Search This Blog
8.9.09
2009 இலும் பார்ப்பனர் மனப்பான்மை எத்தகையது?தெரிந்துகொள்ள படியுங்கள்!!
கூடுவோம் கும்பகோணத்தில்!
சனாதனம் சதைத் திமிரோடு நடைபோடும்-போட்ட ஊர் கும்பகோணம். சனாதன வாதியாகத் தம்மை எப்பொழுதும் காட்டிக்கொள்ளும் காந்தியாரே வெறுக்கும் அளவுக்குச் சனாதனக் கும்பலின் சேட்டை அவ்வூரில் இருந்தது என்றால் தெரிந்து கொள்ளலாமே!
18.9.1921 அன்று கும்பகோணம் வந்த காந்தியார் எழுதுகிறார் (நவஜீவன் இதழுக்காக).
சென்னை மாநிலத்தில் கும்பகோணத்திலிருந்து நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இந்த நகரம் ஆலயங்களுக்காகப் பெயர் பெற்றது. இதில் படித்த திராவிடர்கள் பலர் குடியிருக்கிறார்கள். எனினும், ஒரு தோட்டியின் நிழல் தங்கள்மீது விழுந்தால்கூடத் தீட்டுப்பட்டுவிட்டதாக பிராமணர்கள் எண்ணுகிறார்கள். அவ்வாறு நிழல்பட விடும் தோட்டிக்கு நல்ல உதையும் விழலாம். உதை விழாவிட்டாலும் நிச்சயமாகத் திட்டு நிறையக் கிடைக்கும். சென்னை மாநிலத்தைப் போன்று தீண்டாமைக் கொடுமை கடுமையாக உள்ள இடம் வேறு எதுவுமே இல்லை. தீண்டாதவன் ஒருவன் பிராமணர்கள் குடியிருக்கும் தெருக்களின் வழியாக நடப்பது குறித்து எண்ணிக்கூடப் பார்க்க முடியாது. தீண்டாதார் வேண்டுமென்றே அறியாமையில் மூழ்கடித்து வைக்கப்பட்டு இருக்கின்றனர். ஒரு மிருகம் நோய்வாய்ப்பட்டால் அதைக் கவனிக்க ஆள் உண்டு; ஆனால், ஒரு தீண்டத்தகாதவனை ஆண்டவன்தான் காப்பற்றவேண்டும்.
(தமிழ்நாட்டில் காந்தி, 338, 339).
காந்தியாரே முகம் - அகம் கோணும்படி நடந்துகொண்ட ஊர். இந்த ஊர் நகராட்சியில்தான் அக்ரகாரத்துக்குக் கக்கூஸ் எடுக்க பஞ்சமர்கள் வரக்கூடாது; சூத்திரர்கள் வரவேண்டும் என்று தீர்மானம் போட்டார்கள் (1935) என்றால், கும்பகோணத்தின் கொழுப்பெடுத்த பார்ப்பனத் திமிரைப்பற்றி அலசத் தேவையில்லை.
ஆரியத்தின் ஆணவம் இங்கு தாண்டவமாடியதால்தான் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள் அதிதீவிர வேகத்திலே இங்கு வளர்ந்தது. திராவிடர் கழகம் தீவிரமாக வளர்ந்தது. எண்ணற்ற கருஞ்சட்டைத் தோழர்கள் வீர உலா வந்த பாடிவீடு தான் குடந்தை.
இந்த ஊரில் தான் எத்தனை எத்தனை மாநாடுகள், பேரணிகள், பொதுக்கூட்டங்கள், சாக்கோட்டையிலிருந்து அய்யா அவர்களைப் பவனி வரச் செய்வார்கள்.
திராவிடர் கழகம் பெயர் மாற்றம் பெறுவதற்கு முன்பாகவே திராவிடர் மாணவர் கழக மாநாடு இங்குதான் நடைபெற்றது (1944, பிப்ரவரி 19, 20).
குடந்தைக் கல்லூரி விடுதியிலே பார்ப்பனர்களுக்குத் தனித் தண்ணீர் பானை என்றிருந்த ஆணவத்தை உடைத்தவர்கள் திராவிடர் மாணவர் கழக இளைஞர்கள் (1943).
1948 இல் இந்தி எதிர்ப்புப் போரில் தடை உத்தரவை மீறி அன்னை மணியம்மையார் கைது செய்யப்பட்டதும் இந்த ஊரில்தான் (டிசம்பர் 20).
எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகளின் வரலாற்று அத்தியாயங்கள் குடந்தைக்கு உண்டு.
அத்தகு கும்பகோணத்திலே நாளை (9.9.2009) திராவிடர் கழக இளைஞரணி மாநாடு _ கேட்கவேண்டுமா? எழுச்சியுடன் நடைபெற அருமையான ஏற்பாடுகள். புதிய புதிய இளைஞர்கள் கழகத்தை நோக்கிப் படையெடுக்கும் காலகட்டம் இது.
காரணம், வேறு எந்த காலகட்டத்தையும் விட தந்தை பெரியார் கொள்கைகள் அதிகம் தேவை என்று உணரப்படக் கூடிய நேரம் இது. திராவிடர் கழகம் தீரமுடன் பணியாற்ற வேண்டிய பருவம் இது.
அதனால்தான் சரியான ஒரு தருணத்திலே கழகத் தலைவர் இந்த மாநாட்டுக்கு அழைப்பும் கொடுத்துள்ளார்.
வாருங்கள் தோழர்களே, வாருங்கள்! அரிமா சேனையாகக் கூடுங்கள் தோழர்களே!
எந்த ஓர் இயக்கத்திற்கும் இளைஞர் பட்டாளம் தேவைப்படுகிறது என்றால், சமூகப் புரட்சி இயக்கத்திற்கு அவர்களின் அவசியம் குறித்து எழுதவும் வேண்டுமோ!
காந்தியார் அவர்களையே சந்தித்து நேருக்கு நேர் விவாதம் செய்த சுயமரியாதை இயக்கத் தொண்டர்கள் இந்த ஊருக்குச் சொந்தக்காரர்கள்.
அந்த ஊர் மீண்டும் ஒரு வரலாற்றை நாளை படைக்கவிருக்கிறது.
மகாமகம் என்ற மூத்திரக்குட்டை ஊரில் சனாதனத்தின் கொடுக்குகளை நறுக்கிட, மூடத்தனத்தின் கொசு உற்பத்திகளை அழித்திட அறிவார்ந்த அய்யா இயக்கத்தின் அணிவரிசை நடக்கட்டும்! நடக்கட்டும்!!
தமிழர் தலைவரின் சங்கநாதம் உண்டு.
சந்திப்போம், வாருங்கள்! வாருங்கள்!!
பெரியார் திரைப்படத்துக்கு சிறந்த மாநில மொழிக்கான தேசிய விருது அளிக்கப்பட்டுள்ளது என்கிற சேதி மிகவும் மகிழ்ச்சிக்குரியது. ஆனால், இதுபற்றி செய்தி வெளியிட்ட தினமலரோ திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்ட பல தகவல்களையும் சாங்கோபாங்கமாக வெளியிட்டு-விட்டு, பெரியார் படத்துக்கு விருது அளிக்கப்பட்டதை மட்டும் திட்டமிட்டு இருட்டடித்துவிட்டது தினமலர். பூனை கண்களை மூடிக்கொண்டு பூலோகம் இருண்டுவிட்டதாகக் கூறுகிறது.
அதுவும் ஒரு வகையில் நன்மைக்கே! 2009 இலும் பார்ப்பனர் மனப்பான்மை எத்தகையது என்பதை தமிழின இளைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டாமா?
கோபத்தையும், வேகத்தையும் குடந்தையில் காட்டுங்கள் - பெரும் எண்ணிக்கையின்மூலம்.
--------------------- மின்சாரம் அவர்கள் 8-9-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை
Labels:
பெரியார்-மின்சாரம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment