Search This Blog

6.9.09

சர்வதேச நீதிமன்றத்தால் ராஜபக்சே தண்டிக்கப்படவேண்டும்! முன் உதாரணங்கள் சில ...


மனித உரிமை சட்டத்திற்குமுன் சிங்களப் பேரினவாத அரசு

பொதுவாக ஈழத் தமிழர்கள் கொன்றொழிக்கப்படும் பிரச்சினையிலும், ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமைக்காகப் போராளிகள் போராடுவதிலும் தினமணிக்கு என்ன கருத்து என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மையே! அதுவும் அண்மைக்காலமாக சோவின் சீடர் ஒருவர் அதன் ஆசிரியர் பொறுப்புக்கு வந்தவுடன், ராஜபக்சேவின் செய்தி வெளியீடாகவே தினமணி செயல்பட்டு வருவதும் தெரிந்த ஒன்றே!

அந்த ஏடே நேற்று இலங்கைப் படுகொலை: அமெரிக்கா கடும் கவலை என்ற தலைப்பில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அய்.நா. (நியூயார்க்), செப். 3_ விசாரணை என்ற பெயரில் தமிழ் இளைஞர்களை தனியாக அழைத்துச் சென்று இலங்கை இராணுவம் வேட்டையாடி வரும் தகவல்கள் குறித்து அமெரிக்கா கடும் கவலையைத் தெரிவித்துள்ளது.

தமிழ் இளைஞர்களை கொத்துக் கொத்தாக அழைத்துச் சென்று இலங்கை ராணுவம் கொடூரமான முறையில் கொலை செய்யும் காட்சிகள் அண்மையில் பிரிட்டனைச் சேர்ந்த சேனல்_4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

இது உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், அய்.நாவும் ஏற்கெனவே இதை கடுமையாகக் கண்டித்துள்ளன.

தற்போது அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. இலங்கை அரசின் இந்தப் போக்கு மிகவும் கவலையடையச் செய்வதாக உள்ளது என்று அய்.நா.வுக்கான அமெரிக்கப் பிரதிநிதி சுசன் ரைஸ் கூறினார்.

இது தொடர்பாக கூடுதல் தகவல்களைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் பிறகு அமெரிக்கா இந்த விஷயத்தில் செய்யவேண்டியது என்ன என்பதை தீர்மானிப்போம் என்றார் அவர்.

அய்.நா. கவுன்சில் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்க உறுப்பினர் ஒருவர் திட்டமிட்டுள்ள விவரம் எனக்குத் தெரியாது என்றார்.

அமெரிக்கா மட்டுமின்றி பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் மனித உரிமை அமைப்புகள் இலங்கை ராணுவத்தின் கொடூர செயலை கண்டித்துள்ளன.


இவ்வாறு தினமணி கூறுகின்றது.

பிரிட்டனைச் சேர்ந்த சேனல்_4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை அரசின் சித்திரவதை படுகொலைகள் உலகம் முழுவதும் பேரதிர்வை ஏற்படுத்திவிட்டன.

தமிழ் இளைஞர்கள் நிர்வாணமாக நிறுத்தப்பட்டு, கண்கள் கட்டப்பட்டு, கைகள் பின்புறத்தில் கட்டப்பட்டு, பூட்சு காலால் உதைத்துத் தள்ளப்பட்டு சுட்டுக் கொல்லப்படும் அந்தக் காட்சியைக் காண்பதற்கே ஓரளவுக்கு மனத் துணிவு தேவைப்படும். பார்த்தவர்கள் மூர்ச்சை ஆகக் கூடிய அளவுக்குக் கொடுமையின் கோரத்தாண்டவமான மிருகச் செயல்.
இந்த வீடியோவை ஈழப் போராளிகளின் ஆதரவாளர்கள் யாரும் வெளியிடவில்லை. இலங்கையின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. எனவே, இதற்கு யாரும் உள்நோக்கம் கற்பிக்க முடியாது.

இந்த வீடியோ ஆதாரங்களை வைத்துக்கொண்டு நெதர்லாந்து நாட்டின் ஹேக்கில் உள்ள பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும் என்ற நிலை உள்ளது.
கீழ்க்கண்ட நடவடிக்கைகள் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் தடை செய்யப்பட்டுள்ளன. அவையாவன:

உயிருக்கும், நபருக்கும் எதிரான வன்முறை; குறிப்பாக அனைத்து வகைக் கொலைகள், உடல் சிதைப்பு, கொடூரமாக நடத்துதல் மற்றும் சித்திரவதை, சுய கண்ணியத்திற்கு இழுக்கு, குறிப்பாக அவமானகரமாக மற்றும் கீழ்த்தரமாக நடத்துதல் போன்றவையாகும் என்று சர்வதேச மனிதநேயச் சட்டம் கூறுகிறது.

இந்தக் குற்றங்களுக்கு மேலாகவும், ராஜபக்சே ஈழத் தமிழர்கள் விஷயத்தில் கண்மூடித்தனமாக நடந்துகொண்டிருக்கிறார் என்பது மிகவும் வெளிப்படையானதாகும்.

சேனல்_4 வீடியோ ஆதாரங்கள் குறித்து இலங்கை அரசிடம் விளக்கம் கேட்டுள்ளதாக இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறியுள்ளார்.
நேர்மையான பதில் ராஜபக்சேயிடமிருந்து வரும் என்று எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனமே!
சர்வதேச மனித உரிமைகள் மனித நேயங்களுக்கு எதிராகச் செயல்படுபவர் எந்தப் பெரிய பதவியில் இருந்தாலும் உலக நீதிமன்றத்தால் தண்டிக்கப்படவும், கைது செய்யப்படவும் தாராளமாகவே சட்டம் இருக்கிறது.

சூடான் அதிபர் ஓமர் அல்பஷீர் இந்த வகையில் கைது செய்யப்பட்ட முன் உதாரணங்கள் உண்டு.


ஆப்பிரிக்கக் கறுப்பின முசுலிம்களை படுகொலை செய்த வழக்கில் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற ஆணைப்படி கைது செய்யப்பட்டார்.

போஸ்னியா அதிபர் ரடோவன் இரண்டு லட்சம் முசுலிம்களைப் படுகொலை செய்த வழக்கில் (1992_95) 15 ஆண்டுகளுக்குப்பின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் கைது செய்யப்பட்டார்.

இந்தக் காலகட்டத்தில், இந்தச் சட்டத்தால் தண்டிக்கப்பட நூற்றுக்கு நூறு தகுதியானவர் இலங்கை இடிஅமீன் ராஜபக்சே என்பதில் ஒரு துளி அளவுக்கேனும் தடையிருக்கவே முடியாது.

21 ஆம் நூற்றாண்டின் கடைசி சித்திரவதை கொடுமை ஈழத் தமிழர்கள் சந்தித்ததோடு முடியவேண்டும். அந்தச் சித்திரவதைகளுக்குக் காரணமான பேர்வழி தண்டிக்கப்பட்டார் என்ற நீதியும் நிலை நாட்டப்படவேண்டும்.

இல்லையெனில், இந்தக் காலகட்டத்தில் உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு வகையில் குற்றவுணர்வுக்கு ஆளாக வேண்டியவர்களே!

-------------- "விடுதலை" தலையங்கம் 5-9-2009

0 comments: