குடிஅரசு குருகுலத்தில் உதித்த கலங்கரை விளக்கமே, எங்கள் முதல்வரே!
குடிஅரசு முதல் தொகுப்பை வெளியிட்டுச் சிறப்புச் செய்யுங்கள்
சேலத்திலிருந்து வீடியோ கான்பரன்சிங்மூலம் தமிழர் தலைவர் வேண்டுகோள்
குடிஅரசு குருகுலத்தில் உதித்த முதலமைச்சர் கலைஞர் அவர்களை குடிஅரசு முதல் தொகுப்பை வெளியிடுமாறு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார செயலாளர் கி. வீரமணி வேண்டுகோள் விடுத்தார்.
1925 ஆம் ஆண்டு குடிஅரசு தொகுதி வெளியிடும் சேலம் விழாவில் (17.9.2009 இரவு 7 மணி) திராவிடர் கழகத் தலைவர் அறிமுகவுரை வருமாறு:
பெரியார் துணிவும், அண்ணாவின் கனிவும் பெற்ற...
தந்தை பெரியாரின் துணிவும், அண்ணாவின் கனிவும் (கைதட்டல், ஆரவாரம்) மக்களுடைய மனித நேயத்தின் மாண்பும், ஒருங்கே இணையப் பெற்று, இந்தியாவில் இதுபோன்ற ஒரு ஆட்சி நடைபெறவில்லை என்று பாராட்டக்கூடிய அளவிற்கு அய்ந்தாவது முறை-யாக ஆட்சிப் பீடத்திற்கு வந்து ஒரு பொற்கால சமுதாயத்தை (கைதட்டல்) உருவாக்கிக்கொண்டு வருபவர் நமது மானமிகு கலைஞர். அரசியல்வாதி அடுத்தத் தேர்தலைப்பற்றிக் கவலைப்படுகிறார்கள். அரசியல் ஞானிகளோ அடுத்த தலைமுறையைப்பற்றிக் கவலைப்படுகிறார்கள் என்று சொல்லும்பொழுது, எங்கள் அரசியல் ஞானியாக மானமிகு சுயமரியாதைக்காரர் என்று தன்னை வர்ணித்துக்கொண்டு, ஈரோட்டு குருகுலத்திலே குடிஅரசு இதழில் பணியாற்றி, தந்தை பெரியார் அவர்களாலே செதுக்கப்பட்டு இன்றைக்கு திராவிட சமுதாயத்திற்கு எங்களுக்கெல்லாம் ஒரு அரிய சொத்தாகக் கிடைத்திருக்கின்ற தமிழகத்தினுடைய கலங்கரை விளக்கமே எங்கள் முதல்வரே!
எங்களுடைய அழைப்பை ஏற்று இங்கே வந்திருக்கின்றீர்கள்.
1925 இல் பெரியார் தொடங்கியது...
1925 இல் தந்தை பெரியார் தொடங்கிய குடிஅரசு ஏடு ஒரு மாபெரும் அறிவுப் புரட்சியை உருவாக்கியது.
அந்த அறிவுப் புரட்சி ஓர் அமைதிப் புரட்சி. இரத்தம் சிந்தாத புரட்சி. முதல்வர் கலைஞர் அவர்களே!
நீங்களே பெரியார் குருகுலத்தில் பயின்றபொழுது ஒருமுறை எழுதினீர்கள்.
ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்!
பாராட்டிப் போற்றி வந்த பழைமை லோகம் (கைதட்டல்) என்று எழுதினீர்கள்.
அந்த ஈரோட்டுப் பூகம்பத்தை அன்றைக்கு நீங்கள் வர்ணித்தீர்கள்.
இன்றைக்கு அந்த இடத்திலே ஒரு சமதர்ம மாளிகை உங்களால் உருவாக்கப்பட்டு வருகிறது. உண்மையான குடிஅரசு வருகிறது.
அதன் காரணமாகத்தான் பெரியார் களஞ்சியம் என்ற வரிசையிலே கால வரிசைப்படி குடிஅரசினுடைய முதல் தொகுதியை தங்களைத் தவிர, வெளியிடுவதற்கு எங்களுக்கு வேறு யாரும் தெரியாது. யாரும் உரிமை படைத்தவரும் அல்ல.
ஈரோட்டுக் குருகுலத்திலே உழைத்தவர்
ஏனென்றால், அய்யா அவர்களோடு அவர்களுடைய பாராட்டைப் பெற்று, பேரறிஞர் அண்ணா அவர்களுக்குப் பிறகு அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே நீங்கள் இளமையிலேயே வருவாயைக் கருதாது வாழ்க்கையைப்பற்றிக் கவலைப்படாது ஈரோட்டு குருகுலத்திலே நீங்கள் உழைத்தீர்கள்.
அதன் காரணமாகத்தான் இன்றைக்கு நாங்கள் எல்லாம் நினைத்து, நினைத்துப் பெருமைப்படுகிறோம். ஈரோடு என்று சொல்லும்பொழுது குடிஅரசு ஞாபகம் வரும்.
குடிஅரசு என்று சொல்லும்பொழுது கலைஞர் ஞாபகத்திற்கு வருவார்கள்.
சிரமம் பாராமல் வந்திருக்கிறீர்கள்
அன்றைக்கு நீங்கள் எழுதிய வரலாற்று முக்கியத்துவும் வாய்ந்தவைகளாக இன்றைக்கும் இருக்கின்றன.
எனவேதான், உங்களுக்கு அன்புத் தொல்லையைக் கொடுத்திருக்கின்றோம். உங்கள் பணிகளோ அதிகம்.
இந்த நேரத்திலே நீங்கள் அணிந்துரை எழுதியும் கொடுத்தீர்கள். வெளியிடுவதற்கு சிரமத்தைப் பார்க்காமல் வந்திருக்கிறீர்கள்.
அதற்காக எங்கள் தலைதாழ்ந்த நன்றியைத் தெரிவித்து, தங்களை அத்துணைக் கருஞ்சட்டைக் குடும்பங்களின் சார்பாகவும், திராவிடர் கழக, திராவிட முன்னேற்றக் கழக, திராவிடர் இயக்கத்தின் சார்பாகவும் வரவேற்கின்றோம்.
இங்கே இந்த நூலினைப் பெறவிருக்கின்ற நம்முடைய வேளாண் துறை அமைச்சர் மானமிகு சுயமரியாதைக்காரரான அவரும் முதல்வர் அவர்கள் அருகில் குடிஅரசு நூலினைப் பெற இருக்கிறார்கள்.
எனவே, இந்த குடிஅரசு நூலினை தாங்கள் (தமிழக முதலமைச்சர் கலைஞர்) வெளியிட்டு சிறப்பிக்கவேண்டுமென்று, தாய்க்கழகத்தின் சார்பாக மட்டுமல்ல, திராவிட இயக்கத்தின் சார்பாக, உலகெங்கும் இருக்கக் கூடிய அறிவார்ந்த பகுத்தறிவாளர்களின் சார்பாக தங்களை வேண்டிக்கொள்கிறோம்.
நாங்கள் பெற்ற பேறு
தங்களோடு வந்திருக்கக் கூடிய, திராவிடர் கழக பொறுப்பாளர்களுக்குப் பக்கத்திலே இருக்கக்கூடிய, குடிஅரசு நூலினை பெறக்கூடிய மாண்புமிகு வேளாண் துறை அமைச்சர் மற்றும் அருகிலே இருக்கக்கூடிய உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, மின்சாரத் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி ஆகிய எல்லோரையுமே இந்த விழாவின் மூலமாக வரவேற்று தாங்கள் இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொடுப்பது எங்களுடைய வாழ்நாளிலே நாங்கள் பெற்ற பெரும் பேறு என்று எண்ணி மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கின்றோம்.
நீங்கள் சென்னையிலிருந்து குடிஅரசு நூலை வெளியிடுகின்ற நேரத்திலே, வேளாண்துறை அமைச்சர் மாண்புமிகு வீரபாண்டி எஸ். ஆறுமுகம் அவர்கள் பெறுகிறார்கள்.
இனிவரும் உலகம்
இங்கே மாண்புமிகு மத்திய தகவல் தொடர்புத் துறையிலே இருக்கக் கூடிய அமைச்சர் மானமிகு மாண்புமிகு ஆ. இராசா அவர்கள் (சேலத்தில்) உங்கள் சார்பாக குடிஅரசு பிரதிகளை வழங்கி ஒரு பெரிய சிறப்பை உண்டாக்குகிறார்கள்.
ஒரே ஒரு நிமிடம். இனி வரும் உலகம் என்ற நூலிலே தந்தை பெரியார் அவர்கள் சிறப்பாகச் சொல்லியிருக்கின்றார்கள். எதிர்கால உலகம் எப்படியிருக்கும் என்று சொல்லியிருக்கின்றார்கள்.
யுனெஸ்கோ மன்றம் தந்தை பெரியார் அவர்களை பாராட்டிச் சொன்னதைப் போல The prophet of the New Age என்று சொன்னதைப்போல எதிர்காலத்தில் அறிவியல் எப்படியிருக்கும் என்று தந்தை பெரியார் சொன்னார்.
உருவத்தைக் காட்டி பேசிக்கொள்ளப்படும்!
மேற்கண்ட சாதனங்களால் ஓரிடத்தில் இருந்துகொண்டே பல இடங்களில் உள்ள மக்களுக்குக் கல்வி கற்பித்துக் கொடுக்கும் சாத்தியமும், ஒருவருக்கு ஒருவர் உருவத்தைக் காட்டி பேசிக்கொள்ளப்படும் வாய்ப்பும் ஏற்பட்டிருக்கும் என்று சொன்னார்கள்.
இதை நாங்கள் இதுவரையிலே படித்திருக்கின்றோம். உங்களுடைய ஆட்சியிலே அதை நேரிலே காணுகின்றோம். எங்களுடைய பெருமைக்கு, மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
இந்த அறிவியல் தத்துவம் முதன்முறையாக தந்தை பெரியாரின் குடிஅரசிற்கே பயன்படுகிறது என்பதிருக்கிறதே, அது மிகமிகச் சிறப்பானது.
இதற்கான வாய்ப்பு கொடுத்த தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!
வரவேற்று நன்றி சொல்கின்றோம்!
எனவே, அருள்கூர்ந்து முதல்வர் கலைஞர் அவர்கேள! எங்களுக்கு வழிகாட்டுங்கள் (கைதட்டல்).
குடிஅரசு நூலினை வெளியிட வேண்டுகிறோம்
தற்பொழுது நம்முடைய முதல்வர் அவர்கள் பெரியார் களஞ்சியம்_ குடிஅரசினுடைய முதல் தொகுதியை வெளியிட்டு, நம்முடைய வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டியார் அவர்களுக்குத் தருவார்கள். அந்த நிகழ்ச்சியைத் தொடங்குமாறு அன்போடு மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.
இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிமுகவுரையில் குறிப்பிட்டார்.
-------------------நன்றி:-"விடுதலை" 18-9-2009
0 comments:
Post a Comment