கார வைக்கப்பட்ட நிலைகளை எல்லாம் அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். அந்தப் பார்ப்பன பெண்களுக்கும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் தந்தை பெரியார். எனவே, ஒவ்வொரு பார்ப்பன பெண்களும் அவரவர்களுடைய வீட்டில் தந்தை பெரியார் அவர்களுடைய படத்தை மாட்டி வைக்க வேண்டும்.
நவீன இந்துத்துவா
டபுள்யு.ஏ.வில்கின்சன் என்பவர் நவீன இந்துத்துவா என்ற ஒரு நூலை எழுதியிருக்கின்றார். அந்த நூலை நான் தற்பொழுது படித்துக் கொண்டிருந்தேன். பல அதிர்ச்சியான தகவல்கள் அந்த நூலில் இருந்ததை என்னால் உணர முடிந்தது-
சதி என்கிற பெயராலே பெண்களை நெருப்பிலே போட்டுக் கொன்றார்கள். இது நெருப்பிலே பெண்களுக்கு நடந்த கொடுமை.
அதேபோல நெருப்பில் மட்டுமல்ல; நீரினாலும் பெண்களுக்கு பெரிய கொடுமைகள் இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை விளக்கியிருக்கின்றார். கங்கைக் கரையில் மிகவும் குளிர்ந்த நீர் ஓடிக்கொண்டிருக்கும் இடத்தில் ஈமச்சடங்குகள் நடப்பது வழக்கம்.
ஒரு குடும்பத்தில் சிறந்த ஒருவருக்கு ஈமச்சடங்கு நடத்த ஆரம்பிக்கின்றார்கள். அப்பொழுது மிகவும் குளிர்ந்த நீரில் அந்த குடும்பத்தைச் சார்ந்த பெண்ணை கழுத்துவரை உள்ள தண்ணீரில் வலுக்கட்டாயமாக நிற்க வைக்கிறார்கள். 6 மணிநேரம் ஈமச்சடங்குகள் நடைபெறுகிறது. அதுவரை அந்த பார்ப்பனப் பெண் குளிர் நீரில் நடுங்கி விறைத்துப் போகிறார். பிறகு தண்ணீரில் இருந்து மேலே வருகின்ற அந்தப் பெண்ணை ஈமச்சடங்கு நடத்துவோர் அழைத்து வருகின்றனர்.பார்ப்பனப் பெண்ணைத் தொடக்கூடாது. ஒரு கயிற்றால் கட்டி இழுத்து வருகிறார்கள்.
நூலாசிரியர் வில்கின்சன் கங்கைக் கரையில் நேரில் கண்ட சம்பவத்தை அப்படியே இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார்.
அப்படி இழுத்து வரப்பட்ட பெண் நடக்க முடியாமல் தண்ணீர் தண்ணீர் என்று கேட்டு கதறுகிறார். எந்தப் பார்ப்பனப் பெண்ணும், வயது முதிர்ந்த பார்ப்பன பெண்கள்கூட இரக்கப்பட்டு அந்தப் பெண்ணுக்குத் தண்ணீர் கொடுக்க முன்வரவில்லை. காரணம், அதுதான் அவர்களுடைய கலாச்சாரம்.
ஓர் இளம்பெண் மட்டும் யாருக்கும் தெரியாமல் அந்தப் பெண்ணுக்கு குடிக்க ஒரு மடக்கு தண்ணீர் கொடுக்கிறார். போய்க்கொண்டிருக்கிற உயிர் திரும்பி வந்ததைப்போல தண்ணீரைக் குடித்த அந்தப் பார்ப்பனப் பெண் தனக்குத் தண்ணீர் கொடுத்த இளம்பெண் காலிலே விழுந்து வணங்கி கதறுகிறார். நீதான் எனக்கு தெய்வம் என்ற குமுறி அழுகிறார். இது எப்படிப்பட்ட கொடுமை என்பதை பார்ப்பனப் பெண்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். அதனால்தான் ஒவ்வொரு பார்ப்பனப் பெண்கள் வீட்டிலும் தந்தை பெரியாருடைய படத்தை மாட்டவேண்டும் என்று சொல்லுகின்றேன்.
இன்றைக்கு தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கை வழியில், அண்ணா அவர்களுடைய கொள்கை வழியில் நின்று நமது முதலமைச்சர் கலைஞர் அவர்கள் சிறப்பாக ஆட்சியை நடத்திக் கொண்டு வருகின்றார். அவருடைய ஆட்சிக்கு நாம் எல்லாரும் துணைநின்று ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு பேசினார் சுப.வீரபாண்டியன்.
உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அடுத்து தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி அவர்கள் ஆற்றிய உரையில் குறிப்பிட்ட முக்கிய செய்தி வருமாறு:
தந்தை பெரியார் அவர்களுடைய பிறந்தநாள், பேரறிஞர் அண்ணா அவர்களுடைய பிறந்த நாள் திமுக பிறந்த நாள் என்று இன்றைக்கு நாடெல்லாம் மூலைமுடுக்குகளில் எல்லாம் முப்பெரும் விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இன உணர்வோடு கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.
தந்தை பெரியார் பிறந்த நாள், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் ஏதோ ஒரு சடங்கிற்காக, சம்பிரதாயத்திற்காகக் கொண்டாடப்படுகின்ற விழாக்கள் அல்ல இவை.
சில பேரை நீங்கள் பார்த்திருப்பீர்கள் அவர்கள் கொண்டாடுகின்ற விழா எப்படி-யிருக்கின்றது தெரியுமா? ஒரு முன்னாள் பெண் அமைச்சர் கோவிலில் வேப்பிலை ஆடை அணிந்துகொண்டு ஆடியிருக்கிறார். ஏனென்றால், உலகத்திலேயே பெரிய இலை வேப்பிலை பாருங்கள். அந்த வேப்பிலையைச் சுற்றிக்கொண்டு கோயிலைச் சுற்றி ஆடிக்கொண்டு வருகின்றார். அந்தக் காட்சியைப் பார்க்க ஒரு கூட்டம் அங்கேயும் இருந்தது.
நீங்களே புரிந்துகொள்வீர்கள். அதேபோல அந்த அம்மாவுக்குப் பிறந்தநாள் என்ற பெயராலே பிரார்த்தனை என்ற பெயராலே மண்சோறு சாப்பிட்டவர்களும் அவர்கள்தான்.
அண்ணா பெயரை கட்சியில் வைத்துக்கொண்டு
இப்படிப்பட்ட ஒரு கட்சியினர்தான் அண்ணா பெயரை தன் கட்சியிலும், கொடியிலும் வைத்துக்கொண்டு அண்ணாவையும், தந்தை பெரியாரையும், திராவிட என்ற பெயரையும், ஒரு லேபிளாகப் பயன்படுத்திக் கொண்டு அரசியல் வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் அந்தப் பக்த சிரோன்மணிகள். பெரியார் அண்ணா பெயரை விளம்பரத்திற்காகப் பயன்படுத்திக்கொண்டு வருகின்றார்கள்.
இன்றைக்குக் கலைஞர் அவர்கள் தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கைகளை ஆட்சியின் சட்டங்களாக ஆக்கி அவருக்குப் பெருமை சேர்த்துக்-கொண்டு வருகின்றார். அதேபோல அண்ணா அவர்களது வழியில் நின்று ஆட்சியை நடத்திக்கொண்டு வருகின்றார்.
தந்தை பெரியார் ஒரு பெரிய கூட்டத்தை சேர்த்துக் கொண்டு இயக்கத்தைத் தொடங்கவில்லை. பிரெஞ்சுப் புரட்சியே ஒரு மாநாடு போட்டு ஆரம்பிக்கவில்லை. ஒரு டென்னிஸ் கோர்ட்டில்தான் தொடங்கியது.
2000ஆம் ஆண்டுகால சமூகக் கொடுமைகளை, அநீதிகளை அழித்து மக்களிடத்தில் ஒரு மாறுதலை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார்.
நம்முடைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஈரோட்டுக் குருகுலத்திலே பயின்ற காரணத்தால்தான்.
பாராட்டிப் போற்றி வந்த பழைமைலோகம்
ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுதுபார்!
என்று எழுதினார்.
சமூகப் புரட்சியை ஏற்படுத்தியவர் பெரியார்.
தந்தை பெரியார் அவர்கள் தனது மேடைப் பேச்சுகளால் ஒரு சமூகப் புரட்சியை, சமுதாயப் புரட்சியை ஏற்படுத்தியவர் என்பதை எதிரிகளால்கூட மறுக்க முடியாது.
தந்தை பெரியார் அவர்கள் ஒரிஜினல் திங்க்கர் நமது ஆசிரியர் அவர்களைப்போல _ எங்களைப்போல _ சபாபதி மோகன் அவர்களைப்போல பட்டம் படித்தவர் இல்லை. தந்தை பெரியார். சுயமாகச் சிந்தித்தார்.
மனிதனை நினைத்தார் - பெரியார்
இந்த நாட்டிலே ஏன் உயர்ந்த ஜாதிக்காரன் ஆதிக்கம் செலுத்த வேண்டும்? தாழ்ந்த ஜாதிக்காரன் ஏன் அடிமையாக இருக்க வேண்டும்? அதற்கு அடிப்படை மூலகாரணம் என்ன என்று சிந்தித்தார். கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் இந்த நாட்டு மக்கள் அடிமைப் படுத்தப்பட்டிருக்கின்றார்கள் என்பதைக் கண்டறிந்தார். எனவே தான் கடவுளை மற! என்று சொன்ன தந்தை பெரியார் மனிதனை நினை! என்று சொன்னார்.
முதலமைச்சர் கலைஞர் அவர்கள் மனிதனை நினைத்த காரணத்தால்தான் தந்தை பெரியார் அவர்களின் எண்ணத்தை ஈடேற்றுகின்ற வகையிலே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டுவந்தார்.
பார்த்தசாரதி கோயிலில் நம்மவர்
இங்கே அருகேயிருக்கின்ற பார்த்தசாரதி கோயிலில் நாளைக்கு கோயில் கர்ப்பக் கிரகத்திற்குள் சென்று மணியடிக்கப் போகிறார். அப்பொழுது கோயிலுக்கு வருகின்ற பார்ப்பனர்கள் அவர்களே சொல்லிவிடுவார்கள். கோயிலுக்குள் கடவுள் இல்லை! கடவுள் இல்லை! போகாதீர்கள் என்று பார்ப்பனர்களே சொல்லிவிடுவார்கள் என்று தந்தை பெரியார் அவர்கள்தான் இதை விளக்கிச் சொன்னார். அந்த சமூக மாறுதல் கலைஞர் ஆட்சியில் வரப்போவதை நாம் காணத்தான் போகின்றோம்.
பெரியாரின் கனவுகள் நனவாகின்றன
தந்தை பெரியார் அவர்களுடைய கனவுகள் எல்லாம் இன்றைக்குக் கலைஞர் ஆட்சியில் நனவாகிக் கொண்டிருக்கின்றன.
மத்திய அரசு நிகழ்ச்சியிலே சரஸ்வதி வந்தனா என்ற பாடல் பாடியதற்காக மத்திய அரசு நிகழ்ச்சியையே புறக்கணித்துவிட்டு வெளியே வந்தவர்தான் நம்முடைய பேராசிரியர் அவர்கள்.
ஆனால், சென்ற அதிமுக ஆட்சி மதச்சார்பற்ற ஆட்சியாக நடைபெற்றதா? ஒரு அரசாங்கம் என்றால் மதச்சார்பற்ற அரசாக நடைபெற வேண்டும். மக்களை சமத்துவமாக, சகோதரத்துவமாக நடத்த வேண்டும்.
அந்த அம்மையாரின் எண்ணம்
வெர்ஜின் என்றால் என்ன பொருள் என்றால் ஆண்களோடு எந்த தொடர்பும் இல்லாவருக்குப் பெயர்தான் கன்னி என்று சொல்லுவார்கள்.
ஆனால் அதை விட்டு விட்டு எல்லா ஆண்களையும் நான் சமமாகத்தான் பாவிப்பேன் என்று சென்ற ஆட்சியில் ஆண்டுகொண்டிருந்த அந்த அம்மையார் சொன்னால் அது அவருடைய சாமர்த்தியம். (சிரிப்பு) அந்த அம்மாவுக்கு அண்ணா-வையும் தெரியாது, பெரியாரையும் தெரியாது. மதச்சார்பற்ற தன்மையும் தெரியாது. எதையும் ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள் என்று சொன்னவர் தந்தை பெரியார்.
ஜாதி என்பது மிகப்பெரிய போராட்டம் கொண்டது. மிகக்கொடி-யது என்று ஏசியன் டிராமாவில் எழுதிய நோபல் பரிசு பெற்ற குன்னர்மிர்தால் விளக்கம் சொன்னார்.
அரசியல் வியாபாரம் இன்றைக்கு அதிமுக என்ற ஒரு கட்சி அண்ணா பெயரை சொல்லிக்கொண்டு தந்தை பெரியாரை லேபிளாக வைத்துக் கொண்டு அதைப் படமாக கொண்டு அரசியல் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
தந்தை பெரியார்-_அண்ணா கொள்கைகளை இளைய தலைமுறையினருக்குப் போதிக்க வேண்டும் என்பது ஆசிரியர் அவர்களுக்கும், கலைஞர் அவர்களுக்கும் குருதி ஓட்டத்திலே கலந்து ஒன்று.
அதனால்தான் வரும் 26ஆம் தேதி நமது ஆசிரியர் அவர்களுக்குத் தந்தை பெரியார் விருதும், முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்கு அண்ணா விருதும் காஞ்சிபுரத்தில் நடைபெறவிருக்கின்ற அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் வழங்கப்படவிருக்கின்றன. இவ்வாறு உரையாற்றினார் அமைச்சர் க.பொன்முடி அவர்கள்.
--------------------"விடுதலை" 24-9-2009
0 comments:
Post a Comment