Search This Blog

6.9.09

நமக்கு மேலே இருந்துகொண்டு நம்மை இயக்குவது யார்? கடவுளா?


சுயமரியாதைக்காரனுக்கும் புராண மரியாதைக்காரனுக்கும் சம்பாஷணை

சுயமரியாதைக்காரன்:

ஒரு மனிதன் உயர்தரப் படிப்பு அதாவது பி.ஏ., எம்.ஏ., அய்.சி.எஸ்., முதலிய படிப்புப் படித்து பட்டதாரியாயிருப்பதற்கும் மற்றும் தொழில் சம்பந்தமான படிப்பில் நிபுணத்துவம் பெற்று இருப்பதற்கும், மற்றொரு மனிதன் அவற்றை அடையாமல் தன் கையொப்பம் போடக் கூடத் தகுதியில்லாமல் இருப்பதற்கும் என்ன காரணம் சொல்லுகிறாய்?

புராண மரியாதைக்காரன்:


அவனுக்கு போதிய அறிவு இல்லாமல் இருக்கலாம். ஆதலால் அவன் அவற்றை கற்க முடியாமல் போயிருக்கும்.

சு.ம.:

அப்படிச் சொல்ல முடியாது. இதோ பார் இந்த மனிதனை; அவன் எவ்வளவு சுறுசுறுப்பாகவும், புத்திசாலித்தனமாய் பேசக் கூடியவனாகவும், மண் வெட்டுவதிலும் பாரம் சுமப்பதிலும், கோடரியால் விறகை வெட்டுவதிலும் எவ்வளவு புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறான். நாம் நான்கு பேர் சேர்ந்தால்கூட செய்ய முடியாத வேலையை அவன் ஒருவனே செய்வது எவ்வளவு ஆச்சரியமாயிருக்கிறது பார். இப்படிப்பட்டவனை, புத்தியில்லாதவன் என்று சொல்லிவிட முடியுமா? ஆதலால், இவனுக்கு அறிவு இருக்கிறதே, இவன் ஏன் பட்டதாரி ஆகவில்லை?

பு.ம.:

அப்படியானால், அவன் தாய், தந்தையர் இவனைப் படிக்கப் போதிய கவலை எடுத்துக் கொள்ளாமலிருக்கலாம்.

சு.ம.:

இதோ, அவன் தகப்பனார் வந்துவிட்டார். அவரைக் கேட்டுப் பார். அவர் தன் மகன் படிக்கவேண்டுமென்ற ஆசையுடன் எவ்வளவோ கஷ்டப்பட்டுப் பார்த்ததாகத் தானே சொல்லுகிறார். அப்படி இருந்தும் ஏன் அவர் குமாரன் படிக்கவில்லை?

பு.ம.:

ஒரு சமயம் அவர் குமாரனுக்குப் படிக்கவேண்டுமென்ற கவலை இல்லாமலிருந்திருக்கலாம்.

சு.ம.:


அப்படியும் சொல்ல முடியவில்லையே. அவர் மகனைக் கூப்பிட்டுக் கேட்டுப்பார். அவன்தான் படிக்க வேண்டுமென்று எவ்வளவோ ஆசைப்பட்டு அலைந்து திரிந்து பார்த்ததாகவும், காரியம் கைகூடாமல் போய்விட்டதாகவும் சொல்லுகிறானே, இதற்கென்ன சமாதானம் சொல்லுகிறாய்?

பு.ம.:


அப்படியானால், அதாவது, மகனும் புத்திசாலியாயிருந்து, தகப்பனுக்கும் தன் மகன் படிக்கவேண்டுமென்கின்ற ஆசையும் இருந்து, பிள்ளையும் படிக்க ஆவலுள்ளவனாய் இருந்து, படிக்காதவனாயிருக்கிறான் என்றால் ஒரு சமயம் அவன் தகப்பனுக்கு தன் பிள்ளையைப் படிக்க வைக்கப் பணம் இல்லாமலிருந்திருக்கலாம்.

சு.ம.:

இதுதான் சரியான பதிலாகும். அப்படியானால் அவன் தகப்பனுக்கு ஏன் பணமில்லாமல் போய்விட்டது?

பு.ம.:

இது ஒரு கேள்வியாகுமா? பணம் என்பது அவனவன் பாடுபட்டுச் சம்பாதித்திருக்க வேண்டியதாகும்.

சு.ம.:

சரி என்றே ஒப்புக் கொள்ளுகிறேன். இந்த மனிதன் பாடுபடவில்லை என்று நீ சொல்லுகிறாயா? இந்த மனிதன் கல் உடைக்கிறார்; இவர் சம்சாரம் விறகு கொண்டு வந்து விற்கிறார். வெளியில் வேலைக்குப் போய் வந்த நேரம் போக மீதி நேரத்தில் பெரிய கட்டைகளை வீட்டில் போட்டு கோடரி கொண்டு பிளந்து சிறு சிறு சுமையாக அழகாகக் கட்டி வைக்கிறார். போதாக் குறைக்கு இவரின் தாயார், வயது சென்ற கூன் விழுந்த கிழவியம்மாள், பிட்டும் முறுக்கும் சுட்டு வீட்டுக்கு முன்னால் இருந்து விற்றுக் கொண்டே இருக்கிறார்கள். இரவில் நான்கு மணி நேரம் மாமியும், மருமகளும் தினம் ராட்டினத்தில் நூல் நூற்றுக் கொண்டே இருக்கிறார்கள். இப்படியெல்லாம் இருக்க இவர்கள் பாடுபடவில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?

பு.ம.:

இதெல்லாம் சரிதான். என்ன பாடுபட்டாலும் பணம் சேருவதற்கு பிராப்தம் வேண்டாமா? ஜன்மாந்தர கர்மபலன் அதற்கு அனுசரணையாக இருக்க வேண்டாமா? பையனுக்கும் அவன் தலையெழுத்து பலமாயிருக்க வேண்டாமா? இவ்வளவும் இருந்தாலும் பகவானுடைய அனுக்கிரகமும் தாராளமாய் இருக்கவேண்டாமா? இவ்வளவு சங்கதிகள் தேவை இருக்கும்போது, பையன் கெட்டிக்காரன், புத்திசாலி, தகப்பனுக்கும் படிப்பிக்க ஆசையிருந்தது. குடும்பத்திலும் பெற்றோர்கள் ஆளுக்கொரு கஷ்டப்பட்டார்களே, இப்படியெல்லாமிருந்தும் பையன் ஏன் படிக்கவில்லை? என்றால் இது என்ன கேள்வி? இவை எல்லாம் என்ன நம்முடைய இச்சையா? அப்படியானால் நான் ஆகாயத்தில் பறக்க வேண்டும் என்றால் பறந்துவிட முடியுமா? நான் ராஜா ஆகவேண்டுமென்றால் ஆகிவிட முடியுமா? நான் மகாத்மா ஆகவேணும் என்று ஆசைப்பட்டால் ஆகிவிட முடியுமா? நமக்கெல்லாம் மேலாக ஒன்று இருந்துகொண்டு நம்மை நடத்துகின்றது என்கின்ற ஆஸ்திக ஞானத்தை உணர்ந்தோமேயானால் இப்படிப்பட்ட நாஸ்திக உணர்ச்சிக் கேள்விக்கெல்லாம் இடமே இருக்காது.

சு.ம.:

அப்படியா சங்கதி, சரி உன் கடையைக் கட்டு. நான் சொல்லுவதை சற்று கவனமாய்க் கேள். பிறகு உன்னுடைய ஆஸ்திக ஞானத்தின் யோக்கியதையைப் பார்ப்போம்.

பு.ம.:

சரி, சொல்லு பார்க்கலாம்.

சு.ம.:

ஒரு ஆயிரம் ஏக்கரா பூமியும், 250 வீடுகளும், 1000 ஜனங்களும் உள்ள ஒரு கிராமத்தை எடுத்துக் கொள்ளுவோம். அந்தப் பூமியும் அந்த வீடுகளும் அங்குள்ள மற்ற செல்வங்களையும், வியாபாரங்களையும் அந்த ஒரு ஆயிரம் ஜனங்களுக்கும் பொதுவாக்கி விடுவோம். அந்த ஆயிரம் பேர்களுடைய வாழ்க்கைக்கும் அனுபவங்களுக்கும் வேண்டிய சாதனங்கள் என்ன என்ன என்பதாக ஒரு கணக்குப் போட்டு பார்த்து அவையெல்லாம் அங்கேயே உற்பத்தி செய்ய ஒரு திட்டம் போட்டுக் கொள்ளுவோம்.

அதற்கு ஏற்ற தொழிற்சாலைகளைக் கட்டி, அத்தொழிற்சாலையில் வயது வந்த எல்லா மக்களையும் ஆண், பெண் அடங்கலும் எவ்வளவு நேரம் வேலை செய்தால் போதுமோ அவ்வளவு நேரம் வேலை செய்தாக வேண்டும் என்று ஓர் ஏற்பாடு செய்துகொள்ளுவோம்.
அவர்களுடைய குழந்தைகளை எல்லாம் ஓர் இடத்தில் கொண்டு வந்து சேர்த்து, அவர்கள் எல்லோரையும் ஒரே மாதிரியாக ஆகாரம், துணி முதலியவை கொடுத்து, ஒரே மாதிரி போஷித்து, எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரு குறிப்பிட்ட வயதுவரை ஒரே மாதிரியான கல்வியைக் கொடுத்து, கடவுள், கடவுள் செயல், மதம், முன்ஜன்ம பலன், தலைவிதி, தலையெழுத்து முதலிய வார்த்தைகள் அவர்கள் காதில் விழாமலும், அப்படிப்பட்ட எண்ணங்கள் அவர்கள் மனதில் உதிக்காமலும் இருக்கும்படி ஜாக்கிரதையாய் காவல் வைப்போம். பிறகு அவர்களுக்கு 14 அல்லது 15 வயது ஆனவுடன் அவர்களுடைய இயற்கை ருசிக்கும், மனப்போக்குக்கும் ஏற்ற தொழிலையும், வித்தையையும் கற்றுக் கொடுப்போம். அவற்றில் அவர்கள் 18, 19 வயது வரை அனுபவம் பெற்ற பிறகு அவரவர்களுக்கு ஏற்ற வேலை செய்யும்படி தொழிற்சாலைகளுக்கு அனுப்பிக் கொடுப்போம்.

இதன் பயனாய் உண்டாகும் பயனை அந்தக் கிராமத்திலுள்ள எல்லா ஜனங்களுக்கும் சரி பங்கு கிடைக்கும்படிக்கும், இந்தக் கொள்கை கொண்ட அந்த கிராம பஞ்சாயத்து நிருவாகம் நடக்கும்படிக்கும் ஏற்பாடு செய்வதோடு, ஒவ்வொரு மனிதனும் தன் பங்குக்குக் கிடைக்கக் கூடிய சாதனத்தை அவனவன் அனுபவித்தே தீரவேண்டுமே ஒழிய, எவனும் மீதி வைக்கக் கூடாதென்றும் திட்டம் செய்வோம்.

மற்றும் நொண்டி, முடம், வேலைக்கு லாயக்கற்றது, வயது சென்றது ஆகியோரைப் போஷிக்க ஒரு திட்டம் போட்டு அதற்கு வேண்டிய அளவு சாதனங்களையும், தனித்தனியாக எடுத்து ஒதுக்கி வைத்துக் கொள்ளுவோம். பிறகு இந்த கிராமத்தில் உள்ள ஆயிரம் பேருக்கும் ஏதாவது அவசரக் காலங்களில் எதிரிகளால் தொல்லை ஏற்பட்டால் அதை சமாளிக்க பயிற்சி கொடுத்து அது மறந்து போகாமல் இருக்கும்படி அடிக்கடி பரீட்சை செய்து வருகிறோம்.

இந்த கிராமத்தில் உள்ள 1000 பேருக்கும் வசிப்பதற்கும் ஒரே அளவான இடம் கொண்ட வீடுகள் ஒவ்வொருவருக்கும் ஒதுக்கிவிடுவோம். இந்த கிராமத்து ஜனங்கள் பூராவும் சந்தோஷம் அனுபவிக்கவும், நேரப் போக்கு உண்டாகவும், சுகாதார சவுக்கியமும், உலாவ நந்தவனமும் முதலாய போக போக்கியங்களுக்கு ஏற்பட்ட சாதனங்களை கூடிய வரையில் பொதுவிலேயே உற்பத்தி செய்து வைத்து இலவசமாகவே அனுபவிக்க உதவுவோம்.
ஆண், பெண் சேர்க்கை துணை விஷயங்களுக்கு அவரவர்களுக்கு இஷ்டப்பட்டவர்களுடன் மாத்திரம், இஷ்டம் உள்ளவரையில் மாத்திரம் துணைவர்களாயிருக்க ஏற்பாடு செய்வோம். ஆக, இவை முதலிய காரியங்களை ஒழுங்காக பாரபட்சமில்லாமல் நடத்தி வருவதாயிருந்தால், நீ மேலே சொன்ன பிராப்தம், ஜென்மாந்திர கர்மபலன், தலையெழுத்து, பகவானுடைய அனுக்கிரகம், நமக்கு எல்லாம் மேலாக ஒன்று இருந்துகொண்டு நம்மை நடத்துகிறது என்கின்றதான வார்த்தைகளுக்கும், கொள்கைகளுக்கும், எண்ணங்களுக்கும் இடமுண்டா என்று யோசித்துப் பார்.



குறிப்பு:

இந்த சம்பாஷணையானது, தனிவுடைமைத் தத்துவத்தில்தான் கடவுள், கடவுள் செயல் முதலியவை உண்டு என்றும், பொதுவுடைமைத் தத்துவத்தில் அவற்றுக்கு தேவையில்லை என்றும், தனிவுடைமைத் தத்துவத்தை நிலை நிறுத்தவே மேல்கண்ட கடவுள், கடவுள் செயல் முதலிய கற்பனைகள் ஏற்படுத்தப்பட்டு அது நிலை நிறுத்தப்பட்டு வருகின்றது என்பதையும் குறிப்பிடவே ஏற்பட்டதாகும்.

- சித்திரபுத்திரன் எனும் புனை பெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதியது, "குடிஅரசு" 13.8.1933

0 comments: